வெட்டிழை நூற்பு வகை நூல்களில், நூல் வலிவேற்ற இழைகளுக்கிடையே பிணைப்பைத் தோற்றுவிக்கும் நோக்கத்துடன், முறுக்கேற்றம் மேற்கொள்ளப் படுகிறது. முறுக்கேற்றமிராவிடில், நூலிலுள்ள இழைகள் ஒன்றிலிருந்து ஒன்று பிறழ்ந்து விடக் கூடும். முறுக்கேற்றமடையாத நூல் நெசவுத் தொழிலுக்குத் தகுதியற்றதாகும். நீளிழை வகை நூல்களில், ஒவ்வொரு நீளிழையும் அது இடம் பெறும் நூலின் நீளத்தைக் கொண்டிருக்கும். எனவே, நூலிழை வகை நூல்களில் முறுக்கு, ஒரு துணை நிலை விளைவையே நூலில் தோற்றுவிக்கிறது. முறுக்கு, துணியின் உறுதியையும், பயனுறு கால அளவையும் வரையறுக்கிறது. முரட்டு நூல்களை விடச் சன்னமான நூல்களுக்கு, முறுக்கேற்றம் கூடுதலாகத் தேவைப் படுகிறது. நெய்யப் படும் துணிகளில், நீள வாக்கில் இடம் பெறும் பிரிவு நூல்கள், நிரப்பு நூல்களை விட மிகுதியாக முறுக்கேற்றப் படுகின்றன. முறுக்கேற்றத்தை நிலை நிறுத்துவதற்கும், இழை பிரிதலைத் தடுப்பதற்கும், இழையின் தன்மையைப் பொறுத்து, வெப்பத்தினாலோ, ஈரத்தினாலோ, இறுக்கத்தைத் தோற்றுவிக்கலாம். மென்பரப்பைக் கொண்ட துணிகளுக்கு, தளர்ந்த முறுக்கேற்றமும், வழவழப்பான துணிகளுக்கு, நூலில் நிறைய முறுக்குகளும், கூழாங்கல் தோற்றமுள்ள துணிகளின் நூல்களுக்கு, மிக உயர் நிலை முறுக்கும் அளிக்கப் படும். நூலைச் செங்குத்தாகப் பிடித்தால், முறுக்கின் திசையைக் கண்டறியலாம். S என்னும் எழுத்தின் நடுப்பகுதியில் சுழற் சுருள் அமைந்திருந்தால், அந்நூல் S முறுக்கைக் கொண்டுள்ளது எனக் குறிப்பிடுவர்; மாறாக, Z என்னும் எழுத்தின் சாய்வை ஒத்திருந்தால், Z முறுக்கு என்பர். பெரு முறுக்கேற்றம் கொண்ட நூல்களைக் கொண்டு, சிஃபான், ஜார்ஜெட், காண்டன், ஃப்ரெஞ்சு க்ரீப் (crepe) ஆகிய துணி அமைப்புகள் உருவாக்கப் படுகின்றன. நன்கு முறுக்கப் பட்ட நூல்கள் மாற்றி மாற்றிப் பாவுத் திசையிலோ, நிரப்புத் திசையிலோ அமைக்கப் படுகின்றன. துணியைச் சலவை செய்யும் போதோ, சாயமேற்றும் போதோ, இந்நூல்கள் பல்வேறு திசைகளிலும் இடை முறுக்கு (Kink), சுருங்கிய வடிவத் (crinkled) தோற்றத்தைத் தருகின்றன. மரபு வழி வளைய நூற்பு நூல்களில், முறுக்கேற்றத்தை அறிய இரு வழி முறைகள் வழக்கிலுள்ளன. ASTMD–1422, ASTMD–1423 ஆகிய இரு குறிப்புகளிலும் முறையே, முறுக்கைப் பிரித்து மறு முறுக்கேற்றம் செய்தல் (untwist and retwist), நேரடி எண்ணுதல் முறை (direct counting method) ஆகியன விவரிக்கப் பட்டுள்ளன. முதல் முறையில், முறுக்கப் பட்ட நூல், முறுக்கேற்றம் செய்யப் படுகிறது; இவ்வாறு நீளக் கூடிய நூல் மீண்டும் எதிர்த் திசையில் முறுக்கப் படுகிறது. தொடக்க நீளத்தை எட்டுவதற்குத் தேவைப் படும் சுற்றுக்களை இரண்டால் வகுத்து முறுக்கேற்ற மட்டத்தை அறியலாம். இரண்டாம் ஆய்வு முறையில் நூலின் ஒவ்வொரு செ.மீட்டரிலும் அடங்கியுள்ள திருகு சுருள்கள் (convolutions) எண்ணப் படுகின்றன. <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> திறந்த முனை நூற்பில் தயாராகும் நூல்களில், ஒளிக் கருவிகளைக் கொண்டு எண்ணும் முறை பயன் மிக்க தாகக் கருதப் படுகிறது. .நூலின் புறப் பரப்பு இயல்புகளை அறிவதற்கு மட்டுமன்றி, நூலின் வலிவைக் கண்டறிவதற்கும், முறுக்கேற்றத்தின் சார்பலனாகப் படம் 1இல் காட்டப் பட்டுள்ளது. முறுக்கு உயரும் போது, இழைகளை ஒன்றிணைக்கும் உராய்வு விசைகளும் கூடுகின்றன. ஆனால், ஒரு கட்டத்திற்கு மேல் உராய்வு விசை உயரும் போது, தனி இழைகளில் திருகு கோண (helixangle) உயர்வினால், நூல் அச்சிலிருந்து இழைகள் தாறுமாறாக நீட்டிக் கொண்டிருக்கும் நிலை தோன்றும். இழைகள் யாவுமே ஒருங்கிணைந்த திசையில் அமைந்திருந்தால்தான், நூல் உயர் தகைவுகளும் ஈடு கொடுக்க முடியும். எனவே, இடைப்பட்ட ஏற்ற முறுக்கு நிலை விரும்பப் படுகிறது. ஒரு செ.மீட்டருக்கு எவ்வளவு சுற்றுகள் இருப்பினும், இந்த அளவு திரிப்பு ஒரு தடிமான நூலில், மெல்லிய நூலிலுள்ளதை விடக் கூடுதலான திருகல் கோணத்தைத் தோற்றுவிக்கிறது. முறுக்கேற்ற நிலையை முறுக்குப் பெருக்கி (twist multiplier) என்னும் அளவையிலோ, முறுக்குக் காரணி (twist factor) என்னும் அளவையிலோ குறிப்பிடலாம். முறுக்குப் பெருக்கி = முறுக்குக் காரணி = மேற்காணும் வரை படத்தில் இவ்வலகுகளில் ஒன்றினைக் கிடைமட்ட அச்சாகக் கொண்டால், பெரும நூல் வலிவுக்கு ஏற்ற முறுக்கு நிலைகளை எவ்வகை நூலுக்கும் கண்டறியலாம். —மே.ரா. பாலசுப்பிரமணியன் துணை நூல். B.P. Corbman, Textiles: Fiber to Fabric, Sixth Edition, MCGraw–Hill Kogakusha, Ltd, Singapore, 1985.