எகிப்திய அரசர்களுள் ஒருவன். எகிப்து நாட்டு அரசன் மூன்றாம் அமென்கோதெப்பு (Amenhotep III) என்பவனுக்குப் பின் கி.மு. 1375-இல் அவன் மகன் நான்காம் அமென்கோதெப்பு அரசு கட்டில் ஏறினான். அவனுக்கு அக்னதான் (Akhenaton) என்றும் ஒரு பெயர் உண்டு. இறைவன் ஒருவனே எனக் கூறி, ஒரு கடவுள் வணக்கத்தைப் புகுத்தி, சமயத்துறையில் புரட்சிகரமான மாறுதலைச் செய்தவன் இவன். அதான் (Aton) என்னும் கடவுளைப் பத்தியுடன் வணங்கும் பழக்கம் அரசன் அமென்கோதெப்பு ஆட்சியிலும் இருந்தது. அதான் என்பது சூரியனின் பெயர்களுள் ஒன்று, சூரியன்தான் கடவுள் என்று அரசன் வரம்பில்லா நம்பிக்கை கொண்டிருந்தான். சூரியன் தன் கதிர்கள் மூலமாக அருள் ஒளியை பூமியில் வீசுவதால்தான், இங்கு வாழும் ஒவ்வொரு பொருளும் உயிருடன் இருக்க முடிகிறது என்று எடுத்துக் கூறி, அரசன் சூரியனுக்கு ஒரு சின்னத்தை அமைத்தான். அச்சூரிய சின்னத்தில் உள்ள கதிர்கள் ஒவ்வொன்றும் ஒரு கையுடன் முடிவடையும்படி சித்திரித்து, அதனைக் கடவுளின் காக்கும் கரம் என்று கூறினான். இலுக்சார் ஆமோன் கோயிலில் உள்ள அக்னதான் சிலை அரசன் சமயத் துறையில் சீர்திருத்தம் செய்வதில் மிக்க ஆர்வம் காட்டினான். அமென்கோதெப்பு என்னும் தன் பெயரை அக்னதான் என்று மாற்றிக் கொண்டான். தனது இல்லத்தின் பெயரையும் மாற்றினான். நாட்டின் தலைநகருக்கும் அக்னதான் என்று பெயரிட்டான். இறைவன் அதானைச் சிறப்பிக்கும் வகையில் நூபியா (Nubia), சிரியா போன்ற மாநிலங்களில் புதிய தலைநகரங்களைத் தோற்றுவித்தான், பழைய பழக்க வழக்கங்கள் கைவிடப்பட்டதைக் காட்டுவதற்கும், இயற்கையில் நாட்டம் இருப்பதைப் புலப்படுத்துவதற்கும் ஒரு சிற்பக்கலைக் கூடத்தை அரசாங்கக் கைவினைஞர்கள் தோற்றுவித்தார்கள், எகிப்து நாட்டு வரலாற்றில் இவன் காலத்தில்தான் கலை இயற்கையோடு இயைந்து காணப்பட்டது; புதிய சமய இலக்கியமும் தோன்றியது. அதான் ஒரு அமைதியான கடவுள் என்று அரசன் கூறினான். இறைவனாகிய அதான் ஒருவன் தான் மக்களுக்கும் பிற உயிரினங்களுக்கும் அருளை வாரி வழங்குகிறான் என்று போதித்தான். அதானுக்கு வணக்கும் செய்வதைச் சிறப்பான முறையில் செம்மைப்படுத்தியதோடு மற்றெந்தக் கடவுளையும் வழிபடுதல் கூடாது என்றும் ஆணை பிறப்பித்தான். இதை நிறைவேற்றுதற்பொருட்டு, சமய குருமார்களை அரசன் துன்புறுத்தினான். அவர்களின் உணர்வுகள் முடக்கப்பட்டன. அரசன் வலிமையுள்ளவனாக இருந்ததால் அவர்களால் எதிர்ப்புத் தெரிவிக்க முடியவில்லை. எகிப்து நாட்டின் மிகப் பெரிய கடவுளான அமான் (Amon) என்ற பெயர் ஒவ்வொரு நினைவுச் சின்னத்திலிருந்தும் அழிக்கப்பட்டது. அக்கடவுள் பெயருடன் இணைந்திருந்த தன் தந்தையின் பெயரையும் அழித்தான். அக்னதான் ஓர் உண்மை மனிதனாகவும், உயர்ந்த நோக்கங்களைக் கடைப்பிடிப்பவனாகவும், தீர்க்கதரிசியாகவும் விளங்கினான். இவன் மறைவுக்குப் பின் (கி.மு. 1360) இவன் மருமகன் துதன்காமென் (Tutankhamen) அரசனானான். இவன் அக்னதானுடைய சமயச் சீர்திருத்தங்களுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்தான். அமான் கடவுளின் வழிபாட்டை மீண்டும் பழக்கத்திற்குக் கொண்டுவந்தான். அ.கே.