மகாயான புத்த சமயத்தில் கொண்டாடப் பெறும் போதிசத்துவர்களுள் ஒருவர். பத்மபாணி அதாவது தாமரையைச் சுமப்பவர் என்று இவர் அழைக்கப்பெறுகிறார். புத்தசமயத் தெய்வத் தொகுதியில் மிகவும் விரும்பப்பெறும் போதிசத்துவர்களுள் ஒருவராகக் கருதப்பெறும் அவலோகிதேசுவரர், 108 வடிவங்களில் குறிப்பிடப் பெற்றுள்ளார். அவர், வண்ண ஓவியங்களாகக் காட்மண்டுவில் உள்ள மச்சந்தர் வகாலில் (Macchandar Vahal) காணும் சாசனக் குறிப்புகளில் சுட்டிக் காட்டப் பெற்றுள்ளார். அவலோகிதேசுவரர் பற்றிய தத்துவ விளக்கத்தைக் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் கட்டப் பெற்ற மகாசங்கிகாவைச் சார்ந்தவர்கள் தம் நூலான மகாவத்து அவதான (Mahavattu Avadana)த்தின் கருப் பொருளாகக் கொண்டுள்ளனர். அந்நூலில், அவலோகிதேசுவரர் போதிசத்துவர் என்னும் உருவில் வரும் பகவானாகவும், மக்களுக்குத் தொடர்ந்து நல்வாழ்விற்கும் இன்பத்திற்கும் வழிகாட்டும் கடமைக்குட்பட்டவராகவும் குறிப்பிடப்பெற்றுள்ளார். அவலோகிதேசுவரப் போதிசத்துவரின் தத்துவம், அவலோகிதேசுவரர் என்னும் திடப் பொருளாக வடிவமைக்கப்பெற்றுக் கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்னரே தெரிந்திருக்கவேண்டும். அவலோகிதேசுவரரின் உருவச் சிலைகள் குப்தர்களின் காலத்தில் அதாவது கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் இறுதிக் கட்டத்தில் வெளிவரலாயின. கி.பி. நான்காம் நூற்றாண்டின் இறுதியில் அவலோகிதேசுவர வழிபாடு பொதுமக்களால் ஏற்றுக்கொள்ளப்பெற்றுக் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் உச்சக்கட்டத்தை அடைந்தது. இதனை இந்தியாவிற்கு வருகைபுரிந்த சீனப்பயணிகளான பாகியானும் யுவான் சுவாங்கும் தம் குறிப்புகளில் பெருமைபடக் குறிப்பிட்டுள்ளார்கள். மகாயான அவலோகிதேசுவரர் புத்த சமயத்தைச் சார்ந்த இத்தெய்வ வழிபாடு, இந்தியாவில் கி.பி. எட்டாம் நூற்றாண்டின் இறுதியில் நிலைகுலையத் தொடங்கியது. கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டின் இறுதிக்குள் அவலோகிதேசுவர வழிபாடு பெரும்பாலும் மறைந்து விட்டதென்றே கூறலாம். பம்பாய் மாநகருக்கருகில் உள்ள கானேரிக் குகைகளில் அவலோகிதேசுவரப் போதிசத்துவர் பொது மக்களுக்குத் தெரிந்தவராக இருந்திருக்கிறார். கல்யாண், சோபாரா, சௌலா போன்ற துறைமுகப்பட்டினங்களுக்கருகில் கானேரி அமைந்துள்ளதால் கடல்கடந்து வாணிகம் செய்த வாணிகர்களுக்குப் புகலிடம் கொடுக்கும் இடமாகவும், புத்த சமயத் துறவிகளுக்குத் தங்கும் இடமாகவும் இது அமைந்தது. கப்பல் கவிழ்வு, கொடுவிலங்குகள், வெள்ளம், தீ, கொள்ளை போன்ற தொல்லைகளிலிருந்து காக்கும் கடவுளாக அவலோகிதேசுவரப்போதிசத்துவர் கருதப் பெற்றார். கானேரியில் இரண்டாம் குகையில் உள்ள வழிபாட்டுப் பாசுரத்தில் போதிசத்துவரின் கருணை, எட்டுக் காட்சிப் பொருள்களாகச் சுட்டிக்காட்டப் பெற்றுள்ளது. 41–ஆம் எண்ணுள்ள குகையில் அவலோகிதேசுவரரின் அழகான சிற்பம் ஒன்று பதினோரு முகங்களுடன் நிற்பதைக் காணலாம். அவலோகிதேசுவரர் என்னும் ஓருருவில் நிற்கும் புத்தருக்கு மாறாக, மேலும் பத்து அதிகப்படியான வாய்களுடனும் நான்கு கைகளுடனும் இங்குக் காட்சி அளிக்கிறார்.