திருநாவுக்கரசர் இயற்றிய தேவார ஐந்தாம் திருமுறையில் அமைந்துள்ள ஒரு பதிகம். ஐந்தாம் திருமுறை முழுவதும் திருக்குறுந்தொகைப் பதிகங்களால் ஆகியது. கலிவிருத்தம் குறுந்தொகை எனப்படும். இலிங்கம் சிவபெருமானுடைய அருவுருவத் திருமேனியாகும். புராணம் தொன்மையைக் குறிக்கும். எனவே இலிங்க புராணக் குறுந்தொகை என்பது, சிவபெருமானின் தொன்மைச் சிறப்பினை உணர்த்தும் பதினொரு கலிவிருத்தச் செய்யுட்களால் அமைந்த ஒரு பதிகத்தினைக் குறிப்பதாகும். திருமாலும் பிரமனும் தம்முள் யார் முதன்மையானவர் என்பதில் மாறுபாடு கொண்டு, ஒவ்வொருவரும் நாமே முதன்மையானவர் என்று செருக்குற்றுச் சிவபெருமானுடைய அடியினையும் முடியினையும் முறையே காண முற்பட்டனர். திருமால் வராக உருக்கொண்டு சிவன் அடியினையும், நான்முகன் அன்ன உருக்கொண்டு முடியினையும் தேடிக் காண முற்பட்டுக் காண இயலாது மீண்டனர். காதலாகிக் கசிந்துருகித் தேடும் அடியார்முன்பு சிவபெருமான் எளிதாகச் சிவலிங்கத் திருமேனியில் வெளிப்பட்டருளினார். சிவபெருமான் இலிங்கத்தில் தோன்றியருளுவதாக அமைக்கப்படும் திருக்கோலம் இலிங்கோற்பவமூர்த்தி எனப்படும். இது சிவபெருமானுடைய முதன்மையான கோலங்களுள் ஒன்றாகும். தொன்மைமிக்க சிவன் கோயில்களில் இலிங்கத்திருமேனி விளங்கும் கருவறைக்குப் பின்புறம் அமைந்த சுவரின் வெளிப்புறத்தின் மத்தியிலுள்ள மாடக்குழியில் இலிங்கோற்பவமூர்த்தி சுவரிலேயே புடைச்சிற்பமாக அமைக்கப்பட்டிருக்கும். சிவபெருமான் அகந்தையோடு தேடுவார்க்கு அரியனாகவும், அன்பால் தேடுவார்க்கு எளியனாகவும் விளங்குபவன் என்னும் சைவ சமய உண்மையினை உணர்த்தி நிற்பது இலிங்கபுராணக் குறுத்தொகை என்னும் பதிகமாகும். இப்பதிகத்தின் முதற் பத்துப்பாடல்களிலும் நான்முகனும் நாரணனும் சிவபெருமானிடம் அன்பு கொண்டு, சரியை கிரியை அடிப்படையில் பூவும் புனலும் சொரிந்து வழிபடாமல், செருக்குற்று முனைப்பினாற் காண முற்பட்ட செய்தி கூறப்படுகிறது. ‘புக்கணைந்து புரிந்தலர் இட்டிலர்’ என்னும், ‘மிக்குக் காணலுற்றார் அங்கிருவரே’ என்றும் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். மேலுமவர் பதினோராந்திருப்பாட்டில், ‘செங்கணானும் பிரமனும் தம்முளே, எங்கும் தேடித் திரிந்தவர் காண்கிலர், இங்குற்றேனென்று இலிங்கத்தே தோன்றினான்’ சிவபெருமான் என்று இலிங்கபுராணக் கருத்தினைப் புலப்படுத்தியுள்ளார். ‘இலிங்கபுராணக் குறுந்தொகை’ என்னும் பெயரில் உள்ள இலிங்க புராணம் என்பது புராண ஏட்டினைக் குறிக்காமல் சிவபெருமானின் தொன்மைக் கோலங்களுள் ஒன்றன் வரலாற்றினைக் குறித்து நிற்கிறது.