அரசியல் தந்திரம் என்பது இறைமை உடைய அரசுகளுக்கிடையே ஒப்பந்தங்களையும், உடன்பாடுகளையும் பேசிமுடிப்பதில் உள்ள பல்வேறு செயல்முறைகளைச் (Processes) சுட்டிக் காட்டுகிறது. இத்தகைய முறைகளைக் கையாளுபவர் இராசதந்திரி அல்லது அரசியல் சூழ்வலியாளர் (Diplomat) எனப்பட்டனர். இத்தகையோர் அவரவருடைய அரசாங்கங்கள் அமைத்துள்ள அரசியல் தந்திரப் பணிகளில் தேச உறவு தந்திரம் முதலியன புரிவதை இத்தொடர் குறிப்பிடுகிறது. அரசியல் தந்திரம் என்பதை அரசாங்கத் தூதுவர்கள் வழக்கமாகச் செய்கிற பிரச்சாரம், உளவு வேலை, மற்ற அலுவலாளரைக் கண்காணித்தல் முதலியவற்றோடு இணைத்து எண்ணுவது தான் வழக்கம். பொருளாதார நிலைமைகள், பிரச்சாரம், உளவு முதலிய முறைகள், தூதுவர்களை வலுவாக்கவோ வலுவிழக்கவோ செய்யலாம். பண்டைக் காலமுதல் இறைமையுடைய அரசுகள் ஒவ்வொன்றும் தத்தம் நலனைக் காப்பாற்றும் பொருட்டு மற்றவைகளுடன் போர் வாயிலாக இன்றி, பேச்சு உடன்படிக்கை வாயிலாகத் தொடர்பு கொள்ளுதல் வழக்கமாயிருந்தது; இதற்காக அவை தங்களுக்கிடையே தூதுவர்களைப் பரிமாறிக் கொண்டன. கி.பி. 1000–ஆம் ஆண்டில் பைசாண்டிய அரசும், போப்பின் வாட்டிகன் அரசும், அயல்நாடுகளிலுள்ள தூதுவர் மூலம் அவற்றைப் பற்றிய செய்திகளைச் சேகரித்து வைத்திருந்தன. அரசியல் தந்திரத்தை அரசியல் கொள்கையோடும் சர்வதேச உறவுகளோடும் ஒன்றாகக் கருதும் இயல்பும் வளர்ந்தது. ஆகையால் அரசியல் தந்திரம் என்பதில், தீர்மானம் செய்யும் முறை (Decision Making Process), தீர்மானம் செய்தலில் உதவி செய்யும் நிறுவனம் பேசிமுடிப்பவர்களுக்குக் குறிப்புகள் அனுப்பும் நிறுவனம், பேசிமுடிக்கும் திறத்தின் இயல்பு ஆகியவை அடங்கியுள்ளன. பேசிமுடிக்கும் கலையைப் பற்றி முறையாக ஆய்வு செய்து எழுதிய ஆசிரியர்கள் சூல்சு காம்பன் (Jules Camban) என்ற பிரஞ்சு ஆசிரியரும், சர் எரால்டு நிக்கல்சன் என்ற ஆங்கில ஆசிரியரும் ஆவர். பேசிமுடிக்கும் கலையை (Art of Negotiation) அதன் விளைவோடும் இணைத்துக் கூறுகிறார் பிரட் இக்கிள் (Fred Ikle) என்ற ஆசிரியர். இவர் தாம் எழுதியுள்ள “நாடுகள் எவ்வாறு பேசி முடிக்கின்றன?” (How Nations Negotiate?) என்ற நூலில் குறிப்பிடும் சில கருத்துகளைக் கீழே குறிப்பிடலாம். பேசிமுடிப்பதென்ற செயலுக்கு முன்னதாகத் தேசிய நலன்களில் அல்லது மதிப்பீடுகளில் வேறுபாடு இருத்தல் வேண்டும்; அதே சமயத்தில் எல்லாக் கட்சியினருக்கும் பொதுவான நலன்களும் இருத்தல் வேண்டும். இரண்டு அல்வது அதற்கு மேற்பட்ட கட்சிகள் (அல்லது நாடுகள்–Parties) ஒன்றுக்கொன்று முரணான நலன்களைப் பொதுவான நலன்- களாக இணைக்கும் செயல்நயமே அனைத்து நாட்டு உறவுகளுக்கு ஊடும் (Warp) பாவும் (Woof) போலாகும். தனி ஆட்களும் குழுக்களும் அரசாங்கங்களும் இச்செயலில் எப்போதும் ஈடுபட்டுள்ளனர். குறுகிய பொருளிலே பேசிமுடித்தல் என்பது, ஒன்றுக்கொன்று முரணாக இருக்கும் நலன்களிலே ஒரு பொதுவான நலனை அல்லது ஈடுபாட்டை அடைவதென்று ஒப்பந்தம் செய்து கொள்ளுவதற்காகத் திட்டங்கள் வகுத்தல் ஆகும். இந்தத் திட்டங்கள், ஒப்பந்தங்களின் பிரிவுகளைப் பற்றிக் கூறுவதோடு மட்டுமல்லாமல், விவாதிப்பதற்குரிய தலைப்புகளையும் தொழில் நுட்பச் செய்திகளையும் சட்ட நுணுக்கங்களையும் கூறுகின்றன. இருபதாம் நூற்றாண்டின் அரசியல் தந்திரக் கலைக்கு இன்றியமையாதவையாக இருப்பவை தேசிய அரசுமுறையும் நிலையான தூதுவரகங்களும் ஆகும். கி.பி. 1848–ஆம் ஆண்டுக்குப்பின் பல தேசிய அரசுகள் (Nation State) அரசியல் ஒப்பந்தங்களைப் பேசி முடிக்கும் பணி நிறுவனங்களை அமைத்தன. இந்த ஒப்பந்தங்களைப் பேசி முடிப்பதற்கு முன்னோடியாக இரண்டு சர்வதேச மாநாடுகள் (Conferences) ஒன்று செருமனியில் மன்சுட்டர் நகரத்திலும், மற்றொன்று ஆசுனபிரக்கு நகரத்திலுமாக நடந்தன. இதேமுறை பிற்பட்ட காலங்களிலும் பின்பற்றப்பட்டது. இதில் பல நாடுகளின் தலைவர்கள், அயலுறவு அமைச்சர்கள் கலந்துகொண்டனர். இதுவே சர்வதேச அரசியல்தந்திரம் (International Diplomacy) எனப்படும். கி.பி 1818–ஆம் ஆண்டில் அரசியல் தந்திரிகளின் நடக்கை விதி தொகுக்கப்பட்டது. தன் அரசாங்கத்தின் சார்பாக வேற்றுநாட்டு அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஓர் அரசியல் தந்திரிக்குக் கீழ்வரும் தகுதிகள் இருத்தல் வேண்டுமென்று, பிராங்காய் டி கால்வியரசு என்ற ஆசிரியர் குறிப்பிடுகிறார். திறமான தந்திரியின் வெற்றி, அவரால் நிறைவேற்ற இயலாத வாக்குறுதிகளில் காணப்படுவது அன்று; எனவே அவர் வாக்குறுதிகளை அளிக்குமுன் அவற்றை அவரால் நிறைவேற்ற இயலுமா என்றறிந்து கொள்ளுதல் வேண்டும்; எதனையும் கூர்ந்தாராயும் திறமுடையவராக (Discernment) இருத்தல் வேண்டும்; எதனையும் அதன்மீது பற்று அல்லது விருப்புக்கொள்ளாமல் ஆயும் திறம்; எதனையும் பிழையில்லாமல் துல்லியமாக அறியும் திறம்; அமைதி, பொறுமை, நல்லியல்பு, அடக்கமுடைமை, இலத்தீன் அல்லது பிரெஞ்சுமொழி அறிவு உடையவராயிருத்தல் வேண்டும். (1918–ஆம் ஆண்டுவரை நாடுகள் ஒன்றுக்கொன்று இலத்தீன் அல்லது பிரஞ்சுமொழியில் தமக்குள் பேச்சு வார்த்தை நடத்திக்கொண்டன. 1918–ஆம் ஆண்டிற்குப்பின் ஆங்கில மொழியே நாடுகளுக்கிடையே நடைபெறும் பேச்சு வார்த்தைகளில் கையாளப்படுகிறது). சர் எரால்டு நிக்கல்சன் என்ற ஆசிரியர் பின்வரும் தகுதிகள் ஓர் அரசியல் தந்திரிக்கு இருத்தல் வேண்டுமென்று குறிப்பிடுகிறார். அவை அறிவுடைமை, கூர்ந்தாராய்தல், கட்டுப்பாடு, விருந்தோம்புதல், பிறரைத் தன்வயம் ஈர்க்கும் ஆற்றல், சுறு சுறுப்பு, உரன் (Courage), திறன் (Tact) ஆகியவையாம். இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர்ப் பல புதிய தேசிய அரசுகள் ஆசியா ஆப்பிரிக்காக் கண்டங்களில் தோன்றியுள்ளமையால், ஒவ்வொன்றும் மற்றவற்றுடன் தொடர்புகொள்ளும்போது மேற்கத்திய அரசியல் தந்திரக் கலையைப் பின்பற்றுகிறது. பேச்சு வார்த்தை நடத்தும் உரிமைபெற்ற அதிகாரிகள் தூதுவர்கள் (Ambassadors), அரசாங்கச் சார்பாளர்கள் (Legates) எனப் பாகுபாடு செய்யப்பட்டுள்ளனர். பொதுவாகப் பேச்சுவார்த்தை நடத்தும் முழு அதிகாரம் தூதுவருக்கு உண்டு.பா.சூ.