அருளையர்
aruḷaiyar
தாயுமான அடிகளின் மாணவர் ஆவார்.
தாயுமான அடிகளின் மாணவர் ஆவார். அருளைய பிள்ளை என்பது இளமைப் பெயர். தாயுமான அடிகள் திருச்சியிலிருந்து ஆட்சிபுரிந்த (கி.பி. 1608–1625) முத்துவீரப்ப நாயக்கரின் காலத்தைச் சேர்ந்தவராதலின், அருளையர் கி.பி. 17–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவராவார். இவர் தாயுமான அடிகளின் சிறியதாயாருக்கு மைந்தராவார். அடிகள் திருச்சிராப்பள்ளியில் அரசு அலுவலில் இருந்தபோதும், பின்னர் அதனை நீத்து இராமநாதபுரம் சென்ற போதும், இறுதியில் இல்லறத்தைத் துறந்து துறவு மேற்கொண்டு திருச்சி, இராமநாதபுரம் ஆகிய இடங்களில் இருந்தபோதும் அருளையர் அடிகளோடே இருந்து வந்துள்ளார். இவரே, தாயுமான அடிகள் அவ்வப்போது பாடியருளிய பாடல்களை எழுதிப் பாதுகாத்துப் பின் வந்தோருக்குப் பயன்படுமாறு செய்தவர். அரண்மனை அலுவலைத் துறந்து அடிகள் சென்றபோது, மறந்து வைத்துவிட்டு வந்த பூசைப் பெட்டியினைத் திருச்சியிலிருந்த அரண்மனைக்குச் சென்று அருளையர் பெற்றுவந்தார் என்பது கூறப்படுகிறது.
தாயுமான அடிகளே தம் இளவலும் மாணாக்கருமாக விளங்கிய அருளையர்க்கு ஞானாசிரியராக அமைந்து தீட்சை முதலியன செய்வித்தருளினார். தம் ஞான குருவும் ஆசிரியருமாகத் திகழ்ந்த தாயுமான அடிகள் பேரானந்த சமாதி நிலையுற்று, இறைவன் திருவடி நிழலில் கலந்தபோது, அருளையர் மிகவும் கவன்று, காதலாகிக் கசிந்துருகித் தம் குருவின் மீது, ‘அருள்வாக்கிய அகவல்’ என்னும் பெயரில் நெடிய துதிப்பாடல் இயற்றிப் போற்றினார், ‘குருவே சிவம்‘ என்று கூறும் கோட்பாட்டின் உண்மையை விளக்கி நிற்கிறது இந்தப் பாடல். இது, 232 அடிகளால் அமைந்த நிலைமண்டில ஆசிரியப்பாவாகும். தம் ஞானாசிரியர் திருமறைக் காட்டில் பிறந்தார் என்பதனைத் ‘திருமகள் மருவிய திகழ்வள மறைசையில், வருமுணர்வாளன்’ எனக் குறிப்பிட்டுள்ளார். குருவாக விளங்கிய அவரே தமக்குக் கருப் புகா வழியினைக் காட்டி அருள் செய்தவர் என்னும் உண்மையை, ‘விருப்பு வெறுப்பினை வேரறப் பறித்துக், கருப்புகா தென்னைக் காத்தருள் செய்தோன்’ என்றும், தம் உள்ளக் கருத்துணர்ந்து தண்ணருள் செய்த தயாநிதி என்பதனை ‘எண்ணிய எண்ண தாயுமானவன்’ என்றும் காட்டியுள்ளார். குருவாய் வந்து அருள்புரிந்ததனை ‘ஒரு மொழி பகர்ந்த உதவி’ என்று நன்றியொடு நினைந்து குருபதம் போற்றியுள்ளார்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 830)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/36fzdrg9/
தமிழ்“அருளையர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/36fzdrg9/APA
Oliyon Research. (2026). அருளையர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/36fzdrg9/MLA
"அருளையர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/36fzdrg9/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment