ஊகோசுலேவிய நாட்டில் குரோசியா (Croatia) மாநிலத்தில் செயற்பட்ட ஓர் இயக்கத்தின் பெயரே உசுடாசா (Ustasa) என்பதாகும். இது ஒரு தீவிர தேசிய இயக்கமாகும். இயக்கத்தின் தோற்றமும் நோக்கமும் ஊகோசுலேவியா (Yugoslavia) நாட்டில் அரசர் முதலாம் அலக்சாண்டர் 1929–ஆம் ஆண்டில் செர்பிய ஆதிக்கம் மிகுந்த ஒரு சருவாதிகார ஆட்சியை நிறுவினார். அப்போது ஊகோசுலேவிய பாராளுமன்றத்தில் முன்னாள் உறுப்பினராக இருந்த அண்ட்டி பவேலிக்கு (Ante Pavelic) என்பவர் ஊகோசுலேவியாவில் உள்ள குரோசியா மாகாணம் தனிநாடாகப் பிரிதல் வேண்டுமென்று கிளர்ச்சி செய்தார். இந்த நோக்கத்தோடு அவர் இத்தாலிக்குத் தப்பிச் சென்று தொடங்கிய இயக்கமே உசுடாசா எனப்பட்டது. உசுடாசாவின் செயல்கள் உசுடாசா இத்தாலிய பாசிச இயக்கத்தைப் போன்று உருவெடுத்தது. அதைப்போலவே இது பயங்கரவாதிகளின் பயிற்சிச் கூடங்களை இத்தாலி, அங்கேரி முதலிய நாடுகளில் அமைத்தது. அந்நாடுகளில் அவர்களுக்குத் தங்குமிடமும் உதவியும் கிடைத்தன. அங்கிருந்து கொண்டு அவர்கள் குரோசியாவுக்குள் பிரச்சார அறிக்கைகளை விடுத்துக் கொண்டனர். அங்குள்ள மக்களை அரசர் அலக்சாண்டருடைய ஆட்சியிலிருந்து விலகுமாறு கேட்டுத் தூண்டிவிட்டனர். வட தால்மேசியாவில் (Dalmatia) குடியானவர் கலகத்தைத் தூண்டி விட இவ்வியக்கத்தார் முயன்றனர். அரசர் அலக்சாண்டர் 1934–ஆம் ஆண்டில் மார்சேலில் கொலையுண்டார். அதில் உசுடாசாவுக்கும் தொடர்பு உண்டு என்று கருதப்பட்டது. உசுடாசா தனி நாடாகிய குரோசியாவை ஆளுதல் குரோசியா தனி நாடாக ஆதல் வேண்டுமென்ற அவர்களுடைய நோக்கம், இரண்டாம் உலகப் போரில் 1941–ஆம் ஆண்டு ஏப்பிரலில் செருமானியர் ஊகோசுலேவியாவைக் கைப்பற்றி, நாட்டைப் பிரிவினை செய்து, குரோசியத் தனி அரசை நிறுவிய போதுதான் நிறைவேறிற்று. இந்நிலையில் உசுடாசா இயக்கம் பவேலிக்குத் தலைமையில் குரோசியாவுக்குத் திரும்பி வந்து, ஓர் அரசாங்கத்தை நிறுவிற்று. ஊகோசுலேவியாவில் செருமனிக்கு எதிர்ப்பாகத் தோன்றிய இயக்கங்களைப் போரிட்டுத் தடுக்கவும், அச்சு நாட்டுப் படைகளோடு (செருமனிய, இத்தாலியப் படைகளோடு) சேருதற்கும் உசுடாசா ஒரு கட்டாயப் படையைத் திரட்டிற்று. உசுடாசாவின் கொடுஞ்செயல்களும் வீழ்ச்சியும் உசுடாசாவின் நோக்கம் வரவரக் குறுகியதாக மாறி, அதற்கு எதிர்ப்பைத் தோற்றுவித்து, நாளடைவில் அது வீழ்ச்சியடையக் காரணமாயிற்று. குரோசிய இன மக்கள் மட்டுமே வாழத்தக்கதாகக் குரோசியாவை ஆக்குதல் வேண்டுமென்று உசுடாசா இயக்கம் எண்ணிச் செயற்படலாயிற்று; இந்த இயக்கத்தார் குரோசியர் மட்டுமே அடங்கிய ஒரு படையைத் திரட்டித் தம் ஆட்சியிலிருந்த குரோசியரல்லாத மக்களை அச்சுறுத்தி, வைதிக செர்பிய, யூத மக்களைப் பெருமளவில் கொன்றொழித்தனர். இதனைக் கண்ட ஊகோசுலேவிய நடுத்தரப் போக்காளரும், இவர்களுக்கு ஆதரவும் பாதுகாப்பும் அளித்துக் கொண்டிருந்த செருமனிய, இத்தாலிய அதிகாரிகளும் இவர்களுடைய கொடிய செயல்களை எதிர்த்தனர். எனவே, குரோசியர் பலரும் இத்தகைய செயல்களை மறுக்கும் வகையாக எதிர்ப்பியக்கங்களில் சேர்ந்தனர். இவ்வியக்கம் 1945 ஆம் ஆண்டு மே மாதத்தில் அவர்களைப் பாதுகாத்து வந்த செருமனி வீழும் வரை குரோசியா நாட்டைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. செருமனி வீழ்ந்தது; பொதுவுடைமைக் கட்சியாருடைய ஆதிக்கம் வளர்ந்தது. பவேலிக்கையும், அவர்தம் ஆதரவாளர்களையும் பொதுவுடைமையாளர்கள் தாக்க வரவே, உசுடாசா இயக்கத்தார் பொதுவுடைமைக் கட்சியாரிடமிருந்து தப்பி ஓடிவிட்டனர்.