செல்ல விலங்குகள்
cella vilaṅkukaḷ
செல்லமாக அன்பு செலுத்தி, வீட்டில் வளர்க்கப் படுபவை செல்ல விலங்குகளாகும்.
செல்லமாக அன்பு செலுத்தி, வீட்டில் வளர்க்கப் படுபவை செல்ல விலங்குகளாகும். நாய், பூனை, கிளி, மைனா, குயில், புறா போன்றவை, இவ்வாறு வளர்க்கப் படுகின்றன. நாய் அடிமையைப் போலவும், பூனை தோழனைப் போலவும் பழகுகின்றன. இயற்கைக்கு மாறாகப் புலி, சிங்கம், கீரி, முதலை, குதிரை, பாம்பு போன்றவையும் செல்லமாக வளர்க்கப் படுகின்றன. ஆடு, மாடு போன்றவை பொருளாதாரப் பயன் கருதி வளர்க்கப் படுகின்றன.
செல்ல விலங்குகள் சில வித்தைகளைச் செய்யுமாறும், கட்டளைக்குக் கீழ்ப் படியுமாறும் வளர்க்கப் படுகின்றன. இச்செயலால், அவ்வீட்டிலுள்ள குழந்தைகள் பொறுப்புணர்வைப் பெறுகின்றனர். அவ்விலங்குகள் உணவு, பயிற்சி, வசிப்பதற்குத் தகுந்த இடம் இவற்றைப் பெறுவதன் மூலம், குழந்தைகள் மகிழ்ச்சியுடனும், நல்ல உடல் நலத்துடனும் இருப்பர். மேலும், தோழனாக இருப்பதால், பல செல்ல விலங்குகள் இன்றியமையாதவையாகின்றன. நாய், வேட்டையாடவும், வீட்டுக் காவலுக்கும், விழி இழந்தோரை அழைத்துச் செல்லவும் பயன் படுகிறது.
மீன், பிற விலங்குகளை விட, ஒரு நன்மையைப் பெற்றுள்ளது. இதை, ஓரிரு நாள்களுக்கு உணவு அளிக்காமல், தனியாக விட்டு விடலாம். பெரும்பாலான மீன்களுக்கு, வாரத்தில் ஒரு சில நேரங்களில் மட்டுமே உணவு தேவைப்படுகிறது. மீன் தொட்டியில் தாவரங்களை வளர்ப்பதன் மூலம், அத்தொட்டியின் நீரைச் சம நிலையில் வைத்திருக்கலாம். அத்தாவரங்கள், மீனுக்கு ஆக்சிஜனைத் தருகின்றன. இதிலுள்ள நீரை மாற்ற வேண்டியதில்லை. ஆனால், இந்நீர் ஆவியாகி விடுவதால், சூழலுக்கேற்றாற் போல், அதிக நீரைத் தொட்டியில் சேர்க்க வேண்டும். வெள்ளைச் சுண்டெலி, கினிப் பன்றிகள், அணில் போன்ற சிறிய விலங்குகளும், வீட்டில் செல்ல விலங்குகளாக வளர்க்கப் படலாம்.
பண்ணைச் செல்ல விலங்குகள். பண்ணைகளில் வழக்கமாகப் பல வகையான செல்ல விலங்குகளை வளர்க்கின்றனர். ஏறக் குறைய, ஒவ்வொரு பண்ணையிலும் நாய், பூனை இவற்றை எலியைப் பிடித்துக் கொல்வதற்காக வைத்துள்ளனர். குழந்தைகள் இவற்றுடன் விளையாடுகின்றனர். இப்பண்ணையில் வசித்து வரும் குட்டி விலங்குகளைப் பேணிக் காத்து வருகின்றனர். அவர்கள் முயல். சீமைப் பன்றி போன்றவற்றைச் செல்ல விலங்குகளாக வளர்த்து வருகின்றனர்.
பள்ளிச் செல்ல விலங்குகள். பல பள்ளிகளின் வகுப்பறைகளில் செல்ல விலங்குகள் வளர்க்கப் படுகின்றன. சிறுவர், சிறுமியர் அவ்விலங்குகள் எவ்விதம் உண்ணுகின்றன, உறங்குகின்றன, விளையாடுகின்றன, தங்கள் குட்டிகளைப் பேணிக் காக்கின்றன போன்றவற்றைக் கற்றுக் கொள்கின்றனர். அச்செல்ல விலங்குகளுக்குக் கூண்டுகள் அமைக்கின்றனர், உணவு அளிக்கின்றனர்; பேணிக் காக்கின்றனர். முயல், கினிப் பன்றி, சுண்டெலி, வெள்ளை எலி, மீன், தவளை, தேரை, பாம்பு முதலியவை கூடப் பள்ளியின் வகுப்பறையில் வளர்க்கக் கூடிய செல்ல விலங்குகளுள் சில வகையாகும். சில வேளைகளில் வகுப்பறையில் கண்ணாடி அறை அல்லது தேன் கூடு அமைக்கப் படும்.
அரிய செல்ல விலங்குகள். சர்க்கசில் யானை, கரடி, சிங்கம், புலி போன்றவை செல்ல விலங்காக உள்ளன. கொடிய சாம்பல் நிறமுள்ள கரடி கூடப் பழக்கப் படுத்தப் பட்டிருக்கிறது. சிலர், பூனை வடிவக் காட்டு விலங்கையும், ஏனைய சிறிய வன விலங்கையும், செல்ல விலங்காக வளர்த்து வருகின்றனர். ஆனால், பெரும்பாலான வன விலங்குகள் இளம் பருவத்திலிருக்கும் போது மட்டுமே, செல்ல விலங்குகளாக வைக்கப் படுகின்றன.
செல்ல விலங்கு தெரிவு செய்தல். ஏதேனும் ஒரு செல்ல விலங்கை விலைக்கு வாங்கு முன், அனைத்து வகைச் செல்ல விலங்குகளைப் பற்றியும், இயலு மட்டும் அறிந்து கொள்ள வேண்டும். அதற்காக ஒதுக்கப் பட்டுள்ள இடத்தின் பரப்பில் வசதியாக வசிக்கக் கூடிய விலங்கைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
செல்ல விலங்கு நடந்து கொள்ளும் விதம், அதன் உணவு, அது பெரிதாக வளர்ந்த பின்னர் காணப் படும் தோற்றம் போன்றவற்றை அறிய வேண்டும். அவ்விலங்குக்குத் தகுந்த உணவு, நோய்த் தடுப்பு நடவடிக்கை, உடல் நலம் போன்றவற்றையும் நன்கு அறிந்து, செல்ல விலங்கைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
தனியியல்புப் பழக்கம். ஒரு விலங்குக்கு தனியியல்புப் பழக்கத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டுமெனில், முதலில் அது என்ன செய்ய வேண்டுமென்பதைப் புரிந்து கொள்ளும் வண்ணம் செய்ய வேண்டும். எடுத்துக் காட்டாக, நாய்க்கு உட்கார கற்றுக் கொடுக்க விரும்பினால், அதை உட்காரும் நிலைக்குக் கீழே தள்ளி விடலாம். பிறகு ‘உட்கார்’ என்று சொல்லலாம். அவ்வாறு சொல்லும் போது, அது சரியாக உட்கார்ந்தால், அதைப் புகழ்ந்து பேச வேண்டும். ‘உட்கார்’ என்று சொல்லும் போதெல்லாம் அந்நாய் உட்கார்வதைக் காணலாம். தரையில் உட்கார்ந்து, அதன் முன் கால்களை மேலே உயர்த்துமாறு சொல்வதால், அது அவ்வாறே செய்யும். நாய் பல கட்டளையையும் அறிந்து கொள்ளும். ஒரு பொருளை எடுத்து வருதல், உருளை போன்று உருண்டு செல்லுதல், கெஞ்சுதல், இறந்ததைப் போல் நடித்தல் போன்ற தனியியல்புப் பழக்கத்தையும் கற்றுக் கொள்ளும்.
ஒரு பயிற்சியை முழுமையாகச் செய்து முடிக்கும் வரையில், ஓய்வெடுக்க அனுமதிக்கக் கூடாது. அவற்றிற்குத் தனியியல்புப் பழக்கங்களைக் கற்றுக் கொடுக்க முயற்சி மேற்கொள்ளும் போது, பொறுமை இழக்கக் கூடாது. தன் வேலையைச் சரியாகச் செய்து முடிக்கும் போது, நாயின் தலையைச் செல்லமாகத் தட்டிக் கொடுக்க வேண்டும்.
செல்ல விலங்குகளைப் பேணிக் காத்தல் உணவூட்டல். எந்த ஒரு செல்ல விலங்குக்கும் உணவூட்டுவதற்கு முதலில் கடைப் பிடிக்க வேண்டியது, அதன் உணவுத் தட்டைத் தூய்மையாக வைத்திருத்தலே ஆகும். அதை ஒவ்வொரு நாளும் செம்மையாகக் கழுவித் தூய்மை செய்ய வேண்டும். விலங்குக்கு அளவுக்கு மீறி, உணவு கொடுக்கக் கூடாது. அது போதிய உடற்பயிற்சி பெறுதல் வேண்டும். பார்ப்பதற்குப் பளப்பளப்பாகவும், மெலிந்தும் இருக்க வேண்டும். சிறிதளவு உணவைக் கூட விட்டுச் செல்லாமல், அது உட்கொள்ளும் வரை உணவளிக்கலாம். உணவுத் தட்டிலுள்ள உணவை முழுமையும் தின்னாமல் போய் விட்டால், அத்தட்டை அப்பால் எடுத்துச் செல்ல வேண்டும். அடுத்த முறை அதற்குத் குறைந்தளவே உணவளிக்க வேண்டும். கால முறைப்படி, அதற்கு ஏற்ற சரியான உணவளித்து வந்தால், அவ்விலங்குகளை நோயிலிருந்து காக்கலாம்.
செல்ல விலங்கு நல்ல உடல் நலத்துடன் இருக்க சரி விகித உணவு இன்றியமையாதது. பெரும்பாலான செல்ல விலங்குகளுக்குத் தயாரிக்கப்பட்ட உணவில் வைட்டமின், தாது உப்பு, புரதச் சத்து ஆகியவை, ஒவ்வொரு விலங்கிலும் சரியான அளவில் அடங்கியிருக்குமாறு திட்டமிடப்பட்டுள்ளது. இத்தகைய உணவைப் பயன்படுத்துவதால், செல்ல விலங்குகள் ஊட்டச் சத்து மிகுந்த பொருளையே பெறும். வழக்கமாக, அவற்றிற்குத் தயாரிக்கப்பட்ட உணவில், கூடுதலாக எதையும் சேர்க்க வேண்டியதில்லை. ஆனால், நாய், பூனை இவற்றிற்குச் சிறிய இறைச்சித் துண்டு, ஆப்பிள் பழத் துண்டு இவற்றைக் கொடுக்கலாம்.
இருப்பிடம் அமைத்தல். செல்ல விலங்குகள் அனைத்தும், நல்ல இருப்பிடங்களைப் பெற்றிருக்க வேண்டும். அவற்றின் அளவு, செயல்பாடு இவற்றிற்குத் தகுந்தாற் போல, கூண்டு அமைக்க வேண்டும். மிகச் சிறிய பறவைகளின் கூண்டுக் கம்பிகள் ஒன்றுக்கொன்று மிக நெருக்கமாகயிருக்குமாறு அமைக்க வேண்டும். இடைவெளி அதிகமிருந்தால், அப்பறவைகள் தலையைக் கம்பிகளுக்கு இடையே நுழைத்துக் கொள்ளும் தீமை ஏற்படலாம்.
நாய் அல்லது பூனை இவற்றுக்கு வெதுவெதுப்பான உலர்ந்த இடத்தையே படுக்கை இடமாகப் பயன் படுத்த வேண்டும். கூடை, பெட்டி அல்லது செல்ல விலங்குகளின் படுக்கை இவற்றை, அவை தொடாமல் அப்பால் வைக்க வேண்டும். காற்றுப் புகாதவாறு, அதன் கதவு அமைய வேண்டும். மழை, பனி இவை தாக்க வண்ணம், முழுதும் மறைக்க வேண்டும். நாயின் இருப்பிடம், அது படுத்து எழுந்து நிற்கவும், இடையூறின்றிச் சுற்றி வரவும், போதிய அளவு பெரிதாகயிருக்க வேண்டும்.
நோய் மருத்துவம். பெரும்பாலான செல்ல விலங்குகள் முறையான உணவு, பராமரிப்பு, இருப்பிடம் அமைவதால், நல்ல உடல் நலத்துடன் இருக்கும். அது நோய் வாய்ப் பட்டிருந்தாலோ, உடலில் புண் போன்ற தீங்கு ஏற்பட்டாலோ, உடனடியாகக் கால் நடை மருத்துவரிடம் கொண்டு செல்ல வேண்டும். —அ. அரங்கநாதன்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 860)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2xjqd2ug/
தமிழ்“செல்ல விலங்குகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/2xjqd2ug/APA
Oliyon Research. (2026). செல்ல விலங்குகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2xjqd2ug/MLA
"செல்ல விலங்குகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/2xjqd2ug/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment