இது ஒரு மந்த வேதித் தனிமம். இதன் குறியீடு Xe. அணு எண் 54. உயர் வளிமத் (noble gas) தொகுதியைச் சார்ந்த இத்தனிமம், தனிம மீள் வரிசை அட்டவணையில் பூஜ்யத் தொகுதியில் இடம் பெறுகிறது. பயன்கள். புகைப்பட மின்னல் விளக்குகளில் செனான் வளிமமே நிரப்பப் பட்டுள்ளது. இவ்விளக்கிலிருந்து சிறந்த வெண்மை நிற ஒளி கிடைக்கும். இவ்வெண்மை நிற ஒளியில் பார்வைப் புல வரம்பிற்குட் பட்ட ஏழு நிறங்களும் சமன் செய்யப் பட்ட முறையில் அமைந்துள்ளன. இவ்வளிமம் எரிந்து முடிவதற்குள் 10.000 முறை அல்லது அதற்கு மேலும் பயன் படுத்தலாம். செனான் வளிமம் நிரப்பப் பட்ட விளக்கு, கார்பன் மின் வில்லிலிருந்து கிடைக்கும் ஒளியின் செறிவுக்கு நெருங்கும் செறிவுடைய வெண்மையான ஒளியைத் தரும். எனவே, பேசும் படங்களைத் திரையிடும் கருவிகளில் இது பெருமளவில் பயன் படுகிறது. செனான். கதிர் வீச்சுகளை எளிதில் உறிஞ்சும். காட்டாக, எக்ஸ் கதிர்களை நன்கு உறிஞ்சும். அசெட்டிலீனுடன் கலக்கப் பட்ட செனான் வளிமக் கலவையில் எக்ஸ் கதிர்களை விழச் செய்தால், செனான் எக்ஸ் கதிர்களை உறிஞ்சி, அசெட்டிலீன் மூலக் கூறுகளுக்குப் பரிமாறுகிறது. இதன் விளைவாக, அசெட்டிலீன் வளிமம் பல்லுறுப்பாகிறது. திசுக்களில் செனானின் ஒப்புக் கரை திறன் மிகுதி. 20% ஆக்சிஜனும், 30% செனானும் சேர்ந்த கலவையைச் சுவாசிக்கும் மனிதன், உடனடியாக ஆழ்ந்த மயக்கத்திற்கு உட்படுகிறான் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, இக்கலவை அறுவை மருத்துவப் பிரிவில் பயன்படுகிறது. இக்கலவையைப் பயன் படுத்திய மனிதன், குறிப்பிட்ட காலம் கடந்தவுடன், எவ்வித விளைவும் இல்லாமல் விழித்தெழுகின்றான். செனான் வேதி வினைகளில் மந்தமானது என்பதால், பயன் படுத்துவோருக்கு, எவ்வித நச்சுத் தன்மையையும் ஏற்படுத்துவதில்லை. ஈதர், எத்திலீன் போன்ற ஏனைய மயக்க மருந்துப்பொருள்கள், தீப்பற்றும் அல்லது வெடிக்கும் அபாயம் உள்ளவை; ஆனால், செனான் வளிமம் தீப்பற்றாது; வெடிக்காது; மூளை பற்றிய ஆய்வில் (encephalography) செனான் வளிமம் இன்றியமையாதது. காற்றைச் செலுத்துவதை விடச் செனான் வளிமத்தைக் கபாலத்துள் ஊசியின் மூலமாகச் செலுத்தி, மிகத் தெளிவான எக்ஸ் கதிர்ப் படத்தைப் பெறலாம். மேலும், செனான் வளிமம் தீராத நீண்ட தலைவலியை ஏற்படுத்துவதில்லை; ஆனால், காற்றைச் செலுத்தினால், சிலருக்குத் தீராத தலைவலி ஏற்படும். உயர் ஆற்றல் இயற்பியலின் முக்கியமான கண்டு பிடிப்பு அணுக் கருக் கதிர்கள் ஆகும். எ-டு: காமாக் கதிர்கள். மெசான்கள் முதலியன. குமிழ் அறை (bubble chamber) ஒன்றில், நீர்மம் அதன் கொதி நிலைக்குச் சற்று கூடுதலான வெப்ப நிலையில் வைக்கப் பட்டிருக்கும். அணுக் கரு வினையின் மூலமாகத் தோன்றும் துகள்கள் செல்லும் பாதையில் குமிழ்கள் தோன்றும். இப்பாதையை எளிதில் புகைப் படமாகப் பெறலாம். இம்முறையில் செனானும், குமிழ் அறை நீர்மமாகவே பயன் படுகிறது. நியூட்ரான் எண்ணிகள் (neutron counters), எக்ஸ் கதிர் எண்ணிகள், வளிமம் நிரப்பப் பட்ட தைரட்ரான்கள் (thyratrons), காஸ்மிக் கதிர்கள், இவற்றை அயனியாக்கும் அறைகள் முதலிய துணைக் காரணிகளிலும், புற ஊதாக் கதிர்கள் உருவாக்கும் உயர் அழுத்த மின் வில் விளக்குகளிலும் செனான் வளிமம் பயன் படுகிறது. யுரேனியத்தை எரி பொருளாகக் கொண்ட அணு ஆற்றல் உலைகளில் 3–5% அணுப் பிணைப்பு விளை பொருள் செனான்–135 ஆகும். இந்தச் செனான் மிகச் சிறந்த நியூட்ரான் உறிஞ்சி. எனவே, அணுவாற்றல் உலைகளில், ஹீலியத்தின் உதவியால், இவ்வளிமம் தனித்துச் சேகரிக்கப் பட்டுத் தேவையான இடத்தில், நியூட்ரான்களை உறிஞ்சப் பயன் படுகிறது. கிடைக்கும் விதம். இது நுண் அளவுகளில் தாதுக்களிலும், விண் வெளிக் கற்களிலும் காணப் படுகிறது. தொழில் முறையில் பெறுவதற்கான ஒரே இடம் வளி மண்டலம் மட்டுமே. மில்லியன் பங்கிற்கு 0.086 பங்கு என்ற பருமனளவு வீதத்தில் உலர்ந்த காற்றில் செனான் உள்ளது. காற்றில் காணப் படும் செனான் பின் வரும் 9 ஐசோடோப்புகளைக் கொண்டது. Xe–129 (26.44%), Xe–131 (21.18%), Xe–132 (26.89%), Xe–134 (10.44%), Xe–136 (8.87%), Xe–124, Xe–126, Xe–128 மற்றும் Xe–130 (6.18%). அடைப்புக் குறியுள் குறிக்கப் பட்டுள்ளவை செனானின் பருமனளவு விகிதம் ஆகும். செனானின் மேற்காணும் எந்த ஐசோடோப்பும் கதிரியக்கத் தன்மையைப் பெறவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. அணு ஆற்றல் உலைகளில், யுரேனியம் அணுக்களை நியூட்ரான் கொண்டு பிளக்கும் போது, நிலைத்த கதிரியக்கமுள்ள செனான் ஐசோடோப்புகள் கிடைக்கின்றன. புவியின் நிறையில் ஏறத் தாழ, 3 X 10-9% செனான் இருப்பதாகக் கணக்கிடப் பட்டுள்ளது. மிகச் சிறந்த அளவீட்டின் மூலமாக, 10,00,000 சிலிக்கான் அணுக்களுக்கு 4 அணுக்கள் செனான் இருப்பதாக அறியப் பட்டுள்ளது. இங்கு, தனிமம் கிடைக்கும் அளவை, சிலிக்கான் தனிமத்தை அடிப்படையாகக் கொண்டு கொடுக்கப் பட்டுள்ளது. கண்டு பிடிப்பு. இங்கிலாந்தில் 1898ஆம் ஆண்டு சர் வில்லியம் ராம்சே என்பாராலும், எம்.டபிள்யூ.- டிராவர்ஸ் என்பாராலும் இவ்வளிமம் கண்டறியப் பட்டது. மாசு நீக்கப் படாத கிரிப்ட்டான் பகுதியிலிருந்து, பின்னக் காய்ச்சி வடித்தல் மூலமாகச் செனானைப் பிரித்தெடுத்தனர், வெளியிடுதல் நிரலியலில் (emission spectra) புதிய கோடுகள் கிடைத்தமையால், இதைப் புதிய தனிமம் எனக் கண்டறிந்தனர். கதிரியக்க ஐசோடோப்புக்கள். பின்வரும் கதிரியக்க ஐசோடோப்புக்கள் அறியப் பட்டுள்ளன. Xe121, Xe122, Xe123, Xe127, Xe129, Xe131, Xe133, Xe135, Xe137, Xe138, Xe139, Xe140, Xe141, Xe143 மற்றும் Xe134. இவை அனைத்துமே யுரேனிய அணுப் பிளப்பு வினையில் தோன்றுபவை. இவை துகள் முடுக்கிகள் (சைக்ளோட்ரான்) உதவியால் பொருத்தமான தனிமத்தை நியூட்ரான் கொண்டு தாக்கும் போதும் பெறப் படுகின்றன. Xe–133 என்ற 5.3 நாளை வாழ் காலமாகக் கொண்ட செனான் ஐசோடோப்பும் Xe–135 என்ற 9.2 மணி நேரத்தை அரை வாழ் காலமாகக் கொண்ட ஐசோடோப்பும் குறிப்பிடத் தக்க அளவில் அணுக் கருப் பிளப்பு வினையில் தோன்றுகின்றன. அணு ஆற்றல் உலைகளில் ஐசோடோப்புகள் தோன்றுவது இடையூறே ஆகும். ஏனெனில், Xe–135 உம் அதை விடக் குறைந்த அளவில் Xe–133உம் மெதுவாக உலையின் எரி பொருளை நச்சுப் படுத்துகின்றன. இதனால், பிளப்பு வினையின் வேகம் குறைகிறது. பண்புகள். செனான் நிறம், மணம், சுவையற்றது; அட்டவணை 1இல் இதன் சில இயற்பியல் பண்புகள் கொடுக்கப் பட்டுள்ளன. மந்த வளிமங்களில், கதிரியக்கமற்ற செனான் மட்டுமே ஏனைய வேதிச் சேர்மங்களுடன் வினைப் பட்டுச் சாதாரண வெப்ப நிலையில் நிலைத்த வினைப் பொருள்களைத் தருகிறது. மேலும், இது நீர், ஹைட்ரோகுய்னோன், ஃபீனால் போன்றவற்றுடன் வலிமை குன்றிய பிணைப்புகளால் இணைந்து படிகக் கூட்டுச் சேர்மங்களைத் (clathrate compounds) தருகிறது. பெருமளவில் தயாரித்தலும் விற்பனை செய்தலும். தொழில் முறையில் காற்றிலிருந்து, செனான் பிரித்தெடுக்கப் படுகிறது. காற்று. நீர்மமாக்கப் பட்டு, வாலை வடிக்கப் படுகிறது. இம்முறையில் கிடைக்கும் ஆக்சிஜன் மீண்டும் வாலை வடிக்கப் படுகிறது. இறுதியில், ஆவியாகாமல் எஞ்சியிருக்கும் பகுதியில் செனானும், கிரிப்ட்டானும் குறைந்த அளவில் உள்ளன. இவ்வளிமங்கள் சிலிக்கா களியால் (silica gel) உறிஞ்சப் பட்டுப் பிரிக்கப் படுகின்றன. இவ்வாறு, பெறப் பட்ட இரு மந்த வளிமங்களும், மாசு நிறைந்தவை. இவற்றைத் தூய்மையாக்க, மீண்டும் வாலை வடிக்கப் படும். பின்பு தேர்ந்தெடுக்கப் பட்ட முறையில், கட்டுப்பாடான வெப்ப நிலைகளில் கிளர்வு கொள் கார்பனால் உறிஞ்சப் பட்டுப் பிரிக்கப் படும். இறுதியில், எஞ்சி நிற்கும் மாசுகளை நீக்க, சூடான டைட்டேனியத்தின் மீது செலுத்தப் படும். இத்தனிமம், மந்த வளிமம் தவிர, ஏனைய வற்றுடன் வினை புரியும் என்பதால், மாசுகள் அனைத்தும் நீக்கப் பட்டுத் தூய செனான் கிடைக்கிறது. <!---- பக்க ஒருங்கிணைப்புக்காக அட்டவணை, பக்கத்தின் ஆரம்பத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> அணு ஆற்றல் உலைகளில் பெறப் படும் உடன் விளை பொருள்களிலிருந்தும், செனான் வளிமத்தைப் பெறலாம். முதலில் உலையிலுள்ள ஏனைய வளிமப் பொருள்களிலிருந்து, செனானைப் பிரித்தல் வேண்டும். பின்பு, சில மாதங்கள் பாதுகாப்பாகச் சேமித்து வைக்க வேண்டும். இதனால், அதில் உள்ள கதிரியக்க ஐசோடோப்புகள் சிதைவுற்று அழியும். கதிரியக்க ஐசோடோப்புகளில் மிக நீண்ட அரை வாழ்காலம் 30 நாளே என்பதால், ஏறத் தாழ 10 மாத காலம் சேமித்து வைத்தால், கதிரியக்கச் செனான் முற்றிலுமாகச் சிதைந்து விடும். எஞ்சியுள்ள நிலைத்த செனானைத் தூய்மைப் படுத்த வேண்டும். தற்காலத் தேவையை நிறைவு செய்ய, காற்றிலிருந்து பெறப் படும் செனான் வளிமமே போதுமானதாக உள்ளது. பகுப்பாய்வு முறைகள். கண்டறியவும், அளந்தறியவும், தற்காலத்தில் நிறை நிரல் வரைவு (mass spectrometry), வளிம நிறச் சாரல் பிரிகை (gas chromatography) ஆகியவை பயன் படுகின்றன. இம்முறைகளைக் கண்டறிவதற்கு முன்னர், குறைந்த வெப்ப நிலையில் தேர்ந்தெடுத்த முறையில், கிளர்வுற்ற கார்பனால் வளிமம் உறிஞ்சப் பட்டே அளந்தறியப் பட்டது. பழைய முறையில் உமிழ் நிற மாலை மூலமாகவே செனான் கண்டறியப் பட்டது. செனான் சேர்மங்கள். இத்தனிமம் பிளாட்டினம் ஹெக்சா ஃபுளுரைடுடனும், (PtF₆) தனிம ஃபுளுரினுடனும் வினைப் படுவதை அறிந்த பிறகே, 1962இல் செனானின் வேதியியல் முற்றிலுமாகத் தெளிவாக ஆராயப் பட்டது; செனான், தன்னுடைய இரட்டை எண் இணை திறன்களான II, IV, VI, VIII ஆகிய நான்கு நிலைகளைக் காட்டிய பின்னும், ஒவ்வொரு நிலைக்கும், நிலைத்த சேர்மங்களைப் பிரித்துப் பெற்ற பின்னும், செனானின் சேர்மங்கள் என்பன சில நிலைத்த ஃபுளுரைடுகள், ஆக்சிஃபுளுரைடுகள், இவற்றின் பகுப்புச் சேர்மங்கள், இரண்டு ஆக்சைடுகள், ஆக்சிஃபுளுரைடுகள், இவற்றின் பகுப்புச் சேர்மங்கள், இரண்டு ஆக்சைடுகள் ஆகியவற்றையே குறிக்கும். செனான் டைகுளோரைடு இருப்பதாகக் கருதப் படுகிறது. ஃபுளுரைடுகள். XeF₂, XeF₄, XeF₆ ஆகிய மூன்று சேர்மங்களும் வெப்ப இயக்கவியல் நிலைப்புத் தன்மைமைப் பெற்றவை. இவற்றைத் தயாரிக்க, ஏறத் தாழ 300–400°C இல் செனானையும், ஃபுளூரினையும் நேரடியாக வினைப் படுத்துதல் வேண்டும். இவ்வெப்ப நிலையில், ஃபுளூரின் மூலக் கூறுகள், குறிப்பிடத் தக்க செறிவுள்ள ஃபுளூரின் அணுக்களுடன் சம நிலையில் உள்ளன. இவ்வணுக்கள் வினை வலி மிக்கவை என்பதால், மந்த வளிமமான செனானுடன் வினைப்பட்டுச் செனான் ஃபுளுரைடு களைத் தரும்; பொதுவாக நிக்கல், தாமிரம் அல்லது அலுமினியக் கலன்களே வினை நிகழப் பயன் படுகின்றன. ஏனெனில், இவையே உயர் வெப்ப நிலைகளிலும், ஃபுளூரினின் வினைத் திறனுக்கு ஈடு கொடுப்பவை. 300°C இல் ஃபுளூரின், ஃபுளுரைடுகளின் சம நிலைகள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன. \begin{alignat}{6} Xe + F_2 & \leftrightharpoons XeF_2 \qquad K_1 && = 1.02 \times 10^4 \text { வ ம}^{-1} \\ Xe F_2 + F_2 & \leftrightharpoons XeF_4 \qquad K_2 && = 155 \text { வ . ம}^{-1} \\ Xe F_4 + F_2 & \leftrightharpoons XeF_6 \qquad K_3 && = 0.291 \text { வ . ம}^{-1} \\ \end{alignat} (வ.ம = வளி மண்டலம்) டைஃபுளுரைடைத் தயாரிக்க, ஃபுளுரினுடன் சிறிது மிகையாகச் செனானைச் சேர்த்தாலே போதும். டெட்ரா ஃபுளுரைடைத் தயாரிக்க, மிகை ஃபுளுரினுடன் ஓரளவு வளி மண்டல அழுத்தத்தைப் பயன் படுத்தினால் போதும். ஆனால், ஹெக்சா ஃபுளுரைடைத் தயாரிக்க, மிக அதிக அளவு ஃபுளுரினைச் சேர்த்து, மிக அதிக அழுத்தத்தையும் பயன் படுத்த வேண்டும். இவ்வுண்மைகளைச் சம நிலை மாறிலிகளின் மதிப்புகளிலிருந்து தெரிந்து கொள்ளலாம். அறை வெப்ப நிலையிலேயே, செனான் டைஃபுளுரைடைத் தயாரிக்கலாம் இதற்கு, ஃபுளூரின் மூலக் கூறை அணுக்களாகச் சிதையச் செய்தல் வேண்டும். அதாவது, புற ஊதாக் கதிர்கள், அயனியாக்கும் கதிர்கள் அல்லது மின்னிறக்கம் போன்ற முறைகளால் மூலக் கூறுகள் அணுக்களாகப் பிரிதலைத் தூண்ட வேண்டும். பண்புகள். சில எளிய செனான் ஃபுளூரைடுகள் மற்றும் XeOF₄ ஆகியவற்றின் பண்புகள் அட்டவணை 2இல் தொகுக்கப் பட்டுள்ளன. அனைத்துச் செனான் ஃபுளுரைடுகளையும், ஹைட்ரஜன் கொண்டு ஒடுக்கிச் செனானாகவும், ஹைட்ரஜன் ஃபுளுரைடாகவும் மாற்றி, அவற்றின் உருவாதல் வெப்பம் அளக்கப் படும். இவ்வாறு பெறப்பட்ட செனான்-ஃபுளூரின் பிணைப்பு ஆற்றல் சராசரியாக 30 கி.கலோ. மோல்-1. இவ்வாற்றலே ஃபுளுரைடு சேர்மங்களை நிலைக்கச் செய்கிறது. செனான் ஃபுளுரைடுகள், சிறந்த ஃபுளுரின் ஏற்றக் காரணிகள் ஆகும். இவற்றின் வினை வரிசை XeF₂ < XeF₄ < XeF₆. இவ்வாறு XeF₆ வலிமை மிக்க ஃபுளூரின் ஏற்றக் காரணி என்பதால், சிலிக்கா அல்லது கண்ணாடியை ஃபுளுரின் ஏற்றமடையச் செய்கிறது. அரோமாட்டிக் வளையங்களில், ஹைட்ரஜனுக்குப் பதிலாக, ஃபுளூரின் அணுவைப் பதிலீடு செய்யவும், நிறைவுறாச் சேர்மங்களுடன் சேர்க்கை வினை நிகழத்தவும், இவை பயன் படுகின்றன. ஃபுளூரின் ஏற்ற வினை வழி முறை ஓர் எலெக்ட்ரான் கவர் வழி முறையே; இயங்கு உறுப்புகள் வினை வழி முறையன்று. ஆக்சைடுகள். செனான் ஹெக்சா ஃபுளுரைடுடன் நீர் வினைப் பட்டு, XeOF₄ என்ற சேர்மம் உண்டாகிறது. தொடர்ந்து, நீருடன் வினை புரிய அனுமதிக்கும் போது, XeO₃ என்ற நிறமற்ற, மணமற்ற, வெடிக்கும் திறன் கொண்ட, எளிதில் ஆவியாகும். வெண்மையான திண்மம் கிடைக்கிறது. செனான் டெட்ராக்சைடு (XeO₄) என்பது சோடியம் பெர்செனேட்டுடன், அடர் சல்ஃப்யூரிக் அமிலம் வினைப் பட்டுக் கிடைக்கும் வளிமம் ஆகும். Na_4XeO_6 + 2H_2SO_4 \rightarrow XeO_4 + 2Na_2SO_4 + 2H_2O O°Cஇல் இதன் ஆவி அழுத்தம் 25 மி.மீ.; நிலையற்ற இச்சேர்மம் வெடிக்கும் இயல்புடையது. ஆக்சி ஃபுளுரைடுகள். செனான் ஆக்சிஃபுளுரைடு (XeOF₄) நீர் அல்லது சிலிக்காவுடன் XeF₅ வினைப் படும் போது கிடைக்கிறது. ஓரளவு நிலைப்புத் தன்மையுடைய இச்சேர்மத்தின் உருகு நிலை 46.2°C; கொதிநிலை 101°C; XeOF₄ உடன் XeO₃ வினைப் படுவதால், செனான் டைஆக்சைடு டைஃபுளுரைடு (XeO₂F₂) உண்டாகிறது. மேலும் XcOF₄ நீருடன் வினை புரியும் போது, இது ஓர் இடை நிலைப் பொருளாகவும் தோன்றுகிறது. XeOF₄ போன்று எளிதில் ஆவியாகாத இச்சேர்மத்தின் நிலைப்புத் தன்மை குறைவு. எனவே, இது எளிதில் XeF₂ ஆகவும் O₂ ஆகவும் சிதையும். செனான் டிரைஆக்சைடு டை ஃபுளுரைடைப் (XeO₃F₂)பெற XeF₆ உடன் பெர்செனேட்டுகளை வினைப் படுத்த வேண்டும். எளிதில் ஆவியாகும் இச்சேர்மம் வெடிக்கும் இயல்புடையது. XeF₄ குறைந்த வெப்ப நிலைகளில் பகுக்கும் போது, XeOF₂ தோன்றுவதாகச் சான்றுகள் உண்டு. அணைவுக் கூட்டுச் சேர்மங்கள். செனான் ஃபுளுரைடுகளும், XeOF₄ உம் பல வகை அணைவுக் கூட்டுச் சேர்மங்களைத் (complex addition compounds) தருகின்றன. நான்கு ஃபுளுரைடு சேர்மங்களும், SbF₆ TaF₅, OsF₅ போன்ற ஃபுளுரைடு ஏற்கும் உலோக ஃபுளுரைடுகளுடன், 2:1, 1:1, 1:2 என்ற இயைபுகளில் வினைப் பட்டு, ஃபுளுரின் பால அமைப்புடைய அணைவுக் கூட்டுச் சேர்மங்களைத் தருகின்றன. இவ்வணைவுச் சேர்மங்களில் XeF+, Xe₂F₃+, XeF₃+, XeF₅+, XeOF₅ என்ற நேரயனிகள் காணப் படுகின்றன. டெட்ராஃபுளுரைடு ஏனைய ஃபுளுரைடு சேர்மங்கள் போல விரைவாகப் பெருமளவில் அணைவுக் கூட்டுச் சேர்மங்களைத் தருவதில்லை. செனான் சேர்மங்கள் பிளாட்டினம் ஹெக்சாஃபுளுரைடுகளுடன் புரியும் வினை, மந்த வளிமங்களின் வரலாற்றில் ஓர் புதிய திருப்பத்தையே உருவாக்கியது. இதன் விளைவாக XeF+, PtF போன்ற அணைவுக் கூட்டுச் சேர்மங்கள் தோன்றலாயின. XeF₆, XeOF₄ ஆகியவை கார ஃபுளுரைடுகள் NaF போன்ற ஃபுளுரைடு அயனி ஈனிகளுடன் வினைப்பட்டு, ஃபுளுரின் அணு, பால அமைப்புடைய அணைவுக் கூட்டுச் சேர்மங்களை உண்டாக்கும். இவ்வணைவுச் சேர்மங்களில் XeF, XeF, XeOF போன்ற எதிரயனிகள் காணப்படுகின்றன. மிகவும் வலிமை மிக்க அமிலங்களான HSO₃F₇ HOTeF₄ போன்றவற்றுடன் செனான் டைஃபுளுரைடு வினைப்பட்டு ஆக்சிஜன் பால அமைப்பைக் கொண்ட FXeOTeF4, Xe (SO₃F)₂ போன்ற அணைவுக் கூட்டுச் சேர்மங்களைத் தரும். XeF₂ உடன் HN(SO₂F)₂ என்ற வலிமை மிக்க அமிலம் வினைப் பட்டு FXeN (SO₂F)₂ என்ற அணைவுக் கூட்டுச் சேர்மத்தைத் தருகிறது. இச்சேர்மம் ஒன்றில் மட்டுமே செனான் நைட்ரஜன் பிணைப்பு உள்ளது. இது AsF₅ உடன் பின் வரும் வாய்ப்பாடுடைய அணைவுக் கூட்டுச் சேர்மங்களைத் தருகிறது. XeN(SO₂F)+AsF₆- [XeN (SO₂F₂)]₂, F+, AsF இவ்வணைவுச் சேர்மங்கள், நிலைப்புத் தன்மைகளில் மாறுபட்ட திண்மங்கள். உலோக பெண்டாஃபுளுரைடு அணைவுச் சேர்மங்கள் சிறந்த ஃபுளூரின் என்ற வினைப் பொருள்கள், ஆன்ட்டிமனி பெண்டாஃபுளுரைடில் கரைக்கப் பட்ட செனான் டைஃபுளூரைடு, தனிமச் செனானுடன் வினைப் பட்டு முற்றிலும் எதிர்பாராத டைசெனான் அயனியைத் (Xe) தரும். நீரியக் கரைசல் வேதியியல். செனான் டைஃபுளுரைடு நீரில் 0°C இல் 25 மி.கி./மி.கி. என்ற அளவில் கரைகிறது. XeF₂ மூலக் கூற்றைக் கொண்ட இக்கரைசல் பின் வருமாறு சிதைகிறது. XeF_2 + H_2O \rightarrow Xe + \frac{1}{2} O_2 + 2HF 0°C இல் அரைச் சிதைவு நேரம் (half time decomposition) ஏறத் தாழ 7 மணி; இதன் மதிப்பு அறை வெப்ப நிலையில் 1/2 மணி. காரக் கரைசல் அல்லது Th4+ போன்ற ஃபுளுரைடு நீக்கி, உடனிருக்க, உடனடியாகச் சிதைவடைகிறது. இதிலிருந்து Xe2+ அயனி நிலையற்றது என்பதையும், அது ஃபுளுரைடு அயனிகள் போன்ற நிலை நிறுத்தியின் முன்னிலையில்தான் நீர்க் கரைசலில் நிலைப்புத் தன்மையைப் பெறும் என்பதையும் அறியலாம். செனான் டைஃபுளுரைடு கரைசல், ஆற்றல் மிக்க ஆக்சிஜனேற்றி, அயோடேட்டைப் பெர்அயோடேட் டாகவும், புரோமேட்டைப் பெர்புரோமேட்டாகவும், குளோரேட்டைப் பெர்குளோரேட்டாகவும், சீரஸ் அயனியைச் சீரிக் அயனியாகவும், கோபால்ட்டஸ் அயனியைக் கோபால்ட்டிக் அயனியாகவும், Ag+ஐ Ag2+ ஆகவும், ஆக்ஜனேற்றம் அடையச் செய்கிறது. காரக் கரைசலில் செனான் டைஃபுளுரைடு ஆறு இணை திறன் கொண்ட செனான் அயனியை எட்டு இணை திறன் நிலைக்கு உயர்த்துகிறது. நீரில் கரைக்கப் பட்ட செனான் டைஃபுளூரைடின் இந்த ஆக்சிஜனேற்றப் பண்புகளுக்கு அது நீரினால் சிதைவடையும் போது தோன்றும் இடைப் பொருளே காரணம். எனலாம். எனினும், இவ்விடைப் பொருள்களை இன்றும் கண்டறிய வேண்டியுள்ளது. XeF₄ அல்லது XeF₆ ஐ நீரில் கரைக்கும் போது, பின் வரும் வினை நடை பெற்று, XeO₃ என்ற இடை நிலைச் சேர்மம் உண்டாகிறது. இக்கரைசல்களும் சிறந்த ஆக்சிஜனேற்றிகள் ஆகும். அதனால் XeF₂ கரைசலை விட வலிமை குன்றியதே ஆகும். \begin{align} 3XeF_4 + 6H_2O & \rightarrow XeO_3 + 2Xe + \frac{3}{2}O_2 + 12HF \\ XeF_6 + 3H_2O & \rightarrow XeO_3 + 6HF\end{align} இக்கரைசல்கள் ஹைட்ரோகுளோரிக் அமிலத்திலிருந்து, குளோரினையும், Mn2+ அயனியை மெதுவாக Mn7+ ஆகவும், அயோடினை அயோடேட்டாகவும், புரோமினைப் புரோமேட்டாகவும் ஆக்சிஜனேற்றம் அடையச் செய்கின்றன. ஆக்சிஜனேற்றம் பெறுவதற்குத் தேவையான காரணி இல்லாத போது, XeO₃ கரைசல் நிலைப்புத் தன்மை உடையது. செனான் டிரைஆக்சைடு கரைசல் வலிமை குன்றிய அமிலக் கரைசல் ஆகும். XeO_3 + H_2O \leftrightharpoons H^{+} + HXeO_4^{-} இதன் சம நிலை மாறிலி 2 X 10-11. இந்த ஆக்சைடின் கார உப்புகளைத் தயாரிப்பது எளிதன்று. இது போல MXeO₃F என்ற கார ஃபுளுரோசெனேட் உப்புக் கிடைக்கிறது. வீரிய மிகு சோடியம் ஹைட்ராக்சைடில் HXeOஐ ஓசோன் கொண்டு, ஆக்சிஜனேற்றம் செய்தும், இதைத் தயாரிக்கலாம். 2HXeO_4^- + 4Na + 2OH^- \rightarrow Xe + O_2 + Na_4 XeO_4 + 2H_2O இங்கு HXeO விகிதமற்ற முறையில் (disproportination) ஏற்ற ஒடுக்க வினைக்கு உட்பட்டுச் சோடியம் பொசெனேட்டைத் தருகிறது. இவ்வுப்பு சோடியம் ஹைட்ராக்சைடு கரைசலில் அரிதில் கரையும் என்பதால், வீழ்படிவாகிறது. இக்கரைசலில் இது புரோட்டான் ஏற்றம் பெற்ற பெர்செனேட் எதிரயனியாக உள்ளது. Na_4 Xe O_6 + H_2O \rightarrow 4Na^+ + OH^- + HXeO_6^{3-} பெர்செனேட் கரைசல்கள் நிலையற்றவை; சிதைந்து ஆக்சிஜனை வெளியேற்றுவதுடன், ஆறு இணை திறனுடைய செனானையும் தரும், இவ்வினை வருமாறு: HXeO_6^{3-} + H_2O \rightarrow HXeO_4^- + \frac{1}{2}O_2 + 2OH^- காரத்தில் மெதுவாக நடை பெறும் இவ்வினை pH = 7 க்குக் கீழ் உடனடியாக நிகழும். பெர்செனேட்டுகள் ஆற்றல் மிகு ஆக்சிஜனேற்றிகள்: குறிப்பாக, அமிலக் கரைசலில் வினைத் திறன் மிகுதி. அமிலக் கரைசலில் உள்ள பெர்செனேட்டுகள், மிகு விரைவாக Mn2+ அயனியைப் பெர்மாங்கனேட்டாகவும், Cr3+ஐ டைகுரோமேட்டாகவும், Ag+ஐ Ag2+ ஆகவும், கோபால்ட்டஸ் அயனியைக் கோபால்ட்டிக் அயனியாகவும், ஆக்சிஜனேற்றம் அடையச் செய்யும். அரோமாட்டிக் ஹைட்ரோகார்பனையும், விரைவாக ஆக்சிஜனேற்றம் அடையச் செய்கிறது. இவ்வாக்சிஜனேற்றம் பெர்செனேட்டும், நீரும் வினைப் பட்டுத் தோன்றும் ஹைட்ராக்சில் உறுப்பு இடைப் பொருள் வழியாக நடை பெறுகிறது. சோடியம் பெர்செனேட் தவிர லித்தியம், பேரியம், லாந்தனம், பேரியம் பெர்செனேட்டுக்களும் உள்ளன. கரைசல்கள் போல் அல்லாமல், பெர்செனேட் திண்மங்கள் நிலைப்புத் தன்மை மிக்கவை. அதே சமயத்தில், திண்ம பெர்செனேட் செனேட் K₄XeO₆—2XeO₃ என்ற ஆற்றல் மிகு வெடி பொருளும் தயாரிக்கப் பட்டுள்ளது. பின் வரும் தோராயமான ஆக்சிஜனேற்ற அழுத்த விளக்கப் பட்டியல், செனான் சேர்ம நீர்க் கரைசல்களுக்கு வோல்ட் அலகில் கொடுக்கப் பட்டுள்ளது. நேரடியாகச் செனான் தனிமத்திலிருந்து செனான் சேர்மம் ஒன்றை, நீர்க் கரைசலாகத் தயாரிக்க இயலவில்லை. செனான் தனிமத்தை ஃபுளுரின் அல்லது வினை வலி மிக்க ஃபுளுரைடுகளால் மட்டுமே சேர்மமாக நிலைப் படுத்த முடியும். அமைப்புகள். வளிம நிலையில் உள்ள செனான் டைஃபுளுரைடு சீர்மையான மற்றும் நேர் கோட்டு வடிவுடையது. வளிம நிலையில் உள்ள செனான் டெட்ராஃபுளுரைடு மட்டுமே சம தள சதுர வடிவுடையது. 16 தனிமங்கள் ஹெக்சா ஃபுளுரைடு களைத் தரும். இவற்றில், செனான் ஹெக்சா ஃபுளுரைடு மட்டுமே சீர்மையான எண் கோண வடிவைப் பெறவில்லை. திண்ம அல்லது நீர்ம நிலையில் உள்ள செனான் ஹெக்சாஃபுளுரைடு, வலி மிகு பிணைப்புகளால் பிணைக்கப்பட்ட பல்லுறுப்பிகளாக அமைந்து, ஏனைய ஹெக்சாஃபுளுரைடுகளிலிருந்து மாறுபட்டுக் காணப் படுகிறது. செனான் டிரை ஆக்சைடு முக்கோண பிரமிடு வடிவுடையது. பெர்செனேட்டுகள் எண்கோண வடிவுடையவை. —பி. ஈ. எம். லியாகத் அலிகான்