ஒரு நிறுவனத்தின் வரவு செலவுகளைக் கணக்கிட்டு ஓராண்டு இறுதியில் உருவாக்கப்படும் புள்ளி விவரங்களுக்கு இறுதிநிலைக் கணக்குகள் (Final Accounts) என்பது பெயர். தொழில் என்பது தொடர்ச்சியாகச் செயற்படும் பண்பையுடையதாகும். வணிகர் வைத்திருக்கும் கணக்குப் பதிவுகள் ஒரு குறிப்பிட்ட நிதியாண்டில் ஏற்படும் ஆதாயம், இழப்புப் போன்றவற்றைக் கண்டுபிடிக்க உதவுகின்றன. ஆதாயம் அல்லது இழப்பைக் கண்டுபிடிக்க ஓராண்டுக் காலம் இன்றியமையாத தேவையாகும். அக்காலத்தில் ஏற்படும் ஆதாயம், இழப்புப் போன்றவற்றைக் கண்டுபிடிக்கவும் நிதிநிலையைக் காணவும் கணக்குகள் பயன்படுகின்றன. இறுதிநிலைக் கணக்குகளை வணிகர் வைத்திருக்கும் கணக்குப் பதிவுகளைக் கொண்டு உருவாக்கலாம். இவற்றை உருவாக்க எடுக்கும் முதல் நடவடிக்கை இருப்புப் பட்டியல் (Trial Balance) ஆகும். எல்லாவகைக் கணக்குகளையும் ஒருங்கிணைப்பது இந்த இருப்புப் பட்டியல்தான். எனவே, இருப்புப் பட்டியல் இல்லாமல் இறுதிநிலைக் கணக்குகளை உருவாக்க இயலாது. இறுதிநிலைக் கணக்குகள் வருவாய்க் கணக்கு, இருப்பு நிலைக் குறிப்பு என இரண்டு வகைப்படும். வருவாய்க் கணக்கு வாணிகக் கணக்கு, ஆதாய–இழப்புக் கணக்கு என இருவகைப்படும். வாணிகக் கணக்கு ஒரு வணிகரின் மொத்த ஆதாயத்தையும் மொத்த இழப்பையும் கண்டுபிடிக்க உண்டாக்கப்படுகிறது. ஒருவருடைய நிகர ஆதாயத்தையும் நிகர இழப்பையும் காண ஆதாய – இழப்புக் கணக்கு உண்டாக்கப்படுகிறது. அதேபோல் அவருடைய சொத்துகளையும் (Assets) பொறுப்புகளையும் (Liabilities) அடிப்படையாக வைத்து, வணிகரின் நிதிநிலையை அறிந்திட இறுதிநிலைக் குறிப்பு உருவாக்கப்படுகிறது. வாணிகக் கணக்கு ஒரு வணிகர் உருவாக்கும் வாணிகக் கணக்கு அவருடைய சரக்குக் கொள்முதல், விற்பனை ஆகியவற்றின் மொத்த ஆதாயம் அல்லது இழப்பு எவ்வளவு என்ற முடிவைக் கூறுகிறது. மொத்த ஆதாயம் என்பது விற்பனை மதிப்பு, சரத்தின் அடக்கவிலை, நேர்முகச் செலவு ஆகியவற்றின் கூட்டுத்தொகையை விட மிகுதியாக இருக்கும் போது ஏற்படுவதாகும். அதேபோல் விற்பனை விலை குறைவாக இருந்தால் மொத்த இழப்பு ஏற்படும். பொதுவாக இக்கணக்கு அது உருவாக்கப்படும் காலத்தைக் குறிக்கும். இக்கணக்கின் செலவுப் பக்கத்தில் தொடக்கச் சரக்கிருப்பு, நிகரக் கொள்முதல், நேர்முகச் செலவுகளான கப்பல் துறை வரி, சுங்க வரி, இறக்குமதி வரி, வாடகை, உள்தூக்குக் கூலி, தொழிற் செலவுகள், எரிபொருள், உற்பத்திச் செலவுகள் போன்றவற்றை எழுத வேண்டும். வரவுப் பக்கத்தில் நிகர விற்பனை, இறுதிச் சரக்கிருப்பு போன்றவற்றை எழுத வேண்டும். வாணிகக் கணக்கு மொத்த ஆதாயத்தையும் அல்லது மொத்த இழப்பையும் காட்டுகிறது; விற்பனை விலையை வரையறை செய்திடப் பயன்படும் மொத்த ஆதாய விகிதத்தைக் கணக்கிட உதவுகிறது; நேர்முகச் செலவிற்கும் மொத்த ஆதாயத்திற்கும் உள்ள விகிதத்தைக் கணக்கிடவும் உதவுகிறது. நேர்முகச் செலவிற்கும் மொத்த ஆதாயத்திற்கும் உள்ள விகிதத்தால் தேவையற்ற செலவுகளைத் தவிர்க்க இது பயன்படுகிறது. இந்த ஆண்டின் கொள்முதல், விற்பனை, சரக்கிருப்பு, மொத்த ஆதாயம் போன்றவற்றைச் சென்ற ஆண்டுத் தொகைகளுடன் ஒப்பிடவும் இக்கணக்கு உதவுகிறது. உற்பத்திக் கணக்கு வணிகர்கள் தொழிலை இரண்டு வகையில் நடத்தலாம். அவை பொருள்களை அவர்களே உற்பத்தி செய்தல் அல்லது முன்பே வேறொருவர் உற்பத்தி செய்த பொருள்களை வாங்கி விற்றல் ஆகும். முதல் வகையில் உற்பத்திக் கணக்கும் இரண்டாம் வகையில் வாணிகக் கணக்கும் உருவாக்கப்படுகின்றன. எனவே, வணிகர் மூலப் பொருள்களை முழுமையடைந்த பொருள்களாக உற்பத்தி செய்யும்போது உற்பத்திக் கணக்கை எழுதுகிறார். அதனுடைய நோக்கம் ஒரு குறிப்பிட்ட காலப் பகுதியில் உற்பத்தியாகும் பொருள்களின் உற்பத்திச் செலவைக் கணிப்பதாகும். இவ்வுற்பத்திச் செலவை அங்காடி விலையோடு ஒப்பிட்டு விற்பனை விலையை அவர் வரையறை செய்கிறார். இது ஒரு கணக்கு வடிவத்தில் உருவாக்கப்படுகிறது. இது ஒரு குறிப்பிட்ட கால நடவடிக்கையின் முடிவைக் காட்டுவதால் அக்காலத்தைக் குறிப்பிட வேண்டும். இக்கணக்கின் செலவுப் பக்கத்தில் மூலப் பொருளின் தொடக்க இருப்பு, முற்றுப் பொருளின் தொடக்க இருப்பு, மூலப் பொருளின் கொள்முதல், தொழிற்சாலைக் கூலி, விளக்குச் செலவு, ஆற்றல் செலவு, வாடகைத் தேய்மானம் போன்ற அனைத்து உற்பத்திச் செலவுகளும் எழுதப்படுகின்றன. வரவுப் பக்கத்தில் மூலப் பொருள் இறுதியிருப்பு, முற்றாப் பொருள் இறுதி இருப்பு போன்றவை எழுதப்படுகின்றன. இரு பக்கங்களின் கூட்டுத் தொகையில் காணப்படும் வேறுபாடு உற்பத்திச் செலவாகும். இது வாணிகக் கணக்கின் செலவுப் பக்கத்திற்கு மாற்றப்படுகிறது. சிறிய நிறுவனங்களில் வாணிகக் கணக்கு என்ற ஒரு கணக்கு மட்டும் உருவாக்கப்படுகிறது. உற்பத்திக் கணக்கு மூலப்பொருள் உற்பத்திச் செலவுகள் போன்றவற்றைக் கொண்டுள்ளது. ஆனால், வாணிகக் கணக்கு முழுமையடைந்த பொருள்களையும் நேர்முகச் செலவுகளையும் கொண்டுள்ளது. உற்பத்திக் கணக்கு மொத்த உற்பத்திச் செலவுகளையும் கொண்டுள்ளது. வாணிகக் கணக்கு, மொத்த ஆதாயம் அல்லது இழப்பைக் காட்டுகிறது. உற்பத்திக் கணக்கின் விளைவு அல்லது முடிவு வாணிகக் கணக்கிற்கு மாற்றப்படுகிறது. ஆதாய–இழப்புக் கணக்கு இதனை வாணிகக் கணக்கு உருவாக்கப்பட்ட பின்னர் உருவாக்க வேண்டும். வாணிகக் கணக்கிலிருந்து மொத்த ஆதாயத்தையும் இழப்பையும் இங்கு மாற்றி எழுத வேண்டும். இக்கணக்கில் முழுமையாகப் பெயரளவுக் கணக்குமட்டில் எழுதப்படுவதால் செலவுப் பக்கத்தில் செலவும் இழப்பும் எழுத வேண்டும். வரவுப் பக்கத்தில் ஆதாயம், வருவாய் ஆகியவற்றை எழுதவேண்டும். நேர்முகச் செலவு போக மீதமுள்ள செலவுகள் அனைத்தையும் இங்கு எழுதவேண்டும். அன்றியும் எல்லா ஆதாயத்தையும் வருவாயையும் இங்கு எழுத வேண்டும். இக்கணக்கின் வரவுப் பக்கக் கூட்டுத் தொகை மிகுதியாக இருந்து, செலவுப் பக்க மொத்தம் குறைவாக இருந்தால் நிகர ஆதாயம் ஏற்படுகிறது. இந்நிலைமை மாறுபட்டிருந்தால் நிகர இழப்பு ஏற்படும். இக்கணக்கும் ஒரு குறிப்பிட்ட காலப் பகுதியின் முடிவைக் காட்டுவதால், அக்காலத்திற்குரிய ஆதாய இழப்புக் கணக்கு என்று எழுத வேண்டும். இக்கணக்கின் செலவுப் பக்கத்தில் மொத்த இழப்பு, விற்பனைச் செலவுகள், நிருவாகச் செலவுகள், பாதுகாப்புச் செலவுகள், நிதித் தொடர்பான செலவுகள் முதலியன எழுதப்படுகின்றன. சரக்குத் தூக்குங் கூலி, விளம்பரம், பயணர் கழிவு, கட்டுமானச்செலவு போன்றவை விற்பனைச் செலவுகளாகும். ஊதியம், எழுது பொருள், விளக்குச் செலவுகள், வாடகை, வரி, அஞ்சற் செலவு, தொலைபேசி, காப்பீடு போன்றவை நிருவாகச் செலவாகும். கடன்மீது வட்டி, தள்ளுபடி, வங்கிக் கட்டணம் போன்றவை நிதியியற் செலவாகும். சட்டக்கட்டணம், சட்டச் செலவு, தணிக்கைக் கட்டணம், தேய்மானம் போன்றவை பிறவகைச் செலவாகும். ஆதாய இழப்புக் கணக்கின் வரவுப்பக்கத்தில் மொத்த ஆதாயமும் எல்லா வகையான வருவாய்களும் ஆதாயமும் எழுதப்படுகின்றன. ஆனால், இம்மூன்று வகைக் கணக்குகளிலுமே மூலதனச் செலவுகளை எழுதக் கூடாது. வாணிகக் கணக்கு வருவாய்க் கணக்கின் முதற் பகுதியாகும். இது வாணிக முடிவை மட்டில் காட்டுகிறது. ஆனால், ஆதாய இழப்புக் கணக்கு வருவாய்க் கணக்கின் இரண்டாம் பகுதியைக் காட்டுகிறது. தொழிலின் இறுதிநிலையையும் இது காட்டுகிறது. வாணிகக் கணக்கு மொத்த ஆதாயம் அல்லது மொத்த இழப்பைக் காட்டுகிறது. ஆனால், ஆதாய இழப்புக் கணக்கு நிகர ஆதாயம் அல்லது நிகர இழப்பைக் காட்டுகிறது. வாணிகக் கணக்கில் உற்பத்திச் செலவு, நேர்முகச் செலவுகள் முதலியன எழுதப்படுகின்றன. ஆனால், ஆதாய–இழப்புக் கணக்கில் விற்பனை, நிருவாகச் செலவுகள் மட்டில் எழுதப்படுகின்றன. ஆதாய–இழப்புக் கணக்கில் அனைத்து வருவாயும் இழப்பும் எழுதப்படுகின்றன. ஆனால், வாணிகக் கணக்கில் இவை எழுதப்படுவதில்லை. இருப்புநிலைக் குறிப்பு தொழில் முனைவோரின் சொத்துகளையும் பொறுப்புகளையும் மதிப்பிடவும், ஒரு தொழில் நிறுவனத்தின் நிதிநிலையைக் காணவும் இது உருவாக்கப்படுகிறது. எனவே, சொத்துகளும் பொறுப்புகளும் தகுந்த முறையில் மதிப்பீடு செய்யப்படவேண்டும். அதிக மதிப்பீடோ குறைவான மதிப்பீடோ உண்மையான மதிப்பீட்டைக் குறைக்கும். நிலைச் சொத்துகளுக்கும் நடைமுறைச் சொத்துகளுக்கும் தேவையான தேய்மானம் எழுதப்படவேண்டும். இது வாணிகக் கணக்கு, ஆதாய–இழப்புக் கணக்கு போன்றவற்றைத் தயாரித்த பின்னர் உருவாக்கப்பட வேண்டும். பெயரளவுக் கணக்குகளை முதலில் கூறப்பட்ட இரு கணக்குகளிலும் எழுதிவிட்டமையால், மிஞ்சியுள்ள ஆள்சார் சொத்துக் கணக்குகளை இங்கு எழுத வேண்டும். இதன் பக்கத்தைப் பொறுப்புப் பக்கம் என்றும் சொத்துப் பக்கம் என்றும் எழுத வேண்டும். வணிகர் அல்லது வணிக நிறுவனத்தின் பெயர், தேதி ஆகியவற்றை தலைப்பில் எழுத வேண்டும். இருப்புநிலைக் குறிப்பு ஒரு குறிப்பிட்ட தேதியில் எழுதப்படுவதால் அதனை ‘அக்காலத்தின் இருப்புநிலைக் குறிப்பு’ என்று எழுத வேண்டும். வழக்கமாகப் பொறுப்புகள் இடப் பக்கமும் சொத்துகள் வலப் பக்கமும் எழுதப்படுகின்றன. சொத்துகள் அவற்றின் பண நீர்மைத் (Liquid Cash) தன்மை, நிலையான தன்மை ஆகியவற்றைக் கொண்டு எழுதப்படுகின்றன. கையில் பணத் தொகை, வங்கியில் பணத்தொகை, முதலீடு, வரவு, உண்டியல், மொத்தக் கடனாளி, இறுதிச் சரக்கிருப்பு, மனைத்துணைப் பொருள், எந்திரம், நிலம், கட்டடம், முன்செலுத்திய செலவு என்ற வரிசையில் முறையாக எழுதுவது சொத்துகளை எளிதில் பணமாக்கும் தன்மையில் எழுதுவதாகும். இதையே நிலம், கட்டிடம், எந்திரம், மனைத்துணைப் பொருள், இறுதிச் சரக்கிருப்பு, பல்வகைக் கடனாளிகள், வரவு உண்டியல் முதலீடு, வங்கியில் பணத் தொகை, கையில் பணத் தொகை, முன்செலுத்திய செலவு என்ற வரிசையில் எழுதுவது சொத்துகளின் நிலையான தன்மையில் எழுதுவதாகும். பொறுப்புகளை முடிவு செய்யும் வரிசையில் எழுத வேண்டும். அதாவது, உடனடிக் கடன்களை முதலில் எழுத வேண்டும். கடனீந்தோர்கள், பிறவகைக் கடனாளிகள், செலுத்து உண்டியல்கள், கடன்கள், காப்பும் மிகுதியும் முன்காட்டிப் பெற்ற வருவாய், முதல் என்று பொறுப்புகளை வரிசைப்படுத்தி முறையாக எழுத வேண்டும். பண நீர்மைத் தன்மை வரிசையைத் தனி வணிகர், கூட்டு வாணிகம் செய்வோர் ஆகிய இருசாராரும் பின்பற்றுகின்றனர். நிலையான தன்மை வரிசையை நிறுவனங்கள் பின்பற்றுகின்றன. கம்பெனியின் இருப்பு நிலைக் குறிப்பு எவ்வாறு உருவாக்கப்- பட வேண்டும் என்பதனை 1956–ஆம் ஆண்டு இந்திய நிறுவனச் சட்டம் வரையறுத்துள்ளது. இருப்புப் பட்டியலும் இருப்பு நிலைக் குறிப்பும் இருப்புப் பட்டியல் வாணிகக் கணக்கு, ஆதாய–இழப்புக் கணக்குப் போன்றவற்றை உண்டாக்குவதற்கு முன்னர் உருவாக்கப்படுகிறது. ஆனால், இருப்புநிலைக் குறிப்பு அவற்றுக்குப் பின்னர் உருவாக்கப்படுகிறது. இருப்புப் பட்டியல் இருப்புகளின் பட்டியல். ஆனால், இருப்புநிலைக் குறிப்பு சில இருப்புகளின் அறிக்கையாகும். இருப்புப் பட்டியலின் நோக்கம் கணக்குகளின் மொத்தத் தொகைச் சமன்பாட்டைக் காட்டுவதாகும். ஆனால், ஒருவரின் நிதி நிலையைக் காட்டுவது இருப்பு நிலையின் நோக்கமாகும். இருப்புப் பட்டியலில் செலவு–வரவு இருப்புகள் முறையே இடப்பக்கத்திலும் வலப்பக்கத்திலும் எழுதப்படுகின்றன. ஆனால், இருப்பு நிலைக் குறிப்பில் இடப்பக்கம் பொறுப்புகளும் வலப்பக்கம் சொத்துக்களும் எழுதப்படுகின்றன. இருப்புப் பட்டியலில் இருப்புகளை எழுதிடக் குறிப்பிட்ட வரிசை முறை இல்லை. ஆனால், இருப்பு நிலைக் குறிப்பில் சொத்துகள், அவற்றின் பண நீர்மைத் தன்மை, நிலையான தன்மை ஆகியவை முறையே எழுதப்படுகின்றன. இருப்புப் பட்டியலில் தொடக்கச் சரக்கிருப்பு மட்டுமே எழுதப்படுகிறது. ஆனால், இருப்பு நிலைக் குறிப்பில் தொடக்கச் சரக்கிருப்பும் இறுதிச் சரக்கிருப்பும் எழுதப்படுகின்றன. இறுதிநிலைக் கணக்குகள் கணக்குப் பதிவியல் முறையில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன என்பது தெளிவாக விளங்குகிறது. எனவே, தனி வணிகம், கூட்டு வணிகம், நிறுவனம், பிற வகை நிதி ஈடுபாடுள்ள நிறுவனம் ஆகியவை இறுதிநிலைக் கணக்குகளை உருவாக்குவது மிகவும் தேவையாகும். ஒரு தொழில் நிறுவனத்தின் ஆதாய-இழப்பையும் நிதி நிலைமையையும் இறுதி நிலைக் கணக்கின் மூலமே அறிந்திட முடியும். கே.என்.இரா. துணை நூல்கள் Hrishikesh Chakraborty, Advanced Accountancy, Oxford University Press, Calcutta, 1978. Balasubramaniam, M., Simplified Accountancy, Rochouse and Sons Private Limited, Madras, 1970.