இன்கா நாகரிகம்
iṉkā nākarikam
தென் அமெரிக்காவில் வாழ்ந்த இந்தியர்கள் கி.பி.
தென் அமெரிக்காவில் வாழ்ந்த இந்தியர்கள் கி.பி. 15, 16–ஆம் நூற்றாண்டுகளில் வளர்த்த உயரிய நாகரிகமாகும். இன்காப் பேரரசு (Inca Empire) மிகப் பரந்ததும் செல்வச் செழிப்பு மிக்கதுமான பேரரசுகளுள் ஒன்றாகத் திகழ்ந்தது. இப்பேரரசு ஏறத்தாழ கி.பி. 1438–ஆம் ஆண்டிலிருந்து விரிவடையத் தொடங்கியது. பெரு நாட்டின் தெற்கில் அமைந்துள்ள தலைநகரான கூசுக்கோ (Cuzco) என்னும் ஊருக்கு இரு மருங்கிலும் இன்கா நாகரிகம் பரவியிருந்தது.
இன்காப் பேரரசு ஏறத்தாழ 4000 கி.மீ. தொலைவிற்குத் தென் அமெரிக்காவின் மேற்குக் கடற்கரையில் ஆர்செண்டினா (Argentina), பொலீவியா (Bolivia), பெரு (Peru), ஈக்வெடார் (Ecuador), கொலம்பியாவின் (Colombia) சில பகுதிகள் முதலானவற்றில் பரவியிருந்தது. இப்பேரரசு கி.பி. 1532–ஆம் ஆண்டளவில் வீழ்ச்சியுற்றது. இதனை இசுபானியர்கள் வென்று கைக்கொண்டனர்.
இன்காப் பேரரசர்கள் பரத்து விரிந்திருந்த தம் பேரரசைச் சிக்கல் நிறைந்ததோர் அரசியல் முறைப்படி அரசாண்டார்கள். இவர்கள் தம் படை பலத்தால் பல பகுதிகளைக் கைப்பற்றினார்கள். பேரரசரின் நடுவண் ஆட்சியையும் எண்ணற்ற தலச் சிற்றரசர்களையும் இணையாகச் சமன் செய்யும் அளவிற்கு இவர்களின் அரசியல் முறை அமைக்கப்பட்டிருந்தது. இன்கா என்னும் பெயர் தொடக்கத்தில் பேரரசனின் விருதுப் பெயராக இருந்தது. இவரால் ஆளப்பட்ட மக்கள் பல்வேறுபட்ட பெயர்களைக் கொண்டிருந்தனர். இசுபானியரின் வெற்றிக்குப் பின்னர், அனைத்து மக்களும் இன்கா என்னும் பெயரிலேயே அழைக்கப்பட்டனர்.
கூசுக்கோ நகர் வீதி இன்கா மக்கள் பொறியியல் கலையிலும், கைத் திறம் வாய்ந்த பொருள்களை உற்பத்தி செய்வதி- லும் நிகரற்றவர்கள். இவர்கள் நல்ல நெடுஞ்சாலைகளை அமைத்துப் பேரரசின் தொலைவிலிருந்த பகுதிகளுடன் நல்லிணைப்பினை உருவாக்கினர். கட்டடக் கலையின் மூலம் இவர்கள் பெருங் கட்டடங்களைச் சிறந்த அமைப்பு முறையில் கட்டிமுடித்தனர். பொன், வெள்ளி, ஏனைய பொருள்கள் ஆகியவற்றைக் கொண்டு பல அழகான பொருள்களைக் கைத்திறம் வாய்ந்த தொழிலாளர்கள் உருவாக்கினார்கள். இவர்கள் பருத்தி ஆடை, கம்பளம் போன்றவற்றை நெய்தார்கள்.
கூசுக்கோ நகரம் சூரியதேவனுக்குரியது. இதுவே இன்காப் பேரரசின் தலைநகரமாகும். கூசுக்கோ என்னும் சொல்லுக்கு இன்கா மொழியில் கொப்பூழ் (Navel) அல்லது மையப்பகுதி என்று பொருள். இந்நகரத்தின் மையத்திலிருந்த புனித சதுக்கத்திலிருந்து பிரியும் நான்கு சாலைகள் பேரரசின் நான்கு மாநிலங்களையும் இணைத்தன. தலைநகரம் எப்போதும் பயணிகள் நிறைந்ததாய்க் காணப்பட்டது. அவர்கள் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் வந்தனர்.
தொல்லியல் தொடர்பான சின்னங்கள் இன்கா நாகரிகத்தை அறிய உதவும் சிறப்பான சான்றுகளாகும். இன்கா மக்களுக்கு எழுத்து வடிவம் தெரிந்திருக்கவில்லை. எனவே, இலக்கியச் சான்றுகள் கிடைத்தில. எனினும் அறிவியல் வல்லுநர்களும், வரலாற்றறிஞர்களும் பெரு நாட்டில் சிறப்பாகப் பாதுகாக்கப்பட்டுவரும் தொல்லியல் சின்னங்களிலிருந்து இவர்களின் வாழ்க்கை முறையைத் தொகுத்துக் கூறியுள்ளார்கள். இசுபானியர் வெற்றிக்குப் பின், அவர்கள் இன்கா மக்களைப்பற்றி எழுதிய செய்திகளும் இவர்களைப் பற்றி அறிய உதவும் சான்றுகளாகும்.
ஏரினைப் (Plough) பயன்படுத்தாமலேயே உணவுப் பொருள்களை மிகுதியாக விளைவிக்கப் பல முறைகளை இன்கா மக்கள் கையாண்டனர். கடற்கரையை அடுத்திருந்த பாலைநிலத்தில் பல நீர்ப்பாசனத் திட்டங்களை ஏற்படுத்தினர். மண் அரிப்பைத் தடுக்க மேட்டு நிலங்களில் மாடிகளைப் போன்று வெட்டி நீர்ப்பாசன வசதியைப் பெருக்கினர். இம்மக்கள் தம் நிலங்களை மூவகையாகப் பிரித்தனர். நிலத்தின் ஒருவகையில் அறுவடையான பொருள்கள் உள்ளூர் மக்களுக்குக் கொடுக்கப்பட்டன. மற்ற இரு வகை நிலப் பொருள்கள் அரசுக்கும் சமயத் தொடர்பான செயல்களுக்கும் உதவின.
உணவுத்தானியம், பருத்தி, உருளைக்கிழங்கு, உண்ணுவதற்கேற்ற வேர் போன்றவை சிறப்பான பயிர்வகைகள். உணவுத் தானியத்திலிருந்து இவர்கள் ஒருவகை பீர் என்னும் மதுவை உற்பத்தி செய்தார்கள். இது பொது மக்களால் விரும்பிக் குடிக்கப்பட்டது.
இன்காப் பேரரசு மக்கள் பலவகைப்பட்ட உடைகளை உடுத்தி மகிழ்ந்தனர். மேட்டுநிலப் பகுதி வாழ் மக்கள், கம்பள ஆடைகளையும் கடற்கரையையொட்டியுள்ள பகுதிவாழ் மக்கள் பருத்தி ஆடைகளையும் விரும்பினர். பெருங்குடி மக்கள் விலை மதிப்புமிக்க ஆடைகளையும் அணிகலன்களையும் அணிந்திருந்தனர். ஆண்கள் ஆடையையும் உள்ளாடையையும் குளிர்போக்க உதவும் மேலாடைகளையும் உடுத்திக் கொண்டனர். பெண்கள் நீண்ட ஆடைகளையும் சதுர வடிவமான போர்வைகளையும் அணிந்தனர். ஆண்–பெண் இருபாலாரும் மிதியடிகளையும் வண்ணக் கச்சைகளையும் அணிந்தனர்.
பல தலைமுறைகளைச் சார்ந்த இன்கா மக்கள் குடும்பங் குடும்பமாக வாழ்ந்தனர். பெருங்குடி மக்கள் பரந்ததும் ஒப்பனை செய்யப்பெற்றதுமான அரண்மனைகளில் வசித்தனர். எளியோர் கூரை வேயப்பெற்ற சிறு வீடுகளில் வாழ்ந்தனர்.
சமூகத் தரத்திற்குத்தக இன்கா மக்களின் குடும்ப வாழ்க்கை அமைக்கப்பட்டிருந்தது. பேரரசருக்கு ஆற்றும் அரும் தொண்டின் அடிப்படையில் சமூகத் தரங்கள் முடிவாக்கப்பட்டன. உறவின் அடிப்படையிலும், நிலச் சொந்தத்தின் அடிப்படையிலும் மக்கள் குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர். இக்குழுக்கள் அய்லசு (Ayllus) எனப்பட்டன. ஒவ்வோர் அய்லு (Ayllu)வைச் சார்ந்த உறுப்பினருக்கும் ஒரு குறிப்பிட்ட அளவு பொதுநிலம் ஒதுக்கப்பட்டது. அய்லுத் தலைவர் ஒவ்வொரு குடும்பத்திற்கும் போதுமான உணவு உற்பத்தி செய்து கொள்ளுமளவு நிலம் ஒதுக்கினார்.
பெருங்குடியைச் சார்ந்த ஆண்கள் பல பெண்களை மணந்து கொண்டனர். திருமணங்கள் பல அரசியல் காரணங்களுக்காகச் செய்யப்பட்டன. பேரரசருக்கு அருந்தொண்டாற்றிய ஆண்கள் சில வேளைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்களைப் பெறும்படி பேரரசர்கள் உதவினர். இவ்வாறு அரசு அலுவலர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்மணிகள் அழகிற்கும் அறிவிற்கும் பெயர் பெற்றவர்களாயிருந்தனர். பெருங்குடி மக்கள் தம் தரத்திற்குக் குறையாத நிலை உடையவர்களுடனேயே மண உறவு கொண்டனர். எளிய மக்கள் அய்லுக்குள்ளேயே மணம் செய்துகொள்ள வேண்டியவர்கள். கணவனும் மனைவியும் கழனியில் வேலை செய்யும்போதும் ஏனைய பணிகளைச் செய்யும் போதும் ஒருவருக்கொருவர் உதவி செய்யக் கடமைப்பட்டவர்கள்.
இன்கா மக்களின் குழந்தைகளுக்குப் போதுமான ஓய்வு கிட்டவில்லை; ஏனெனில், அவர்களின் பெற்றோர்கள் அவர்களைப் பல்வேறு பணிகளில் ஈடுபட வைத்தனர். நடக்கக் கற்றுக்கொண்டதும் பெரும்பாலான குழந்தைகள் குடும்பப் பணியில் ஈடுபடுத்தப்பட்டார்கள். 14 வயது கடந்த ஆண்மகன் வயது வந்த மனிதனாகக் கருதப்பட்டான். மாதவிடாய்க்குப் பின்னர்ப் பெண்மகவு வயதுவந்த பெண்ணாகக் கருதப்பட்டாள். வயது வந்தவர்களாக மதிக்கப் பெற்ற ஆண்–பெண் பிள்ளைகள் வேறு பெயரால் அழைக்கப்பட்டனர். எனினும், திருமணம் ஆகும் வரை இளைஞர்கள் வயதுவந்தோராகக் கருதப்படவில்லை.
இன்கா மக்களின் சமயம்
இன்கா மக்களின் பொது வாழ்க்கையிலும், தனி வாழ்க்கையிலும் சமயம் சீரிய இடத்தைப் பெற்றிருந்தது. வீரகோச்சா (Viracocha) என்னும் அவர்களின் பெருந் தெய்வமே இயற்கையை உருவாக்கியதாக அம்மக்கள் நம்பினர். சூரிய தெய்வமான இண்டி (Inti)யை அரசக் குடும்பங்கள் வழிபட்டன. நிலமும் கடலும் சிறப்பான பெண் தெய்வங்கள். உய்த்துணருந் தன்மையால் (Divination) கடவுள்களின் இச்சைகளைத் தெரிந்துகொள்ள முடியும் என்றும், கண்களுக்குப் புலனாகாத அவரைத் தந்திரக் குறிகள் மூலம் அறிந்துகொள்ளும் முயற்சியில் ஈடுபடலாம் என்றும் இவர்கள் நம்பினர்.
இவர்கள் பல்வேறு இடங்களையும் பொருள்களையும் புனிதமாகக் கருதினர். இறந்தோரின் பதமாக்கப்பட்ட உடல்கள், அவர்கள் பயன்படுத்திய பொருள்கள், கோயில்கள், புனிதமானதும் வரலாற்றுச் சிறப்புமிக்கதுமான இடங்கன், ஊற்றுகள், கற்கள், மலையுச்சிகள் போன்றவை புனிதப் பொருள்களாகும். ஒவ்வொரு வீட்டிலும் சிறுசிறு புனித உருவச் சிலைகள் போற்றிப் பாதுகாக்கப்பட்டன. உய்த்துணரும் ஆற்றலினால் தாம் பெரியதும் சிறியதும் ஆன முடிவுகளை மேற்கொண்டனர். அரசு அலுவல்களின் முடிவுகளையும், நாற்று நடுதல், போருக்குச் செல்லுதல், நாள் பார்த்தல் போன்றவற்றையும் உய்த்துணரும் ஆற்றல் மூலமே முடிவு செய்தனர். விலங்குகளின் உறுப்புகள், தீச்சுடர்கள், விலங்குகளின் நடமாட்டம் போன்றவை மூலம் சகுனங்களை அறிந்தனர். இவர்கள் சமயச் சடங்குகள் பலவற்றை மேற்கொண்டனர். சடங்குகளின்போது நடனம், விருந்து, விளையாட்டு, பாடல், அணி வகுப்புப் போன்றவையும் நிகழ்ந்தன.
இன்கா அரசர் மேடை
வழிபாடு செய்யும்போது தியாகம், காணிக்கை போன்றவை போற்றப்பட்டன. தானியங்களும், இலாமா விலங்குகளும் காணிக்கையாகத் தரப்பட்டன. சிறப்பான நிகழ்ச்சிகளுக்கு நரபலியும் கொடுக்கப்பட்டது. நரபலி கொடுக்கத் தேர்ந்தெடுக்கப்படுவதை இவர்கள் பெரும்பேறாகக் கொண்டனர்.
சமயச் சடங்குகளில் பூசாரிகளின் பங்கு அளவிடற்கரிது. பூசாரிகளும் காணிக்கை செலுத்தினர். கோயில்களைப் பாதுகாப்பது அவர்களின் கடமை, தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்மக்கள் சமயச் சடங்குகளுக்கான உணவு வகைகளை ஆயத்தப்படுத்தினர். இப்பெண்மணிகள் அரச குடும்பத்தினருக்கும் பூசாரிகளுக்கும் நரபலி கொடுக்கப்படும் ஆளுக்கும் அழகான ஆடைகளை நெய்து கொடுத்தனர்.
இன்கா பூசாரிகள் சடங்குகள் மூலம் நோய் தீர்த்தனர். மூலிகை, செடிகொடிகள் மருந்தாயின. அறுவை சிகிச்சையையும் அறுவை மருத்துவர்கள் செய்தனர். மண்டையோட்டில் துளையிடும் அறுவை மருத்துவம் (Trephining) செய்யப்பட்டது.
இறந்தோரை அடக்கம் செய்வதும் புனிதமாகக் கருதப்பட்டது. சாவுக்குப் பின்னர் மக்கள் சுவர்க்கத்திலோ, நரகத்திலோ வாழ்கிறார்கள் என்று இவர்கள் நம்பினர். பெருமக்கள் கல்லினால் தரையின் மேற்பரப்பில் கட்டப்பெற்ற கல்லறைகளில் புதைக்கப்பட்டனர். ஏனையோர் குழிகள், குகைகள் பிறவகை சமாதி ஆகியவற்றில் புதைக்கப்பட்டனர்.
வாணிகம்
இன்கா நாகரிகத்தைச் சார்ந்த மக்களுக்கு நாணய முறை தெரிந்திருக்கவில்லை. துணிமணிகள் நாணயம் போல் பயன்படுத்தப்பட்டன; அவை நன்கொடைகளாகவும் வழங்கப்பட்டன. அரசே பெரும்பாலான வாணிகத்தை நடத்தியது; குறிப்பாக உலோகங்கள், விலைமதிப்புள்ள கற்கள், அரிதாகக் கிடைக்கும் செடிகொடிகள், விலங்குகள் மற்றும் ஏனைய அருமையாகக் கிடைக்கும் பொருள்கள் போன்றவை அரசின் கட்டுப்பாட்டின் கீழிருந்தன. செய்தொழில் பொருள்கள், உணவுப்பொருள்கள், துணிமணிகள் போன்றவற்றை உள்ளூர்ச் சந்தைகளில் எளிய மக்கள் விற்றனர்.
போக்குவரத்து
இன்காப் பேரரசுப் பகுதிகள் அனைத்தும் நன்கு அமைக்கப் பெற்ற சாலைகளால் இணைக்கப்பட்டன. ஆறுகள், ஆற்றுக் குடைவுகள் போன்றவற்றின் குறுக்காகத் தொங்கு பாலங்கள் கட்டப்பட்டன. அவர்கள் விட்டுச் சென்ற சாலைகள், பாலங்கள் போன்றவற்றின் சில பகுதிகள் இன்றும் நிலைத்துள்ளன.
மக்கள் கால்நடையாகவே பயணம் செய்தனர். மனிதர்களும், இலாமா என்னும் விலங்குகளும் பொதி சுமந்தன. பெருங்குடிமக்கள் பல்லக்குகளில் பயணம் செய்தார்கள். அவற்றை மனிதர்கள் தம் தோள்களின் மீது சுமந்து சென்றார்கள். பெரும் ஆறுகளையும், ஏரியையும் கடற்கரையையொட்டியுள்ள இடங்களையும் கடக்க இன்கா மக்கள் படகுகளையும் கட்டுமரங்களளயும் பயன்படுத்தினர்.
அரசு
இன்காப் பேரரசினை அரச மரபினைச் சார்ந்த உறுப்பினர் ஆண்டனர். பேரரசரைச் சபா இன்கா (Sapa–Inca) என்று கூறினர். அவர் தம் சகோதரியையே மணந்து கொள்வது மரபு. தம் சகோதரியாகிய மனைவிக்குப் பிறந்த ஆண்பிள்ளைகளுள் ஒருவர் அவருடைய வாரிசாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பேரரசருக்கு உதவிபுரியப் பெருங்குடி மக்கள் குழுவொன்று அமைக்கப்பட்டது. அவர்களே ஆளுநர்களாகப் பேரரசுக்குட்பட்ட மாநிலங்களில் பணியாற்றினர். தலைமைப் பூசாரியும் பேரரசரின் உறவினரே, படைத் தலைவர்களும் பேரரசரின் உறவினர்களிலிருந்தே தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பேரரசையும் அதன் குடிமக்களையும் காப்பது பேரரசரின் பொறுப்பாகும். பேரரசை நன்கு விரிவாக்குவதும் சமயச் சடங்குகளைச் சரியானபடி மக்கள் பின்பற்றுமாறு கண்காணிப்பதும் அவருடைய கடமைகளாகும். பெருங்குடி மக்கள் எளியவர்களைத் தம் சொந்தப் பணிகளுக்குப் பயன்படுத்திக் கொள்வதைத் தடுப்பதும் அவருடைய கடமையாகும்.
இன்கா மக்கள் பிறிதொரு பழக்கத்தையும் கைக்கொண்டிருந்தனர். சிற்றரசர்களை வென்ற பின்னரும் அவர்கள் சுதந்திரமாக ஆகும்படி விட்டு வைத்தார்கள். கலகம் விளைவிக்காத வரை அவர்கள் தம்மிச்சைப்படி ஆளவும் வகைசெய்தனர். உணவுப் பொருள்களைப் போதுமான அளவு கிடங்குகளில் சேமித்துவைத்தனர். இவற்றின் பயனாகப் பேரரசுக்குள் உறுதியான கட்டுப்பாட்டையும் உறவுகளையும் பேரரசர் பாதுகாத்தார்.
எளிய மக்கள் அரசுக்குப் பணியாற்றுவதன் மூலம் வரி கட்டினார்கள். அதனுடன் தாம் விளைவித்த உணவுப் பொருள்கள், வளர்த்த கால்நடைகள், பிடித்தமீன் போன்றவற்றின் ஒரு பகுதி ஆகியவற்றையும் அரசுக்கு வழங்கினர். பெண்கள் அரசுக்காகக் குறிப்பிட்ட அளவு துணி நெய்துகொடுக்க வேண்டியவராயினர். கட்டுமானப் பணிகள், சுரங்கங்களில் பணியாற்றல், இராணுவத் தொண்டு போன்றவற்றை ஆண்கள் செய்தனர். வரி கட்டுவதைக் கண்காணிக்கக் கண்காணிப்பாளர்கள் அமர்த்தப்பட்டனர்.
இன்கா மக்கள் குச்சுவா (Quechua) என்னும் மொழியைப் பேசினர். பேரரசில் வாழ்ந்த வெவ்வேறு மக்கள் பல்வேறு இந்திய மொழிகளைப் பேசினர். எழுத்து வடிவத்தை அவர்கள் அறியாததால் மக்கள் பேசியே தம் கருத்தை விளங்க வைத்தனர். சாலைகளில் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப் பெற்றிருந்த தூதர்கள் செய்திகளைப் பரிமாறிக் கொண்டனர்; தீ, புகை போன்ற குறிகளையும் செய்திகளைக் கூறப் பயன்படுத்தினர்.
இவர்கள் விண்மீன்களையும், கோள்களையும் பற்றி அறிந்திருந்தனர். அவற்றின் துணைக்கொண்டு பருவங்களை முன்கூட்டி அறியும் திறன் பெற்றிருந்தனர். கட்டடம், சாலை, வயல்கள் போன்ற அமைப்புகளிலிருந்து கணக்கியல் பற்றிய அவர்தம் திறமையினை உணரமுடியும். கயிறுகளை முடிச்சுப் போட்டுப் பலவகை நீளங்களிலும் வண்ணங்களிலும் ஆவணங்களைப் பாதுகாக்கச் சிறப்பு அலுவலர்கள் இருந்தனர். ஒவ்வொரு வண்ணமும் முடிச்சும் விதவிதமான விவரங்களைக் கூறின. முடிச்சுகளின் விதவிதமான அளவுகளின் மூலம் எண்களை அறிந்தனர்.
பெற்றோர் செய்யும் பணியைப் பார்த்துப் பிள்ளைகளும் அதுபோலவே செய்ய முற்பட்டனர். முதியோர் கூறும் கதைகளை அவர்கள் கேட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்மணிகளும் பெருங்குடி மக்களின் ஆண் பிள்ளைகளும் ஓரளவு கல்வி கற்றார்கள். கூசுக்கோ நகரப் பள்ளிக்குப் பெருங்குடி மக்களின் ஆண்மக்கள் நான்காண்டுகள் கல்வி கற்கச் சென்றனர்; இன்கா மொழி, வரலாறு, சமயம் போன்ற பாடங்களையும் முடிச்சிடும் ஆவணக் காப்புமுறையையும் கற்றனர்; போர்செய்யும் பயிற்சியும் பெற்றனர். ஆசிரியர்கள் அமாதசுகள் (Amautas) எனப்பட்டனர். இவ்வாசிரியர்கள் மரபு வழிக் கதைகள், கவிதைகள் மூலம் வரலாற்றுக் குறிப்புகளை மனப் பாடம் செய்து ஒப்பித்தார்கள்.
இன்கா மக்கள் கலைத்திறன் படைத்தவர்கள். வழிபாட்டு உருவச் சிலைகள், பெருங்குடி மக்கள் நாள்தோறும் பயன்படுத்தும் பல்வேறு பொருள்கள் போன்றவற்றை இவர்கள் அழகுடன் செய்தார்கள். இவர்கள் வலுவான கற்கோயில்களைக் கட்டிப் புகழ்பெற்றார்கள். சிமெண்டுக் கலவையைப் பயன்படுத்தாமலேயே கற்களை அழகுற அறுத்து இணைத்தார்கள். இவர்கள் கவின்மிகு மட்பாண்டங்களைச் சிறப்பாக வனைவதில் வல்லவர்கள். அவற்றின் மீது பல வண்ணப்படங்களை வரைந்தார்கள். இவர்கள் இசைக் கருவிகள் சிலவற்றை இசைக்கவும் கற்றிருந்தனர்.
வரலாறு
இன்கா மக்களின் தொடக்க கால வரலாற்றை அறியச் சான்றுகள் அரிது. அவர்களின் தந்தையான சூரியன் தம் ஆண்மக்களையும் பெண் மக்களையும் பூமிக்கு அனுப்பி, அவர்களுக்கு ஆளவும் வாழவும் கற்றுத் தந்தார் என்று மரபுவழிக்கதைகள் கூறுகின்றன. இவர்கள் ஓரினமாகவோ இனங்களைக் கொண்ட குழுக்களாகவோ தொடக்கத்தில் வாழ்ந்தார்கள். இவர்கள் கி.பி. 1200–ஆம் ஆண்டளவில் விரிவடைந்து அண்டையில் வாழ்ந்த குழுக்களையும் ஆண்டனர்.
பேரரசு கி.பி. 1438–இல் நிலைநாட்டப்பட்டது. அப்போது பச்சக்குத்தி (Pachacuti) என்னும் அரசர் சங்காக் கூட்டணியின் (Chanca Confederacy) படையெடுப்பை முறியடித்தார். இவர் இன்கா பேரரசின் ஒன்பதாம் அரசர். இவர் சிறந்த படைத்தலைவரும் நிருவாகியும் ஆவார். கூசுக்கோ நகருக்குத் தென்பால் இருந்த பல பகுதிகளை வென்று, பேரரசின் மையத்தில் தலை நகரை மீண்டும் திருத்தியமைத்து, இன்கா அதிகார நினைவுச்சின்னம் ஒன்றையும் நிலைநாட்டினார். இவர் அரசியல், சமூக வாழ்க்கையையும் திருத்தியமைத்தார். அதன் மூலம் திறமையான ஆட்சிக்கு இவர் வழிவகுத்தார். பச்சக்குத்தியின் மகன் தோப்பா இன்கா யுபான்க்யு (Topa Inca Yupanqui). இவர் இன்காவின் அதிகாரத்தைத் தெற்கில் மேற்கு பொலீவியா, வடமேற்கு அர்செண்டினா ஆகிய இடங்களிலும் வடக்கில் மேலை ஈக்வடார் போன்ற பகுதிகளிலும் விரிவுபடுத்தினார். இவருடைய மகன் உவாயுனா காபக்கு (Huayna Capac) அனைத்துப் பகுதிகளையும் ஒன்றுபடுத்தினார். உவாயுனா கி.பி. 1527–இல் காலமானார். பின்னர் நாட்டில் உள்நாட்டுக் குழப்பம் மூண்டது. இவர்தம் இரு ஆண்மக்கள் இக்குழப்பத்திற்குக் காரணமானார்கள். அவர்களுள் ஒருவரான உவாசுகர் (Huascar) பேரரசின் வாரிசாக அமர்த்தப்பட்டவர்; அதவால்பா மற்றொருவர், அவர் ஈக்வடாரில் பெரும் படையொன்றைக் கட்டுப்படுத்தினார். இருவரையும் ஆதரித்தவர்களிடையே உள்நாட்டுப் போர் மூண்டது. அதன் விளைவாகப் பேரரசு பெரிதும் நலிவுற்றது. இப்போரில் அதவால்பா இறுதியில் உவாசுகரை கி.பி. 1532–ஆம் ஆண்டில் தோற்கடித்தார்.
இத்தருணத்தில்தான் இசுபானியர் இப்பகுதியை வென்றனர். பிரான்சிசுகோ பிசாரோ (Francisco Pizarro) என்னும் ஆய்வுப் பயணி அதவால்பாவைத் தோற்கடித்தார். அவரைச் சிறைப்படுத்தினார். பெருந்தொகையைப் பிணயப்பணமாகப் பெற்ற பின்னரும் இசுபானியர்கள் அவரைக் கொன்றார்கள். பிணயப் பணமாக ஓர் அறை நிறைய பொன்னையும் அதைப்போல் இருமடங்கு வெள்ளியையும் பெற்றார்கள். உவாசுகரும் கொல்லப்பட்டார். அதவால்பாவுக்குப்பின் உரிய தலைவர் இன்மையால் இன்கா பேரரசை இசுபானியர் கைப்பற்றிக் கொண்டனர்.
இன்கா நாகரிகச் சின்னங்களை இன்றும் காணலாம். இசுபானியர்கள் அந்நாகரிகத்தைப் பூண்டோடு அழிக்க முயன்றும் முழு வெற்றி பெறவில்லை. இன்றும் பெரு நாட்டு மலைப்பகுதிகளிலும் வேறு சில தென் அமெரிக்க நாடுகளிலும் இன்கா மக்களின் பழக்கவழக்கங்கள் பின்பற்றப்படுகின்றன.
இன்கா மக்கள் நேர்மையான ஆட்சியாளர்கள்; எனினும் கடுமையானவர்கள். அவர்கள் தலையில் இலந்து (Llantu) என்னும் வண்ணத் தொப்பியை அணிந்திருந்தனர். சோம்பலும் பொய்யும் தண்டனைக்குரிய குற்றங்கள் எனக் கொண்டனர். மக்களுக்குத் தனிச் சுதந்திரம் கொடுக்கப்படவில்லை. அங்கு வேலையில்லாத் திண்டாட்டமே இல்லை. நோய்வாய்ப்பட்டோர், ஏழைஎளியோர், முதியோர் ஆகியோர் பாதுகாக்கப்பட்டார்கள். அவர்கள் சிறந்த உழவர்கள். அவர்கள் கட்டிய கோயில்களுள் ஒன்று சூரியன் கோயில்; இதனைக் கூசுக்கோவில் அவர்கள் கட்டினார்கள். அதன் சுவர்கள் பொன் தகடுகளால் வேயப்பட்டன. இன்கா வழிவந்தோரை இன்றும் ஆண்டிசு மலையுச்சிகளில் காணலாம். அவர்களின் பழக்கவழக்கங்களும் சிறிதும் மாறவில்லை. ஏ.சு.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 550)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3drapsnn/
தமிழ்“இன்கா நாகரிகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/3drapsnn/APA
Oliyon Research. (2026). இன்கா நாகரிகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3drapsnn/MLA
"இன்கா நாகரிகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/3drapsnn/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment