எரியியல் வயமான கார வகை அனற் பாறைகள் பலவற்றைப் பசால்ட் என்பர். இவை கருத்த சாம்பல் நிறம், பசுங்கருமை நிறம் கொண்டவை. நசிவுற்றதும், பழுப்பு நிறமாக மாறும் தன்மையுடையவை. நுண் படிக அமைப்பில், புலனாகா அளவுக்குக் கனிமங்களைக் கொண்டவை. சராசரியாக 45%–52% சிலிகா கனிமச் சத்தினைக் கொண்டவை. பசால்ட் பாறைப் படலம் ஆழ் கடல் தரை மட்டத்திற்குக் கீழேயும், கண்டங்களின் அடியில் சிலிகா–மக்னிஷியா பாறைப் படலமாகப் புவிப் போர்வைக்கும் (mantle) புவிப் பொருக்குக்கும் (crust) இடையேயுள்ள மொஹரோவிசிக் (Mohorovicic) படல விரிவுக்கு (Discontinunity) மேல் உள்ளது. ஆழ் கடல்களின் தரை, பசால்ட் பாறைகளால் ஆனது. 2.7–3.1 ஒப்படர்த்தி கொண்ட கனமான பசால்ட் படலத்தின் மேல் கிரேனைட் போன்ற சுமை குறைந்த பாறைகளால் ஆன கண்டங்கள், தெப்பம் போல் மிதக்குமெனக் கூறுவர். பசால்ட்டால் ஆன, தூண் போன்ற பிளவுகளைக் கொண்ட (Columnar joints) எரிமலைக் குழம்புப் படலங்கள் தக்காண பீடபூமியில் காணப் படுகின்றன. இவை மாபெரும் படிக் கட்டுகள் போல், மேற்கரையோரமாகப் பெருமலை உயரத்திலிருந்து, படிப்படியாகக் கிழக்கு நோக்கிக் குறைந்து வரும் உயரங்களில் காணப் படுகின்றன. இவை மும்பை முதல் பீகாரில் ராஜ்மகால் மலை வரை பரவியுள்ளன. பெரும்பாலான எரிமலைக் குழம்பிலிருந்து உண்டான பாறைகள் பசால்ட் பாறைகளாகும். உலகிலுள்ள எரிமலைப் பாறைகளில் பசால்ட், ஏனையவற்றை விட 5 மடங்கு மிகுந்துள்ளது. ஆண்டிசீன், ஒலிகோசீன் போன்ற பிளோஜிகிளேசுகளும், ஆகைட்டும் இதன் முதன்மைக் கனிமங்கள், மேக்னடைட்டும், இல்மனைட்டும் துணைக் கனிமங்கள். பசால்ட்டைக் கேப்ரோவின் நுண் துகள் இனம் எனக் கூறலாம். இதன் கனிமங்கள் மிக நுண்ணியவை. திரள் படிக அமைப்புடையவை. இதன் படிகப் பற்றுக் காரையில் படிவமும் (Glass) காணப் படுகிறது. பசால்ட்டில் வளிமம் வெளியேறிய உட்புழைகள் இருந்தால், உட்புழைவயப் பசால்ட் (Vesicular basalt) என்று பெயர் பெறும். உட்புழைகளைப் பின் தோன்றிய கனிமங்கள் அடைந்திருந்தால், புழைத் தினி அல்லது கண்ணடை (Amy galoloidal) பசால்ட் என்று பெயர் பெறும். இவ்வாறு, கண்ணடைத்துள்ள பின்னுறு கனிமங்கள், சால்சைட், ஜியோலைட், குளோரைட், எபிடோட் ஆகிய கனிமங்கள் ஆக இருக்கக் காணலாம். பசால்ட் பாறை கெட்டியானது, கடினமானது. இணைப்புகள் மிகுந்ததாக உள்ளது. கருத்த நிறமுடையது. இதன் நொறுங்கு வலிமை (Crushing strength) ச.செ. மீட்டருக்கு 1800–2800 கி.கிராம். மிகக் குறைவான புரைமையும் (Porosity) நீர் உறிஞ்சும் தன்மையும் கொண்டது. எளிதில் தேயாதது. பனி இயக்கம், நெருப்பு ஆகியவற்றுக்கு நல்ல எதிர்ப்பு உடையது. பளபளப்பு ஏற்குமாறு, தேய்க்க ஏற்றது. பயன். இது ஒரு சிறந்த சாலைக் கல்லாகவும், சிமெண்டுக் கலவைக் கல்லாகவும் விளங்குகிறது. பாறை முகப்பீட்டுக் கற்கள், ரயில் தண்டவாளத்துக்கு அடியில் போடும் கற்கள் எனப் பல வகையில் பயன் படுகிறது. பொதுவாகப் பசால்ட் பாறைகள் மிகுந்த நிலத்தில் நீர் கிடைப்பது எளிது. ஏனெனில், இதில் பிளவுகளும், உட்புழைகளும் மிகுந்து காணப் படுகின்றன. உட்புழைகளைத் திணித்த படியுள்ள கனிமங்கள், பல குறை மணிக் கற்களாகப் பயன் படுகின்றன. இவற்றுள், அகேட், அமிதிஸ்ட், சால்சிடொனி, குவார்ட்ஸ் வகைகள் குறிப்பிடத் தக்கவை. பல ஜியோலைட் கனிமங்களும், பசால்ட் பாறைகளில் திணிப்புகளாகக் காணப் படுகின்றன. —ம.ச.ஆனந்த்