உதியன் என்பது சேரமன்னனைக் குறிக்கும் பெயர்களுள் ஒன்று. ‘பூழியன் உதியன் கொங்கன் பொறையன் ............ கோச்சேரன் பெயரே’ என்று சேந்தன் திவாகரம் குறிப்பிடுகிறது. உதியர் என்பது பொதுவாகச் சேர வேந்தர்களையும் உதியர் மண்டலம் என்பது சேர நாட்டையும் குறிக்கின்றன. ‘சதய நாள் விழா உதியர் மண்டலம் தன்னில் வைத்தவன்’ என்னும் கலிங்கத்துப் பரணித் தாழிசைப் பகுதியிலமைந்துள்ள உதியர் சேரர்களையும் உதியர் மண்டலம் சேர நாட்டினையும் குறிக்கின்றன. பொதுவாக அமையும் உதியன் என்னும் பெயர் சேரல் என்னும் அக்குலப் பொதுப் பெயரோடு சேர்ந்து ‘உதியஞ்சேரல்’ என நின்று, குறிப்பிட்டவொரு சேரமன்னனைச் சுட்டும் அமைவதும் உண்டு. காண்க: உதியஞ்சேரல்.