செயல் முறை ஆய்வு
ceyal muṟai āyvu
1940ஆம் ஆண்டு முதன் முதலில் மெக்லாஸ்கை, திரில்தென் ஆகியோரால் செயல் முறை ஆய்வு என்னும் சொல் பயன்படுத்தப்பட்டது.
1940ஆம் ஆண்டு முதன் முதலில் மெக்லாஸ்கை, திரில்தென் ஆகியோரால் செயல் முறை ஆய்வு என்னும் சொல் பயன்படுத்தப்பட்டது. இருந்த போதிலும், 1952ஆம் ஆண்டில்தான் அமெரிக்காவில் முறைப்படி இச்சொல் நடைமுறைக்கு வந்தது எனலாம். அதே சமயம், அங்குச்செயல் முறைகள் ஆய்வுக் கழகம் (Operations Research Society) தோற்றுவிக்கப் பட்டது. இன்று, உலகெங்கிலும் செயல் முறை ஆராய்ச்சிக் கழகங்கள் நிறுவி வருகின்றனர். பெரும்பாலான தொழிற்கூட அமைப்புகள், இப்பெயரைக் கொண்டுள்ளன. பல்கலைக் கழகங்களில் இதற்கென்று தனியாகத் துறை ஏற்படுத்தி, இதன் இன்றியமையாமையை அறியச் செய்கின்றனர்.
இந்தியாவில் செயல் முறை ஆய்வு. இந்தியாவில் 1949ஆம் ஆண்டு, ஹைதராபாத்தில் வட்டார ஆராய்ச்சிக் கூடம் நிறுவிய போது, செயல் முறை ஆய்வு கொண்டு வரப்பட்டது. அதன் பின்பு, தொழிற்சாலைகளின் செயற்முறைகள் அனைத்திலும் பயன்படுத்தப் பட்டது. 1955ஆம் ஆண்டு இந்தியச் செயல் முறைகள் ஆராய்ச்சிக் கழகம் நிறுவப்பட்டது. 1963ஆம் ஆண்டு, ஆப்செர்ச் (opsearch) என்ற இதழ் வெளியிடப்பட்டது. இன்று சில அரசுத் துறைகள், பருத்தி ஆலைகள் தவிர, ஏனைய அனைத்துத் துறைகளிலும் செயல்முறை ஆய்வு பயன்படுகிறது. திட்டக் குழு, இந்திய விமானப் போக்குவரத்து, ஆயுள் காப்பீட்டுக் கழகம், இந்திய தொடர் வண்டித் துறை (Indian Railways) ஆகியவற்றில் செயல் முறை ஆய்வு பெருமளவில் பயன்படுகிறது.
செயல் முறை ஆய்வு என்பது அளவிடக் கூடிய பொது அறிவு (quantitative common sense) என்றும், அறிவியல் வழியாக முடிவு எடுத்தல் (scientific approach to decision making) என்றும் விளக்கப் படுகிறது. பல அறிஞர்கள் செயல் முறை ஆய்வு பற்றிப் பல கோணங்களில் விளக்கியுள்ளனர்.
செயல் முறை ஆய்வின் கட்டங்கள். செயல்முறை ஆய்வு கீழ்க் காணும் ஏழு கட்டங்களாகப் பிரிக்கப் படும்.
தொடக்க ஆய்வுக் கட்டம் (initial diagnostic phase). முதலில் எடுத்துக் கொள்ளப் போகும் சிக்கல் பற்றி அலசி ஆய்ந்து, திறனாய்வுக் காரணிகள் (critical factors), முக்கிய முடிவுகள் (principal decisions), கையாளப் போகும் அளவுகள் ஆகியவை குறித்து விவரங்கள் சேகரிக்க வேண்டும்.
சிக்கலை முறைப்படுத்தல் (formulating the problem). எடுத்துக் கொண்ட சிக்கல் குறித்துத் தெளிவான அறிக்கை ஒன்று தயாரிக்க வேண்டும். இவ்வறிக்கையில் கட்டுப் படுத்தக் கூடிய காரணிகள், கட்டுப் படுத்த முடியாத காரணிகள், அடைய விரும்பும் நோக்கம், வரையறை (restriction) ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும்.
படிமை கட்டுதல் (building the model). கணிதக் குறியீடுகளைக் கொண்டு படிமை கட்ட வேண்டும்.
தீர்வு காணல். கணித முறையில் பகுத்து முடிவு எடுக்க வேண்டும்.
படிமையை நவீனமாக்குதல் (updating the model). நடப்புக் காலத்திற்கு ஏற்ப மாற்றங்களைச் செய்து, படிமையை நவீனப்படுத்துதல் வேண்டும்.
தீர்வைக் கட்டுக்கோப்பில் வைத்திருத்தல். பின் ஊட்ட முறையால் (feed back) தீர்வைக் கட்டுக்கோப்பில் கொண்டு வரவேண்டும்.
செயல்படுத்துதல். இறுதியாக விளைவை ஆய்ந்து, நடைமுறைப் படுத்த வேண்டும். செயல் முறை ஆய்வினைப் பயன் படுத்தும் போது, கீழே கொடுத்துள்ள முதன்மை விவரங்களைக் கவனிக்க வேண்டும்.
எடுத்துக் கொள்ளப்பட்ட சிக்கல் முழுதும் சரியாக விளக்கப்பட வேண்டும்; அடிப்படை விவரங்கள் சேகரிப்பதற்கு நீண்ட நேரம் ஆகும் என்பதால், முறையாகத் திட்டமிடுதல் வேண்டும்; கண்டுபிடிக்கப் பட்ட முடிவு நடப்புக் காலத்திற்கு ஏற்றதாக இருக்கும்.
அதை எதிர்காலத்திற்கு ஏற்றாற் போல், அமைக்க மாற்றங்களைச் சேர்த்துச் சரி நிலைப் படுத்த வேண்டும். இதை, எல்லோரும் ஏற்றுக் கொள்ளத் தக்கவாறு, படிம, கருவி, நுட்பம் கொண்டு அணுக வேண்டும்; இறுதியாக எடுக்கப்பட்ட முடிவைச் செயல் முறைக்குக் கொண்டு வந்து, கட்டுக்கோப்பிற்குள் வைத்தல் இன்றியமையாதது.
செயல் முறை ஆய்வில், நேரியல் திட்டமிடுதல் (linear programming) என்னும் நுட்பமே, பெரும்பாலும் பயன்படுகிறது. இதை ஒரு பெருங்குறையாக எடுத்துக் கொண்டு, செயல் முறை ஆய்வின் பயனைக் குறைத்து மதிப்பிடுவது சரியன்று. அதே சமயம், செயல் முறை ஆய்வு என்பது தவறே இழைக்காத 100% சரியான விடையைத் தர வல்ல அறிவியல் என்பதும் தவறு. ஆகவே, செயல் முறை ஆய்வு என்பது ஒரு முதன்மை நோக்கத்தை அடைவதற்கான ஏற்புடைய தீர்வை அளிப்பதில், ஏனைய அறிவியலை விட, முதன்மையாக விளங்குகிறது எனலாம். எடுத்துக் காட்டிற்குச் செயல் முறைச் சிக்கல் ஒன்று கொடுக்கப் பட்டுள்ளது.
ஒரு நிறுவனம் அ, ஆ, இ ஆகிய மூன்று பொருள்களை உற்பத்தி செய்து வருகிறது. அவற்றால் ஏற்படும் இலாபம் முறையே ‘அ’வின் மூலம் ரூ. 4உம், ‘ஆ’வின் மூலம் ரூ.3உம் ‘இ’யின் மூலம் ரூ.5உம் ஆகும். இம்மூன்று பொருள்களையும் உற்பத்தி செய்ய, ஏ, பி என்ற இரு எந்திரங்கள் பயன்படுகின்றன. இவ்விரு எந்திரங்களும் மேற்கூறிய மூன்று பொருள்களை உற்பத்தி செய்வதில், கீழ்க் காணும் நேரத்தை எடுத்துக் கொள்கின்றன. எந்திரம் ஏ மொத்தம் 2000 நிமிடங்களும், எந்திரம் பி மொத்தம் 2500 நிமிடங்களும் வேலை செய்ய முடியும். அந்த நிறுவனமோ, அ, ஆ, இ ஆகிய மூன்று பொருள்களையும், 100, 200, 50 என்னும் எண்ணிக்- கையில் உற்பத்தி செய்ய வேண்டும். ஆனால், அ என்ற பொருள் மட்டும் 150க்கு மிகாமல் உற்பத்தி செய்யப் பட வேண்டும். இந்நிலையில், அந்நிறுவனம் தன் இலாபத்தைப் பெருக்கிக் கொள்ள உதவும் உற்பத்தித் திட்டத்தைக் காணலாம்.
<!---- பக்க ஒருங்கிணைப்புக்காக அட்டவணை, பக்கத்தின் ஆரம்பத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> —கா. செயராமன் நூலோதி. A. Taha Hamdy, Operations Research, Macmillan Book Co., London, 1987.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 783)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2xy4tss4/
தமிழ்“செயல் முறை ஆய்வு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/2xy4tss4/APA
Oliyon Research. (2026). செயல் முறை ஆய்வு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2xy4tss4/MLA
"செயல் முறை ஆய்வு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/2xy4tss4/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment