சுரங்கச் சந்தி
curaṅkac canti
சுரங்க இரு முனையத்தில் P—N சந்தி பயன்படுத்தப் படுகிறது.
சுரங்க இரு முனையத்தில் P—N சந்தி பயன்படுத்தப் படுகிறது. தனிக் குணம் காரணமாக இது சுரங்கச் சந்தி (tunnel junction) என்றும் கூறப்படும். P—வகைக் குறை கடத்தியில் மின் துளைகள் (holes) மிகுதியாகவும் N-வகைக் குறை கடத்தியில் எலெக்ட்ரான்கள் (electrons) மிகுதியாகவும் காணப்படும். N—வகைக் குறை கடத்தியும், P—வகைக் குறை கடத்தியும் சேரும் போது, ஒரு சந்தி உருவாகிறது, இச்சந்தியில் P—வகையில் உள்ள மின் துளைகள் N வகையிலுள்ள எலெக்ட்ரான்களுடன் சேர்ந்து சமனடைந்து விடும். இக்காரணத்தால், P—பகுதியில் சமன் செய்யப் படாத எலெக்ட்ரான்களும், N—பகுதியில் சமன் செய்யப் படாத நேர் மின்னோட்டமும் தோன்றி, ஒரு மின்னழுத்தத் தடை நிலையை (potential barrier) உண்டாக்கும்., சந்தியில் ஏற்படும் இப்பகுதியில் சலனமுள்ள மின்னோட்டத் துகள்கள் இல்லை. இதைக் குறைக்கப்பட்ட பகுதி (depletion region) அல்லது வெளியூட்டப் பகுதி (space charge region) அல்லது மாறும் பகுதி (transition region) எனவும் கூறலாம். இப்பகுதியின் அகலம் 10 செ.மீ. அல்லது ஒரு மைக்ரான் ஆகும். இச்சந்தியில் ஏற்படும் மின்னழுத்தத் தடை நிலை சுமார் ஒரு வோல்ட்டின் பல பகுதியாக இருக்கும். பெரும்பாலான மின்னூட்டத் துகள்கள் சிறு பான்மை மின்னூட்டங்கள் உள்ள பகுதிக்குச் செல்வதை மின்னழுத்தத் தடை நிலை தடுக்கிறது. இருமுனையத்தில் கலவை அணுக்களின் அளவு 10⁸இல் ஒரு பகுதியாகும். கலவை அணுக்களின் எண்ணிக்கை 10³இல் ஒரு பகுதியாக உயரும் போது, சந்தியின் குணம் முற்றிலும் மாறுபடுகிறது. இவ்வாறு, கலவை அணுக்களின் எண்ணிக்கையை உயர்த்தும் போது, சுரங்கச் சந்தி ஏற்படுகிறது. 1958இல் எசாக்கி என்பவர் இதைக் கண்டறிந்து இதன் செயல்பாட்டிற்குத் தகுந்த விளக்கமும் கொடுத்தார்.
இச்சந்தியில் எலெக்ட்ரான் மின்னழுத்தத் தடையைக் (potential barrier) கடக்க வேண்டுமானால், அதனுடைய ஆற்றல், தடையின் ஆற்றலுக்குச் சமமாகவாவது இருக்க வேண்டும். ஆனால், ஓர் எலெக்ட்ரான் இம்மின்னழுத்தத் தடையைக் கடந்து செல்லும் வாய்ப்பும் உண்டு எனச் சுரோடிஞ்சர் சமன்பாடு விளக்குகிறது. இதனை துளைத்துச் செல்லுதல் (tunneling) என்பர். ஆகவே, இச்சந்தியைச் சுரங்கச் சந்தி எனலாம். சுரங்கச் சந்தியைப் பயன்படுத்தும் இரு முனையம், சுரங்க இரு முனையம் எனப்படும். துளைத்துச் செல்லுதல் சுரங்க நிகழ்வு (tunneling phenomenon) எனப்படும். —க. அர. பழனிச்சாமி நூலோதி. Albert Paul Malvino, Electronic principles, Second Edition, Tata McGraw-Hill Publishing Co. Ltd., New Delhi, 1979.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 511)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/36rcq578/
தமிழ்“சுரங்கச் சந்தி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/36rcq578/APA
Oliyon Research. (2026). சுரங்கச் சந்தி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/36rcq578/MLA
"சுரங்கச் சந்தி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/36rcq578/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment