இமயமலைச் சாரலில் உள்ள புண்ணியத் தலங்களுள் ஒன்று. உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சார்ந்த இவ்வூர் தேராதூன் (Dehra–Dun) மாவட்டத்திலுள்ள அரித்துவாரத்துக்கு 32 கி.மீ. தொலைவில் அதன் வடக்கில் அமைந்துள்ளது. கங்கோத்திரியில் உற்பத்தியாகும் கங்கை ஆறு, இமயமலை இடுக்குகளில் ஓடி, இரிசிகேசத்தின் வழியாகப் பாய்ந்து, அரித்துவாரத்தில் சமவெளியை அடைகிறது. இரிசிகேசத்தில் தவத்திரு சிவானந்த சரசுவதியின் ஆசிரமம் உள்ளது. கங்கை ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்த ஆசிரமத்தில் உலகின் பல பகுதிகளிலிருந்து வரும் சீடர்கள் தங்கித் தியானம், யோகம் போன்றவற்றைப் பயின்று ஆன்மநேய ஒருமைப்பாட்டிற்கு வழிகாண முயற்சி செய்கிறார்கள். இவ்வாசிரமத்தின் எதிர்க்கரையில் ‘கீதாபலன்’ என்னும் அமைப்பு பகவத் கீதையை உலகுக்கு எடுத்தோதுகிறது. கங்கையாற்றைக் கடக்க இங்கு அமைக்கப்பட்டுள்ள பாலம் சிறப்பானது. இதனைக் கயிற்று வழி என்றும், தொங்கு பாலம் என்றும் கூறுவர். இமயமலையில் அமைந்துள்ள பத்ரிநாதம், கேதாரம் போன்ற புனிதத்தலங்களுக்குப் பயணம் செய்வோர் இரிசிகேசத்தின் வழியாகச் செல்ல வேண்டும். கடுங்குளிருக்கு உறைவிடமான இவ்வூரிலுள்ள கம்பளிவாலா சத்திரத்தில் பயணிகள் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்து தருகிறார்கள். குளிரிலிருந்து காத்துக்கொள்ளக் கம்பனிப் போர்வைகளையும் இங்கு அளிக்கிறார்கள். இரிசிகேசம் ஒரு சிவத்தலம். இவ்வூரின் மக்கள் தொகை 29,100 (1981) ஆகும்.