ஒரு மராத்திய அரசி; வீராங்கனை. ஆங்கிலேயருடன் மகாதாசி சிந்தியா என்ற மராத்தியத் தலைவர் செய்துகொண்ட சால்பை உடன்படிக்கை (கி.பி. 1782), மராத்தியரின் கூட்டமைப்பைப் பெரிதும் வலுவிழக்கச் செய்தது அவர்களுக்குள் தன்னல உணர்வு மிகுந்தது. அதனால், அங்கு நிலவிய ஒற்றுமை மறைந்து, பகைமை வளரலாயிற்று. அக்காலத்தில் மகாதாசி சிந்தியாவும் அகல்யாபாய் ஓல்காரும் (Ahalyabai Holkar) மராத்தியர்களின் வருங்காலத்தை முடிவு செய்யும் தலைவர்களாக விளங்கினர். ஒல்கார் வழித்தோன்றல்கள் மகேசுவர் என்ற இடத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தார்கள். பின்னர் இந்தூர் தலைநகராயிற்று. மலகரி ராவ் ஓல்கார் மறைவுக்குப்பின் ஓல்கார் மரபில் கருத்து வேற்றுமைகளும் குழப்பங்களும் மிகுத்து ஒருவரையொருவர் பகைத்துக் கொண்டனர். மக்களின் வரிப்பணம் பாழ்படுத்தப்பட்டது. இதனை உணர்ந்த அகல்யாபாய், நல்லாட்சி ஏற்படுத்த முனைந்தார். ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். இவரை வரலாற்றுச் சிறப்பு மிக்க சாதனையாளர் எனச் சர் சான் மார்சல் (Sir John Marshall) போற்றுகிறார். இவர் நாட்டு மக்கள் அமைதியாக வாழச் சமய இலக்கியங்களைக் கற்பிக்கச் செய்தார்; போருக்கான செலவினத்தைக் குறைத்தார்; இரக்க குணம் மிக்கவராகத் திகழ்ந்தார்; சமய நிலையங்களுக்கு மிகுதியாக நன்கொடைகள் வழங்கினார்; அரசியாக விளங்கியபோதிலும் செருக்கற்றவராக இருந்தார். இவர் காலத்தில் பொருளாதாரத்தில் நாடு சிறந்திருந்தது; உற்பத்தியினைப் பெருக்கினார். மக்களின் சுதந்தர உணர்வை மதித்தார். இந்தூரை உருவாக்கியவரும் இவரே. இவர் அழகான மாளிகைகள் பலவற்றை அங்கு அமைத்தார். இவரது ஆட்சியில் பெரும்பாலான மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்ந்தனர். தாமும் தூவ்மையாக வாழ்ந்து, அரசினையும் தூய்மையாக்கிச் சிறந்து புகழ் பெற்றவர் அகல்யாபாய் ஓல்கார். எனினும் இவரால் ஆங்கிலேயரின் படை பலத்தை அறிந்துகொள்ள முடியவில்லை. அகல்யாபாயும், மலகரிராவ் ஓல்காரிடம் படைத்தலைவராக விளங்கிய துக்கோசி ஓல்காரும் சேர்ந்து நாட்டை ஆண்டு வரலாயினர். அரசின் வருவாயையும் செலவினங்களையும் அகல்யாபாய் கவனித்தார். போர்க்காலங்களில் இவரே தலைமையேற்றுப் போருக்குச் சென்றார். ஆங்கிலேயரை எதிர்த்த போரில் அவர்களின் உயர்ந்த போர் முறைகளால் மகேசுவர் என்ற இடத்தில் இவரது படை பின்வாங்க நேரிட்டது. அறச்செயல்கள் பல புரிந்துள்ள போதிலும், வீரச் செயல் புரியும் படைபலத்தைப் பெருக்கத் தவறிவிட்டார். அகல்யாபாயும் துக்கோசியும் ஒன்றுபட்டுச் செயற்படவில்லை. இவர்களின் ஒற்றுமைக்காக மகாதாசி பெரிதும் முயன்றார். இவர் தாம் கொண்ட கொள்கையில் தீவிரப் பற்று உடையவராக விளங்கினார். மக்கள் அனைவரையும் தம்முடைய கட்டுப்பாட்டினுள் வைத்திருக்க விரும்பினார். இறுதிக் காலத்தில் நிதி நிலை அனைத்தும் இவரது கைவசம் இருந்ததால், துக்கோசியால் படையினை நன்கு நிருவகிக்க முடியவில்லை. அகல்யாபாய் கி.பி. 1795-இல் காலமானார். அதன் பின்னர் நாட்டில் குழப்பங்கள் மிகுந்தன. தீ.வி.