அதிகார ஆவணம்
atikāra āvaṇam
ஒருவர் தம் சார்பில் அல்லது தம் பெயரில் வேறு ஒருவரோ ஒன்றுக்கு மேற்பட்டவரோ நடவடிக்கை எடுப்பதற்கு அவருக்கு உரிமை வழங்கி எழுதிக் கொடுக்கும் ஒரு முறை ஆவணம் ஆகும்.
ஒருவர் தம் சார்பில் அல்லது தம் பெயரில் வேறு ஒருவரோ ஒன்றுக்கு மேற்பட்டவரோ நடவடிக்கை எடுப்பதற்கு அவருக்கு உரிமை வழங்கி எழுதிக் கொடுக்கும் ஒரு முறை ஆவணம் ஆகும். குறிப்பிட்ட ஒரு நடவடிக்கை எடுப்பதற்கு மட்டிலும், அதிகாரம் வழங்கும் ஆவணத்திற்கு, ‘சிறப்பு அதிகார ஆவணம்’ (Special Power of Attorney) என்றும், பொதுவாகச் சில நடவடிக்கைகள் எடுக்க எழுதிக் கொடுக்கப்படும் ஆவணத்திற்குப் பொது அதிகார ஆவணம் என்றும் பெயர். அதிகாரம் வழங்குபவர் ‘முதல்வர்’ (Principal); அதிகாரம் பெறுபவர் ‘முகவர்’. சட்டப்படி ஒப்பந்தங்கள் செய்துகொள்ளும் தகுதியுடையவர்கள் யாரும் தங்களுக்கு ஓர் அதிகார முகவரை நியமித்துக் கொள்ளலாம். திருமணமான பெண்களுக்கு மட்டும் இவ்வுரிமை இல்லை. யார் வேண்டுமாயினும் முகவர் ஆகலாம். ஆனால் சட்டப்படி ஒப்பந்தம் செய்துகொள்ளும் தகுதி அவரிடம் இருக்க வேண்டும். அப்போதுதான் அவர் தம் முதல்வருக்குப் பொறுப்பாளியாவார். முகவர் நியமனத்துக்கு ஊதியம் தேவையில்லை, தமக்குத் தாமே நடவடிக்கைகள் மேற்கொள்ள இயலாத ஒருவர் தமக்கு ஒரு முகவரை நியமித்துக் கொள்கிறார். தம் முதல்வரின் ஆணைக்கு ஒப்ப, அல்லது நடைமுறை வழக்கங்கட்கு உட்பட்டு ஒரு முகவர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதற்கு மாறுபட்டு அவர் செயல்படுவாராயின், தம் செயலின் விளைவுகட்கெல்லாம் தாமே தம் முதல்வருக்குப் பொறுப்பாளியாவர். ஒரு முகவர் தம் முதல்வருக்குக் கணக்கு வழக்குகளை முறைப்படி ஒப்படைக்கக் கடமைப்பட்டவர், தம் முகவர் எடுக்கும் நடவடிக்கைகள் சட்டத்துக்குட்பட்டிருக்கும்போது, அவருக்கு ஏதேனும் ஊறுவிளையுமாயின் அதற்கு முதல்வர் ஈடு செய்யக் கடமைப்பட்டவராவார்.
உத்தரவு பெற்ற ஒரு முகவர் நடவடிக்கையை எடுக்கும்போது அதற்கு உறுதுணையாக நியாயமான வேறு எந்தச் செயலையும் தாம் மேற்கொள்ளலாம். தம்மைக் கலந்து கொள்ளாமலோ தம் உத்தரவின்றியோ தம்முடைய முகவர் எடுத்துக்கொள்ளும் நியாயமான நடவடிக்கைகளை எல்லாம் முதல்வர் அங்கீகரிக்கலாம்; அவை அவருடைய ஆணையின்படி எடுக்கப்பட்டவையாகவே கொள்ளப்படும். முகவர் எடுக்கும் நடவடிக்கைகள் அனைத்தும் முதல்வரால் எடுக்கப்பட்டவை போலவே சட்டப்படி செல்லுபடியாகத் தக்கன. தாம் பெற்ற ஆணைக்குப் புறம்பாக ஒரு முகவர் செய்யும் தவறுகளும் மோசடிகளும் அவருடைய முதல்வரைக் கட்டுப்படுத்தா, காலங்குறிக்கப் பெறாத அதிகார ஆவணங்கள் கீழ்க்கண்ட காரணங்களினால் முறிவு பெறும். முதல்வர் தாம் வழங்கிய ஆணையை மீளவும் திரும்பப் பெற்றுக் கொள்ளுதல்; தாம் பெற்ற ஆணையை முகவரே விட்டுக் கொடுத்தல்; தொடர்புடைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு முற்றுப் பெறுதல்; முதல்வரோ முகவரோ இறந்து போதல் அல்லது புத்திசுவாதீனத்தை இழத்தல்; முதல்வர் தாம் வாங்கிய கடன்களைத் திருப்பிக் கொடுக்க இயலாதவர் (Insolvent) என்று நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்படுதல்.
அதிகார ஆவணத்தின்மேல் கட்டண முத்திரைவில்லை ஒட்டப்படவேண்டும். ஆவணத்திற்குச் சான்றோ பதிவோ தேவை இல்லை. ஆனால் ஓர் ஆவணத்தைப் பதிவுக்குச் சமர்ப்பிக்க உத்தரவு வழங்கி எழுதப்படும் அதிகார ஆவணத்துக்குச் சாட்சியும் பதிவும் தேவை.
அதிகார ஆவணத்தைப் பற்றிய சட்டம் 1882-இல் இயற்றப்பட்ட அதிகார ஆவணச் சட்டத்திலும் ஒப்பந்தச் சட்டத்தின் (Contract Act) பத்தாம் பகுதியிலும் உள்ளது.
பகராள், செயலுரிமைச் சட்டம், 1882
(சட்டம் 7, 1882) (The power of Attorneys Act, 1882 (Act VII of 1882)): பகராள் செயலுரிமைச் சட்டம், மாற்றுரிமையரின் பொதுவான அதிகார ஆவணத்தைக் கட்டுப்படுத்துகிறது. இந்தச் சட்டம் ஒருவர் சட்டப்படி மாற்றுரிமையரின் பத்திரத்தை எழுதுவதை அனுமதிப்பதுடன், அதிகாரம் கொடுக்கும் கொடையாளி அல்லது முதல்வர், அதிகாரம் கொடுக்கும் ஒருவருக்காகவும் கொடை பெறுபவர் மாற்றுரிமையர் அல்லது முகவர் தரப்பிலும் நடவடிக்கை எடுக்கலாம். இந்தச் சட்டம் அதிகாரமளிக்கும் நபர் (கொடையாளி அல்லது முதல்வர்) இறந்தது தெரியாமல், கொடைபெறுபவர் மாற்றுரிமையர் அல்லது முகவர், அதிகாரமளிக்கப்படும் நபருக்கு (கொடையாளி அல்லது முதல்வருக்கு)ச் செலுத்த வேண்டிய பணத்தைச் செலுத்தினால் அவருக்குப் பாதுகாப்பளிக்கிறது, மேலும் இந்தச் சட்டம் இந்தப் பத்திரத்தை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்து வைக்கவும் செயல் முறையை ஏற்படுத்தியுள்ளது. உண்மையொப்பு நகல் சான்றிட்டபடி வழங்கவும் வழிவகை செய்துள்ளது.
பதிவு செய்வது
எழுதப்படும் ஆவணமானது அதற்கேற்ற மதிப்புள்ள நீதித்துறை சாரா முத்திரைத் தாளில் எழுதப்படவேண்டும். இந்தியப் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்வதற்காக ஒரு ஆவணத்தைப் பதிவு செய்யும் அலுவலரின் முன் தாக்கல் செய்து அதிகாரமளிக்கும் அதிகார ஆவணம் முதல்வர் வரிக்கும் இடம் எந்தப் பதிவாளர் அல்லது சார்புப் பதிவாளர் அதிகார எல்லைக்குட்பட்டதோ அவரால் அத்தாட்சிக் கையொப்பம் செய்யப்பட வேண்டும்.
இந்தியப் பதிவுச் சட்டம் அமுலாகாத இடமாக இருந்தால், ஆவணத்தைக் குற்றவியல் நீதிபதியிடம் தாக்கல் செய்து, அத்தாட்சிக் கையொப்பம் பெறப்படவேண்டும். பொது அதிகார ஆவணம் இந்திய எல்லைக்கு வெளியே எழுதப்பட்டிருந்தால், அந்த ஆவணத்தைச் சான்றுறுதி அலுவலர், நீதிபதி, குற்றவியல் நீதிபதி, இந்திய நாட்டுப் பேராளர் அல்லது குடியரசுத் தலைவரின் பேராளர் முன்பு கையொப்பமிட்டு, அவருடைய அத்தாட்சிக் கையொப்பம் பெறப்பட வேண்டும் (பதிவுச் சட்டம் பி. 32, 33).
முத்திரை வரி: பொது அதிகார ஆவணம் இந்திய முத்திரை வரிச்சட்டத்தின் கீழ் செயல்படுகிறது. ஆவணத்தை முறிவு செய்வதென்பது, அதே அட்டவணையின் கீழ் பிரிவுக் கூறு 17–இன் கீழ் கூறப்பட்டுள்ளது.ஈ.ப.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 341)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2snzgjs3/
தமிழ்“அதிகார ஆவணம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/2snzgjs3/APA
Oliyon Research. (2026). அதிகார ஆவணம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2snzgjs3/MLA
"அதிகார ஆவணம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/2snzgjs3/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment