சாமக்குருவி
cāmakkuruvi
கேப்ரிமுல்ஜிபார்மீஸ் (Caprimuljiformes) வரிசையில் அதே பெயரால் வகுக்கப்பட்டுள்ள குடும்பத்தைச் சேர்ந்தது சாமக்குருவி (night jar) ஆகும்.
கேப்ரிமுல்ஜிபார்மீஸ் (Caprimuljiformes) வரிசையில் அதே பெயரால் வகுக்கப்பட்டுள்ள குடும்பத்தைச் சேர்ந்தது சாமக்குருவி (night jar) ஆகும். இது குறுகிய உறுதியற்ற அலகினைப் பெற்றது. அதனை ஈடு செய்யும் வகையில் தவளை போல அகலத் திறக்கும் வாயமைப்புடையது. காலை, மாலை, அந்திகளில் இது வாயைத் திறந்தவாறு பறந்து, பறக்கும் பூச்சிகளை இரையாகப் பிடித்து உண்ணும். இரவில் இருட்டில் பார்க்க உதவும் பெரிய கண்களையும், திறமையாகப் பறந்து பூச்சிகளைத் துரத்திப் பிடிக்க உதவும் நீண்ட இறகுகளையும், வாயையும் பெற்றது. முகத்தில் மெல்லிய கம்பி போன்ற தூவிகள் உண்டு. கால்களும், கால் விரல்களும் உறுதியற்றனவாக மரக் கிளைகளைப் பற்றிப் பிடித்து அமர இயலாத வகையில் அமைந்துள்ளன இதனால், தரையில் அமர்ந்து பகல் நேரத்தைக் கழிப்பதோடு, தரையிலேயே இரண்டு முட்டைகள் இடும். தென் இந்தியாவில் சாமக் குருவிகளில் ஐந்து சிறப்பினங்கள் காணப்படுகின்றன. வெண் பழுப்பு, சாம்பல், செம்பழுப்பு, கறுப்பு, வெள்ளை ஆகிய பல நிறங்கள் கொண்ட புள்ளிகளையும், கோடுகளையும், பட்டைகளையும் கொண்ட இவற்றின் நிறம் தரையோடு ஒட்டி அமைந்து விடுவதால், பகல் நேரத்தில் தரையோடு தரையாக அமர்ந்திருக்கும் இவற்றை எளிதில் கண்டு கொள்ள முடியாது. பின் வரும் சிறப்பினங்களிடையேயான வேறுபாடுகளை நேரில் கண்டு அறிவது கடினம். எனினும், ஒவ்வொரு சிறப்பினமும் ஒவ்வொரு வகையான குரலொலி எழுப்பும் இயல்புடையது. ஆகையால், அக்குரலொலி கொண்டு ஒருவாறு ஒரு வட்டாரத்தில் திரிவது எந்தச் சிறப்பினச் சாமக்குருவி என வேறுபடுத்தி அறிதல் கூடும்.
பெருங்காதுடைய சாமக்குருவி (Eurostopodus macrotis). தலையில் கண்ணுக்குப் பின்புறம் இருமருங்கும் காது போல் பின்னோக்கி வளர்ந்திருக்கும் கொண்டைத் தூவிகளைக் கொண்டது. வீட்டுக் காக்கை அளவுள்ளது. உடலெங்கும் கறுப்பு, பழுப்பு, சாம்பல் நிறப் புள்ளிகளோடும், கீற்றுகளோடும் கூடிய உடலும் கொண்ட இதுவே தென்னிந்தியாவில் காணப்படும் சாமக்குருவிகளுள் உருவில் பெரியது. பகல் முழுதும் வயிற்றைத் தரையிலோ, மரக்கட்டை மீதோ வைத்தவாறு படுத்துக் கிடக்கும் இது, சூரியன் மறைந்ததும், உரத்த குரல் எழுப்பிக் காடுகளில் வளர்ந்திருக்கும் மரங்களுக்கு மேல் பறக்கும் பூச்சிகளைத் தேடி வட்டமிட்டுப் பறக்கும். ஓலமிட்டு அழுவது போன்ற குரலில், ‘விஹி—வொஹீவு’ என்று இரண்டு அல்லது மூன்று முறை தொடர்ந்து குரல் கொடுக்கும். கேரளத்தைச் சார்ந்த காடுகளில் மட்டுமே குறிப்பிட்ட வட்டாரங்களில் இதைக் காணலாம்.
காட்டுச் சாமக்குருவி (Caprimulgus indicus). புறாவை விட அளவில் சிறிய இதை மலை சார்ந்த வறள் காடுகளில் தரை மட்டத்திலிருந்து 2300 மீ. உயரம் வரை காணலாம். தேக்கு, மூங்கில் வளர்ந்துள்ள காட்டுப் பகுதிகளில் விரும்பித் திரியும் இயல்புடையது. பகலில் மரக் கிளைகளின் மேலேயும், தரையில் நிழலான இடங்களிலும் பொழுதைக் கழிக்கும் இது, சூரியன் மறைந்தவுடன் எழுந்து குரலெடுத்துக் கத்தியவாறு இரை தேடத் தொடங்கும். சாமக்குருவிகளின் இறக்கை, ஆந்தைகளின் இறக்கை போல மென்மையானது. ஆனால், பறக்கும் போது இறக்கைகளில் அதிர்வு ஒலி கேட்பதில்லை. காடுகளிடையே செல்லும் பாதையின் புழுதியில் படுத்துக் கிடக்கும் இதன் கண்கள் கார் விளக்கொளியில் மாணிக்கம் போலப் பளபளக்கக் காணலாம். பட்டாம்பூச்சி, வண்டு, ஈசல் முதலிய பறக்கும் உயிரினங்களே இதன் இரையாகும். ‘சுக்-சுக்-சுக்’ எனவும், ‘சுக்கூ- சுக்கூ-சுக்கூ’ எனவும், ‘ஊக் குரூகுரூ-ஊக் குரூகுரூ’ எனவும் இரவுகளிலும், இனப் பெருக்க காலத்திலும் இரவு முழுதும் குரல் கொடுத்தவாறு இருக்கும்.
நீண்டவால் சாமக்குருவி(Caprimulgus macrurus). உருவில் முந்தைய இனத்தை ஒத்த இது சற்று நீண்ட வால் உடையது. பெண்ணின் வால் இறகின் முனைகளில் வெள்ளைத் திட்டு உண்டு .மலை சார்ந்த பசுமை மாறாக் காடுகளில் காணப்படும். ‘சவுங்-சவுங்’ எனத் தொடர்ந்து 50 முறை வரை குரல் எடுத்துக் கத்தும். 4 நொடிகளில் ஐந்து முறை ‘சவுங்’ ஒலி எழுப்பும். இனப்பெருக்க காலமான மார்ச்—ஜுலை வரையான பருவத்தில் இரவு முழுதும் இக்குரலைக் கேட்கலாம்.
சின்ன சாமக்குருவி (Caprimulgus asiatis). மைனா அளவுள்ள இதன் உடலில் மெல்லிய கருங்கோடுகள் நிறைந்திருக்கும். இந்தியா முழுதும் வறள் காடுகளிலும், கள்ளி, கற்றாழைகள் புதராக மண்டியுள்ள பகுதிகளிலும் காணப்படும் இது அவ்வப்போது இடம் பெயர்ந்து வேறு பகுதிகளுக்குச் சென்று விடுவதும் உண்டு. பழக்க வழக்கங்கள் ஏனைய சாமக்குருவி போன்றன. ‘சுக் சுக்-சுக்-சுக் சுர்ர்’ என நேரே நிற்கும் கம்பம் அல்லது கல் மேல் அமர்ந்து குரல் கொடுக்கும். இனப்பெருக்க காலத்தில் இரவு நெடுக இவ்வாறு குரல் கொடுக்க, அதன் துணை எதிர்க் குரல் கொடுத்தவாறு இருக்கும்.
வெள்ளை வால் சாமக்குருவி (Caprimulgus alfinis). மைனாவை விடச் சற்றுப் பெரிய உருவுடைய ஆணின் வால் முழுதும் வெண்மையாகவும், பெண்ணின் வால் பட்டைகளைக் கொண்டதாகவும் இருக்கும். மார்பைத் தரையோடு வைத்து உட்கார்ந்த நிலையில் இருக்கும் போது, இதன் தோள் பட்டையிலிருந்து V வடிவ வெளிர்பட்டை முதுகு வரை நீண்டிருக்கக் காணலாம். சவுக்கைச் சொடுக்கும் போது எழும் ‘சுவீஸ்’ என்னும் ஒலியை உயரமான இடத்தில் அமர்ந்து 4 அல்லது 5 நொடிக்கு ஒரு முறை எழுப்பும். —க. ரத்னம் நூலோதி. Salim Ali, and S. Dillon Riply, Hand Book of the Birds of India and Pakistan, Vol. IV, Oxford Press, New Delhi, 1970.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 59)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2qtus6k9/
தமிழ்“சாமக்குருவி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/2qtus6k9/APA
Oliyon Research. (2026). சாமக்குருவி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2qtus6k9/MLA
"சாமக்குருவி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/2qtus6k9/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment