மண்ணுக்கடியில் மறைந்து கிடக்கின்ற பண்டைய நாகரிகச் சின்னங்களை அறிவியல் முறைப்படி வெளிப்படுத்தும் முயற்சியாகும். மிகப் பழங்காலத்தைப் பற்றி இயம்பும் இலக்கியங்கள், வரலாற்று ஏடுகள், கல்வெட்டுகள், காசுகள் போன்றவை தோன்றுவதற்கு முன்னர், நிலவிய தட்ப வெப்ப நிலை, மரம், செடி, கொடிகள். விலங்கினங்கள், ஆதி மனிதனின் வாழ்க்கை, நாகரிகம், பண்பாடு ஆகியவற்றைப்பற்றி அறிய உதவுவது அகழாய்வு (Excavation) ஒரு நாட்டின் பண்பாட்டுச் சிறப்பியல்புகளைத் தக்க முறையில் வெளிப்படுத்தும் திறன் இவ்வாய்வுக்கு உண்டு. அகழாய்வில் அனைத்துப் பொருள்களும் ஆராய்ச்சி முதன்மையும் பொருண்மையும் பெறுகின்றன. இயற்கை ஆற்றல்களின் இயக்கம், புவியின் அமைப்பு, அதில் ஏற்பட்ட தட்ப வெப்ப நிலை மாற்றங்கள் போன்றவை பற்றியும் இவ்வாராய்ச்சியின் மூலம் அறிந்துகொள்ள இயலும். அகழாய்வு ஒருவகையில் அறிவியலாகத் திகழ்கிறது; மற்றொரு வகையில் கலையாகக் காட்சியளிக்கிறது. அகழாய்வில் நாம் பலவகை அறிவியல் கருவிகளையும் கையாள வேண்டியுள்ளது. இப்பணியில் புவி அமைப்பியல், இயற்பியல், வேதியியல், விலங்கியல், வானவியல், உடற்கூற்றியல் போன்ற அறிவியல்களின் துணைகொண்டு தொல்பொருள்களை ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. அகழ்ந்தெடுக்கப்படுகின்ற தொல்பொருள்களை வெறும் காட்சிப் பொருள்களாக மட்டும் கருதாமல் பழங்குடியினரின் பண்பாட்டுச் சிறப்பியல்புகளை விளக்கவல்ல சான்றுகள் எனக் கருதிச் செயற்பட வேண்டும். அப்பணிக்கு வரலாற்றறிவு, எழுத்துவன்மை, கற்பனைத்திறன் போன்றவையும் தேவை. இந்த வகையில் இதனை ஒரு கலையாகக் கருத வாய்ப்புள்ளது. உயர்ந்தெழுந்து உலகில் மறைந்த பேரரசுகள், பேரரசர்கள், படையெடுப்புகள், அவற்றின் வெற்றிதோல்விகள் ஆகியவைபற்றி வரலாறு நமக்கு அறிவிக்கிறது பொதுமக்களைப் பற்றிய செய்திகளைப் பெரும்பாலும் தெரிவிப்பதில்லை. ஆனால், அகழாய்வு இப்புவியில் தோன்றி மறைந்த தொன்மை வாய்ந்த நாகரிகங்களைப் பற்றியும் அவற்றின் எழுச்சி, பரவல், ஊடுருவல், வீழ்ச்சி பற்றியும் வெளிப்படுத்தும், ஆதிமனிதனின் அன்றாட வாழ்க்கை, பழக்கவழக்கங்கள், அவனது சமூகத்தில் நிலவிய அரசியல், பொருளாதாரம், வாணிபம், சமயம், கட்டிடக்கலை, இறந்தவர்களை அடக்கம் செய்யும் முறை, உடலைவிட்டுப் பிரிந்த உயிரின் மீது அவனுக்கு இருந்த நம்பிக்கை ஆகியவை பற்றிய விரிவான குறிப்புகளை இவ்வியல் மூலம் வரலாறு பெறமுடியும். அகழ்ந்தெடுக்கப்படும் தொல்பொருள்கள் அவற்றிற்குச் சான்றுகளாக நின்று உறுதுணை செய்யும். ஏனென்றால், இத்தொல்பொருள்களுள் பெரும்பாலானவை, சமுதாயத்தின் அடித்தளத்தில் வாழ்ந்த பொது மக்களால் பயன்படுத்தப்பட்டவையாகும். கல், மண், எலும்பு போன்றவற்றால் ஆக்கப்பட்ட கருவிகள், அணிகலன்கள், பாத்திரங்கள், மட்கலங்கள், தெய்வத் திருமேனிகள் ஆகியனவெல்லாம் பொது மக்களின் உடைமைகளாகும். அகழாய்வில் அக்கால நகர அமைப்புப் பற்றியும் ஓரளவு தெரிந்து கொள்ளலாம். வரலாற்று ஏடுகளால் தொடமுடியாத காலத்தை அகழாய்வினால் தொடமுடியும். வரலாற்றுக் காலப் பண்பாட்டுச் சிறப்பியல்புகளையும் அகழாய்வு அளிக்க இயலும். ஒரு நாட்டின் வரலாறு பண்பாட்டுச் சிறப்பியல்பு போன்றவற்றை முழுவதுமாக அறிந்துகொள்ள இவ்வாய்வு இன்றியமையாததாகும். பண்டைய மக்கள் வாழ்ந்த இடங்களில் அவர்கள் பயன்படுத்தியபின் கழிக்கப்பட்ட பொருள்கள் நிலத்தடியில் பன்னெடுங்காலம் இருக்கின்றன. பழைய மண் தரைகள் அழிக்கப்பட்டு அங்குப் புதியவை இடம் பெறுகின்றன. வெள்ளத்தின் காரணமாகவோ வேறு பல இயற்கைக் காரணங்களினாலோ கட்டிடங்கள் இடிந்து சரியலாம். வெள்ளம் வடிந்த பின் மறுபடியும் அங்குக் குடியிருப்பு ஏற்படலாம். மேலும், இத்தகைய இடங்களில் பிற்கால மக்களால் குழிகள் பல தோண்டப்படுகின்றன. அக்குழிகள் இறந்தவர்களைப் புதைப்பதற்காகவோ கழிவுப் பொருள்களை உள்ளே போடுவதற்காகவோ தோண்டப்பட்டிருக்கவாம். எனவே, இத்தகைய மாறுதல்களுக்கான சான்றுகளைக் கண்டுபிடித்து அவற்றை ஆராய வேண்டியது இன்றியமையாத பணியாகும். பூமியைத் தோண்டிச் செல்லுங்கால் கிடைக்கும் தடயங்களையும், அவற்றின் கால எல்லையையும் கணக்கிடல் வேண்டும். பல்வேறு காலங்களைச் சார்ந்த தொல்பொருள்களைக் கொண்டுள்ள மண் அடுக்குகளின் அமைப்பை ஆராய்வதே அகழாராய்ச்சி எனப்படும். மண் அடுக்குகளின் நிறம், அமைப்பு ஆகியவற்றைக் கொண்டு, பல்வேறு காலங்களைச் சார்ந்த அடுக்குகள் பிரிக்கப்படுகின்றன. இம்மண்ணடுக்குகளைப் பற்றி ஆய்வு செய்வதே மண்ணடுக்காய்வு (Stratigraphy) எனப்படும். பின்பு அவற்றின் தொன்மை, ஒன்றுக்கொன்று உள்ள தொடர்பு ஆகியவற்றைக் கவனிக்க வேண்டும். மண்ணுள் அகழாராய்ச்சி நடத்துவதற்குச் சிறப்புப் பயிற்சி தேவைப்படுகிறது. அகழாராய்ச்சியில் பொதுவாக இரண்டு முறைகள் கையாளப்பட்டு வருகின்றன. அவை: 1. பரவலாகத் தோண்- டும் முறை (Horizontal Excavation) 2. ஆழத் தோண்டும் முறை (Vertical Excavation). அகழாய்வு மண்ணடுக்குகள் பரவலாகத் தோண்டும் முறை என்பது, தொன்மையான ஓர் இடத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குரிய புதைமண்ணை மட்டும் பெருமளவில் பரவலாகத் தோண்டிப் பார்ப்பதாகும். இதன்படி ஒரு குறிப்பிட்ட காலத்திற்குரிய பண்பாட்டுச் சின்னங்களை ஒரே இடத்தில் பெருமளவில் பெற வாய்ப்புள்ளது. மேலும், பரவலான முறையில் நிலப்பரப்பைத் தோண்டுவதன் வாயிலாக ஓர் இடத்தில் கிடைக்கப்பெறாத தடயம், மற்றோர் இடத்தில் மறைந்து கிடைக்க வாய்ப்புண்டு. மண்ணுக்குள் கிடக்கிற பண்டைய கோட்டைச் சுவர்கள், அரண்மனைகள், தெருக்கள், போன்றவற்றை எளிதில் சுண்டுபிடிக்க இம்முறையினைக் கையாளலாம். இம்முறைப்படிதான் அரப்பா, மொகஞ்சோதரரோ அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. ஆழத் தோண்டும் முறை என்பது குறிப்பிட்ட இடத்தில் மிகக் குறைந்த அளவு நிலப்பரப்பில் கன்னிமண் (Virgin Soil) வரை ஆழமாகத் தோண்டிச் செல்வதாகும். ஆழமாகத் தோண்டுவதன் மூலம் அவ்விடத்தில் புதைந்து கிடக்கும் பல்வேறு காலங்கட்கு உட்பட்ட தொல்பொருள்களை ஆராய இயலும். மேலும் இயற்கைப் பாறை வரையில் தோண்டுவதால், அந்த இடத்தில் மக்கள் முதன் முதல் குடியேறியது தொடங்கித் தொடர்ச்சியாக அவ்விடத்தில் தோன்றி மறைந்த பல காலங்கட்கு உட்பட்ட பல்வேறு மக்களது வரலாற்றுப் பண்பாட்டுப் பெருமையை அறிய முடிகிறது. ஆழமாகத் தோண்டினால்தான் பல்வேறு மண் அடுக்குகளைப் பிரித்து அவற்றிற்குரிய காலத்தை வரையறை செய்து அவை சுட்டிக் காட்டும் பண்பாட்டுச் சிறப்பினை உணர முடியும். அதுபோலவே, தோண்டி எடுக்கப்படுகிற தொல் பொருள்களுக்கும் அவற்றிற்குரிய மண் அடுக்- குகளுடன் இணைத்துக் காலவரம்பைக் கணக்கிட இயலும். இம்முறை. தொல்பொருள்களின் உண்மையான காலத்தை வரையறுத்துணரப் பெருமளவில் உதவி செய்கிறது. எனினும் குறைந்த அளவு நிலப் பரப்பில் தோண்டுவதன் காரணமாகக் குறிப்பிட்ட காலத்திற்கு உட்பட்ட ஒரு பண்பாட்டின் எல்லாக் கூறுகளையும் அறிந்துகொள்ள இயலாமற்போகலாம் என்பது இம்முறையில் உள்ள குறைபாடாகும். பெரிய கட்டிடங்கள், சுவர்கள், கோயில்கள் போன்றவற்றை இம்முறையைக் கையாண்டு தோண்டுவதற்கு மிக்க உழைப்பு, காலம், பொருள் ஆகியவை தேவைப்படுகின்றன. எனினும் தொல்பொருளியலுக்கு ஆழமாகத் தோண்டும் இம்முறையே சிறந்ததெனக் கருதப்படுகிறது. தமிழகத்தில் அரிக்கமேடு, கரூர், கொற்கை, காஞ்சிபுரம், உறையூர், திருக்காம்புலியூர், வல்லம், கொடுமணல் போன்ற இடங்களில் இம்முறையே பின்பற்றப்பட்டது. தோண்டுவதற்குரிய இடத்தைத் தேர்ந்தெடுத்த பின் அகழ வேண்டிய குழியின் அளவுகளை (நீளம், அகலம்) வரையறுத்து, நிலத்தின் மேற்பரப்பில் அடையாளமிடப்படும். அக்குழியின் அளவுக்குட்பட்ட நிலப்பரப்பில் மேற்பகுதியைப் புல், செடி முதலியன எவையுமின்றி நன்றாகத் தூய்மை செய்தல் இன்றியமையாததாகும். குழியின் வடக்கு, தெற்கு ஆகிய இரு பக்கங்களிலும் மர முளைகளை ஒரு மீட்டர் இடைவெளிக்கு ஒன்றாக நடவேண்டும். பின், அந்த முளைகளை இணைக்கும் வகையில் நூற்கயிற்றைக் கட்டவேண்டும். ஒரு பக்கமுள்ள மர முளைகளுக்கு I, II, III, IV என்றும், மற்றொரு பக்கமுள்ளவற்றிற்கு I, II, III, IV என்றும் எண்கள் கொடுக்கப்படும். தோண்டத் தொடங்குவதற்குமுன் குழியின் மேற்பரப்பைப் புகைப்படம் எடுத்தல் இன்றியமையாததாகும். நிலத்தைத் தோண்டும்பொழுது சிறிய களைக் கொட்டுகளையே பயன்படுத்த வேண்டும். பெரிய மண்வெட்டிகனைக் கொண்டு தோண்டினால் அவற்றைக் கொண்டு சிறிது சிறிதாக, அதாவது அங்குலம் அங்குலமாக நிலப்பரப்பைத் தோண்ட வேண்டும். தோண்டிய மண்ணை உடனேயே அப்புறப்படுத்தக் கூடாது. அதைக் கட்டிகளின்று உடைத்துக் கைவிரல்களாலும் கத்தியாலும் அலசிப் பார்த்த பின்னரே அப்புறப்படுத்தல் வேண்டும். ஏனென்றால், மண்ணுடன் கலந்த கடுகளவை ஒத்த பாசிகள், சிறிய காசுகள் மற்றும் ஏனைய தொல்பொருள்கள் அதில் கிடைக்கப் பெறலாம். தொல்பொருள்கள் கிடைக்கப் பெறின், அவை கண்டெடுக்கப்பட்ட இடத்தின் அடையாளம் ஆழம் ஆகியவற்றை உடனே பதிவு செய்தல் வேண்டும். கிடைத்த பொருள் எந்த இரு மர முளைகளுக்கு இடையில் உள்ள பரப்பில் கிடைத்தது என்பதே அப்பொருளின் இட அடையாளமாகும். கிடைக்கும் எல்லாப் பொருள்களையும் ஒழுங்காக அவ்வப்போது அவற்றிற்குரிய மண் அடுக்குகளுடன் இணைத்துப் பதிவு செய்து உறைகளில் போட்டு வைத்துப் பாதுகாத்தல் வேண்டும். அதே போல் ஏராளமான பானை ஓடுகள், முழுப் பானைகள் ஆகியவற்றையும், அவற்றிற்குரிய மண் அடுக்குப்படி, மண்பாண்டக் கொட்டிலில் (Pottery Yard) வைப்பர். இவ்வாறு தோண்டுகையில் மண்ணின் நிறம், தன்மை ஆகியவற்றை ஆராய்ந்து, மண் அடுக்குகளில் மாற்றத்தைக் கண்டு கொள்ளுதல் இன்றியமையாததாகும். சில வேளைகளில், கிடைக்கும் தொல்பொருள்களின் வாயிலாக மண் அடுக்குகளின் மாற்றத்தை உணரலாம். மண் அடுக்குகளுக்கு மேலிருந்து கீழாக (1), (2), (3),.............. என்று எண்களிடப்படும். இறுதியில், தோண்டி முடித்த பிறகு, குழியின் நான்கு பக்கங்களிலும் உள்ள சுவர்களைச் சமப்படுத்துவார்கள். சுவர்களைச் சமப்படுத்துவதால் மண் அடுக்குகள் பல நன்றாகத் தெரியவரும். அவற்றைக் கோடுகளினால் குறித்திடல் வேண்டும். குழியின் சுவர்களில் அந்தந்த மண் அடுக்குகளைக் காட்டும் (1), (2), (3), ............என்று எண்களிடப்பட்ட குறிப்புச் சீட்டுகள் மாட்டப்படும். மண் அடுக்குகளில் எவையெவை எந்தக் காலவரம்பிற்குட்பட்டவை என்பதையும் வரையறுத்துக் கொள்ளவேண்டும். அதற்குப் பேருதவியாக இருப்பன காசுகளும் பானை ஓடுகளுமேயாகும். மண் அடுக்குகளுக்கு மேலிருந்து கீழ்நோக்கி எண்களிடப்படும். ஆனால் பல காலங்களுக்குட்பட்ட வெவ்வேறு பண்பாடுகள், கீழிருந்து மேல் நோக்கிக் கணிக்கப்படும். ஏனெனில், தொல்பொருள்களின் தொன்மை, கீழிருந்து மேல்நோக்கிக் கணக்கிடப்படுவதேயாகும். மிகவும் கீழே உள்ள மண் அடுக்குகள் மிகப் பழங்காலத்தைச் சார்ந்தவை. இதுவே மண் அடுக்குகளை ஆராய்வதில் உள்ள தத்துவமாகும். குழியின் பக்கங்களைச் சமப்படுத்திய பின்னர் அவற்றைப் புகைப்படம் எடுத்துக்கொள்வார்கள். சுவர்கள், மண்தரைகள், பெரிய பானைகள் ஆகியவை காணப்பட்டால் அவற்றை உடனுக்குடன் புகைப்படம் எடுத்துப் பதிவு செய்தல் வேண்டும். மேலும் வரைபடத் தாளில் குழியின் சுவர்களில் காணப்படும் மண் அடுக்குகளின் நீளம், அகலம், மண்ணின் நிறம், தன்மை ஆகியவற்றை வரைந்து கொள்ள வேண்டும். கடலுக்கடியில் அகழாய்வு அகழாய்வின் பிறிதொரு பிரிவு, 20-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அறிவியலின் வளர்ச்சியினால் கடலகழாய்வு பெரு வளர்ச்சி அடைந்து வருகிறது. நிலப்பகுதியில் நடத்தப்படும் அகழாய்வு முறைகளே கடலகழாய்விலும் பின்பற்றப்படும். ஆனால் கடலகழாய்வில் கடலில் மூழ்கும் திறன் உடையவர்களையே இப்பணிக்குப் பயன்படுத்துகிறார்கள். உலகின் தொன்மையான கடற்கரை நகரங்கள், துறைமுகப்பட்டினங்கள் பல கடல்கோள்களினாலும் இயற்கையின் சீற்றத்தாலும் அழிந்துபட்டுள்ளன. தமிழகத்தில் காவிரிப்பூம்பட்டினமும் மாமல்லபுரமும் கடல்கோளால் அழிந்துள்ளன என அறிஞர்கள் கருதுகின்றனர். இத்தகைய நகரங்களின் தொன்மையான சிறப்பைக் கடலகழாய்வின் மூலம் வெளிக்கொணர இயலும். மத்திய தரைக்கடற் பகுதியில், மார்சிலி (Marseille) என்னும் இடத்திற்கருகில் இலி கிரொன்ட் காங்லோ (LeGrand Congloue) என்னும் இடத்தில் நடத்தப்பட்ட கடலகழாய்வு முதன்மையான கடலகழாய்வாகும். 1958-ஆம் ஆண்டு கேப் கிலிடோன்யா (Cape Gelidonya) என்னுமிடத்தில் நடத்தப்பட்ட கடலகழாய்வின் மூலம் தொன்மையான கப்பல் ஒன்றின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அலுவலர்கள் அகழாய்வுப் பணியில் ஈடுபடும். பணியாளர்கள் அகழாய்வில் நன்கு பயிற்சி பெற்றவர்களாகவும் கற்றுணர்த்தவர்களரகவும் இருத்தல் வேண்டும். இதற்குப் போதிய அலுவலர்களும் ஊழியர்களும் வேண்டும். பொதுவாக, அகழாய்வுப் பணிகள் ஓர் இயக்குநருடன் (The Director) செயல்படத் தொடங்கும். அவருக்குத் துணையாக ஓர் உதவி இயக்குநர் (Deputy Director), மற்றும் மேற்பார்வையாளர் (Site Supervisors) ஆகியோர் இருப்பர். மட்பாண்ட ஓடுகளை வகைப்படுத்தி மட்பாண்டக் கொட்டிலில் வைக்க ஓர் அலுவலர் (The Pottery Assistant), அவ்வப்பொழுது அகழாய்வுக் குழிகளையும் கிடைக்கிற தொல்பொருள்களையும் நிழற்படம் எடுக்க நிழற்படம் எடுப்பவர் (Photographer), குழிகளின் மேற்பரப்பினையும் பக்கங்களையும் குழிகளில் காணப்படும் கட்டிடங்களையும் அளக்கும் ஓர் அளவையர் (Surveyor), மக்கிக் கிடக்கும் தொல் பொருள்களைக் குறிப்பாக நாணயங்களைத் தூய்மை செய்ய ஒரு வேதியியல் வல்லுநர் (Field Chemist), குழிகளின் வரைபடங்கள், மட்பாண்டங்கள், தொல் பொருள்கள் ஆகியவற்றை வரைய ஓர் வரைவாளர் (Draftsman) ஆகியோர் இருத்தல் வேண்டும். அகழாய்வுக் குழிகளை அகழ்வதற்குக் கூலி ஆட்கள் இன்றியமையாதவர்கள். அகழாய்வுக்கெனப் பலதரப்பட்ட கருவிகள் பயன்படுகின்றன. குழிகளை வெட்டக் களைக்கொட்டு. மண்வெட்டி, சல்லடை, சிறு கத்தி, புகைப்படக் கருவி, வரைபட அட்டை, கூடை, வரைபடத் தாள்கள், தொல்பொருள்களைச் சேகரித்து வைக்கும் பை, ஆழத்தைக் கண்டுபிடிக்கும் எடை நூற்குண்டு, அளவு கோல்கள் போன்ற கருவிகள் இருத்தல் வேண்டும். மேலும், அகழாய்வில் கிடைக்கும் மட்பாண்டங்களைச் சேகரித்து வைக்கும் கொட்டில் ஒன்றும் நாணயங்கள், உலோகப் பொருள்கள் ஆகியவற்றைத் தூய்மை செய்யும் ஓர் இரசாயனக் கூடமும் அகழாய்வு நடைபெறும் இடத்தில் இருத்தல் இன்றியமையாதது. அகழாய்வு செய்து முடித்ததுடன், அகழாய்வு செய்யப்பட்ட ஊரின் சிறப்புத் தன்மை, விளைவுகள் ஆகியன பற்றி உடனே பிறர் அறியும் வண்ணம் நூல்கள் வெளியிடுதலும் வேண்டும். காண்க: மண்ணடுக்கு ஆய்வு: கடலகழாய்வு. எஸ்.கு. துணை நூல்கள் Wheeler, R.E.M., “Archaeology from the Earth”. Oxford Clarendon Press, London, 1954. Robert, F. Heizer & John A. Graham, “A guide to field methods in Archaeology”, The National Press, California, 1968. Kenyon, K.M., “Beginning in Archaeology”, New York, 1961.