20–ஆம் நூற்றாண்டில் விளங்கிய புலவர்களுள் ஒருவர். இவர் கி.பி. 1897–ஆம் ஆண்டு ஆவணித் திங்கள் பத்தொன்பதாம் நாள் பாண்டிய நாட்டுப் பகுதியாகிய சேதுநாட்டில் உள்ள பழுவூர் என்னும் ஊரில் பொன்னையா பிள்ளை, காளி முத்தம்மையார் இருவருக்கும் மகனாகப் பிறந்தார். அண்ணாமலையாரின் அருளால் பிறந்தவர் என்பதனால் அருணகிரியார் எனப் பெயரிடப் பெற்றார். அருணகிரிநாதர்சுவாமி தம் 6–ஆம் வயதில் கல்வி பயிலத் தொடங்கினார். இளமையில் வேளாண்மையிலும் மிக்க ஈடுபாடு உடையவராக இருந்தார். இவர் தம் 16–ஆம் வயதில் அன்னையார் இறந்தார். தம் 11–ஆம் வயதில் மாரியாயி என்னும் மங்கை நல்லாளை மணந்தார். நான்காண்டு இல்லற வாழ்வுக்குப் பின்னர்த் தமது இருபத்து மூன்றாம் வயதிலேயே துறவு நிலையை மேற்கொண்டார். திருவண்ணாமலையில் துறவு நிலை பெற்ற அருணகிரிநாதர்சாமி, தமிழகத்திலும் இலங்கையிலும் உள்ள பல்வேறு கோவில்களுக்குச் சென்று இறைவழிபாடு நிகழ்த்தினார். கோலாலம்பூர், பினாங்கு முதலிய இடங்களுக்கும் சென்று அங்குள்ள இறைவனை வழிபட்டதோடு சமயச் சொற்பொழிவுகளையும் நிகழ்த்தினார்; பல நூல்களை இயற்றியருளினார். இல்லறப் பற்றைத் துறந்த அருணகிரிநாதர்சாமியால் நாட்டுப் பற்றினைத் துறக்க இயலவில்லை. கி.பி. 1925 ஆம் ஆண்டு முதல் விடுதலை இயக்கத்தில் முனைப்பாக ஈடுபட்டார். துறவிகள் இல்லறத்தைத் தான் துறக்க வேண்டுமே தவிர, பொது நலப் பணியிலிருந்து விலகக் கூடாது என்ற கருத்துடைய இவர், துறவிகளைப் பொதுநலப் பணியில் ஈடுபடுத்தும் பொருட்டுத் ‘தமிழ் நாட்டுத் துறவிகள் சங்கம்’ ஒன்றையும் நிறுவினார். ‘சென்னை அகத்திய குருகுலம் சாது நாராயண தேசிகர் நிலையம்’ என்ற அமைப்பினை, கி.பி. 1932–ஆம் ஆண்டு திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் நிறுவினார். ஏழை எளியவர்களுக்கு உதவும் வகையில் ‘அகத்தியனார் சித்த மருத்துவ நிலையம்’ ஒன்றையும் தொடங்கினார். நாட்டுப்பற்றால் விடுதலை வேள்வியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட அருணகிரிநாதர்சுவாமி, மொழியின் பாலும் மிகுந்த பற்றுடையவராகத் திகழ்ந்தார். கி.பி. 1937–ஆம் ஆண்டில் இந்தியெதிர்ப்பு இயக்கத்தில் இவர் பங்கேற்றார். கி.பி. 1957–ஆம் ஆண்டு இவருக்கு மணிவிழாக் கொண்டாடப் பெற்றது. அப்போது ‘இறையருள் வேட்டலும் சமயநெறி விளக்கமும்’ என்னும் தலைப்பில் மலர் ஒன்று வெளியிடப் பெற்றது. தண்ணீர்மலை முருகன் பஞ்சரத்தினப் பாமாலை, மார்க்கண்டேசுரர், மங்களாம்பிகை பதிகங்கள், இராமசெய உயிர் வருக்கப் பாமாலை, பேரா முருகன் சதமணிமாலை, கோலாலம்பூர் குமரவேள் போற்றிப் பதிகம், பத்துமலை வடிவேலர் பதிற்றந்தாதி, ஆடு மயில் பாடல், மலேயா பஞ்சக் கொடுமைச் சிந்து, மக்கள் கடமை, குருசீடா சாரம், குருவருள் மாலை, கடவுள் விளக்கம், செய்நெறி ஒப்புமை வெண்பா ஆகிய நூல்களைப் படைத்த அருணகிரிநாதர்சாமி விடுதலை வேட்கைப் பாடல்களையும் இயற்றியுள்ளார். அறுபத்தைந்து ஆண்டுகள் வாழ்ந்த அருணகிரிநாதர்சுவாமி கி.பி. 1962–ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள் இரண்டாம் நாள் இவ்வுலக வாழ்வை நீத்து வீடு பேறு அடைந்தார்.மு.த.