வான்மீகி இராமாயணத்தைப் பின்பற்றித் தமிழில் தோன்றிய இராமாய நூல்களுள் ஒன்று. இராமாயண வெண்பா என்னும் பெயரில் கி.பி. 1930–ஆம் ஆண்டில் தோன்றிய இந்நூல் முழுதும் வெண்பா யாப்பில் அமைந்தது. இதன் ஆசிரியர், சு. சுப்பிரமணிய அய்யர். இவர் பசும்பொன் முத்துராமலிங்க மாவட்டத்தைச் சேர்ந்த கோட்டையூரினர். கோட்டையூர் க.வீ. இராம. மு. இராமநாதன் செட்டியாரின் பொருளுதவியால் நூலாசிரியரின் முதல் மாணாக்கர் திரு. வேங்கடராம அய்யரால் இந்நூல் பதிப்பிக்கப்பெற்றது. கம்பராமாயணத்தை அடியொற்றிக் காண்டப் பெயர்களும் படலப்பெயர்களும் அமைந்துள்ளன. இந்நூல் ஆறு காண்டங்களும், நூற்றுப்பதினைந்து படலங்களும், 9379 பாடல்களும் கொண்டது. கம்பராமாயணச் சொற்றொடர்களையும், எதுகை, மோனை, உவமைகளையும் இந்நூலின் பாடல் தோறும் காணலாம். யாப்பு ஒன்றுதான் மாறுபட்டுள்ளது. கம்பர் விருத்தத்தில் பாடியுள்ளார். இவர் வெண்பாவில் பாடியுள்ளார். கம்பர் திருமுடி சூட்டுப் படலத்தில் வெண்ணெய் நல்லூர்ச் சடையப்ப வள்ளல் மரபில் வந்தவர்கள் திருமுடியினை எடுத்து, வசிட்டன் கையில் கொடுக்க அவர் அதனைப் பெற்று இராமனுக்கு முடிசூட்டினார் என்பர். இராமாயண வெண்பா ஆசிரியரும் தம் நூலில் முத்தையா மகனார் இராம வள்ளல் சார்ந்த முன்னோர் தந்த முடியை வசிட்டன் புனைந்தான் என்று கூறித் தன் நன்றியைப் புலப்படுத்தியுள்ளார். கம்பர் தாம் பிறந்த சோழ நாட்டை மறவாமல் வாய்ப்புள்ளபோது குறிப்பிடுவார். இராமன் அயோத்தியை விட்டு நீங்கியபோது ‘காவிரி நாடன்ன கழனிநாடு ஒரீஇ’ என்பர், இராமாயண வெண்பா ஆசிரியர் தாம் பிறந்த பாண்டிய நாட்டை அதே சூழ்நிலையில் குறிப்பிட்டுள்ளார். ‘நன்னாடாம் வைகை புனை நாட்டை ஒத்த பொன்னாடு’ என்று குறித்திருப்பது நினையத்தகும். கம்பராமாயணத்தில் சுவைத்து மகிழவாகும் சந்த வேறுபாடுகளை இராமாயண வெண்பாவில் காண இயலாது. செய்திக்கும் நிகழ்ச்சிக்கும் பாத்திரங்கட்கும் ஏற்ற வகையில் கம்பர் சந்தங்களை வேறுபடுத்திப் பாடியுள்ளார். ஆனால் இராமாயண வெண்பா ஆசிரியர் வெண்பா யாப்பில் பாடியுள்ளதால் சந்தவேறுபாடு காட்ட இயலவில்லை. எல்லா வகையாலும் கம்பருக்கு இவர் கடமைப்பட்டிருந்தாலும் ஏறத்தாழப் பதினாயிரம் பாடல்கள் பாடுவது என்பது எளிய செயலன்று. அந்த அளவிற்கு நூலாசிரியர் சுப்பிரமணிய ஐயர் மக்கள் தம் பாராட்டிற்குரியவர். இனி இராமாயண வெண்பா என்ற பெயரில் ஒரு நூல் இருந்ததாகப் பேராசிரியர் மு. இராகவையங்கார் அவர்கள் (ஆராய்ச்சித் தொகுதி) குறிப்பிட்டுள்ளார். அக்நூல் கி.பி. 15–ஆம் நூற்றாண்டினதாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அந்நூல் கிடைக்கவில்லை, ஒரு சில பாடல்கள் மட்டில் பல திரட்டு என்ற சுவடியில் காணப்பெறுகின்றன என்பர். அ.வி.