இரைப்பைக்கும், பெருங்குடலுக்கும் இடைப்பட்ட பகுதி சிறு குடல். இது சுருட்டி வைக்கப்பட்ட நீண்ட குழாய் போன்றது. பொதுவாக 6—7மீ. நீளமுடைய இது மனித உயரத்திற்கு ஏற்றவாறு நீளத்தில் ஓரளவு வேறுபடும். இதன் விட்டம் தொடங்கும் இடத்திலிருந்து முடியும் இடம் வரை படிப்படியாகக் குறைந்து கொண்டே செல்கிறது. வளைந்த அசையாப் பகுதியான முன் சிறு குடல் (duodenum), நீண்டு மடிந்த அசையும் பகுதியான நடுச் சிறு குடல் (jejunum), பின் சிறு குடல் (ileum) ஆகிய மூன்று பகுதிகளைச் சிறு குடல் கொண்டுள்ளது.சிறுகுடல் வயிற்றுப் பகுதியிலும் இடுப்புப் பகுதியிலும் அமைந்துள்ளது. பெருங்குடல் வேலி போல் அமைந்திருக்க, அதன் நடுவில் இது பொருந்தியுள்ளது. முன் சிறு குடல். இது வளைந்த C என்ற எழுத்தைப் போன்ற வடிவுடையது. இதன் வளைவில், கணையச் சுரப்பி உள்ளது. முன் சிறு குடல் 20—25செ.மீ. நீளமுள்ளது. இது மேல் பகுதி, இறங்கும் பகுதி, படுக்கைப் பகுதி, ஏறும் பகுதி எனப் பகுக்கப் பட்டுள்ளது. இறங்கும் பகுதியில் கணைய, பித்த நீர் நாளங்கள் திறக்கின்றன. இந்த இடம் கரு வளர்ச்சியின் போது, முன் குடலும், நடுக் குடலும் இணையும் பகுதியைக் குறிக்கிறது. நுண்ணோக்கி வழியாகப் பார்க்கும் போது, சிறு குடல் உள்சுவரில் விரல்களைப் போன்ற உறிஞ்சிகள் (villi) காணப்படுகின்றன. மேலும் முன் சிறு குடலின் சுவரில், பிரன்னர் சுரப்பிகள் (Brunner's glands) காணப்படுகின்றன. நடுச் சிறு குடல். இப்பகுதி தடித்துச் சிவந்தும், மிகுதியான குருதிக் குழாய்களுடனும் காணப்படுகிறது. இதன் விட்டம் 4 செ.மீ. இதிலுள்ள உறிஞ்சிகள் கிளைகளுடன் இருப்பதை நுண்ணோக்கியில் காணலாம். பின் சிறு குடல். இதன் விட்டம் 3.5 செ.மீ. நுண்ணோக்கியில் பார்க்கும் போது, இதில் பல உறிஞ்சிகள் தென்படும். இவற்றின் நடுவே நிணத் திசுக்கள் (lymphatic tissues) அடை அடையாகக் காணப்படும். பின் சிறு குடலில் சில வேளை மெக்கல் பக்கப் பை (Meckel's diverticulum) இருக்கலாம். இது கரு வளர்ச்சியின் போது, இருந்த சிறு குடல் குழாயின் (vitello intestinal duct) எஞ்சிய பகுதியாகும். சிறு குடலின் தாங்கு சவ்வில் (mesentery) அதன் குருதிக் குழாய்களும், கிளைகளும் உள்ளன. குடல் சவ்வு இடப் புறமிருந்து வலப் புறமாகப் பின் சுவர்ப் பகுதியின் மேலிருந்து கீழாக ஒட்டிக் கொண்டுள்ளமையால், படுக்கைப் பெருங்குடலின் (transverse colon) கீழ் உள்ள பகுதி வல மேல் பகுதி என்றும், இடக் கீழ்ப் பகுதி என்றும் பிரிக்கப்படும். சிறு குடலில் செரித்தல், உறிஞ்சுதல் ஆகிய பணிகள் நடைபெறுகின்றன. —சுவயம்ஜோதி துரைராஜ்