நுரையீரல்களிலிருந்து வெளிவரும் காற்றின் வழியினைக் குறுக்கி, ஒரு சிறு இடுக்கின் வழியாகக் காற்றைச் செலுத்தி, அக்காற்றினை அதிரச் செய்யும் போது பிறக்கும் ஒலிகள் உரசொலிகள் (Fricatives) எனப்படுகின்றன. ஈண்டு மூச்சுக்காற்று முற்றிலும் தடை செய்யப்படாமல் உரசிச்செல்ல வைக்கப் பெறுவதால் இவ்வொலிகள் பிறக்கின்றன. உரசொலிகள் பிறக்கும்போது காற்றுத் தடைப்படுவதால் இவை தடையொலிகள் (Obstruents) எனக் கருதப்பெறுகின்றன. காற்று வாயில் உரசிச் செல்லும் தன்மையின் அடிப்படையில் உரசொலிகள் பிளந்துரசொலி (Slit Fricative), குழிந்துரசொலி (Groove Fricative), மருங்குரசொலி (Lateral Fricative), தட்டை உரசொலி (Surface Fricative) எனப் பகுக்கப்படுகின்றன. நுரையீரல்களிலிருந்து வெளிவரும் காற்று வாயில் உரசிச் செல்லும் பகுதி ஆழமின்றி சிறிய வெடிப்புப் போன்று அமைந்திருக்கும் நிலையில் பிறக்கும் உரசொலி பிளந்துரசொலி எனவும், இப்பகுதி குழிந்திருக்கும் நிலையில் பிறக்கும் உரசொலி குழிந்துரசொலி எனவும் கருதப்பெறும். மேலும், நுரையீரல்களிலிருந்து வெளிவரும் காற்றுப் பக்கவாட்டில் செலுத்தப்பெற்று, அதிரப்பெறும் நிலையில் பிறக்கும் உரசொலி மருங்குரசொலி எனவும், காற்று உரசிச் செல்லும் இடுக்குப் பகுதி தட்டையாய் ஆழமாக அமைந்திருக்கும் நிலையில் பிறக்கும் உரசொலி தட்டை உரசொலி எனவும் கருதப்பெறும். தமிழில் பிறமொழிக்கலப்புக் காரணமாக உரசொலிகள் சில காணப்பெறுகின்றன, ‘f’, ‘v’ என்னும் இரு பல்லிதழ்ப் பிளந்துரசொலிகள் (காபி – kāfi, பிலிம் – film), ‘ð’ என்னும் ஒலிப்புடைப் பல் பிளந்துரசொலி (மதம் – maðam), ‘x’, ‘ɣ’ என்னும் கடையண்ணப் பிளந்துரசொலிகள் (கால்கள் – kālxal, பாகம் – pāɣam), ‘h’ என்னும் குரல்வளை ஒலிப்பிலாப் பிளந்துரசொலி (ஹோட்டல்–hōṭṭal), ‘s’, ‘z’ என்னும் நுனியண்ணக் குழிந்துரசொலிகள் (வசம் – vasam, டசன் – dazan̩), ‘ṣ’ என்னும் ஒலிப்பிலா நாவளை குழிந்துரசொலி (விஷம் – viṣam) போன்ற உரசொலிகள் பேச்சுத் தமிழில் காணப்படுகின்றன. மருங்குரசொலிகள் நூட்கா, சாலிசன் போன்ற அமெரிக்க இந்திய மொழிகளில் காணப்படுகின்றன. குரல்வளை உரசொலிகள் மிகவும் அருகிக் காணப்படுகின்றன. மூக்குரசொலி எந்த மொழியிலும் காணப்பெறவில்லை. ஏ.ஆ.