அல்துசிசுயோவானாசு
altucicuyōvāṉācu
அல்துசிசு யோவானாசு (Althusius, Johannes) செருமனி நாட்டைச் சேர்ந்த சட்டம் அரசியல் சார்ந்த தத்துவ அறிஞர்.
அல்துசிசு யோவானாசு (Althusius, Johannes) செருமனி நாட்டைச் சேர்ந்த சட்டம் அரசியல் சார்ந்த தத்துவ அறிஞர். இவர் தைடென்சாசென் (Diedenshausen) என்ற சிற்றூரில் ஓர் உழவரின் மகனாகப் பிறந்தார். சுவிசு மக்கள் வாழ்க்கை நெறியின் அனுபவம் இவருக்கு, நகரவைக்குரிய சுதந்திர உணர்வையும் தன்னாட்சி மேல் விருப்பத்தையும் குடியரசுச் சட்டத்துக்குட்பட்ட சாயலையும் ஏற்படுத்தியது. கேல்வின் (Calvin) என்ற சிந்தனையாளரின் (Calvinist) அடக்கப் பண்பு இவரைப் பெரிதும் கவர்ந்ததோடு ஒரு சிறந்த இலக்கிய அறிஞருமாக்கியது. கிறித்துவ நம்பிக்கையும் மக்கள் நேய உணர்வும் மக்களாட்சிப் பற்றும் உணர்வும் இவருடைய சிறந்த குணங்கள். இவர் திடமான மனம் உடையவர்; சிறந்த ஒழுக்க சீலர். ஆகையினால், இவர் தம் கருத்தை நிறுவும் அறிஞராக மட்டுமல்லாமல் சிறந்த ஆசிரியராகவும் உண்மையான, நேர்த்தியான கோட்பாடுடையவராகவும் விளங்கினார்; சமூக வாழ்க்கையின் செயலாராய்ச்சித் திறமையைப் பெரிதும் விரும்பினார்.
பேசல் (Basel) என்ற நகரில் 1586–ஆம் ஆண்டு சமூகம் சமயம் சார்ந்த சட்டத்தேர்வில் மரபுவழி உரிமை பற்றிய ஆய்வுக்கட்டுரைக்காகப் பேரறிஞர் பட்டம் பெற்றார். இவர் இது தொடர்பாகச் சிறந்த நூல் எழுதினார். இந்நூலின் மூலம் பிரஞ்சுத் தத்துவஞானி பிட்டிரசு ராமசு (Petrus Ramus) என்பவரின் ஒழுங்குமுறையைப் புகுத்தினார். அந்த முறை அப்பொழுது நிலவிய மக்கள் நேய முறையை ஒத்திருக்கவில்லை. இராமசு அவர்களின் முறை இரண்டு வாதப் பொருத்தமுடைய எண்ணங்களைப் பிரித்து, அவை ஒவ்வொன்றிலும் இன்னும் இரண்டு புதிய எண்ணங்களை உருவாக்கியது. இத்தகைய முடிவற்ற சீர்திருத்த முறையான ஒழுங்குமுறையை அல்துசிசு தம்முடைய நூல்களில் கடைப்பிடித்தார். எர்பானில் (Herborn) 1595–ஆம் ஆண்டில் இவர் பேராசிரியரானார்.
இவர் ஒரு வழக்கறிஞராகவும் இருந்தார்; நாட்டின் பெரிய மனிதர்களையும் கல்லூரித் தொடர்பான கொள்கைகளையும் எதிர்த்தார். சமய, சட்டஒழுங்குத் தொடர்பான ஒரு சிறந்த நூலை எழுதினார். இந்த அரசியல் நூல் மனித சமுதாயத்தைச் சமூக வாழ்க்கையில் இணைக்கிறது. மனிதர்கள் அரசியல் அடிப்படையில் ஒன்று சேருகின்றனர். இவர் உருசோ (Rousseau), குரோட்டியசு (Grotius) கொள்கைக்கு உடன்பட்டார். ஆனால், போடின் (Bodin) என்பவரின் அரசருக்குரிய தனியான கொள்கையை எதிர்த்தார். இவரது கொள்கைப்படி அரசு என்பது கூட்டுச் சேர்ந்த மக்களின் தன்மையே தவிர அரசருடையதன்று. மக்களின் பேராளர்கள் அடங்கிய குழு, அரசியல் விவாதங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறினார். அரசர் தலைவர்; மக்களால் அமைக்கப்பட்ட ஆணையாளர். மக்கள் கூறியபடி நடக்காவிட்டால் நீக்கப்படவேண்டும் என்ற கருத்துடையவர் இவர். மக்களின் பேராளர்கள் அடங்கிய குழு இயற்கை விதிகளையும் இறைவன் கடமையையும் கடைப்பிடிக்க வேண்டும். மனிதனின் இயற்கைத் தன்மையும் ஒருவகையில் சமுதாயக் கட்டுவிதியின் அடிப்படையாகிறது என்று கருதினார்.
இவர் கி.பி. 1603–இல் ‘அரசியல் முறைகளின் சுருக்கம்’ என்ற நூலை எழுதினார். இவர் குடும்பம், நகரம், மாநிலம், நாடு போன்ற சமூக வரிசைகளில் தலைமையானது ‘அரசு’ என்று கருதினார். வரம்பற்ற அதிகாரத்தின் நிலைக்களமாக அரசை இவர் கருதவில்லை. ஓர் அரசு தோற்றுவிக்கப்பட்டவுடன் சிறு சமூகங்களின் உரிமைகள் மறைந்து விடா. அரசு, சிறு சமூகங்களின் அதிகாரத்திற்கு உதவியாக அதன் பரந்த கடமையினைச் செய்வதற்குத் தேவையான அளவு மிகுதியான உரிமையினை மட்டும் பெற்றிருக்கும். மக்களிடையே உண்டாகும் ஒரு சமூக ஒப்பந்தத்தின் மூலமே அரசு உண்டாகிறது என்று இவர் கூறுகிறார். மனிதனின் இயற்கைப் பண்பிற்கேற்ப அரசு அமைகின்றது. ஒப்பந்தத்தைச் செய்து கொள்ளும் உரிமை சிறு சமூகத்திற்கு உள்ளதொரு நீக்க முடியாத உரிமை என்பது இவர் கருத்து. அல்துசிசு இரண்டு சமூக ஒப்பந்தங்களைக் குறிப்பிடுகின்றார். அரசை அமைப்பது முதல் ஒப்பந்தம், அரசாங்கத்தை அமைப்பது இரண்டாம் ஒப்பந்தமாகும். எனவே அரசாங்கத்திற்கு இவரது கருத்தின்படி இறைமை (Sovereignty) இல்லை. பொது மக்களின் நல்வாழ்விற்குக் கருவியாக விளங்கி வரும் பல்வேறு சிறு குழுக்கள் சுதந்திரமாசுத் தோன்றி வளர்ந்தவையாதலால் நாட்டு அரசாங்கத்திற்கு அக்குழுக்களை அழிக்கவோ கட்டுப்படுத்தவோ உரிமையில்லை என்பது இவரது கொள்கை. இதனைப் பின்னர்க் கீர்க்கி, மெயிட்லண்டு (Maitland) போன்றோர் விரிவாக்கினர். இவர் பரீசியா (Frisia)விலுள்ள எம்டன் (Emden) நகர்மன்றத் தலைவராகக் கி.பி. 1604–இல் நியமிக்கப் பெற்றார். இவர் கி.பி. 1638–இல் காலமானார்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 845)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2szteacv/
தமிழ்“அல்துசிசுயோவானாசு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/2szteacv/APA
Oliyon Research. (2026). அல்துசிசுயோவானாசு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2szteacv/MLA
"அல்துசிசுயோவானாசு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/2szteacv/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment