உரிச்சொல்
uriccol
தமிழ் இலக்கண மரபில ‘உரிச்சொல்’ என வழங்குகிற சில சொற்களின் பெயர், இலக்கணம், தோற்றம், வடிவம், பயன்வகை, சொல் வகை ஆகியன பற்றிய செய்திகள் இன்றுகாறும் தீர்வான தெளிவும் விளக்கமும் பெறவில்லை.
தமிழ் இலக்கண மரபில ‘உரிச்சொல்’ என வழங்குகிற சில சொற்களின் பெயர், இலக்கணம், தோற்றம், வடிவம், பயன்வகை, சொல் வகை ஆகியன பற்றிய செய்திகள் இன்றுகாறும் தீர்வான தெளிவும் விளக்கமும் பெறவில்லை. அவை உரிமை பெற்றிருத்தல் காரணமாக உரிச்சொல் எனப் பெயர் பெற்றன என்று விளக்கப்படுகின்றன. ‘உரிமை’ என்பது பொருட்கு உரிமை, இசை, குறிப்பு, பண்பு ஆகியவற்றிற்கு உரிமை, செய்யுட்கு உரிமை, பெயர் வினைக்கு உரிமை, பண்பிற்கு உரிமை எனப் பலவகையாகவும் கூறப்படுகின்றது.
இலக்கணம்
தொல்காப்பியர் உரிச்சொற்கள் ‘பெயர் வினைகளின் மருங்கிற் தோன்றும்’ (தொ. சொ. 157) என்னும், ‘உயிரும் புள்ளியும் இறுதியாகிக் குறிப்பினும் பண்பினும் இசையினும் தோன்றி நெறிப்படவாராக் குறைச்சொற்கிளவி’ (தொ.எ. 482) என்றும், பெயரினும் வினையினும் மெய்தடுமாறுவன என்னும், ‘ஒருசொல் பல பொருட்கு உரிமை தோன்றியும் பலசொல் ஒருபொருட்கு உரிமை தோன்றியும்’ வருவன (தொ.சொ.297) என்றும் கூறுகின்றார். மேலும், அவர் ‘எழுத்துப் பிரிந்திசைத்தல் இவணியல்பு இன்றே’ (தொ.சொ. 395) என்றதனால், உரிச்சொற்கள் உறுப்புகளாகப் பிரிந்து நின்று வேறு வேறு பொருள் உணர்த்துதல் இல்லை என்பதையும் அவை தனி நிலையிலேயே அமையும் என்பதையும் பெற வைக்கின்றார். எச்சவியலில் ‘இடைச்சொல் எல்லாம் வேற்றுமைச் சொல்லே’ (தொ.சொ. 455) என்று இடைச்சொல்லின் செயலை விளக்கிய தொல்காப்பியர், தொடர்ந்து ‘உரிச்சொல் மருங்கினும் உரியவை உரிய’ (தொ.சொ. 456) என்கின்றமையால் உரிச்சொற்களில் சில வேற்றுமைச் சொல்லாகச் செயலாற்றுதற்குரியன என்பதை உணரவைக்கிறார். பவணந்திமுனிவர் உரிச்சொற்கள் பலவகைப் பண்பையும் பகர்வன, ஒருகுணம் பலகுணம் தழுவி வருவன, பெயர்வினைகளை ஒருவாதன (நீங்காதன), செய்யுட்கு உரியன (நன்.442) என்றெல்லாம் குறிக்கிறார்.
தொல்காப்பியர் சொல்வகைகள் ‘பெயரே வினையென்று ஆயிரண் டென்ப’ (தொ.சொ. 159) என்று நிறுத்திக் கூறி இடை உரிக்கு இரண்டாம் நிலையினை (தொ.சொ. 158) அளித்திருப்பதும், சொல்நிலையில் உரிச்சொற்கள் உயர்திணை, அஃறிணை ஆயிரு திணையின்கண் இசைக்காமையினைக் (தொ.சொ. 1) குறிப்பாக உணர்த்தியிருப்பதும், மொழி புணரியல்புகளை விளக்குங்கால் அவை தொடரில் சிறப்பிடம் பெறாமையிலை (தொ.எ. 108, 132) உய்த்துணர வைப்பதும், அவை புணர்ச்சியில் வேறுபடுகின்றமையினைப் புணரியல்பு நிலையிடை உணரத் தோன்றாதன எனக் குறிப்பிடுவதன் வாயிலாக உரிச்சொற்களைக் குறைச் சொற்கிளவி என்று பெயர் சூட்டி அழைப்பதும் உரிச்சொற்களின் இயல்புகளை அறியத் துணை செய்கின்றன. பிற்காலத்தில் இளம்பூரணரும் (தொ.எ. 114) நன்னூலாகும் (நன். 152) அவை தொடரில் இடம் பெறுதலையும் நிலைமொழிகளாக அமைதலையும் (நன். 239) சுட்டியுள்ளனர்.
தோற்றம்
தொல்காப்பியர்,
:‘உயிரும் புள்ளியும் இறுதி யாகிக்
:குறிப்பிலும் பண்பினும் இசையினும் தோன்றி’ :::(தொ.எ.483)
என்றும், ‘உரிச்சொற்கிளவி கிளங்குங்காலை, இசையினும் குறிப்பினும் பண்பினும்தோன்றி’ (தொ.சொ.291) என்றும் கூறி, உரிச்சொற்கள் இசை, குறிப்பு, பண்பு அடிப்படையாகப் பிறப்பன என விளக்குகிறார். இத்தகைய குறிப்பே பிற்காலத்தில் தொன்னூல் விளக்க உரையில் உரிச்சொற்களைக் குறிப்பு உரிச்சொற்கள், பண்புரிச்சொற்கள், இசை உரிச்சொற்கள் எனப் பாகுபடுத்திக் காண்பதற்கு அடிப்படையாக அமைந்தது எனலாம். நன்னூலார் உரிச்சொற்களைப் பல்வகைப் பண்பும் பகர்பெயராகி (நன்.422) என்று சுட்டி, அவற்றைப் பொருள்களின் பண்புகளைத் தெரிவிக்கிற பண்புப்பெயர் எனக் கொள்ளுகிறார். நன்னூல் உரிச்சொற்களைப் பண்பு அல்லது குணத்தினைக் கூறும் சொற்கள் எனக் கொண்டு அவற்றிற்கு விளக்கம் கூறுகிறது. இவ்வடிப்படையில் தான் வீரமாமுனிவர் உரிச்சொல்லைக் குணச்சொல் (தொ.வி.138) என்கிறார்.
இசைபற்றித் தோன்றுவதற்குத் துவைத்தலும் சிலைத்தலும், குறிப்புப் பற்றி வருவதற்குக் கறுப்பும் சிவப்பும், பண்பு பற்றியதற்கு நிறத்துருவம் ஆகியனவும் (தொ.சொ.292) இளம்பூரணர் தரும் எடுத்துக்காட்டுகள். தெய்வச்சிலையார் உறு என்பது இசையாலும் கறுக்கான் என்பது குறிப்பாலும் கண்சிவக்கும் என்பது பண்பாலும் புலப்பட்டது (தொ.சொ.293) எனக் கூறி, இளம்பூரணரிலிருந்து சிறிது வேறுபடுகிறார். உரையாசிரியர்கள் இவ்வாறு வேறுபட்டாலும் ஒரு மொழியின் எல்லாச் சொற்களும் இசை, குறிப்பு, பண்பு ஆகியவற்றின் அடிப்படையிலேயே தோன்றுகின்றன என்பது தெளிவு. எனவே, தொல்காப்பியம் உரியியலில் சில அருஞ்சொற்களின் பொருளைக் கூறுதல் போன்றே சொற்களின் தோற்றத்தையும் கூற முயற்சி செய்கிறது என்பதில் தவறில்லை.
வடிவம்
தொல்காப்பியர் உரிச்சொல் ‘பெயரினும் வினையினும் மெய்தடுமாறி’ (தொ. சொ. 299) வரும் என்கிறார். உரிச்சொற்களை உரையாசிரியர் விளக்கங்களோடும் சங்க இலக்கிய வழக்குகளோடும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அவை பெயரைப் போன்றும் வினையைப் போன்றும் பெயரின்கண்ணும் வினையின்கண்ணும் வடிவம் மயங்கி வருதலையே அவர் கருதினார் என்பது பொருந்தும்.
உரிச்சோற்கள் ஒரு நெறிப்பட்டுவாராதன; குறைநிலையுடையன (தொ. எ. 483). அவை எண், வேற்றுமை, காலம் போன்ற எந்தச் சொல் வேறுபாட்டு உருபனையும் (Inflectional Morpheme) ஏற்காதவை. அவற்றின் உறுப்புகளாகிய எழுத்துகள் பிரிந்து நின்று தனிப்பொருள் தருதல் இல்லை (தொ. சொ. 305). இங்கு நனி, தவ, வய போன்றனவும் தனி உறுப்புகளாகக் கொள்ளப்படுதல் வேண்டும் என்பது தொல்காப்பியர் கொள்கை.
பயன்வகை
இலக்கண நூல்கள் பெயர், வினை ஆகியவற்றிற்குப் பயன்வகையைச் சுட்டுகின்றமை போன்று உரிச்சொற்கள் எல்லாவற்றிற்கும் பொதுமையான ஒரு பயன்வகையைச் குறிப்பிடவில்லை. தொல்காப்பியர் உரிச்சொற்களிலும் சில வேறுபடுக்கும் சொற்களாகச் செயலாற்றும் என்கிறார். எ–டு உறு, தவ, நனி, கடி முதலியன. தொல்காப்பியர் தரும் 120 உரிச்சொற்களின் வழக்குகளைச் சங்க இலக்கிய அடிப்படையில் ஆய்ந்தால், அவை பெயர்ச்சொற்களாகவும் வினைச்சொற்களாகவும் அவற்றுள் ஏறத்தாழ நாற்பது தொழிற்பெயர்களாகவும் உள்ளன. எனவே தொல்காப்பியர் கூறும் உரிச்சொற்கள் யாவும் தொடரன் நிலையில் (Syntactical Level) ஒரே வகையான பயன்வகையை உடையன அல்ல.
உரிச்சொற்கொள்கைகள்
உரிச்சொற்கள் பற்றி உரையாசிரியர்களும் ஆய்வு அறிஞர்களும் பல கொள்கைகளை வெளியிட்டுள்ளனர். அக்கொள்கைகள் ஒவ்வொன்றும் உரிச்சொற்களில் ஏதேனும் ஓர் இயல்பை விளக்கவோ அவற்றுள் ஒருசிலவற்றின் இயல்பைத் தெளிவுபடுத்தவோ செய்கின்றனவே தவிர, எல்லா உரிச்சொற்களின் இயல்பையும் முழு அளவில் அறிந்துகொள்ளத் துணை செய்வதில்லை. எந்த ஒரு கொள்கையும் உரிச்சொற்களின் இயல்பை ஓரளவு தெரிந்துகொள்ளத் துணை நிற்கின்றமையால் முழு அளவில் தள்ளுவதற்கு உரியதும் அன்று. உரிச்சொற்கள் பற்றிய கொள்கைகளாவன, 1. தனிச்சொல் வகையின, 2. தனிச்சொல் வகைக்குரியன அல்ல. 3. தாதுக்கள், 4. வேர்ச்சொற்கள், 5. பெயரடை–வினையடையாய் வருவன, 6. செய்யுள் வழக்கின, 7. அருகிய வழக்கின, 8. வெளிப்பட வாராதன, 9. சொற்களஞ்சியச் சார்பின.
தனிச்சொல்வகைக் கொள்கை
இலக்கண நூலார் உரிச்சொல்லைச் ‘சொல்’ என்ற பெயரால் குறித்திருப்பதும், உரிச்சொற்களுக்குப் பெயர் வினைகளுக்கு அளித்திருத்தல் போன்றே தனி இயல் அளித்திருப்பதும், பெயர்வினைகளைச் சொல்வகைகள் எனக் கூறும் இடத்தில் உரிச்சொல்லினையும் சேர்த்துக் கூறியிருத்தலும் உரியும் சொல்வகைகளில் ஒன்றாக மரபில் கொள்ளப்பட்டமைக்குக் காரணங்களாக அமைகின்றன. இலக்கணநூல்களில் உரியியல்களில் தரப்பட்டுள்ள சொற்களை ஆய்ந்தால் உருபன்நிலையிலும் தொடரன் நிலையிலும் அவையாவும் ஒரேவகையான அமைப்பையும் பயன்வகையினையும் உடையன அல்ல. எனவே உரிச்சொற்கள் அனைத்தும் தனி ஒரு சொல்வகையில் கொள்ளப்படுதல் இயலாததாகும்.
தனிச் சொல்வகையன்மைக் கொள்கை
தொல்காப்பியர் உரிச்சொல்லை, ‘அவற்று (பெயர், வினை) வழி மருங்கில் தோன்றும்’ (தொ. சொ. 159) என்கின்றமையாலும், ‘குறைச்சொற்கிளவி’ எனப்பெயர் சூட்டிக் கூறுகின்றமையாலும், அதனை எந்த இடத்திலும் தொடரின் உறுப்பாகக் கூறாமையாலும், உரிச்சொற்கள் யாவும் உருபன் நிலையிலும் தொடரன் நிலையிலும் ஒரே வகையான இயல்பையும் இயங்குமுறையையும் உடையனவாக அமையாமையாலும் அவற்றைத் தனிச்சொல்வகையினவாகக் கொள்ளல் இயலாது. பிற்கால இலக்கண நூலாரும் அவற்றைத் தனிச்சொல்வகையின என்பதற்கான சான்றுகள் தரவில்லை.
தாதுக்கொள்கை
தெய்வச்சிலையார் வடநூலாசிரியர் தாது என்று குறிப்பிட்ட சொற்களே உரிச்சொல் என்று கொள்ளப்படும் என்று கூறுகிறார். வடமொழி இலக்கண நூலார் கொள்கைப்படி, தாது என்பது வினைவேரேயாகும். ஆனால், மேலே குறிப்பிட்டபடி உரியியலில் பெயர்களும், உறு, மழ, போன்ற சில தழுவும் சொற்களும் உள்ளன.
வேர்ச்சொற் கொள்கை
சிலமொழியியல் அறிஞர்கள் உரியியல் வேர்ச்சொற்களைத் (Roots) தொகுத்துக் கூறும் பகுதி என்று கருதுகின்றனர். தொல்காப்பிய உரியியலில் பொற்பு, வெம்மை, சிறுமை, செழுமை, சீர்த்தி, செல்லல், இலம்பாடு போன்ற இருபத்துநான்கு ஆக்கப்பெயர்கள் உள. எனவே, இக்கொள்கையும் முழு அளவில் ஏற்புடையது அன்று.
பெயரடை விளையடைக் கொள்கை
தமிழ் இலக்கண மரபு பெயரடை, வினையடை ஆகியவற்றைக் கூறாமையும் பல மேனாட்டு அறிஞர்களும் உரிச்சொற்களைத் தழுவும் சொற்களாகக் கொண்டுள்ளமையும் இக்கொள்கைக்கு வழி வகுத்தன.
தொல்காப்பியர் எல்லா உரிச்சொற்களும் தழுவும் சொற்களல்ல; ஏறத்தாழ அறுபது உரிச்சொற்கள் மொழியில் பெயரெச்ச வினையெச்ச வடிவில் பெயர்வினைகளைத் தழுவி வழங்கினாலும் வேறுபல சொற்கள் முழு அளவில் பெயர்களே என்கிறார்.
செய்யுள் வழக்கு, அருகியவழக்கு, வெளிப்பட வாராக் கொள்கைகள்
சேனாவரையர், ‘பெரும்பான்மையுஞ் செய்யுட்குரியாவாய் வருதலின் உரிச்சொல்லாயிற் றென்பாருமுளர்’ என்று கூறுகிறார். நன்னூலார், ‘செய்யுட்கு உரியன உரிச்சொல்’ (நன். 442) என்று கூறுகின்றார். தொல்காப்பியம், ‘பயிலாதவற்றை’ (தொ.சொ. 297), ‘வெளிப்படவாரா’ (தொ.சொ. 298) என்று சுட்டுகிற இடங்கள் உரிச்சொற்கள் அக்கால வழக்கில் பயின்றனவல்ல; அன்றைய இலக்கியத்திற்கே உரியனவாக அமைந்தன என்பதை உய்த்து உணரவைக்கின்றன.
அன்று பொருள் வெளிப்பட அறியப்படாத சொற்களையே உரிச்சொற்களின்பாற்படுத்திக் கூறுவதாகத் தொல்காப்பியர் (தொ.சொ. 298) தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். இம்மூன்று கொள்கைகளும் உரிச்சொற்களின் அமைப்பு, பயன்வகை ஆகியவற்றைத் தெளிவு செய்யப் பயன்படுவதில்லை.
சொற்களஞ்சியச் சார்புக் கொள்கை
இலக்கண நூல்களின் உரியியல்தான் பிற்கால நிகண்டுகளுக்கு அதாவது, தமிழ்ச் சொற்களஞ்கியங்களுக்கு (Tamil Lexicon) அடிப்படையாக அமைந்தது என்பாரும் உளர். தொல்காப்பியரும் பிற இலக்கண நூலாரும் உரியியலைச் சொற்களுக்குப் பொருள் கூறும் பகுதியாகவே அமைத்துள்ளனர் என்பதும் தெளிவு.
இது வரை கூறப்பட்ட செய்திகளின் அடிப்படையில் உரிச்சொற்களின் இயல்புகளை விளக்கும் முயற்சியில் சில முடிவுகள் இவண் தரப்படுகின்றன.
1. உரிச்சொற்கள் முழுமையும் ஒருங்குசேர ஒரே சொல்வகையினுள் அடங்குவதில்லை.
2. உரிச்சொற்களுள் பல வேர்ச்சொற்களாக அமைகின்றன. எனினும், அவை எல்லாவற்றையும் தாதுக்கள் என்றோ வேர்கள் என்றோ கூறுதல் இயலாது.
3. தொல்காப்பிய உரியியலில் உறு, தவ, நனி, கய, வய போன்ற பதினாறு சொற்களும் பிற இலக்கண நூல்களில் சில சொற்களும் தழுவும் சொற்களாக உள்ளன. இவற்றைப் பெயர்வினைகளாகக் கொள்ளுதல் இயலாது.
4. தொல்காப்பியர் சொல்வகைளில் ஒன்றாக உரிச்சொல்லைக் கொள்ளவில்லை எனவும் உரையாரிசிரியர்களும் பிற்கால இலக்கண நூலாரும் அதனை ஒரு தனிச்சொல்வகையாகக் கொள்ளவே அது மொழி மரபில் அத்தகைய இடத்தைப் பெற்றுவிட்டது எனவும் கருத்துகள் உள.
5. இலக்கண நூல்களில் உரியியல் சில வழக்கிழந்த பொருள் கூறும் நோக்குடனேயே அமைக்கப்பட்டிருக்கலாம். எனவே, அதனைச் சொற்களஞ்சியஞ் சார்ந்த பகுதி என்பதில் தவறில்லை. மோ.இ.
துணை நூல்கள்
ஆதித்தன், அ.கு., உரிச்சொல் விளக்கம், சாந்தி நூலகம் சென்னை, 1967.
வெள்ளைவாரணர். க., தொல்காப்பியம்-நன்னூல் (சொல்லதிகாரம்), அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர்.
Vaiyapuri Pillai, S., History of Tamil Language and Literature, New Century Book House, Madras, 1956.
மீனாட்சி சுந்தரன். தெ.பொ., உரிச்சொல், இலக்கண ஆய்வுக் கட்டுரைகள், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர், 1974.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 1002)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/32nq3vfa/
தமிழ்“உரிச்சொல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/32nq3vfa/APA
Oliyon Research. (2026). உரிச்சொல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/32nq3vfa/MLA
"உரிச்சொல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/32nq3vfa/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment