ஆந்திர மாநிலக் குண்டூர் மாவட்டத்தில் கிருட்டிணா ஆற்றங்கரையில் அமைந்துள்ள சிற்றூர். இங்கு கி.பி. 7–ஆம் நூற்றாண்டைச் சார்ந்த குடைவரைகள் உள்ளன. அனந்தசயனக்குடி என்னும் பெயரால் இக்குடைவரைகள் குறிக்கப்படுகின்றன. இங்குள்ள கல்வெட்டுகள் இக்குடைவரைகள் கி.பி. 14–ஆம் நூற்றாண்டில் மிக நல்ல நிலையில் இருந்ததாகவும் கி.பி. 16–ஆம் நூற்றாண்டில் விசய நகரப் பேரரசர் கிருட்டிண தேவராயர் இக்கோயிலுக்குத் தானங்கள் வழங்கியதாகவும் குறிப்பிடுகின்றன. இக்குடைவரைக் கோயில் 4 தளங்களை உடையது, அடித்தளம் முற்றுப் பெறாத நிலையில் காணப்படுகிறது. அடித்தளத்தின் கூரைகளைத் தூண்கள் தாங்குமாறு குடையப்பட்டுள்ளன. அடித்தளத்தில் மண்டபமும் தூண்களால் பிரிக்கப்பட்ட ஏழு தலை வாயில்களும் உள்ளன. அடித்தளத்தின் மேலுள்ள முதல்தளம் அடித்தளத்தைவிடப் பரப்பில் பெரியது. இத்தளத்தில் மூன்று பகுதிகள் உள்ளன. இத்தளத்தில் காணப்படும் சிற்பங்கள் யாவும் திருமாலைப் பற்றியன. வடபக்கத்தில் மூலக் கோயிலை ஓட்டி ஒரு சிறிய கோயில் உள்ளது. இவ்விரு பகுதிகளுக்கும் இடையிலுள்ள நடுப்பகுதி மிகப்பெரியது. இங்கு ஏறத்தாழ 3 மீ. சதுரமான கருவறையும் 9 மீ. பக்கமுள்ள மண்டபமும் உள்ளன. நான்கு வரிசையாகத் தூண்கள் மேல் கூரையைத் தாங்கி நிற்கின்றன. கருவறையில் மூலவர் சிலையின் அடிமேடை மட்டும் உள்ளது. கோயிலின் முன் மண்டபத்தின் பின் பக்கச் சுவர்களில் திருமாலின் அவதாரங்கள் நேர்த்தியாகச் செதுக்கப்பட்டுள்ளன. இவை பிற்காலத்தில் செதுக்கப்பட்டவையாகும். இத்தளத்தில் உள்ள யானையின் சிற்பம் ஒன்று அழகு மிக்கதாக உள்ளது. மேல் தளத்திற்குச் செல்ல நடுமண்டபத்திலிருந்து படிகள் உள்ளன. ஆனால் அடித்தளத்தில் இருந்து இத்தளத்திற்குச் செல்லப் படிகள் இல்லை. முதல் தளத்தின் அமைப்பிலிருந்து இத்தளம் பல்லவ அரசர் மகேந்திரவர்மன் காலத்தைச் சார்ந்ததாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இத்தளத்தில் உள்ள துவாரபாலகர் சிற்பங்களும் பல்லவர்கால அமைப்பை உடையன்வாகும். இரண்டாம் தளம் 9 மீ. அகலமும் ஏறக்குறைய 17 மீ. நீளமும் உள்ள மண்டபத்தையும் தென்மூலையில் 4 மீ. சதுரமான சிறிய அறையையும் வட கோடியில் ஒரு நீண்ட சதுரமான கருவறையையும் கொண்டு விளங்குகிறது. கருவறையில் அனந்தசயனரின் பெரிய சிலை ஒன்று உள்ளது. நடுமண்டபத்தில் தூண்கள் நான்கு வரிசையில் உள்ளன. தூண்களில் மிக நேர்த்தியான முறையில் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. வைணவச் சிற்பங்கள் பல இத்தூண்களில் உள்ளன. முகப்புத் தூண்கள் இரண்டின் அடிப்பாகத்தில் சிங்க உண்டவல்லி குடைவரைகள் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இத்தூண்கள் பல்லவர் காலத் தூண்களின் அமைப்பை ஒத்துள்ளன. மண்டபத்தின் பின்சுவரில் ஆழ்வார்களின் சிற்பங்கள் காணப்படுகின்றன. சைவச்சிற்பங்கள் சிலவும் உள்ளன. அனந்தசயனரின் உருவச்சிலையும் திருமாலுக்குரிய பிற சிற்பங்களும் இக்குடைவரைகளில் காணப்படுவதால், இது முதலில் திருமாலுக்குரிய கோயிலாக இருந்திருக்க வேண்டும் என்று சிலர் கருதுகின்றனர். ஆனால் பல்லவர் காலச் சிவன் கோயில்களில் பொதுவாகத் திருமாலின் சிற்பங்களும் காணப்படுகின்றன. இக்கோயிலின் அமைப்பு சைவ உருவங்களுடைய மாடங்கள், அருகிலுள்ள மலையிலுள்ள கோயில்களில் சிவலிங்க வழிபாடு ஆகியவை யாவும் உண்டவல்லி கி.பி. 17–ஆம் நூற்றாண்டில் சைவர்களின் வழிபாட்டுத்தலமாக விளங்கியிருத்தல் வேண்டும் என்பதைக் காட்டுகின்றன. இரண்டாம் தளத்தின் முகப்பில் கூரையற்ற முற்றம் ஒன்று உள்ளது. இதன் வட முனையில் மேலே மூன்றாம் தளத்திற்குச் செல்ல வழி உள்ளது. தென் முனையில் ஆண் உருவச் சிலை ஒன்றும் அதன் இருபக்கத்திலும் இரண்டு பெரிய சிங்கங்களின் உருவங்களும் காணப்படுகின்றன. ஆண் உருவச்சிலையின் தலைப் பகுதி சிதைந்து காணப்படுகிறது. இச்சிலை இக்குடைவரைகளை அமைத்த மன்னரின் சிலையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மூன்றாம் தளம் முற்றுப் பெறா நிலையில் உள்ளது. இதில் முற்றம் ஒன்று கூரையற்றுக் காணப்படுகிறது. மூடப்பட்ட முகப்பு ஒன்றும் இத்தளத்தில் உள்ளது. இந்தக் குன்றிலேயே மற்றும் சில குடைவரைகள் காணப்படுகின்றன. இவை முற்றுப்பெறாத நிலையில் உள்ளன. உண்டவல்லிக் குகைக்கோயில் ஒன்றின் மேல் ஒன்றாகக் குடையப்பட்ட மூன்று தனிக் கோயிலாகும். இக்குடைவரைகள் மகேந்திரவர்மன் காலத்தைச் சார்ந்த மூன்று மாடக் கோயிலுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் கோயிலாகும். இக்குகைக் கோயில் தூண்களில் புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன. இவற்றில் கிருட்டிணன் கோவர்த்தன மலையைத் தூக்கி நிற்கும் காட்சியும் அடுக்கடுக்காக வைக்கப்பட்ட மட்பாண்டங்களைச் சுமந்து நிற்கும் ஆய்மகள் ஒருத்தியின் புடைப்புச் சிற்பமும் சிறப்பு வாய்ந்தவை. இங்குள்ள சிற்பங்கள் வாதாபி, மாமல்லபுரம், திருச்சிராப்பள்ளி, தேவகர் போன்ற இடங்களில் காணப் பெறும் புடைப்புச் சிற்பங்களை ஒத்துள்ளன.