சிறுவரிடையே இரைப்பைப் புண்
ciṟuvariṭaiyē iraippaip puṇ
பொதுவாகவே, குழந்தைப் பருவத்தில் இரைப்பைப் புண்கள் மிகும்.
பொதுவாகவே, குழந்தைப் பருவத்தில் இரைப்பைப் புண்கள் மிகும். இந்நோய் 10—18 வயதுள்ளோரையே பெரிதும் பாதிக்கிறது. ஆண் குழந்தைகள், பெண் குழந்தைகளைப் போல், இரு மடங்கு இப்புண்களால் பாதிக்கப்படுகின்றனர். 15 வயதுக்கு மேல் இது அதிகரிக்கிறது. ஆறு வயது வரை இரைப்பைப் புண் தொற்று நோய் ஆகியன மருந்துகளாலும், நச்சுப் பொருள்களாலும் உண்டாகலாம். 50% நோயாளிகளில், அவர் தம் பெற்றோருக்கு இப்புண்கள் இருந்தன என்று அறியப்படுகிறது.
ஆறு வயது வரை முன் குடல் மட்டுமல்லாது, இரைப்பையும் சமமாகப் பாதிக்கப்படும். 6—18 வயது வரை முன் சிறு குடல் இரைப்பைப் புண்கள்,, இரைப்பைப் புண்களைப் போல் 5 மடங்கு மிகுதியாகக் காணப்படும், இரைப்பைப் புண் உண்டாகக் காரணம் சரி வர அறியப்படவில்லை. குடல் சீதப்படலத்திற்குச் செரிக்காத எதிர்ப்பாற்றல் இருப்பதால், அமிலமோ, பித்தமோ, பித்த அமிலங்களோ எதுவும் செய்ய முடிவதில்லை. இந்நிலை மாறி, சீதப்படலம் தன் எதிர்ப்பாற்றலை இழக்கும் போது, பெப்ரின் நொதி சீதப்படலத்தை அரித்து, இரைப்பைப் புண்ணை உண்- டாக்கும். இரைப்பைப் புண் தோன்றக் காரணம் முன் சிறு குடலிலிருந்து இரைப்பைக்கு வரும் செரிமானப் பொருள்களே ஆகும்.
ஆஸ்ப்பிரின் மாத்திரை குடல் புண்களை உண்டாக்கும் என உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. ஆக்சிஜன் குறைவு, குருதி அழுத்த நோய்,, தொற்று நோய், உட்கபால அழுத்தம் இவை கூடும் போது, இரண்டாம் நிலை இரைப்பைப் புண் தோன்றுகிறது. பெப்சின் மற்றும் அமிலம் கூடுதலாகச் சுரப்பதாலேயே, முன் சிறு குடல் முதல் நிலை இரைப்பைப் புண் தோன்றுகிறது. இதற்குக் காரணமாகிய புறச் செல்களின் அளவு (parietal cell mass) கூடுதல், பாரம்பரியமாகவோ பெறப்பட்ட நிலைகளிலோ (acquired) காணப்படும். பெறப்பட்ட நிலைகளுக்கு முக்கிய காரணங்கள் கணையக் கட்டிகளாகிய சோலிங்கர் எலிசன் நோய் மற்றும் குருதியில் கால்சியம் அளவைக் கூட்டக் கூடிய பாரா தைராய்டு கட்டிகள் ஆகும். உணவு உண்ணா நிலையில் கேஸ்ட்ரின் எனப்படும் நாளமில்லாச் சுரப்பு முன் சிறு குடல் இரைப்பைப் புண் உள்ளோரின் இரைப்பையில் சாதாரண அளவே காணப்பட்டால், உணவு உண்ணும் போது தூண்டுதலால் கேஸ்ட்ரின் அளவு அதிகரிக்கிறது. இவ்வமிலம், உணவால் சம நிலைப்படுத்தப் பட்டாலும், இரைப்பை விரைவாகக் காலி செய்யப்படுவதால், அமிலச் சுரப்பி மீண்டும் சுரக்க வாய்ப்பாகிறது.
நோய்க் குறிகள் 0-3 வயது வரை. பிறந்து மூன்று வயது வரை உள்ள குழந்தைகளில் காணப்படும பசி எடுக்காமை, வாந்தி, உணவிற்குப் பின் அழுகை, மலத்தில் குருதி, குருதி கலந்த வாந்தி ஆகியவை இரைப்பை நோயின் முக்கியஅறிகுறிகளாகும். இரண்டாம் நிலைப் புண்கள், திடீரெனத் தீவிர நிலையில் உண்டாவதால், துளையுடன் காணப்படுவதே தொடக்க நிலைக் குறியாகும்.
3-6 வயது வரை. உணவுக்குப் பின் வரும் வாந்தி முக்கிய நோய்க்குறியாகும். இரைப்பைப் புற வாயிலில் தடையுண்டாவதால், உணவு கீழ் நோக்கிச் செல்ல முடியாமல் வாந்தியாக வருகிறது. வயிற்றிலோ, கொப்பூழைச் சுற்றியோ வலி தெரியும். அரிதாக இரைப்பைப் புண் வலி (ulcer pain) காணப்படும். இரண்டாம் நிலைப் புண்களில் மலத்தில் குருதி, குருதி கலந்த வாந்தி, குடல் துளை ஆகியவை தோன்றும்.
6-18 வயது வரை. வயிற்றுவலி, 50% குழந்தைகளில் இரைப்பைப் புண்ணைக் கண்டு பிடிக்க உதவும். மலத்தில் குருதி, குருதி வாந்தி 50 சதவிகிதத்திற்கு மேற்பட்டோரிடம் காணப்படும். தீவிர நோய், நாட்பட்ட நோய்களாகிய நுரையீரல் சீழ்க் கட்டி, குரோன் நோய் (Crohn’s disease) ஆகியன ஈரலில் காணப்படும். ஈரல் நார் கடினமாதல் (cirrhosis), முடக்கு வாத (rheumatoid arthiritis) நோய்களில் இரண்டாம் நிலை இரைப்பைப் புண் மிகுதியாகக் காணப்படும்,
சிறு குழந்தைகளின் இரைப்பைச் சுரப்பை ஆய்வு செய்யும் போது, சோலிங்கர் எலிசன் நோயில் உள்ளது போல், அதிக அமிலம் காணப்படுவதில்லை. உணவுக்குப் பின், கேஸ்ட்ரின் சுரப்பு அதிகரித்திருப்பதைக் காணலாம். எக்ஸ் கதிர்ப் படம், பேரியம் சல்ஃபேட் கொடுத்து எடுக்க, புண் உள்ள பகுதிகளையும், முன் சிறு குடல் அமைப்பு மாறியதையும் காணலாம். குருதி ஒழுக்குடன் கூடிய இரைப்பைப் புண்ணை, இரைப்பை அக நோக்கியால் கண்டு பிடிக்கலாம்.
இரைப்பைப் புண் காரணமறிய மீண்டும், மீண்டும் வரும் வயிற்று வலி, பெருங்குடல் எரிச்சல் கூட்டியம் (irritable colon syndrome), உணவுக் குழல் அழற்சி, நாட்பட்ட கணைய அழற்சி, பித்தப் பைக் கற்கள், குடல் புழுக்கள் போன்ற நோய்களிலிருந்து வேறுபடுத்தி அறிய வேண்டும்.
வயிற்று வலியை உண்டாக்கக் கூடிய காஃபி, தேநீர், பட்டை, கிராம்பு போன்ற காரப் பொருள்கள், எண்ணெயில் பொரித்த இறைச்சி, வாயு உள்ள குளிர் பானங்கள் இவற்றைத் தவிர்க்க வேண்டும். ஆஸ்ப்பிரின் போன்ற மாத்திரை, அறவே நிறுத்தப்பட வேண்டும். அமில எதிர் (antacid) எனப்படும் காரக் கரைசல், அமிலத்தைச் சமப்படுத்துவதால், இரவில் படுக்கு முன் 15—30 மில்லி குடிப்பது நல்லது. உணவுக்குப் பின், மூன்று வேளை கொடுத்து வர வேண்டும். ஆன்டி கொலினெர்ஜிக் (anticholinergic) எனப்படும் அமிலம் சுரக்கா வண்ணம் தடை செய்யும் மருந்துகளை இரவில் படுக்கு முன் சாப்பிடலாம்.
சிமெட்டிடின் எனப்படும் ஹிஸ்டமின் H, ரிசப்டார் எதிர்ப்பு மருந்து 300 மி.கி. உணவுடன் கொடுத்து வர 85% முன் சிறு குடல் புண்கள் ஆறு வாரத்தில் ஆறும். அறுவை மருத்துவம், நோய்க் காரணம் புலப்படாத புண்களில் மட்டும் தேவைப்படும். சான்றாக, துளையுடன் கூடிய புண்கள், குருதி வாரி, குடல் தடை போன்றவற்றிற்கு உடனடியாக அறுவை செய்ய வேண்டும். —மா, ஜெ. ஃபிரடெரிக். ஜோசப்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 381)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3azggtrx/
தமிழ்“சிறுவரிடையே இரைப்பைப் புண்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/3azggtrx/APA
Oliyon Research. (2026). சிறுவரிடையே இரைப்பைப் புண். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3azggtrx/MLA
"சிறுவரிடையே இரைப்பைப் புண்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/3azggtrx/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment