அழகர் கோவில்
aḻakar kōvil
மதுரைக்கு அருகிலுள்ள வைணவத் திருப்பதிகளுள் ஒன்று.
மதுரைக்கு அருகிலுள்ள வைணவத் திருப்பதிகளுள் ஒன்று. ஆண்டுதோறும் சித்திரை மாத முழுநிலவு நாளன்று காலையில் அழகர் கோயில் இறைவனான அழகர், மதுரை நகரத்தே வைகையாற்றில் இறங்கும் விழாவினைக் இலட்சக் கணக்கான மக்கள் கூடுகிறார்கள். கி.பி. 1971–ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணிப்பு, ‘அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியைக் காண ஆண்டுதோறும் ஐந்து லட்சம் மக்கள் கூடுகிறார்கள்’ என்று கூறுகிறது. இவர்களில் பெரும்பாலோர் கிராமப்புறத்து மக்களே. தமிழ்நாட்டின் மிகப்பெரிய திருவிழாக்களில் இதுவும் ஒன்று.
அழகர் கோயில் மதுரை நகருக்கு வடக்கு – வட கிழக்குத் திசையில் பன்னிரண்டு கல் தொலைவில் அழகர்மலை அடிவாரத்தில் நிலக்குறுங்கோடு (Latitude 10.5° பாகையிலும், நில நெடுங்கோடு (Longitude) 78 14° பாகையிலும் அமைந்துள்ளது. சங்க இலக்கியத்தில் இம்மலை ‘இருங்குன்றம்’ என வழங்கப்பட்டுள்ளது. சிலப்பதிகாரம் இம்மலையைத் ‘திருமால் குன்றம்’ எனக் கூறுகிறது. ஆழ்வார்களின் பாசுரங்கள் “திருமாலிருஞ்சோலை” எனக் குறிப்பிடும். ‘அழகர்கோயில்’ என்னும் பெயர் ‘அதிர்குரல் சங்கத்து அழகர் தம் கோயில்’ என்னும் நம்மாழ்வாரின் பாசுரத்திலிருந்து பெறப்பட்டதாகும். கல்வெட்டு ஒன்று இந்நிலப் பகுதியைக் “கீழிரணியமுட்டநாடு” என்று குறிக்கிறது.
அழகர்
ஏறத்தாழ 15 வேலிப் பரப்பில் அமைந்த கோட்டைக்குள் இக்கோயில் அமைந்துள்ளது. கோயில் அமைந்துள்ள பகுதிக்கு ‘உட்கோட்டை’ அல்லது ‘இரணியன் கோட்டை’ என்பது பெயர். வெளிக் கோட்டை கி.பி. 14–ஆம் நூற்றாண்டில் மாவலி வாணாதிராயர் என்ற சிற்றரசர் வழியினரால் கட்டப்பட்டது. இன்று இக்கோட்டை அழிவுற்ற நிலையில் காணப்படுகிறது. மதுரை நாயக்கர் மன்னர் காலத்தில் இக்கோட்டைக்குள் ஒரு சிறு அரண்மனை இருந்தது; அதுவும் இப்போது அழிந்து விட்டது.
முதல் ஆழ்வார் மூவருள் ஒருவரான பூதத்தாழ்வாரும் பெரியாழ்வார், ஆண்டாள், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோரும் தம் திவ்வியப் பாசுரங்களில் இக்கோயிலைப் பாடியுள்ளனர். இக்கோயில் கி.பி. 6–ஆம் நூற்றாண்டு முதல் புகழ்பெற்ற கோயிலாக விளங்கி வருகிறது.
இக்கோயில் கருவறை வட்ட வடிவமானது. தமிழ்நாட்டுப் பழங்கோயில்களுள் அழகர் கோயில், காஞ்சி கரபுரீசுவரர் கோயில், நார்த்தாமலை விசயாலயச் சோழீச்சரம் ஆகிய மூன்றுமே வட்ட வடிவில் கருவறை உடையன. பொதுவாகக் கோயில் கருவறைக்குத் தனிப்பெயர் இருப்பது வழக்கமில்லை. இக்கோயில் கருவறைக்கு ‘நங்கள் குன்றம்’ என்னும் பெயர் வழங்கி வருகிறது. கோயில் இறைவுன் பெயர் ‘கள்ளழகர்’, ‘சுந்தரராசப் பெருமாள்’ என்பனவாகும். கருவறையில் கிழக்கு நோக்கித் தேவியருடன் நின்ற திருக்கோலத்தில் இறைவன் எழுந்தருளியுள்ளார். கையிலுள்ள சக்கரம் அணி நிலையில் (ஆத்தான சக்கரமாக) அமையாது, பயன்படுநிலையில் (பிரயோக சக்கரமாக) அமைந்துள்ளது. இது ஒரு விதிவிலக்கான செய்தியாகும். தலமரம் சந்தன மரம். தீர்த்தம் சிலம்பாறு.
இக்கோயில் கோபுர வாசல் நிரந்தரமாக அடைக்கப்பட்டு அதன்மேல் பதினெட்டாம்படிக் கருப்பசாமி என்னும் சிறு தெய்வத்தின் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. கோயில் இறைவனின் அருட்களையினைத் திருட வந்த பதினெட்டுப் பேரை இக்கோயில் கோபுர வாயிலில் வெட்டிப் புதைத்திருப்பதால் கோபுர வாசல் அடைக்கப்பட்டதாகக் கூறுவர். இதற்கு வடக்கே உள்ள மற்றொரு வாசலே இப்போது பயன்படுத்தப்படுகிறது.
இத்தலம்பற்றிக் கி.பி. 17–ஆம் நூற்றாண்டு தொடங்கி எழுந்த சிற்றிலக்கியங்கள் பல. அழகர் அந்தாதி, அழகர் கலம்பகம், அழகர் கிள்ளை விடுதூது, அழகர் பிள்ளைத்தமிழ், அழகர் குறவஞ்சி, சோலை மலைக் குறவஞ்சி, திருமாலிருஞ்சோலைப் பிள்ளைத் தமிழ், அலங்காரர் மாலை ஆகியவை அச்சிடப்பட்டவையாகும். இவை தவிர அழகர் வருகைப் பத்து எனும் ஆசிரியர் பெயர் அறியப்படாத சிறு நூலும் உள்ளது. சென்னையிலுள்ள கீழ்த்திசைச் சுவடி நூலகத்தில் அழகர் மாலை, அழகர் அகவல் எனும் அச்சிடப்படாத இரு நூல்களும் உள்ளன. வருணிப்பு என்ற பெயரில் இத்தலத்திறைவன் மீது நாட்டுப்புற மக்கள் பாடும் பாடல்கள் பலவாகும். அழகர் வருணிப்பு, தசாவதார வருணிப்பு, கூர்மாவதாரன் வருணிப்பு, இராமாவதார வருணிப்பு என்னும் பெயரில் அவை சித்திரைத் திருவிழாவில் பாடப்படுகின்றன. இவை பெரும்பாலும் வாய்மொழிப் பாடல்களே.
பரிபாடல் காலத்தில் இத்தலத்தில் பலராம வழிபாடு சிறப்பாக நிகழ்ந்துள்ளது. “பாண்டிய நாட்டில் இந்திர வழிபாட்டிற்கு மாற்றாகப் பலராம வழிபாடு வளர்க்கப் பெற்றது. அதன் வழி உழவர்களை வைணவ நெறிக்குள் ஈர்க்கத் தமிழ்நாட்டு வைணவம் முயன்றுள்ளது”, என்பர் ஆய்வாளர். தமிழ்நாட்டில் பவராம வழிபாடு நிகழ்ந்த இடமாக இக்கோயிலை மட்டுமே சான்றுடன் காட்ட முடியும்.
இக்கோயில் படியேற்ற மண்டபத்தில் அமைந்துள்ள யாளிச் சிற்பங்களும் திருக்கல்யாண மண்டபத்தில் அமைந்துள்ள நரசிம்மர், வேணுகோபாலர், பூமி வராகர், இரதி மன்மதன் சிற்பங்களும் கலையழகு மிகுந்தவை. வசந்த மண்டபத்தில் இராமாயணக் காட்சிகள் மேற்கூரை ஓவியமாகத் தீட்டப்பட்டுக் கி.பி. 17–ஆம் நூற்றாண்டுத் தமிழ் எழுத்துகளில் விளக்கத்துடன் அமைந்துள்ளன. இந்த ஓவியங்கள் திருமலை நாயக்கர் காலத்தனவாகும்.
முற்றுப்பெறாத இராயகோபுரம் இக்கோயிலுக்குத் தெற்கில் அமைந்துள்ளது. தமிழிலும் வடமொழியிலுமாக இக்கோயிலில் 123 கல்வெட்டுகள் படியெடுக்கப் பெற்றுள்ளன. கருவறையைச் சுற்றிக் கல்வெட்டுகள் ஏதும் காணப்படவில்லை. கல்வெட்டுகளின் மூலம் வெளிக்கோட்டைப் பகுதியில் ‘சாமந்த நாராயணச் சதுர்வேதிமங்கலம்’ என்னும் அக்கிரகாரம் இருந்ததையும், இக்கோயில் தேரின் பெயர் ‘அமைந்த நாராயணன்’ என்பதையும் அறிய முடிகிறது. நம்மாழ்வார், ஆண்டாள் ஆகியோர் தம் பாசுரங்கள், இக்கோயிற் கல்வெட்டுகளில் முறையே ‘சடகோபன் பாட்டு’, ‘கோதைப் பாட்டு’ என்று குறிப்பிடப்பட்டுள்ளன.
அழகர் கோயில் சித்திரைத் திருவிழாவினால் புகழ்பெற்ற கோயிலாகும். மதுரை மன்னர் திருமலை நாயக்கர் காலத்திற்கு முன் சித்திரைத் திருவிழாவில் இக்கோயில் இறைவன், சோழவந்தானுக்கு அருகில் உள்ள தேனூரில்தான் வைகையாற்றில் இறங்கித் தலபுராணக் கதையின்படி. மண்டூக முனிவருக்குக் காட்சி அளிப்பது வழக்கம். வைணவரான மன்னர் திருமலை நாயக்கரே தம் ஆட்சிக்காலத்தில் சைவ, வைணவ ஒற்றுமை கருதி இத்திருவிழாவினை மதுரைக்கு மாற்றி அமைத்தார். இதற்காகவே மாசி மாதத்தில் நடைபெற்று வந்த மதுரை மீனாட்சி அம்மன் திருமணம் திருத்தேர் விழாக்களையும் சித்திரை மாதத்திற்கு மாற்றி அமைத்தார். இன்றும் மதுரையில் மீனாட்சி அம்மன் திருமண ஊர்வலமும் திருத்தேர் விழாவும் சித்திரை வீதியில் நடைபெறாது மாசி வீதியிலேயே நடைபெறுவது குறிப்பிடத்தக்கதாகும்.
இப்பொழுது அழகர் ஆற்றிலிறங்கும் சித்திரை முழுநிலவு நாளுக்கு இரண்டு நாட்கள் முன்னதாக மதுரை மீனாட்சி அம்மன் திருமணவிழா நடைபெறுகிறது. இது குறித்து மக்களிடையே பரவலாக ஒரு கதை வழங்கி வருகிறது. “தங்கையான மீனாட்சி அம்மன் திருமணத்திற்காகவே அண்ணனாகிய அழகர் சீர்வரிசைகளுடன் அழகர் கோயிலிலிருந்து புறப்பட்டு வருகிறார். அவர் வைகை ஆற்றிலிறங்கியவுடன் தங்கை மீனாட்சியின் திருமணம் இரண்டு நாள்களுக்கு முன்னரே அவர் இல்லாமல் நடந்துவிட்ட செய்தி அவருக்குத் தெரிகிறது. உடனே மதுரைக்குள் வராமல் சினங் கொண்டு கிழக்கே வண்டியூர் நோக்கித் திரும்பி விடுகிறார். அங்குத் தம் காதலியான துலுக்க நாச்சியாருடன் தங்கிவிட்டு மலைக்குத் திரும்பி விடுகிறார்” என்பது கதையாகும். இக்கதைக்குப் புராண வரலாற்றுச் சான்றுகள் இல்லை. என்றாலும் மக்கள் கதையினை நம்புகின்றனர்.
அழகர் கோயில் சித்திரைத் திருவிழா மேலோர் மரபுகளும் நாட்டுப்புற மரபுகளும் (Elites and Folk Tradition) கலந்து விளங்கும் திருவிழாவாகும். இதுவே, இத்திருவிழாவின் தனிப்பெருமை ஆகும். இத்திருவிழாவில் அழகர் மதுரை மாவட்டம் மேலூர்ப் பகுதியில் வாழ்கிற ‘மேலைநாட்டுக் கள்ளர்’ என்னும் இனத்தாரின் ஆடையணிகளோடு ‘கள்ளர் திருக்கோலம்’ பூண்டு ஊர்வலம் வருவார். கையில் வளரி எனப்படும் வளைதடி, சாட்டை, காதுகளில் வண்டக் கடுக்கன், தலையில் கொண்டை இவற்றோடு கள்ளழகராக (கள்ளர் அழகராக) சித்திரைத் திருவிழாவில் மூன்றாம் திருநாளன்று அழகர் கோயிலிலிருந்து புறப்பட்டு, மீண்டும் ஒன்பதாம் திருநாளன்று கோயிலுக்குத் திரும்புவார். அழகர் கோயிலிலிருந்து இறைவன் வண்டியூர் சென்று திரும்பும் தூரம் ஏறத்தாழ முப்பது கல் ஆகும். திருவிழாவில் உச்சக்கட்டமான அழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி ஐந்தாம் திருநாளன்று (சித்திரைத் திங்கள் நிறைமதியின்) காலையில் நிகழும்.
இத்திருவிழாவில் நாட்டுப்புற அடியார்களில் சிலர் போர் வீரரைப் போன்று வேடம் பூண்டு ஆட்டுத் தோலால் செய்த தோற்பைகளில் தண்ணீரை நிரப்பி ஊர்வலப் பாதையில் அழகர் மீது பீய்ச்சி அடித்துக் கொண்டே வருவர். வேறு சிலர், சாமியாடியாக வேடமிட்டு மிகக் கனமான திரிகளை எரியவிட்டுப் பிடித்துக் கொண்டு ஆடி வருவர். இவர்கள் திரியாட்டக்காரர்கள் எனப்படுவர். மற்றுஞ் சிலர் சாமியாடி வேடமிட்டுத் தம்மைச் சாட்டை கொண்டு அடித்துக் கொண்டு வருவர். இவர்கள் சில நாட்கள் விரதமிருந்து மார்பில் துளசிமாலை அணிந்து, நெற்றியிலும் மார்பிலும் திருநாமமிட்டு ஆடி வருவர். கி.பி. 1979–இல் நடத்தப்பட்ட ஒரு கள ஆய்வு மூலம் இவ்வாறு வேடமிட்டு ஆடுவோரில் கோனார், அரிசனர், சேர்வை ஆகிய சாதியினர் முறையே 34, 20, 16, விழுக்காட்டினராக இதில் பங்கு பெற்றனர் என்பதனை அறிய முடிந்தது. தேவர், பிள்ளை, நாயுடு, நாயக்கர், ஆசாரி, செட்டியார், வேளார் (குயவர்) குறவர், சக்கிலியர் ஆகிய சாதியினரும் இதில் பங்கு பெறுவர். இக்கோயிலை வழிபடும் நாட்டுப்புற அடியார்கள் பெரும்பாலும் மதுரை, சிவகங்கை, முதுகுளத்தூர், அருப்புக்கோட்டை, வட்டங்களிலிருந்தே அதிக அளவில் வருகின்றனர் என்பது கள ஆய்வின் மூலம் தெரிந்தது. தமிழ் நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களை அதிகமாக ஈர்த்த பெருந்தெய்வக் கோயில் இதுவாகுமென்று அழகர் கோயிலைக் கூறலாம்.
வைணவ ஆசாரியர்களான இராமானுசர், கூரத்தாழ்வான், திருமாலையாண்டான் ஆகியோர் இக்கோயிலோடு நெருங்கிய தொடர்புடையவர்களாவர். திருமாலையாண்டான் வழியினர் இக்கோயில் புரோகிதராகக் கருதப்படுகின்றனர். கூரத்தாழ்வார் அழகர் மீது ‘சுந்தரபா கூத்தவம்’ என்னும் நூலை வட மொழியில் பாடியுள்ளார்.
இன்றைய முகவை மாவட்டத்தின் சில பகுதிகளை ஆண்டு வந்த மாவலி வாணாதிராயர் என்னும் குறுநில மன்னர் வழியினர் இக்கோயிலோடு நெருங்கிய தொடர்புடையராவர். இவர்களுடைய கல்வெட்டுகளுள் சில ‘அழகர் திருவுள்ளம்’ என்பதையே மங்கலச் சொல்லாகக் கொண்டு தொடங்குகின்றன. திருமாலிருஞ் சோலை நின்றான், சுந்தரத் தேருடையான் என்னும் பெயர்களை இவ்வழியினர் பல முறை சூட்டிக்கொண்டுள்ளனர். இக்கோயிலில் உள்ள ஒரு கல்திரிகையிலும் வெள்ளியால் ஆன ஒரு கலசப் பானையிலும் ‘திருமாலிருஞ் சோலை நின்றான்’ என்னும் பெயர் காணப்படுகிறது. கி.பி. 1464–இல் இம்மன்னனின் ஆணைப்படி இக்கோயிலில் ‘உபானம் முதல் தூபி வரை’த்திருப்பணி செய்யப்பட்டதாக ஒரு கல்வெட்டால் அறிகிறோம். கி.பி. 1757–இல் ஐதர் அலி இக்கோயிலில் அமைந்த கோட்டைப் பகுதியைச் சில நாட்கள், கைப்பற்றி இருந்தார் என்பர். நாட்டுப்புற மக்கள் தரும் கால்நடைகளும் பல்வகைத் தானியங்களுமே இக்கோயிலின் மிகப்பெரிய வருவாயாகும். இத்தலத்து இறைவன் நெடுங்காலமாகவே கால்நடை வளர்ப்போர், உழுதொழில் செய்வோர் ஆகியோரின் தெய்வமாகக் கருதப்பட்டார் என்பது அறிஞர்கள் கருத்தாகும்.தொ.ப.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 917)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2x58urhp/
தமிழ்“அழகர் கோவில்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/2x58urhp/APA
Oliyon Research. (2026). அழகர் கோவில். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2x58urhp/MLA
"அழகர் கோவில்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/2x58urhp/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment