என்பதனை, ஒரு தொடரில் உள்ள சொற்களில், ஒன்றனுக்கு ஒன்று நெருங்கிய தொடர்பு முறை உறவு கொண்ட இரு சொற்களை எடுத்துக் கொண்டால், அவை ஒன்றனுக்கொன்று அண்மை உறுப்பு (Immediate Constituents) ஆகின்றன என விளக்கிக் காட்டலாம். மொழியில் அடிப்படை உறுப்புக்களாக - தனிமங்களாக - எழுத்து (ஒலியன்), சொல் (உருபன்-பகாப்பதம்) என்ற இரண்டே உண்டு. இந்த உறுப்புகள் இரண்டு விதமான உறவைப் பெற்றிருக்கலாம். ஒன்று: ஒன்றைத் தொடர்ந்து மற்றொன்று வருவது, இதுவே தொடர் முறைஉறவு {Syntagmatic relation) என்று குறிக்கப்படுகிறது. இன்னொன்று: ஓர் உறுப்புக்குப் பதிலாக அதே இடத்தில் - தானத்தில் வரக்கூடிய உறுப்புகள். இவை அடுக்கு முறை உறவு (Paradigmatic relation) உடையனவாய்க் கருதப்படும். எடுத்துக்காட்டாக, எழுத்திலக்கணத்தில் அடு என்ற சொல்லில் அ என்ற எழுத்துக்குப் பதிலாக ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஒ, ஓ, போன்ற ஒலிகள் வர முடியும். (அடு, ஆடு, இடு, ஈடு, உடு, ஊடு, எடு, ஏடு, ஒடு, ஓடு). இங்கு ஐ, ஒள தவிரப் பத்து உயிர்களும் அடுக்குமுறை உறவு உடையனவாகச் சொல்லலாம். அதாவது, சொல்லை இன்னொன்றிலிருந்து வேறு பிரித்தறியும் வேலையும் அடுக்குமுறை உறவு செய்கிறது. உயிர் எழுத்தை அடுத்து என்னென்ன எழுத்துக்கள் வரலாம் என்று தீர்மானிப்பதே தொடர் முறை உறவு ஆகும். நிற்ப, நிற்க, நிற்ற என்ற ஒலிக்குப் பதிலாக மூன்று ஒலிகள் வரலாம். எழுத்திலக்கணத்தில் மெய்ம்மயக்கங்கள் தொடர்முறை உறவைக் காட்டுவனவே. சொல்லிலக்கணத்தில் இந்த இருவகை உறவும் இன்னும் சிறப்பாகவே செயல்படுகிறது. ஒரு சொல்லின் இடத்தில் வரக் கூடிய சொற்கள், ஒரு சொல்லை அடுத்து வரக்கூடிய சொற்கள் என்று சொற்களைப் பாகுபடுத்தி, அதற்குத் தனிப் பெயரும் இட முடியும். ‘படித்த பையன்’ என்பதில் ‘படித்த’ என்பது பெயரெச்சம்; ‘பையன்’ என்பது பெயர். எனவே பெயரெச்சமும் அதை அடுத்துவரும் பெயரும் தொடர்நிலை உறவு உடையன. பெயரெச்சம் என்பது பெயருக்கு முன்னால் வருவது, ‘படித்த’ என்னும் இடத்தில் வேறு பல சொற்களும் வந்து ‘பையன்’ என்னும் பெயருக்கு முன் அமையலாம். அவ்வாறு வரும் சொற்களுக்கும் (பார்த்த, நடந்த, படிக்கிற, படிக்கும்) ‘படித்த’ என்னும் சொல்லுக்கும் உள்ள அடுக்கு முறை உறவைக் காட்டுவதாகும். வாக்கியத்தில் சொற்கள் ஒன்றோடு ஒன்று தொடர்ந்து வருகின்றன. இதை நேர்நிலை அமைப்பு (Linear Structure) என்று குறிப்பிடலாம். ஆயினும், வாக்கியத்தில் சொற்கள் அடுத்து அடுத்து வந்தாலும் அவை எல்லாம் ஒரே வித நெருங்கிய உறவைப் பெற்றிருப்பதில்லை. ‘அந்தப் பையன் பாடம் படித்தான்’ என்ற நான்கு சொற்கள் கொண்ட வாக்கியத்தில் ‘அந்த’ என்ற சொல் ‘பையன்’ என்பதையும் ‘பையன்’ என்பது ‘பாடம்’ என்பதையும், ‘பாடம்’ என்பது ‘படித்தான்’ என்பதையும் தொடர்ந்து வந்திருக்கின்றன. அதாவது, அவை தொடர்நிலை உறவில் அமைந்து உள்ளன. ‘பையன்’ என்பதும் ‘பாடம்’ என்பதும் தொடர்ந்து வந்திருந்தாலும் அவை நெருங்கிய உறவு பெற்றிருக்கவில்லை, ‘அந்த’ என்பதும் ‘பையன்’ என்பதும் நெருங்கிய உறவு உடையன. ‘பாடம்’ என்பதும் ‘படித்தான்’ என்பதுமே நெருங்கிய உறவு உடையன. அதாவது, பையன், பாடம் என்பனவும் அடுத்தடுத்து வந்தாலும் ‘பையன்’ என்பதும் ‘அந்த’ என்பதும் சேர்ந்து ஒரு பெரிய உறுப்பாகவும் ‘பாடம்’ என்பதும் ‘படித்தான்’ என்பதும் மற்றொரு பெரிய உறுப்பாகவும் அமைந்து, அந்த இரண்டு உறுப்புகளுமே நெருங்கிய உறவு உடையனவாக (அண்மை உறுப்பு உறவு உடையனவாக)க் கருதக் வேண்டும். ஏனென்றால், அந்த வாக்கியத்தில் எழுவாய், பயனிலை என்ற அடிப்படை உறுப்புகளே உள்ளன. பையன் படித்தான் என்பதன் விரிவாக்கப்பட்ட வாக்கியமே அது. எனவே, வாக்கியத்தில் சொற்கள் ஒன்றோடு ஒன்று தொடர்ந்து வந்தாலும், அவைகளிடையே வெறும் நேர்நிலை உறவு மட்டும் அல்லாமல், படிநிலை உறவும் (Hierachi Relation) இருப்பதாகக் கொள்ள வேண்டும். படிநிலை உறவைக் கிளை வரைபடம் (Tree Diagram) மூலம் தெளிவாகக் காட்ட முடியும். அந்தப் பையன் பாடம் படித்தான் படம்–1 அந்தப் பையன் பாடம் படித்தான் அந்தப் பையன் பாடம் படித்தான் அந்தப் பையன் பாடம் படித்தான் படம்–2 படம்–1: வாக்கியத்திலுள்ள சொற்கள் இணைந்து, இரண்டு பெரிய உறுப்புகளாகி, அவையே ஒன்றோடு ஒன்று நெருங்கிய உறவு உடையன என்பதைக் காட்டுகின்றன. படம்–2: பெரிய உறுப்புகளாக இருந்து பின் அவை எப்படிச் சிறிய உறுப்புகளாகப் பிரிகின்றன என்பதைப் புலப்படுத்துகிறது. வாக்கியம் முழுவதும் ஓர் உறுப்பி (Constitute) ஆகக் கொண்டால் அங்கு இரண்டு அண்மை உறுப்புகள் (Immediate Constituents) இருக்கின்றன என்பது பொருள். அது போலவே பெயர்த் தொடரை ஓர் உறுப்பியாகக் கொண்டால் ‘அந்த’, ‘பையன்’ என்ற இரண்டு உறுப்புகளும் ஒன்றனுக்கொன்று அண்மை உறுப்பாக அமைந்திருக்கின்றன என்று கொள்ளலாம். அப்படியே, ‘பாடம் படித்தான்’ என்ற வினைத் தொடரும், பாடம், படித்தான் என்ற அண்மை உறுப்புகளை உடையது. அண்மை உறுப்பு ஆய்வில் மிகப் பெரிய உறுப்பியிலிருந்து சிறிய உறுப்பிவரை இரண்டு இரண்டாகப் பகுத்துக் கொண்டே போக முடியும். அன்றி, மிகச் சிறிய உறுப்பியிலிருந்து மிகப் பெரிய உறுப்பி வரை இணைத்துக் கொண்டும் போகலாம். அண்மை உறுப்பு ஆய்வின் இன்றியமையாமையை மூன்று சொற்கள் கொண்ட வாக்கியத்தாலோ தொடராலோ விளக்க முடியும். ‘பழைய மாணவர் விடுதி’ என்ற தொடர் இரண்டு பொருளைத் தர முடியும். பழைமையான, ‘மாணவர் விடுதி’ என்றும் ‘பழைய மாணவர்’ விடுதி என்னும் பொருள்படும். இந்த ரெண்டு பொருள் ஏற்படக் காரணம் அங்குள்ள சொற்களின் அண்மை உறுப்பு உறவு மாறுபடுவதே ஆகும். முதல் பொருளைக் குறி்த்தால், ‘பழைய’ என்ற பெயரடை ‘மாணவர் விடுதி’ என்ற தொகையைத் தழுவுகிறது. அதாவது, ‘பழைய’ என்பதும் ‘மாணவர் விடுதி’ என்பதும் அண்மை உறுப்புகளாக அமைந்துள்ளன. இரண்டாம் பொருளைக் குறித்தால், ‘பழைய மாணவர்’ என்ற தொகை ‘விடுதி’ என்ற சொல்லோடு சேர்கிறது. அதாவது, பழைய மாணவர் என்பதும் விடுதி என்பதும் அண்மை உறுப்புகளாக அமைகின்றன. இந்த இரண்டையும் கீழ்க்கண்டவாறு படம் போட்டுக் காட்டலாம். பழைய மாணவர் விடுதி பழைய மாணவர்களுடைய விடுதி பழைய மாணவர் விடுதி பழைமையான மாணவர் விடுதி இங்கு அடுத்தடுத்து வரும் சொற்களிடையே அண்மை உறுப்பு உறவு மாறுவதே பொருள் வேறுபடக் காரணம் என்பது தெளிவாகிறது. பொதுவாக மொழியில், சிறப்பாகத் தொடரியலில், மிகப் பெரிய அலகு வாக்கியமே. இதனைத் தொடர் (Phrase), பயனிலைகள் (Clause) என்ற அலகுகளாகவும் பிரிக்கலாம். அந்த அலகுகளை உறுப்பியாகக் கொண்டால் அவை ஒவ்வொன்றையும் பல உறுப்புகளாகப் பிரிக்கலாம். அந்த உறுப்புகளுக்கு இடையேதான் அண்மை உறுப்பு உறவு காண முடியும். அப்படியே ஒவ்வோர் உறுப்பையும் உறுப்பியாகக் கொண்டு, அவற்றில் அடங்கியுள்ள உறுப்புகளுக்குள்ளே அண்மை உறுப்பு உறவு காண முடியும். ஆகையினால், அண்மை உறுப்பு ஆய்வைத் தொடரியலில் குறைந்த உறுப்பான உருபன் (Morpheme) அல்லது பகாப்பதம் வரை, படிப்படியாக மேற்கொள்ளலாம். அண்மை உறுப்பு ஆய்வு என்பது, பெரிய சொற்றொடர்களை இரண்டு இரண்டு உறுப்புகளாகப் பிரித்துக் கொண்டே வருவது. எனவே, அண்மை உறுப்பு ஆய்வுக்கு இரண்டாகப் பகுப்பதே இன்றியமையாததாகும். அப்படி இரண்டாகப் பிரிக்கும் போது அந்தத் தொடர்கள் வேறு சிறு தொடர்களின் பதிலியாக வரக் கூடியவையாக இருக்க வேண்டும். நம் விருப்பப்படி இரண்டாகப் பகுக்கக் கூடாது. எடுத்துக்காட்டாக, ‘சிறிய பையன் பெரிய பேனாவை எடுத்தான்’ என்ற வாக்கியத்தைக் காண்போம். இந்த வாக்கியத்தில் சிறிய பையன்/பெரிய பேனாவை எடுத்தான் என்ற இரண்டு அண்மை உறுப்புகள் இருக்கின்றன. ஏனென்றால், ‘சிறிய பையன்’ என்பது ‘கந்தன்’ என்ற மற்றொரு சொல்லைப் பெய்தாலும் வாக்கிய அமைப்பு சரியானதாக இருக்கும். அப்படியே, பெரிய பேனாவை எடுத்தான் என்ற தொடர், பெரிய பேனாவை/எடுத்தான் என்னும் இரண்டு அண்மை உறுப்புடையது. காரணம், பெரிய பேனாவை என்ற உறுப்பை மற்றொரு உறுப்பால்-பழத்தை என்ற சொல்லால் நிரப்பினாலும் வாக்கியம் சரியாக அமையும். எனவே, பெரிய தொடர்களுக்கு வேறாகத் தனிச் சொல்லைக் கொண்டு அமைத்தாலும் வாக்கியத்தின் அடிப்படைப் பண்பு மாறாமல் இருக்கவேண்டும். எனவேதான், இரண்டு இரண்டாகப் பிரிக்கும் போதே அவை தனிச் சொற்களைக் கொண்டு சரியான வாக்கியம் அமைக்கும்படி இருக்க வேண்டும் என்பது, மிகவும் இன்றியமையாததாகும். அண்மை உறுப்புகள் இரண்டாக அமைந்தாலும் அவை உம்மைத் தொடராகவோ உம்மைத் தொகையாகவோ வரும்போது, இரண்டுக்கு மேற்பட்ட உறுப்புகளும் இருக்க முடியும். இவற்றைப் பன்மை அண்மை உறுப்புகள் (Multiple Immediate Constituents) என்று கூறுவர். ‘கை, கால், முகம் கழுவினான்’ என்ற தொடரில், ‘கை கால், முகம்’ என்பதும் ‘கழுவினான்’ என்பதும் அண்மை உறுப்பு உறவு உடையன. ஆனால், கை, கால், முகம் என்ற உறுப்புகளை உறுப்பியாகக் கொண்டு பகுக்க வேண்டுமென்றால், இரண்டு உறுப்பாகப் பகுக்க முடியாது. பகுத்தால் (கை + கால் + முகம்), (கை + கால் + முகம்) என்றாகி அவற்றிற்குச் சரியான காரணம் காட்ட முடியாமற்போகும். எனவே, கை + கால் + முகம் என்ற மூன்று உறுப்புகளும் ஒன்று சேர்ந்துள்ளனவாகக் கருத வேண்டும். இதுவே, பன்மை அண்மை உறுப்பு எனப்படும். அண்மை உறுப்புகள் எப்பொழுதும் நேர் நிலையில் இடைவிடாமல் அமைந்திருக்க வேண்டும் என்பதில்லை, எனவே தொடர் நிலையை ஒட்டி இரண்டு விதமாக அமையலாம். ஒன்று, இடைவிடா அண்மை உறுப்பு (Continuous Immediate constituent) என்றும், மற்றொன்று, இடைவிட்ட அண்மை உறுப்பு (Discontineous Immediate Constituent) என்றும் கூறப்படும். மேலே காட்டப்பட்ட எடுத்துக்காட்டுகள் எல்லாம் இடைவிடாத அண்மை உறுப்பு வகையைச் சார்ந்தன. ‘எல்லா மக்களும்’ என்ற தொடரில் எல்லா ...... உம் + மக்கள் என்பதே அண்மை உறுப்புகள். ஆனால், எல்லா மக்களும் என்ற தொடரில் மக்கள் என்ற உறுப்பு எல்லா ...... உம் என்ற உறுப்புக்கு இடையே வந்துள்ளது. எனவே இதை இடைவிட்ட அண்மை உறுப்பு என்றே கூறவேண்டும். அண்மை உறுப்பு ஆய்வு பெரும்பான்மை தொடரியல் ஆராய்ச்சியில் பயன்படுவது. இஃது இந்நூற்றாண்டின் முற்பகுதியில் செம்மையாக்கப்பட்டது என்பது குறிப்பிடத் தகுந்தது. வாக்கியத்தில் சொற்கள் சேர்ந்துவரும் முறையை ஒட்டிச் சொல்லிலக்கணம் (Parsing) என்ற முறை - மேலை நாடுகளில் எழுவாய், பயனிலை; பெயரடை, பெயர்; செயப்படுபொருள், வினை; வினையடை, வினை என்று என்று பிரித்து ஆராய்கிற முறை - நெடுங்காலமாகப் பழக்கத்தில் இருந்து வந்திருக்கிறது. இஃது ஓரளவு சொல் வகைப்பாட்டு (Parts of Speech) அடிப்படையிலும், பயன்பாட்டு (Functional) அடிப்படையிலும் மேற்கொள்ளப்பட்டு வந்தது. அந்த முறையை அண்மை உறுப்பு முறையில் ஆராய முடியும் என்று 1933–இல் புளூம்பீல்டு என்னும் அமெரிக்க அறிஞர் சில எடுத்துக்காட்டுகள் மூலம் விளக்கிக் காட்டினார், அதன் அடிப்படையில் ஆரிசு (Haris) வெல்சு (Wells) என்னும் இரண்டு அறிஞர்களும் அண்மை உறுப்பு என்பதைக் கோட்பாட்டு நிலையில் செம்மைப்படுத்தினர். தமிழ் இலக்கண உரைகளில் அண்மை உறுப்பு ஆய்வின் அடிவேர் காணப்படுவதும் சுட்டிக் காட்டத் தகும். தெய்வச் சிலையார் பல சொற்களை உடைய நீண்ட வாக்கியம் எப்படி இணைந்து அமைந்துள்ளது என்பதைப் ‘பூத்தொடை’ என்ற தொடர் கொண்டு விளக்கியுள்ளார்.செ.வை.ச.