ஈரான்
īrāṉ
மேற்கு ஆசியாவிலுள்ள நாடுகளுள் ஒன்று.
மேற்கு ஆசியாவிலுள்ள நாடுகளுள் ஒன்று. அண்மைக் காலம் வரை இந்நாட்டைப் பாரசீகம் என்றே குறிப்பிட்டனர். கிரேக்கர்கள், அராபியர்கள், துருக்கியர்கள், மங்கோலியர்கள் போன்றோர்களின் படையெடுப்புகளினாலும் போர்களினாலும் ஈரானியப் பேரரசு நலிந்து, மெலியத் தொடங்கியது. இருபதாம் நாற்றாண்டின் தொடக்கத்திலிருந்து ஈரான் மேலைநாடுகளுடன் போட்டியிடுமளவிற்கு முன்னேறி வருகிறது. சீர்திருத்தங்களை மேற்கொள்ளக் காரணமாயிருந்த பகலவி மரபினரைப் பிடிசக்காக பழைமை விரும்பிகளான முசுலிம்கள் அம்மரபினை அகற்ற உறுதுணையாய் நின்றனர். ஈரானின் வடக்கில் சோவியத்து ஒன்றியமும் காசுபியன் கடலும், கிழக்கில் ஆப்கானிசுத்தானும் பாகிசுத்தானும், தெற்கில் ஓமன் வளைகுடாவும் பாரசீக வளைகுடாவூம், மேற்கில் ஈராக்கும் துருக்கியும் அமைந்துள்ளன. ஈரான் நாட்டின் பரப்பளவு 16,48,000 ச.கி.மீ. நாட்டின் பெரும்பகுதி பாலை நிலம். இந்நாட்டின் மக்கள்தொகை 4,05,50,000 (1982).
ஈரான்
ஈரானின் பெரும்பகுதி மேட்டுநிலங்கள். ஏறத்தாழ 1200 மீட்டர் உயரமுள்ள இம்மேட்டு நிலங்களைச் சுற்றிலும் பெரும்பாலும் மலைத்தொடர்கள் சூழ்ந்துள்ளன. இந்நாட்டை நான்கு இயற்கைப் பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை, 1. மலைத்தொடர்கள், 2. பாலைநிலங்கள், 3. காசுபியன் கடற்கரை, 4. குசித்தான் சமவெளி.
மலைத்தொடர்கள்
ஈரானின் மிக உயர்ந்ததும் மிகப் பரந்ததுமான மலைத்தொடர்கள் இந்நாட்டின் மேற்குப் பகுதியிலும், வட எல்லையை அடுத்தும் உள்ளன. சாக்ரோசு மலைகள் துருக்கி, உருசியாவின் எல்லைகளில் தெற்காகவும் மேற்காகவும் படர்ந்து பாரசீக வளைகுடாவைக் தொட்டு நிற்கின்றன. சாக்ரோசு மலைகளுக்குக் கிழக்கில் உள்ள மலைகளை மத்திய மலைகள் என்பர். இம்மலைத் தொடர்கள் பெரும்பாலும் ஈரானின் கால்பங்கு நிலப்பகுதியைக் கவர்ந்துள்ளன. இந்நாட்டின் பெரும்பாலான மக்கள் மத்திய மலைகளின் நீண்டு குறுகிய பச்சைப்பசேலெனக் காட்சிதரும் பள்ளத்தாக்குகளில் வாழ்கிறார்கள்.
எல்பர்சு மலைகள் ஈரானின் வட எல்லையை ஒட்டியுள்ளன. வட மலைச்சரிவுகளில் மரங்கள் மூடியுள்ளன. அவை காசுபியன் கடலையும் உருசியாவையும் நோக்கியுள்ளன. தமவந்து ஈரானின் மிக உயர்ந்த மலையுச்சியாகும். 5604 மீட்டர் உயரமுள்ள இம்மலையுச்சி எல்பர்சு மலையில் அமைந்துள்ளது. ஓமன் வளைகுடாவினைத் தொடர்ந்தும் ஆப்கானிசுத்தான், பாகிசுத்தான் எல்லைகளை யொட்டியும் சிறு மலைத் தொடர்கள் உள்ளன.
பாலை நிலங்கள்
தசுட்–இ–லுத்து (Dasht–i–Lut), தசுட்–இ–கவிர் (Dasht–i–Kavir) என்னும் பெயர்களில் இரு பரந்த வறண்ட பாலைநிலங்கள் இந்நாட்டில் உள்ளன. அவற்றில் மக்கள் வாழவில்லை. அவை 98,400 ச.கி.மீ. பரப்புள்ளனவாய் மத்திய ஈரானில் அமைந்துள்ளன. தசுட்–இ–லுத்துப் பாலைநிலத்தில் மணற்குன்றுகளும் பாறை வெளிகளும் உள்ளன. ஆனால், தசுட்–இ–கவிர் பாலைநிலத்தில் மணலுக்குப் பதிலாக உப்புகள் பரவியுள்ளன. மழைக் காலங்களில் மலையருவிகள் தசுட்–இ–கவிர் பாலைநிலத்தில் பாய்கின்றன. அவை சிறுசிறு ஏரிகளாகவும் கடும் கோடைக்காலத்தின்போது வறண்டும் உள்ளன.
இசபகான் மசூதி - எ.ரான்
காசுபியன் கடற்கரை
எல்பர்சு மலைத்தொடருக்கும் காசுபியன் கடலின் நீலப்பச்சை நீருக்கும் இடையில் குறுகிய வளமான தாழ்நிலமாக அமைந்திருப்பது காசுபியன் கடற்கரை. காசுபியன் கடலே உலகின் மிகப் பெரிய ஏரியாகும். இது கடல்மட்டத்தைவிட 27 மீட்டர் தாழ்வானது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
குசித்தான் சமவெளி
பாரசீக வளைகுடாவிற்கு வடக்கில் உள்ளது. இச்சமவெளி ஈராக்குச் சாக்ரோசு மலைத்தொடர்களுக்கு இடையிலுள்ளது. தட்டையானதும் வறண்டதுமான இப்பகுதியில் ஈரானின் பெட்ரோலியக் கிணறுகள் மிகுதியாக உள்ளன.
கடற்கரை
காசுபியன் கடலை ஒட்டியுள்ள வட கடற்கரை 604 கி.மீ. நீளமுடையது. ஈரானின் தென் கடற்கரை பாரசீக–ஓமன் வளைகுடாக்களை ஒட்டி 2032 கி.மீ. நீண்டுள்ளது. பாரசீக வளைகுடாவையும் ஓமன் வளைகுடாவையும் ஆர்மசு நீர்ப்பிரிவு இணைக்கிறது.
ஆறுகள்
ஈரான் நாட்டு ஆறுகளுள் பெரும்பாலானவை மலைத்தொடர்களிலிருந்து மத்திய ஈரானில் பாய்ந்து, மழைபொழிவேற்படாத பாலை நிலங்களில் சுவறிவிடுகின்றன. கரூன் என்னும் ஆறு சாக்ரோசு மலைகளில் உற்பத்தியாகி, குசித்தான் சமவெளி வழியாகத் தெற்கில் பாய்ந்து ஓடிச் சாட்டல் ஆரப்பு ஆற்றுடன் கலந்துவிடுகிறது. இவ்வாற்றில் கப்பல்கள் செல்ல இயலும். சாபிட்டு ஆறு எல்பர்சு மலைக் குடைவுகளின் வழியாக ஓடிக் காசுபியன் கடலில் விழுகிறது. ஈரானுக்கும் உருசியாவுக்கும் இடையில் வடகிழக்கு எல்லையாக ஆட்ரெக்கு ஆறு ஓடுகிறது.
ஏரிகள்
ஈரானின் பெரும்பாலான ஏரிகளில் உப்புக் கிடைக்கிறது. உப்புப் படிவங்களை அடித்துச் செல்லும் அருவிகள் இல்லாமையால், வெப்பத்தால் ஏரிகளின் நீர் ஆவியாகும்போது உப்பு படித்துவிடுகிறது. உர்மியா ஈரானின் வடமேற்குப் பகுதியிலுள்ள மிகப் பெரிய ஏரியாகும். குளிர்காலததில் 5960 ச.கி.மீ. ஆகவும் கோடையில் 3890 ச.கி.மீ. ஆகவும் இதன் உருவம் மாறுபடுகிறது.
இயற்கைச் செல்வங்கள்
பெட்ரோலியப் பொருள்களே ஈரானின் சிறப்பான இயற்கைச் செல்வம். எண்ணெய் ஊற்றுகள் நாட்டின் பல பகுதிகளில் காணப்படினும் குசித்தான் பகுதியில் மிகச் சிறப்பாக அமைந்துள்ளன. பசுரூல இரத்தினக் கற்கள், அரிதார நஞ்சு, உப்பு, இரும்பு, தகரம், அஞ்சனக்கல், கந்தகம், பொன் போன்றவை ஏனைய கனிமப் பொருள்கள், ஈரானில் காடுகள் மிகக் குறைவு. இந்நாட்டில் உள்ள காடுகள் காசுபியன் கடலை அடுத்துள்ளன. ஓக்கு, பீச்சு, ஆசு, எல்ம், பாப்லார், மாப்பில், இலவங்க மரங்கள் இக்காடுகளில் பயிராகின்றன.
ஓநாய், சிங்கம், சிறுத்தைப்புலி, ஆண்டிலோப் மான் போன்ற காட்டு விலங்குகள் தொலைதூரப் பகுதிகளில் சுற்றித் திரிகின்றன. பெலிகன், காட்டுக் கோழி, கொக்கு, வான்கோழி, கௌதாரி, பருந்து, புல்புல் போன்ற பறவைகள் ஈரானில் உள்ளன. சுட்டுர்சன் கார்ப்பு, வெள்ளை, எர்ரிங்கு போன்ற மீன்களைக் காசுபியன் கடலில் காணலாம்.
தட்பவெப்ப நிலை
வடக்கிருந்தும் மேற்கிருந்தும் வீசும் மழைக் காற்றுகளை எல்பர்சு சாக்ரோசு மலைத்தொடர்கள் தடுத்து விடுகின்றன. எனவே, மழைக்காலத்தில் இம்மலையுச்சிகளில் பெரும்பனிப் படலம் படர்ந்து நிற்கும். ஆண்டொன்றுக்கு ஏறத்தாழ 30 செண்டிமீட்டர் மழையே ஈரான் பெறுகிறது.
குளிர்காலத்தில் பனி உறைந்துவிடும். ஈரான் நாட்டுக் கோடைக்காலம் கடுமையான வெப்பத்தைக் கொண்டுள்ளது.
காசுபியன் கடற்கரைப் பகுதிகளில் மிகுதியாக மழை பொழிகிறது. பாலை நிலப்பகுதிகளில் 13 செண்டிமீட்டர் வரை மழை பொழிகிறது. கோடைக் காலங்களில் பாலைநிலப்பகுதிகளில் வாழ்வது இன்னல் பயப்பதாகும். வேகமாக வீசும் காற்றினால் அடிக்கடி புயல்கள் தோன்றுவதும் உண்டு.
மக்கள் வாழ்க்கை
ஈரான் நாட்டு மக்களில் ஏறத்தாழ அரைப் பங்கினர் சிறு பண்ணைகள் நிரம்பிய சிற்றூர்களில் வாழ்கிறார்கள். இச்சிற்றூர்களில் பெரும்பாலானவை மேற்கு, வடக்கு ஈரான் மலைத் தொடர்களுக்கு அண்மையிலிருப்பவை. ஈரானியருள் ஏறத்தாழ 48 விழுக்காட்டினர் மாநகரங்களிலோ நகரங்களிலோ வீடுகளில் வாழ்கின்றனர். ஏனையோர் நாடோடிகளாக ஆடு, செம்மறியாடு, கால்நடை மந்தைகளுடன் நாடெங்கும் சுற்றித் திரிகிறார்கள். அவர்களுள் பலர் மேற்கு, வடக்கு எல்லைப்புற மலைகளை அடுத்துள்ள பகுதிகளில் சுதந்திரமாக வாழ்கிறார்கள்.
ஈரானிய இனத்தைச் சாராத மக்கள் பன்னெடுங்காலத்திற்கு முன்பே ஈரானில் குடியேறினர். ஈரானியர் மத்திய ஆசியாவிலிருந்து வந்தவர்கள். அராபியர், துருக்கர், மங்கோலியர் போன்றவர்களும் வந்த காலத்தில் இந்நாட்டில் கலப்பினம் ஒன்று உருவாகியுள்ளது.
குர்துகள், உலூர்கள், பக்தியாரி, காசுகாய், காமேசு, துருக்கோமன், பலூச்சி போன்றோர் ஈரானியரல்லர். இவர்களைத் தவிர்த்து யூதர்கள், அராபியர், அர்மீனியர் போன்றோரும் வாழ்கிறார்கள்.
ஈரானியரில் 100க்கு 98 பேர் முசுலிம்கள், இசுலாம் ஈரானின் நாட்டுச் சமயம் ஆக்கப்பட்டுள்ளது. அவர்கள் சியா முசுலிம் மரபைச் சார்ந்தவர்கள். சுன்னி முசுலிம்கள் எட்டரை இலட்சம் பேர் வாழ்கிறார்கள். கிறித்தவர்கள் 70,000 பேரும் யூதர்கள் 40,000 பேரும் சொராசுடிரியர்கள் (பார்சிக்கள்) 10,000 பேரும் ஈரானில் உள்ளனர்.
மொழி
பெரும்பாலோர் பாரசீச மொழியைப் பேசுகிறார்கள். அம்மொழி அராபிய எழுத்துகளில் எழுதப்படுகிறது.
குடும்ப வாழ்க்கை
இந்நாட்டில் 1930–இலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்ட சட்டங்களால் பெண்கள் ஆண்களுடன் ஒத்தநிலையில் வாழும் நிலை வந்தது. இருப்பினும், 1979–இல் முடியாட்சி ஒழிக்கப்பட்ட பின்னர்ப் புரட்சியாளர்கள் பெண்களுக்குச் சுதந்திரம் கொடுப்பதைக் குறை கூறி வந்தனர். பெண் உரிமை பெரிய சிக்கலை இந்நாட்டில் ஏற்படுத்தியுள்ளது.
தங்குமிடம்
நீண்டுயர்ந்த சுவர்களால் சுற்றிலும் கட்டப்பெற்றுள்ள அடைப்புகளுக்குள் மண்சுவராலான சிறு வீடுகளில் பெரும்பாலான ஈரானியர்கள் வாழ்கிறார்கள். வீடுகளின் நடுவில் முற்றம் உண்டு. வீட்டைச் சுற்றிலும் சில மரங்களும் மலர்ச்செடிகளும் நீர்த்தொட்டியும் உள்ளன. தொட்டிநீரைச் சமையலுக்கும் பாத்திரங்களைச் சுத்தம் செய்யவும் பயன்படுத்துகிறார்கள்; அதனைக் குடிக்கப் பயன்படுத்துவதில்லை. குடிநீர் கிணறுகளிலிருந்தும் நீர் ஊற்றுகளிலிருந்தும் பெறப்படுகிறது. கோடை வெயிலில் இளைப்பாற வீட்டின் முன்னால் முக மண்டபம் இருக்கிறது.
வீடுகளில் பகட்டான மரச்சாமான்கள் இருப்பது குறைவு. ஈரானியர் நாற்காலிகளில் உட்காராமல் தலையணைகளின்மேல் அமருவர்; தரையில் துணியை விரித்து அதன்மீது அமர்ந்து உணவருந்துகிறார்கள்; பாயின்மீது உறங்குகிறார்கள். செல்வர்கள் தம் வீட்டின் தரையில் கம்பளம் விரித்துள்ளனர்.
நாடோடிகள் வட்டவடிவமான கறுப்புக் கூடாரங்களில் வாழ்கிறார்கள். பெண்கள் கூடாரங்களுக்கான நூலை நெய்வதுடன் தரையில் விரிக்கும் கம்பளங்களையும் நெய்கிறார்கள். கழுதைகள், ஒட்டகங்கள் போன்ற விலங்குகளின்மீது சுமைகளை ஏற்றிப் பயணம் செய்கின்றனர். அச்சுமைகளின் மீது பெண்களும் குழந்தைகளும் அமர்ந்து கொள்வர். கால்நடையாகவோ குதிரை மீதமர்ந்தோ ஆண்கள் அவ்விலங்குகளை நடத்திச் செல்கின்றனர்.
உணவு
அரிசி, ரொட்டி, பாலாடைக்கட்டி, ஆட்டுக்கறி போன்றவை ஈரானியரின் சிறப்பான உணவுப் பொருள்கள். இம்மக்கள் கெபபு (Kebab) என்னும் உணவைச் சுவைத்து உண்பர். ஆட்டுக்கறியை அகப்பைக்கோலில் சொருகி வறுக்கும் முறையாக இவ்வுணவு அமைகிறது. தித்திப்பான தேநீரை இவர்கள் பெருமளவில் அருந்துவர்.
உடை
நகரங்களில் வாழும் பெரும்பாலான ஆடவர்களும் பண்ணைப் பகுதிகளில் வாழும் சில ஆண்களும் மேற்கத்திய முறையில் உடுக்கிறார்கள். ஆண்களில் எஞ்சியுள்ளவர்களில் பெரும்பான்மையோர் வெள்ளைப்பருத்தியிலான மேல்சட்டையையும் பைப்போன்ற கறுப்பு அல்லது நீலநிறக் காலுறைகளையும் அணிந்து கொள்கிறார்கள். சில வேளைகளில் நீண்ட நீலப் பருத்தியிலான மேல் அங்கியையும் அணிகிறார்கள்.
சிற்றூர்களில் வாழும் ஈரானியப் பெண்களுள் பலர் இறுக்கமில்லா மார்புச் சட்டைமையும், கறுப்பு நிறக் காலுறைகளையும் அணிகிறார்கள். பெருநகரங்களில் வாழும் பெண்டிருள் சிலர் மேற்கத்திய முறையில் உடுத்துகிறார்கள். பெரும்பாலான பெண்கள் நீண்ட கறுப்பு நிற ஆடை அணிவர். இதைச் சதோர் (Chador) என்பர். இப்போது பெண்கள் பர்தா அணியவேண்டுமென வற்புறுத்தப்படுகிறார்கள்.
பொழுதுபோக்கு
கால்பந்தாட்டம், கூடைப் பந்தாட்டம், மற்போர், சதுரங்கம், தென்னிசு, பனியில் சறுக்கி விளையாடுதல் போன்ற களியாட்டங்களை விளையாடி மகிழ்வர். தேநீர் அருந்துவதும் உக்கா என்னும் புகைபிடிப்பதும் நண்பர்களுடன் உரையாடுவதும் ஈரானியரின் பொழுதுபோக்குகள்.
இசுலாம் சமயத் தொடர்பான சில நாள்களை அவர்கள் விடுமுறை நாள்களாகக் கொண்டாடுகிறார்கள். நவரோசு என்பது புத்தாண்டு நாளாகும்.
நகரவாழ்க்கை
ஈரான் நாட்டின் பெரும்பாலான நகரங்கள் இந்நாட்டின் மேற்குப் பகுதியில் மலைகளுக்கு அண்மையில் அமைந்துள்ளன. ஓர் இலட்சம் மக்களைக் கொண்ட ஈரானிய நகரங்கள் இருபது நகரங்களுக்கும் மிகுதியானவை.
களிமண் செங்கற்களான வீடுகளும் மினரட்டு என்னும் உயர்ந்த சிறு கிளைக் கோபுரங்களைக் கொண்ட மசூதிகளும் பார்ப்பதற்கு அழகாக இருப்பதில்லை. மாநகரங்களில் பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், குடியிருப்புக் கட்டிடங்கள், அரசாங்க அலுவலகக்கட்டிடங்கள் ஆகியவை அழகாகக் கட்டப்பட்டுள்ளன. இம்மாநகரங்கள் ஒரு காலத்தில் ஒட்டகங்களுடன் வரும் வணிகர்கள் கூடும் இடமாகவும் வழிபாட்டு மையமாகவும் இருந்தவை. இப்போது இவை அரசாங்க மையமாகவோ செய்தொழில்களின் மையங்களாகவோ திகழ்கின்றன.
கிராமப்புற வாழ்க்கை
உழவர்களுள் பெரும்பாலோர் கிராமப்புறங்களில் வாழ்கிறார்கள். இக்கிராமங்கள் ஒரே தெருக்கள், குறுகிய இறுகலான செப்பனிடப்படாத சந்துபொந்துகளைக் கொண்டவை. கிராமத்தின் நடுவில் மசூதிகள் உள்ளன. பெரும்பாலான கிராமங்களில் பொதுவான குளியல் அறைகளும் மாவு ஆலைகளும் உள்ளன. பெரும்பாலான கிராமங்களில் பள்ளிகளோ பண்டகச் சாலைகளோ இல்லை. பெருநகரங்களில் மட்டும் கடைத்தெருக்களும் வாணிக மையங்களும் உள்ளன.
பொருளாதாரம்
ஈரான் 1950க்குப் பின்னர் மாறி வரும் பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது. பண்ணைகளையும் குடிசைக் கைத்தொழில்களையும் நம்பியிருந்த இந்நாட்டின் பொருளாதாரம், வளர்ந்து வரும் தொழிற்சாலைகளாகவும் பணப்பயிர்களை உற்பத்தி செய்யும் தொழில்களாகவும் மாறி வருகிறது. ஈரானில் கிடைக்கும் பெட்ரோலும் எரிவாயுவும் இந்ந ஈட்டிற்குப் பெருஞ்செல்வத்தை வாரி வழங்குவதுடன், ஆயிரமாயிரம் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகளையும் ஈந்துள்ளன. பெட்ரோலிலிருந்து கிடைக்கும் வருவாய் ஒவ்வோராண்டும் பெருகி வருகிறது. பெட்ரோல் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் நிறுவனம் (OPEC) பெட்ரோலின் விலையை உயர்த்தியதால் வருமானம் உயர வழி பிறந்தது. ஆனால், இந்நாட்டில் 1979–இல் ஏற்பட்ட புரட்சியின் விளைவாகப் பெட்ரோல் உற்பத்தியும், அதனால் கிடைக்கும் வருவாயும் பெருமளவு குறைந்துவிட்டன. ஈரான்-ஈராக்கியப் போர்களினால் ஈரானின் பொருளாதாரம் பெரிதும் சீர்குலைந்துள்ளது.
ஈரானின் எண்ணெய்த் தொழிலில் 1970-இலிருந்து மாற்றமொன்று ஏற்பட்டது. இங்குப் பெட்ரோ-இரசாயனத் தொழிற்சாலைகள் உருவாக்கப்பெற்றன. செயற்கை உரங்கள், நெகிழி (Plastics), செயற்கை நூல்கள், கந்தகம் ஏனைய இரசாயனப் பொருள்கள் உற்பத்தி செய்யப்படலாயின, உலோகங்கள், இயந்திரக் கருவிகள், பேருந்துக் கட்டுமானம் போன்றவற்றைத் தயாரிக்கும் பெருந்தொழிற்சாலைகள் இப்போது உருவாகி வருகின்றன. மேற்கூறிய தொழில்களைச் செய்ய வெளிநாட்டு வாணிகக்குழுக்கள் முன்வந்தன. அவை அரசிடமிருந்து இதற்காகப்பல சிறப்புரிமைகளைப் பெற்று இயங்கின. ஆனால், 1979–இல் ஏற்பட்ட இசுலாமியப் புரட்சிக்குப் பின்னர் அவை நாட்டுடைமையாக்கப்பட்டுவிட்டன.
பொருளாதார முன்னேற்றத்திற்காக 1950க்கும் 1960க்கும் இடைப்பட்ட காலத்தில் அமெரிக்க ஐக்கிய நாடு ஈரானுக்கு மிகுதியாகக் கடன் வழங்கியது. அமெரிக்க ஐக்கிய நாட்டுத் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈரானுக்கு இக்காலத் தொழில்நுட்பங்களைக் கற்றுத்தர உதவினர். ஆனால், புரட்சிக்குப் பின்னர் இத்தகைய அமெரிக்க உதவிகள் அனைத்தும் நின்றுவிட்டன.
வரலாறு
ஈரானில் 3500–இலிருந்து 4000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரிய இன மக்கள் குடியேறினர். அவர்கள் சோவியத்து உருசியாவின் தென் பகுதியிலிருந்து குடிபெயர்ந்து வந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள். ஈரானின் முதல் ஆயிரம் ஆண்டு அங்குத் தோன்றி மறைந்த பல அரசுகளின் வரலாறாகும். கி.மு. ஆறாம் நூற்றாண்டில் பாரசீக அக்மீனிய மரபைச் சார்ந்த பேரரசர் சைரசு என்பார் வட ஈரானிலிருந்த மீடியர்களைத் தோற்கடித்து, ஈரானிய மக்களை இணைத்தார். சைரசின் ஆட்சிக் காலத்தில் பாரசீகப் படைகள் இன்றைய மேற்கு ஆசியா, மத்திய ஆசியா போன்ற பகுதிகளை வென்றன. இன்றைய பாகிசுத்தானின் எல்லைவரை அவருடைய பேரரசு பரந்து விரிந்திருந்தது. சைரசால் நிலைநாட்டப்பெற்ற அப்பெரும் பேரரசு ஏறத்தாழ இருநூறு ஆண்டுகள் நீடித்தது. அவரைத் தொடர்ந்து தாரியசு (Darius) பஞ்சாபையும் சிந்துவையும் வென்றார். கி.மு. நான்காம் நூற்றாண்டின் மகா அலெக்சாந்தர் அப்பேரரசை அழித்தார். அலெக்சாந்தரும் அவர் பின்வந்தவர்களும் ஈரானில் புதியதொரு மரபினை நிலைநாட்டிக் கிரேக்கர்களின் பண்பாட்டுச் செல்வாக்கை அப்பகுதியில் பரப்பினர்.
கிரேக்கர்களின் ஆட்சி கி.மு. இரண்டாம் நூற்றாண்டு வரை நீடித்தது. அவர்களுக்குப் பின்னர் ஈரானியர்களுடன் தொடர்புகொண்ட பார்ததியர்கள் ஈரானில் தம்மாட்சியை நிலைநாட்டினர். 350 ஆண்டுகளுக்குப் பின்னர்ப் பார்த்தியர்களைச் சசானியர் தோற்கடித்து, மேலுமொரு பாரசீக மரபின் ஆட்சியை நிலைநாட்டி, உரோமானியரின் படையெடுப்புகளை விரட்டியடித்தனர். சசானியரின் ஆட்சிக்காலத்தில் (கி.பி. 224 முதல் 641 வரை) பாரசீகப் பண்பாடும் தேசியமும் மீண்டும் மறுமலர்ச்சியுற்றன. அராபியப் படைவீரர்கள் கி.பி. 7–ஆம் நூற்றாண்டில் ஈரானிய மேட்டு நிலத்தைக் கைப்பற்றி, அங்கிருந்த சசானிய மரபினரின் ஆட்சியைக் கவிழ்த்தனர். அராபியர்கள் தங்கள் சமயமான இசுலாத்தையும் அராபிய எழுத்து முறையையும் இங்குப் புகுத்தினர். ஈரானியரின் பண்டைய சமயமான சொராட்டிரியம் அகற்றப்பட்டது.
அராபியர்களின் ஆதிக்கம் பல நூற்றாண்டுகள் தொடர்ந்தது. அங்கு இசுலாமியப் பேரரசு நலியத் தொடங்கும்வரை இவ்வாதிக்கம் நீடித்தது. அராபியர்களை அடுத்து அயலார் பலர் ஈரானின்மீது படையெடுத்தனர். அடுத்தடுத்து அயலார் பலர் கி.பி. 1040 முதல் 1500 வரை ஏறத்தாழ ஐந்து நூற்றாண்டுகள் படையெடுத்து ஈரானில் ஊடுருவினர். செல்சுக்குத் துருக்கியர், செங்கிசுகான் தலைமையில் மங்கோலியர், தைமூர் தலைமையில் தார்டர் துருக்கர் போன்றோர் ஈரானைச் சூறையாடினர். நகரங்கள் கொள்ளையடிக்கப்பட்டுச் சிற்றூர்கள் அழித்தன. இப்படையெடுப்புகள் நிகழ்ந்த காலத்தில் ஈரானில் குழப்பமும் நலிவும் மிகுந்தன.
சபாவிய மரபினர் (Safawid Dynasty 1499–1722) பெருமுயற்சி செய்து பாரசீகத்தின் பழம்பெருமையை ஓரளவு திரும்ப நிலைநாட்டினர். அம்மரபினருள் முதலாம் சா அப்பாசு (கி.பி. 1587–1628) என்பார் தலைசிறந்தவர் என்று கருதப்படுகிறார். அவர் ஈரானிய நகரங்களைப் புதுப்பித்தும் புதிய சாலைகளை அமைத்தும் ஆட்சியை நிலைநிறுத்தினார். இசுபகான் என்னும் நகரம் உலகிலேயே அழகுவாய்ந்த நகரமாக அவர் காலத்தில் திகழலாயிற்று. சா அப்பாசு ஈரானில் இசுலாமிய சமயத்தின் சியாப் பிரிவினை நிலைநாட்டினார். அது நாட்டுச் சமயமாக்கப்பட்டது. சமய ஆர்வத்தைக் கிளர்ந்தெழச்செய்து நாட்டை ஒருமைப்படுத்த அவர் முயன்றார்.
ஆப்கானியரின் படையெடுப்பால் கி.பி. 1722–இல் சபாவிய மரபு நொறுங்கிச் சிதறுண்டது. நாதர் சாவின் ஆட்சிக்காலத்தில் (கி.பி. 1736–47) மீண்டும் ஈரான் படை வலிமிக்க நாடாக மிளிர்ந்தது. பார்சீகப் படைவீரர்கள் ஆப்கானிசுத்தானத்தை வென்றதுடன், இந்தியாவில் தில்லிவரை படையெடுத்தனர். அப்படையெடுப்பின்போது தான் நாதர் சா தில்லியிலிருந்த மயிலாசனத்தைக் கைப்பற்றிப் பாரசீகத்- திற்குக் கொண்டு சென்றார். இரத்தினங்கள் பதித்த இம்மயிலாசனம் உலகப் புகழ் பெற்றதாகக் கருதப்படுகிறது. அது இப்போது தெகரான் (Tehran) அருங்காட்சியகத்தில் உள்ளது. தெகரான் கி.பி. 1788–இலிருந்து ஈரானின் தலைநகராயிற்று. நாதர் சா காலமானதை அடுத்து, இரு பகை மரபுகளுக்கிடையே ஈரானில் உள்நாட்டுப் போர் மூண்டது. கசார் மரபினர் கி.பி. 1790–ஆம் ஆண்டளவில் வெற்றிபெற்று முதலாம் உலகப் பெரும்போரின் முடிவு வரை ஈரானை ஆண்டனர்.
அராபியரின் ஆட்சி முடிவுற்றதற்குப் பின்னர் ஈரானுக்கும் மேலை நாடுகளுக்குமிடையே இருந்த தொடர்பு அறுபட்டுப் போய், அந்நாடு அறிவியலிலும் தொழில்நுட்பத் துறையிலும் மிகவும் பின்னுக்குச் சென்றது. இடையறாத போர்களினாலும் தொடர்ந்து நிகழ்ந்த படையெடுப்புகளினாலும் கி.பி. 19–ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஈரான் பெரிதும் நலிந்து மெலிந்தது. ஈரானின் பலக்குறைவைப் பயன்படுத்திக் கொண்டு உருசியா, பிரிட்டன் மற்றும் ஏனைய மேலை நாடுகள் ஈரானின் பொருளாதார, அரசியல் சிக்கல்களில் ஈடுபாடு கொண்டன. ஈரானின் புவியியல் அமைப்பை உறுதுணையாக்கிக் கொள்ள முனைந்த உருசியா, தெற்கே பாரசீக வளைகுடா வரை தம் நாட்டின் எல்லையை விரிவாக்கம் செய்ய விழைந்தது. ஆனால், பிரிட்டன் ஈரானை இடைநடு நாடாக்கி இந்தியாவுக்குள் உருசியரின் செல்வாக்கு வரவொட்டாமல் தடுக்க முயன்றது. ஈரானுக்கும் உருசியாவுக்குமிடையே கி.பி. 1801–13, கி.பி. 1825–28 ஆகிய ஆண்டுகளில் இரு போர்கள் மூண்டன. இதன் பயனாக ஆராசு ஆற்றுக்கு வடபால் வரை இருந்த ஈரானிய நிலப்பகுதிகள் உருசியாவின் வசமாயின. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஈரானின் பெரும் எண்ணெய்க் கிணறுகளின் வாணிக உரிமைகளைப் பிரிட்டன் கைப்பற்றியது. இக்காலங்களில் ஈரானிய அரசு பிரிட்டன், உருசியா ஆகிய இருநாடுகளின் கைப்பாவையாயிருந்தது. இவ்விரு நாடுகளும் 1907–இல் தத்தம் செல்வாக்குக்குட்பட்ட பகுதிகளாக ஈரானைப் பங்கிட்டுக் கொண்டன.
தம் சுதந்திரம் பறிபோகாமல் காத்துக் கொள்ளும் பொருட்டு, ஈரானிய மக்கள் உள்நாட்டுச் சீர்திருத்தம் கோலி இயக்கமொன்றைத் தொடங்கினர். அதன் விளைவாக 1906–இல் அரசியலமைப்புத் திட்டம் உருவாக்கப்பட்டது. அதன்படி பிரதிநிதித்துவ அரசுக்கு வழிபிறந்தது. முதல் உலகப் பெரும்போருக்குப் பின்னர் ஈரானைப் புதிய மயமாக்கும் முயற்சிகள் பெருகின. அப்போது இரிசா சா பகல்வி என்பார் சீர்திருத்தம், முன்னேற்றம் என்றும் அடிப்படைகளில் புதிய மரபினை நிலைநாட்டினார். பகலவி மரபின் ஆட்சி 1979–ஆம் ஆண்டு வரை நீடித்தது. புதிய தொழில் நுட்ப வளர்ச்சி, நிலச் சீர்திருத்தம், கல்வி முன்னேற்றம், பெண்களின் மதிப்புப் போன்றவற்றில் முன்னேற்றம் ஏற்பட்டது. அரசியல் பகைவர்களை அவர் கடுமையாகவும் கொடுமையாகவும் நடத்தினார்.
இடதுசாரி அரசியல் குழுக்கள் சியா முசுலிம்களுடன் இணைந்து சா பகலவியை விரட்டிவிட்டு முசுலிம் சமயத் தலைவர்கள் விழைந்த இசுலாமியக் குடியரசை நிலைநாட்டின. அவர்களின் தலைவராக அயத்துல்லா கோமேனி என்பார் பொறுப்பேற்றார். அவர் இசுலாம் சமயத்தைப் பழைய முறையைப் பின்பற்றிப் பாதுகாப்பதில் முனைந்துள்ளார். இதனை ஏற்றுக் கொள்ளாதவர்களுமுண்டு.
இன்றைய நிலை
ஈரானுக்கும் ஈராக்குக்கும் இடையே 1980–ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் எல்லைகள் குறித்தும் வேறு காரணங்களுக்காகவும் ஏற்பட்ட சிக்கல்களின் விளைவாகப் போர் மூண்டது. உயிரிழப்புகளும் பொருளிழப்புகளும் இரு திறத்தாருக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய போதிலும் போர் நின்றபாடில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேல் இப்போர் நீடிப்பது, குறிப்பாக ஆசிய மக்களையும் பொதுவாக உலக மக்களையும் கவலைக்குள்ளாக்கியுள்ளது.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 680)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3xe3vmqc/
தமிழ்“ஈரான்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/3xe3vmqc/APA
Oliyon Research. (2026). ஈரான். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3xe3vmqc/MLA
"ஈரான்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/3xe3vmqc/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment