இனாம்
iṉām
இனாம் என்பது அரபி மொழிச்சொல்.
இனாம் என்பது அரபி மொழிச்சொல். இதற்குக் கொடை, அன்பனிப்பு, நன்கொடை, ஆதரவு எனப் பல பொருள்கள் உண்டு. ‘வில்சன்’ என்பார் இனாம் என்பதனை விளக்குங்கால், ‘இந்தியாவில், குறிப்பாகத் தென் இந்தியாவில் நன்கொடையாக நிலத்தைப் பெற்று அதை ஒருவர் பரம்பரையாகத் (Hereditary) தீர்வை செலுத்தியோ தீர்வைவின்றியோ அனுபவித்து வருவது’ எனக் குறித்துள்ளார். இனாம்கள் மூன்று வகைப்படும். அவையாவன: 1. எதிர்பார்ப்பு அற்ற நிலையான நன்கொடை (Non–Beneficial Grant), 2. தனிப்பட்ட சொந்தப் பயன்பாட்டிற்கான நன்கொடை (Personal Grant), 3. தொண்டுக்காகவிடப்பட்ட மானியங்கள் (Service Grants).
எதிர்பார்ப்பு அற்ற நிலையான நன்கொடையானது 13 வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவற்றுள் முக்கியமானவை வருமாறு; சருவ இனாம் அல்லது சருவ மானியம் அல்லது அக்கிரகாரம் என்பது ஏகபோக இனாமாக மதத் தொடர்பானவற்றிற்காகவோ மததிற்காகவோ படித்தவர், பண்டிதர் அல்லது பெருவாழ்வு வாழ்ந்து வறுமை நிலையிலிருக்கும் குடும்பத்தினருக்குக் (Decayed Noble Families) கொடுக்கப்படுவது. சிரோத்திரியம் (Shrotriyam) என்பது சுருதி அல்லது வேதத்தில் தேர்ச்சி பெற்ற பிராமணர்களுக்குக் கொடுக்கப்படுவது.
தனிப்பட்ட சொந்தப் பயன்பாட்டிற்கான நன்கொடை
இது பெறுபவருடைய வாழ்க்கை நலனுக்காகக் கொடுக்கப்படுவது. இதில் பட்டவிருத்தி என்ற இனாம் படித்த பிராமணர்களுக்குக் கொடுக்கப்படுவது. பிரமதாயம் என்ற இனாம் பிராமணர்களுக்கு நன்கொடையாகக் கொடுக்கப்படுவது. அத்தியயனம் என்ற இனாம் வேதம் அல்லது நான்கு மறைகளை ஓதி உணர்வோருக்குக் கொடுக்கப்படுவது. பாரதி என்ற இனாம் கோவில்களில் மகாபாரதம் படிப்பதற்காகக் கொடுக்கப்படுவது. பஞ்சாங்கம் என்ற இனாம் காலநிலை, நவக்கிரகங்களின் நிலை ஆகியவற்றை அறிந்து சொல்வது, நல்ல நாள் குறிப்பது போன்றவற்றிற்காகக் கொடுக்கப்படுவது. புராணம் என்ற இனாம் கோவில்களில் புராணங்கள் படிப்பதற்குக் கொடுக்கப்படுவது. வேதவிருத்தி என்ற இனாம் நான்மறைகளை ஓதுவதற்கும் சொல்லிக் கொடுப்பதற்கும் கொடுக்கப்படுவது. தருமாசனம் என்ற இனாம் முன்கூறிய அக்கிரகாரம் என்பதைப் போலப் பிராமணர்களுக்குக் கிராமமாகக் கொடுக்கப்படுவது. கைராடி என்பது முகமதியர்கள் நலனுக்காகவும் பிராமணர்கள் அல்லாதவர்களுக்கும் கொடுக்கப்படுவது.
தொண்டுக்காக விடப்பட்ட மானியங்கள்
ஐந்து வகைப்படும். அவையாவன: 1. கொடுப்பவருடைய காரியங்களுக்காக வேலை பார்ப்பவர்களுக்குக் கொடுக்கப்படுபவை. 2. பொதுத் தொண்டு செய்பவர்களுக்குக் கொடுக்கப்படுபவை. 3. பரம்பரை கிராம அதிகாரிகளுக்குக் கொடுக்கப்படுபவை. 4. அறத்திற்கும் அறநிலையங்களுக்கும் கொடுக்கப்படுபவை. 5. நீர்ப்பாசன ஏரிகள் பராமரிப்பு, கண்காணிப்பு ஆகியவை செய்வோருக்குக் கொடுக்கப்படுபவை.
உண்மையான இனாம்களைக் கண்டுபிடித்துப் பதிவு செய்யும் நோக்கத்துடன் கி.பி. 1859–ஆம் ஆண்டில் இந்தியாவை அப்போது ஆண்டு வந்த ஆங்கில அரசு இனாம் ஆணைக்குழுவை நியமித்தது. 1963–ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் இயற்றப்பட்ட இனாம் ஒழிப்புச் சட்டத்தின் மூலம் இனாம்கள் ஒழிக்கப்பட்டு அந்நிலங்கள் இரயத்துவாரி முறைக்கு மாற்றப்பட்டு விட்டன. அதாவது, இனாம் நிலங்களில் குடிவார உரிமை உள்ளவர்களுக்குப் பட்டா வழங்கப்பட்டு, அவர்கள் அரசுக்கு நேரடியாக நிலவரி செலுத்துமாறு ஏற்பாடு செய்யப்பட்டு விட்டது. ஜே.சீ.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 631)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3fhduusf/
தமிழ்“இனாம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/3fhduusf/APA
Oliyon Research. (2026). இனாம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3fhduusf/MLA
"இனாம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/3fhduusf/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment