செல் சட்டகம்
cel caṭṭakam
சட்டகம் (skeleton) என்பது அது புறத்தே அமைந்திருப்பினும், உடலின் உள்ளே அமைந்திருப்பினும், ஒவ்வோர் உயிரிக்கும், ஒரு குறிப்பிட்ட வடிவம் அமைவதற்கும், இயக்கத்துக்கும் துணை செய்வதாகும்.
சட்டகம் (skeleton) என்பது அது புறத்தே அமைந்திருப்பினும், உடலின் உள்ளே அமைந்திருப்பினும், ஒவ்வோர் உயிரிக்கும், ஒரு குறிப்பிட்ட வடிவம் அமைவதற்கும், இயக்கத்துக்கும் துணை செய்வதாகும். அதே போல, நுண் குழாய்கள், நுண் இழைகள், இடைப்பட்ட இழைகள் என்ற மூவகை நீண்ட இழைகள் நார் போன்ற அமைப்புகளால் ஆன வலைப் பின்னல் ஒன்று செல்களுக்குள் அமைந்து, செல் சட்டமாக உதவுகின்றது. இவ்வகைச் சட்டகம் நியூக்ளியஸ் உயிரிகளின் (eukaryotes) செல்களில் இருக்கிறது. இச்சட்டகத்தின் இழைகள் செல்லுக்குள்ளேயே பிரிக்கப்பட்டும், மீண்டும் இணைக்கப் பட்டும், மாற்றம் அடைந்து கொண்டே இருக்கின்றன. இச்சட்டகம் செல்லுக்கு வடிவமளிப்பதுடன், அதன் இயக்கத்துக்கு வழி கோலவும் செய்து, நுண் குழாய்களில் ஆற்றலைச் சேமித்து வைத்துப் பிரிக்கப் படும் போது, இழுப்பு விசையை (elastic forces) வெளிப் படுத்திச் சைட்டோப்பிளாசத்தில் உள்ள வெவ்வேறு உறுப்புகளின் போக்குவரத்துக்கு உதவுமாறு செய்யவும் பயன் படுகிறது.
அண்மைக் காலத்தில் செல் சட்டகத்தின் இயக்கச் செயல் (mobile function) பற்றிய விபரங்கள் தெளிவாகியுள்ளன. தசைச் செல்களில் உள்ளவற்றைப் போலவே, அவையல்லாத ஏனைய வகைச் செல்களிலும் உள்ள சட்டகத்தின் இழைகள், அமீபாவின் இயக்கம் போன்றவற்றிலும் சைட்டோப்பிளாசம் நீர் போல ஓடுவதிலும் பங்கு வகிக்கின்றன. செல் சட்டகம் விலங்குச் செல்களில் நன்கு காணப்படும்; சில வகைப் புரோட்டோசோவா இன உயிரிகளில் மிகத் தெளிவாகக் காணக் கூடும்.
செல் சட்டகத்தின் அமைப்பு. நுண் குழாய்கள் என்பன 30 நானோமீட்டர் (1 நா. மீ. = 1/1000 மைக்ரான் (அ) μm) குறுக்களவும், ஏறத் தாழ 8 நா.மீ. கனமுள்ள சுவர்களால் சூழப் பட்டுமுள்ள உள்ளீடற்ற நீண்ட குழாய்கள் ஆகும். இவை டியூபுலின் (tubulin) எனப் படும் புரத மூலக் கூறுகளால் ஆனவை, நுண் குழாய்கள் செல்களில் உதிரியாகவோ, கட்டுக் கட்டாகவோ இருந்து, செல்லுக்கு ஒரு வடிவத்தையும், விறைப்புத் தன்மையையும் தருகின்றன. சான்றாக, நரம்புச் செல்களினின்றும் புறப்படும் நீண்ட இழைகளில், இத்தகைய நுண் குழாய்களை மிகத் தெளிவாகக் காணலாம்.
செல் சட்டகத்தின் மற்றொரு வகையான உறுப்பு, நுண் இழைகள் ஆகும். இவை 5–7 நா.மீ. குறுக்களவுள்ள மிக மெல்லிய நீண்ட இழைகளாக இருக்கும். தசைச் செல்களில் உள்ளமை போல நுண் இழைகளும், ஆக்டின் என்ற புரத வகையால் உண்டானவை. அமீபாவின் இடம் பெயர்தல் மற்றும் பிற வகைச் செல்களின் இயக்கம் ஆகியவற்றுக்கு இவ்விழைகள் உதவுகின்றன.
மூன்றாம் வகை நார் இடைப் பட்ட இழை (intermediate filament) எனப் படுகிறது. நுண் குழாய்கள், நுண் இழைகள் இவற்றுக்கு இடைப் பட்ட 7–12 நாமீ. வரை குறுக்களவு கொண்டிருக்கும். தோலில் உள்ள செல்கள் போன்ற சில வகைச் செல்களில் இவை, மிகப் பெரும் எண்ணிக்கையில் காணப் படும்; இவை வெவ்வேறு வகைப் புரதங்களால் ஆனவை. தோலில் உள்ள இந்த இழைகள், கெரோட்டினால் ஆனவை. நரம்புச் செல்களில் உள்ள இடைப் பட்ட இழைகள் வேறு பல புரதங்களால் ஆனவை. எந்த அசைவையும் ஏற்படுத்தாமல், செல்லுக்கு ஓர் அமைப்பை ஏற்படுத்தவே இவை உதவுகின்றன.
கடந்த ஒரு நூற்றாண்டுக் காலமாகவே நுண்ணோக்கியால் ஆய்பவர்கள், இவ்விதம் ஒரு செல் சட்டகம் உண்மையில் இருக்கிறதா, இல்லையா என்பதை ஆய்ந்தனர். கடந்த பத்தாண்டுகளில், இது உண்மையிலேயே உள்ளது என்பதை, ஒளி நுண்ணோக்கி (light microscope) மூலமும், புதிய முறைகளாலும், எலெக்ட்ரான் நுண்ணோக்கியின் உதவியாலும், மூலக் கூறுகளைப் பகுத்தறியும் முறையாலும், நிறுவ முடிந்தது. ஒளி நுண்ணோக்கியின் மூலம், செல் சட்டகத்தைக் காண, நின்றொளிர் எதிர்ப் பொருள் சட்டம் (fluorscent antibody technique) என்னும் முறை பயன் படுகிறது. இவ்வகையில் எடுக்கப்பட்ட நுண்ணோக்கிப் புகைப்படங்களைக் கண்ணுற்றால், செல் சட்டகத்தின் அமைப்பு மிகத் தெளிவாகப் புலனாகும். சைட்டோப்பிளாசமும், நியூக்ளியசும் இத்தகைய சட்டகத்தை உடையன; சைட்டோபிளாசத்தில் உள்ளதைச் செல் சட்டகம் எனவும், நியூக்ளியசில் அமைந்துள்ளதை நியூக்ளியஸ் பொருள் எனவும் கூறுவர். இவையிரண்டுக்கும் இடையே நேரடியான தொடர்பு இல்லை. —சோம. பேச்சிமுத்து
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 849)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3t4c3bh2/
தமிழ்“செல் சட்டகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/3t4c3bh2/APA
Oliyon Research. (2026). செல் சட்டகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3t4c3bh2/MLA
"செல் சட்டகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/3t4c3bh2/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment