தேவாரப் பண்களுள் ஒன்று. இசைத் தமிழ்ப் பதிகங்களாகிய தேவாரத்தைத் திருமுறைகளாகப் பகுத்துத் தொகுத்தபோது, திருவருள் துணைகொண்டு திருநீலகண்டயாழ்ப்பாணர் மரபில் வந்த ஒரு பாடினியாரால் அப்பதிகங்களுக்கு இசை அமைக்கப்பட்டது. திருஞானசம்பந்தர் அருளிய தேவாரப்பதிகங்கள் முதன் மூன்று திருமுறைகளாய்ச் செவ்வழி முதலிய 22 பண்களில் அடங்கின. தமிழ் மக்கள் பண்டைக் காலத்தில் நூற்று மூன்று பண்களை வகுத்துக் காட்டியுள்ளனர். அவற்றுள் 38–ஆவது பண் அந்தாளிக் குறிஞ்சி என்பதாகும். இது குறிஞ்சிப் பெரும்பண்ணின் நைவளம் என்னும் திறத்தின் புறநிலையாய் அமையும். ஞானசம்பந்தரின் மூன்றாவது திருமுறையின் இறுதியிலமைந்துள்ள 124, 125 ஆகிய இரு பதிகங்கள் மட்டுமே, தேவாரத்தில் அந்தாளிக் குறிஞ்சியில் அமைந்துள்ளன. அவர் திருநல்லூர்ப் பெருமணத்தில் தம் திருமணம் காண வந்தவர் அனைவரையும் உடன்கொண்டு, அவ்வூர்த் திருக்கோயிலில் தோன்றிய சோதியில் புக்கபோது பாடிய திருப்பதிகம், ‘கல்லூர்ப் பெருமணம்’ என்னும் இறுதிப் பதிகமாகும். அதனால் ஞானசம்பந்தர் இறுதியாகப் பாடிய பண் அந்தாளிக் குறிஞ்சியாகும். திருமுறை கண்ட புராணம் ‘அந்தாளிக்கு ஒன்றாக்கி’ என்பதனால் ஞானசம்பந்தரின் இரு அந்தாளிக் குறிஞ்சிப் பண்களும் ஒரே கட்டளையமைப்புடையனவாயின என்பது புலனாகிறது. 124–ஆம் பதிகமாகிய திருக்கருகாவூர் வெள்ளடைப் பதிகம், தானனா தானன தானா தானனா — “சுண்ணவெண்ணீறணி மார்பிற்றோல்புனைத்து” என்னும் அமைப்புடையது.