இந்தியச் சமுதாயங்களில் பழங்குடியினரும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும் கீழ்க்குடியினரும் உயர்குடியினரின் பண்பாட்டை ஏற்றுக் கொண்டு, சமுதாயத்தில் தங்களின் தகுதிகளை உயர்த்திக் கொள்ளும் முறையை விளக்கும் சமுதாய மாற்றக் கோட்பாடுகளுள் ஒன்றே உயர்குடியாக்கம் (Sanskritization) ஆகும். இந்திய மானிடவியலாரான எம்.என். சனிவாசு (M.N. Srinivas) என்பவர் 1952-இல் வெளியிட்ட ‘கூர்க்கு மக்களிடையே சமயமும் சமுதாயமும்’ (Religion and Society among the Coorgs) என்னும் நூலில் இக்கோட்பாட்டினை முன்வைத்தார். இந்தியச் சமுதாயம் சாதிகளின் அடிப்படையில் அமைந்தது. ஒருவனின் சமூகத் தகுதி பெரும்பாலும் சாதிகளின் வழி அமைகிறது. பல்வேறு சாதிகளிடையே கீழ்க்குடியினர் சமுதாயப் படிநிலையில், (Social Hierarchy) தங்களை உயர்த்திக்கொள்ள உயர்குடியினரின் மரபுகளையும் சடங்குகளையும் கருத்துகளையும் வாழ்க்கை முறைகளையும் ஏற்றுக் கொள்வர். மேலும், தங்கள் சடங்குகளையும் வழிபடும் தெய்வங்களையும் வேதங்கள் காட்டும் நெறி முறைகளுக்கேற்ற முறையில் மாற்றிக் கொண்டு, சமுதாயப் படிநிலையில் தங்களை உயர்த்திக் கொள்ள முயலுகின்றனர். வேத காலம் முதற்கொண்டே சமயத்தில் ஈடுபாடும், சடங்கில் நாட்டமும் கொண்ட பார்ப்பனர்களின் வாழ்க்கை முறை பிறசாதியினரால் ஓர் உயர்ந்த வாழ்க்கை நெறி என்று கருதப்படுகிறது. பார்ப்பனர் பன்னெடுங் காலமாகவே சமுதாயத்தில் உயர்மட்டத்தில் இருந்து வருதல் இதற்குக் காரணம் எனலாம். அவர்களை மதிக்கும் போக்கும், அவர்களின் வாழ்க்கை முறை உயர்ந்ததெனக் கருதும் நிலையும் பிற சாதியினரிடம் பல நூற்றாண்டுகளாகவே நிலவி வருதலை உணரலாம். இவ்வாறு சமுதாயப் படிநிலையில் அவர்கள் உயர்ந்து நிற்றலால், அவர்களின் சமயமும் சடங்குகளும் மற்றச் சாதியினரிடையே பரவத் தொடங்கின. அவர்களின் கோட்பாட்டினைப் பின்பற்றிக் கீழ்நிலைச் சாதியினர் மேல்நிலை அடைதற்கு முயல்கின்றனர் என்றும், இதுவே இந்தியச் சமுதாயத்தில் மாற்றங்கள் ஏற்படுவதற்குத் துணை நிற்கின்றன என்றும் சீனிவாசு கூறுவார். பார்ப்பனரின் பண்பாட்டைப் பின்பற்றுவதே உயர்குடியாக்கம் என்பது சீனிவாசின் ஆரம்பக்காலக் கருத்தாகும். இதன்படி வடமொழி இலக்கியத்தில் வரும் சமயம், உலகியல் போன்ற பொருள் பற்றிய மதிப்புகளையும் பழக்க வழக்கங்களையும் பின்பற்றுவதே உயர்குடியாக்கம் என்றுணரலாம். உயர்குடியாக்கத்தில் நான்கு வதைகள் உள்ளன. அவை: 1. பார்ப்பனவகை உயர்குடியாக்கம், 2. அரச அல்லது சத்திரியவகை உயர்குடியாக்கம், 3. வணிகவகை உயர்குடியாக்கம் 4. அரிசனவகை உயர்குடியாக்கம், முதல் வகையில், பார்ப்பனர்களை முன்மாதிரிக் குழுவாகக் (Reference Group) கொண்டு அவர்களின் மரபுகளை ஏற்க முற்படுபவர்கள் அடங்குவர். பெரும்பாலும் பார்ப்பனருக்குக் கீழுள்ள சாதியினர் இவ்வகை மாற்றத்திற்குத் தங்களை ஈடுபடுத்துவர். இது மேலே விளக்கப்பட்டுள்ளது. இரண்டாம் வகையில், கீழ்ச்சாதிகள் அரசர் அல்லது சத்திரியர்களின் வாழ்க்கை முறையைத் தழுவி மேலே உயர முயல்வதாகும். மூன்றாம் வகையான வணிக வகையில், கீழ்ச்சாதிகள் வணிக மக்களின் வாழ்க்கை மரபுகளை ஏற்றுக் கொண்டு மேலே உயர முயல்வதாகும். நான்காம் வகையில் சில சாதியினர் அரிசன அல்லது சூத்திரர் உயர்சாதியாகக் கருதப்படுவதுண்டு. இவ்விடங்களில் அரிசனங்களிலே கீழ்நிலையிலுள்ளவர்கள் அல்லது அரிசனங்கள் அல்லாத பிற கீழ்ச்சாதிகள் அரிசனப் பொதுக் கோட்பாட்டைப் பின்பற்றி மேலே உயர முயல்வதாகும். இந்த நான்கு வகை உயர்குடியாக்கங்களிலும் இரண்டு பொது நிலைமைகள் இருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஒன்று, எந்த இடத்தில் எந்தச் சாதி சமுதாயப் படித்தர நிலையில் முதன்மை பெற்றதாக இருக்கிறதோ, அந்த இடத்தில் அந்தச் சாதியைச் சார்ந்த கீழ்ச்சாதிகளில் உயர்குடியாக்கம் நிலவுகிறது. ஒரு குறிப்பிட்ட சாதியின் முதன்மைக்கு அடிப்படைக் காரணங்கள் நிலவுடைமை, மக்கள் தொகைப்பெருக்கம், குறிப்பிட்ட இடத்தில் சமுதாயப் படிநிலையில் மேல் நிலை போன்றவையே ஆகும். இரண்டாவது, அந்த இடத்தில் அச்சாதியைச் சாராத பிற சாதிகள் அதை நோக்கி மேலே உயரும் உயர் குடியாக்கமும் நிலவுகிறது. எடுத்துக்காட்டாக, பழங்குடிகளிடையே காணப்படும் உயர்குடியாக்கமும் சாதி வழக்கில் சேர்க்கப்படாத பொதுப்படை உயர் குடியாக்கமும் ஆகும். இன்றைய இந்தியாவில் பழங்குடிகள் தங்களைக் கீழ் நிலையிலிருந்து மேல்நிலைக்கு உயர்த்தி மாற்றம் செய்து கொள்ள முயற்சி செய்கின்றனர். இதற்காக அச்சாதியினர் பிராமண வகையையோ அல்லது பிற சாதிவகையையோ தழுவிக் கொள்ள முன்வருகிறார்கள். அடுத்துப் பொதுப்படை உயர்குடியாக்கத்தால் சாதி வழக்கை ஆராயாமல் சமுதாயப் பொதுப் பண்பாட்டை ஆராய்ந்து பார்க்க முடிகிறது. கோ.க. துணை நூல்கள் Srinivas, M.N., Social Change in Modern India, Orient Longmans, Bombay, 1972. Srinivas, M.N., Caste in Modern India and Other Essays, Asia Publishing House, Bombay, 1962. Srinivas, M.N., Religion and Society among the Coorgs of South India, Oxford University Press, London, 1952. Dube, S.C., Towards a Sociology of Culture in India, Prentice-Hall, New Delhi, 1965. Singh Yogendra, Modernizatian of Indian Tradition: A Systematic Study of Social Change Thomson Press, 1973.