உணர்வறி திறப் பயிற்சி
uṇarvaṟi tiṟap payiṟci
இது உணர்வுகளைத் திறப்படுத்திக் கொள்ளப் பயன்படும் ஒரு கற்றல் முறை.
இது உணர்வுகளைத் திறப்படுத்திக் கொள்ளப் பயன்படும் ஒரு கற்றல் முறை. இப்பயிற்சியின் மூலம் ஒருவர் தம் விழிப்புணர்ச்சியை வளர்த்துக் கொள்ளவும், பிறரோடு பழகும் வேளையில் தமது உணர்வுப் பாங்கினை மென்மையுறச் செய்து கொள்ளவும், தாம் உறையும் சுற்றுப்புறச் சூழலுக்கேற்றபடி தம் உணர்வுகளை வளர்ச்சியுறச் செய்துகொள்ளவும் இயலும்.
பொதுவாக, உணர்வறிதிறப் பயிற்சியை (Sensitivity Training) ஒரு சிலர் கொண்ட குழுவில் நடத்திக்காட்டலாம். இப்பயிற்சிக்கு வேண்டிய குழுவில் 8–இலிருந்து 20 பேர் வரை இருக்கலாம். இவ்வாறு அமையும் குழுவில் ஒரு தலைவரும் (Leader) இருப்பார். குழுவில் இடம் பெற்றவர்கள் ஒவ்வொருவராக எழுந்து, அக்குழுவில் உள்ள மற்றவர்களைப் பற்றி மனம் திறந்து பேசலாம்; ஒருவர் மற்றவர்களைப் பற்றித் தாம் என்னென்ன உணர்வுகளையும் கருத்துகளையும் கொண்டிருக்கிறாரோ அவற்றை அக்கூட்டத்தில் ஒளிவு மறைவின்றிப் பேசுவர். தலைவரின் பணி, குழுப்பயிற்சியை நடத்திக் காட்டுவதாகும். இவ்வாறு ஒவ்வொருவரும் இப்பயிற்சியில் பேசுவதன் வாயிலாகக் குழுவில் இடம் பெற்றுள்ள ஒவ்வொருவரும் தம்மைப்பற்றிய நிறைகளையும் குறைகளையும் அறிய முடிகிறது.
சில சமயங்களில் பயிற்சிக் குழுவின் தலைவர், உறுப்பினர்களை அவர்களுடைய உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் விளையாட்டுகளில் (Games) ஈடுபடச் சொல்லுவார். இரு உறுப்பினர்கள் எழுந்து ஒருவரையொருவர் முறைத்துப் பார்த்துக் கொண்டேயிருத்தல், பாசத்தைப் பொழியுமாறு நடித்துக் காட்டுதல், கோபத்தைக் காட்டும் வகையில் சீறிக்காட்டுதல் போன்றவை உணர்ச்சி விளையாட்டுகளுள் சில வகைகளாகும்.
உணர்வறிதிறப் பயிற்சி, ஒருவருடைய அக உணர்ச்சிகளை (Inner Feelings) அறிந்து கொள்வதற்கும் பிறரோடு நயத்தகு வகையில் பழகுவதற்கும் உதவுகிறது என உளவியலறிஞர்களுள் சிலர் நம்புகின்றனர். கல்வி கற்பித்தலில் இப்பயிற்சியை ஓர் உத்தியாகப் (Technique) பயன்படுத்தச் சில கல்வியாளர்கள் பரிந்துரைக்கின்றனர். மாணவர்களது மனவெழுச்சி வளர்ச்சிக்கு (Emotional Development) இப்பயிற்சி மிகுதியாக உதவுமென அவர்கள் நம்புகின்றனர்.
சிற்சில நேரங்களில், பயிற்சிக் குழு உறுப்பினர்களுள் சிலர், அளவுக்கு மீறியும் நடந்து கொள்ளும்போது, அது உறுப்பினர்களின் மனநிலைகளைப் பண்படுத்துவதற்குப் பதிவாகப் புண்படுத்திவிடுகிறது. எனவே, உணர்வறிதிறப் பயிற்சி பயனற்றது என்று உளவியலறிஞர் சிலர் கூறுவர். குழுத்தலைவர் பயிற்சியை முறையாக நடத்தி முடிக்கும் திறன் குறைந்தவராக இருந்தால், இப்பயிற்சி சிறப்பாக இராது என்றும், பயிற்சிக் கூட்டங்களில் சில உறுப்பினர்கள் மனமொடிந்து போய் விடுகின்றனர் என்றும், அதனால் இப்பயிற்சி குறைபாடுடையதென்றும் சிலர் கூறுவர்.
கர்ட்டு இலூவின் (Kurt Lewin) என்னும் செர்மானிய உளவியலறிஞரே 1946–ஆம் ஆண்டு முதன் முதலில் உணர்வுத்திறப் பயிற்சியினை நடத்திக் காட்டியவர். உணர்வுத் திறப் பயிற்சியை 1960–ஆம் ஆண்டில் கலிபோர்னியாவிலுள்ள எசலன் நிறுவனம் (Esalem Institute) உலகமறியச் செய்தது.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 849)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/324esnf2/
தமிழ்“உணர்வறி திறப் பயிற்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/324esnf2/APA
Oliyon Research. (2026). உணர்வறி திறப் பயிற்சி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/324esnf2/MLA
"உணர்வறி திறப் பயிற்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/324esnf2/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment