தற்காலத்தில், சிறப்பான காச எதிர் மருந்துகள் இருப்பதால், நுரையீரல் காச நோய் அறுவை என்பது அரிதாக உள்ளது. இவ்வகை அறுவை மருத்துவத்தில் அமுக்க முறை முதலில் பயன்படுத்தப் பட்டது. இட நுரையீரல் காசக் காயக் குழி இருந்தால், இட நுரையீரலைச் சுற்றியுள்ள ஃபுளூரா உறைக்குள் 250–500 மி.லி. காற்றைச் செலுத்தி, அந்த நுரையீரலை அமுக்குவர். இதனால், காயக் குழி நசுக்கப் பட்டு, நாளடைவில் சீரடைகிறது. சில போது, இரண்டு நுரையீரல்களிலும் காசக் காயக் கட்டிகள் இருக்கலாம். அப்போது, உதர விதானத்தின் அடியில் 500–600 மி.லி. காற்றைச் செலுத்தி, இரண்டு நுரையீரல்களும் அமுக்கப் படுகின்றன. முன்னது, நுரையீரல் உறைக் காற்று (Pneumothorax) எனவும், பின்னது உதரவுறைக் காற்று (Pneumoperitoneum) எனவும் குறிக்கப் படும். சில போது, விதான நரம்பு (Phrenic vein) பாதிக்கப் பட்ட நுரையீரலின் பக்கத்தில் துண்டிக்கப் படுகிறது. இந்நரம்பே உதர விதானத்திற்கு நரம்பூட்டம் தரும். இதைத் துண்டித்து விட்டால், உதர விதானம் செயலிழந்து விடுகிறது. ஆகவே, மேல் நோக்கிச் சென்று, இரண்டு நுரையீரல்களையும் நன்கு நசுக்கி, நோய் நைவுகளுக்கு ஓய்வு கொடுத்து, சீரடையச் செய்கிறது. மேற்கூறிய முறைகள் அனைத்தும், நுரையீரல்களுக்கு ஓய்வு கொடுப்பவையாகும். மார்பு நெகிழ்ப்பு (thoraxoplasty) என்னும் அறுவை முறையில், முதலாம் விலா எலும்பு தவிரப் பிற 6–8 விலா எலும்புகள், பாதிக்கப்பட்ட நுரையீரலின் பக்கத்தில் அகற்றப் படுகின்றன. பல விலா எலும்புகள் அகற்றப் படுவதால், நுரையீரல் சுருங்கி ஹைலம் நோக்கி அமுக்கப் படுகிறது. தொரபோகிளாஸ்டியும் அமுக்க முறை மருத்துவமாகும். இம்முறை தற்போது பெருமளவில் கை விடப் பட்டு விட்டது. போதிய மருந்துகள் அளித்தும், பாதிக்கப் பட்ட நுரையீரல் நோயாளிக்கு இருமலும், காய்ச்சலும், சளியும், காச நுண்ணுயிரியும் இருந்தால், பாதிக்கப் பட்ட நுரையீரலையோ, நுரையீரலின் பகுதியையோ அகற்றுவதும் நலம் பயக்கும். ஆயினும், தற்போது காச நோய்க்கான அறுவை என்பது அரிதாகவே உள்ளது. —அ. கதிரேசன் துணை நூல். Dr. K.N. Rao et. al., (Eds.,) Text book of Tuberculosis, Second Edition, Vikas Publisihing House Pvt. Ltd., New Delhi, 1981; அ.கதிரேசன், காச நோய், முதல் பதிப்பு, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர், 1986.