திவாகரம், பிங்கலம் ஆகிய நிகண்டுகளைப் பின்பற்றி இயற்றப்பட்டதாகும். இதற்கு ஆசிரிய நிகண்டு என்னும் பெயரும் உண்டு. இதன் ஆசிரியர் காங்கேயர். இவர் தம் நூலுக்கு ‘உரிச்சொல்’ என்றே பெயரிட்டார் என்பது, ‘முந்துள திவாகரம் பிங்கல நிகண்டும் முந்துகாங் கேயன் உரிச்சொல்’ என்னும் இதன்பாயிரப்பகுதியால் அறிய வருகிறது. இந்நூல் வெண்பாவினால் செய்யப்பெற்றுள்ளது. சைவசாத்திரமாகிய சிவப்பிரகாசத்துக்குச் சிவப்பிரகாசர் என்பாரின் பேருரை கி.பி. 1488–இல் இயற்றப் பெற்றது. இவ்வுரையில், ‘உயிர்ப்பொலி வங்கூழ் சலனன் வாதம் வளி மாருதம்’ என வரும் உரிச்சொல் நிகண்டுப் பகுதியை (1:35) இவர் மேற்கோளாகக் காட்டியுள்ளார் (சிவப். 38 உரை). எனவே, இவர் காலத்திற்கு முந்தியது இந்நூல் என்பது தெளிவு. ‘வணங்கல்’ என்னும் பொருளில் வரும் சொற்களுள் ‘சலாம் செய்தல்’ என்பதனையும் இந்நூல் (9:2) தருகிறது. ‘சலாம்’ என்பது முகம்மதியர் ஆட்சிக் காலத்தில் நாட்டு வழக்கிற் புகுந்தது. ஆகவே, இந்த உரிச்சொல் நிகண்டை கி.பி. 14-ஆம் நூற்றாண்டைய நூல் எனலாம். இதற்குரிய பழம் பதிப்பு கி.பி. 1840-இல் வந்த துத்தன்துரை என்பாரின் பதிப்பாகும். உரிச்சொல் நிகண்டில் 12 தொகுதிகள் இப்பொழுது அச்சில் காணப்படுகின்றன. ஆனால், முந்திய பதிப்புகளில் 10-ஆவதான ‘ஒலி பற்றிய பெயர்த் தொகுதி’யும் 12–ஆவதான பல் பெயர்க்கு ஒரு பெயர்த் தொகுதியும் காணப் பெறவில்லை. பழைய ஏடுகளிலும் 10 தொகுதிகளே உள்ளன. :‘உத்தம சீலத்துக் காங்கேயன் சொன்ன உரிச்சொல் தன்னை : ... ... ... ... ... ... :பத்துத் தொகுதியில் சேர்த்தான் எவரும் படித்திடவே’ எனவரும் அரிய செய்யுளும் இந்நூல் 10 தொகுதிகளையே உடையது என்பதனைச் சுட்டிக்காட்டுகிறது. இவற்றால் 10, 12–ஆம் தொகுதிகளைப் பிற்காலத்து ஆசிரியர் ஒருவர் பாடிச் சேர்த்திருக்க வேண்டும் என்பது தெரியவரும். சொற்பொருள் உணர்ந்து ஒரு சொற் பல்பொருட் பெயர்த் தொகுதியில் 36 வெண்பாக்கள் உள. இவற்றில் விளக்கப் பெற்ற சொற்கள் 151. பல்பொருட் சொற்கள் வெண்பாவில் அமையும் வகையில் வைத்துப் பாடப்பெற்றுள்ளனவே யன்றி, தக்க காரணங்களால் அடைவுபடுத்தியதாகக் கொள்ளக் கூடவில்லை. மு.ச.