இலாலேசுவரி என்பவர் கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டில் காசுமீரத்தில் வாழ்ந்த இசைப்புலவராவார். அக்காலத்தில் காசுமீரத்தில் வாழ்ந்த மக்களிடையே இவ்வம்மையார் சிவ பக்தியைப் பரப்பினார். இவர் சிவபெருமானைப் பற்றிப் பல பாடல்களை இயற்றி இசையமைத்துள்ளார். இவருடைய பாடல்கள் எளிதில் மக்களுக்குப் புரியும் வகையில் அமைந்திருந்தன. ஆதலின், இவர் பாடல்கள் காசுமீரத்திலும் அதனையடுத்த இடங்களிலும் வாழ்ந்த மக்களைப் பெரிதும் கவர்ந்தன. காசுமீர மொழியில் இவர் இயற்றிய பாடல்கள் அங்குள்ள மக்களால் இன்றும் பாடப்பட்டு வருகின்றன. இலாலேசுவரி தம் மாமியாரால் மிகவும் கொடுமைப்படுத்தப்பட்டார். இவர் இல்வாழ்க்கையை வெறுத்துத் துறவறம் பூண்டார். தேவையான உணவும் இருக்க இடமுமின்றி இவர் பல ஆண்டுகள் காடுகளிலும் பல ஊர்களிலும் சுற்றித் திரிந்தார். இவருடைய பாடல்கள் சிவபெருமானின் திருவிளையாடல்களைப் பற்றியனவாகும்.