மகப்பேறு காலத்தில் முதலில் சிசுவின் தலையே வெளி வர வேண்டும். தலையைத் தவிரச் சிசுவின் எந்த விதமான தோற்றமும் தவறானதாகக் கொள்ளப்படும். புட்டம், முகம், புருவம், தோள் போன்றவை முதலாக வெளிப்படலாம். புட்டம் வெளிப்படுவதில் நான்கு வகைகள் உள்ளமையைப் படத்தில் காணலாம். கருப்பையுள், கருப்பை வெளி ஆக்சிஜன் பற்றாக்குறை, கபால உட்குருதிப் பெருக்கு, எலும்பு முறிவு, எலும்பு பிசகல், தசை, நரம்பு, வயிற்று உள்ளுறுப்புச் சேதம், பிறப்புறுப்பு வீக்கம் ஆகிய நிலைகளில் புட்டத் தோற்றம் தாயை விடச் சிசுவுக்கே தீமையாகும். மகப்பேற்றுச் சுழற்சி வெற்றி பெறாவிடில், கால தாமதமற்ற சூல் பைத் திறப்பு அறுவை தேவைப்படுகிறது. <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது. ----> முகத் தோற்றம். பேறு தொடங்கியவுடன் முகம் தோற்றமடையும். 500 பிரசவங்களில் ஒன்றில் முகத் தோற்றம் ஏற்படுகிறது. இங்கு மோவாய் அல்லது தாடை முதலில் தெரியும். தலை, கூபகத்தில் நிலை பெறுவதற்கு முன்பே முகம் தோன்றுகிறது. இட மோவாய் முன்புற நிலையே மிகவும் சாதாரணமாகும். புருவத் தோற்றம். முகத் தோற்றத்தை விட, இது மிகவும் குறைவாகவே நிகழ்கிறது. 2000 பிரசவங்களில் ஒன்று நிகழ்கிறது. சிசுவின் தலை மடிந்து நீட்டிக் கொண்டு இருக்கும். வயிற்றை ஆய்வு செய்தே, நிலையை உறுதி செய்யலாம். சிலசமயம் எக்ஸ் கதிர்ப் படம் தேவைப்படும். குறுக்கு இடையும் தோள் தோற்றமும். இந்நிலை மிகவும் ஆபத்தானது. சூல்பை, வயிற்றுத் தசைகளின் வலிமையின்மையே இதற்குக் காரணமாகக் கருதப்படுகிறது. மேற்கூறிய இயல்நிலை தவறிய தோற்றங்களை எளிதில் உறுதி செய்து, சுழற்சி மூலம் சரி செய்யலாம். பெரும்பாலான பேறு கருப்பைத் திறப்பில் முடிகிறது. —அ. கதிரேசன் நூலோதி. Betty R.Sweet, A Text Book for Midwives, Tenth Edition, Bailliere Tindall, London, 1984.