ஓர் உலோகத்தில் இயற்பியல் அல்லது வேதி மாற்றங்கள் ஏற்படுவதன் விளைவாக, அதன் நீளுந் தன்மை (ductility) அல்லது கடினத் தன்மை (toughness) குறைவது நொய்ம்மை (embritlement) எனப் படுகிறது. ஒவ்வோர் உலோகமும் வெவ்வேறு சூழ்நிலைகளில் உட்படுத்தப்படும். உலோகங்களில் நொய்ம்மை பின் வரும் மாற்றங்களால் ஏற்படலாம். அவை வெப்ப நிலை மாற்றம், உலோகத்தின் உள் மூலக் கூற்றுக் கட்டமைப்பில் ஏற்படும் மாற்றம், அரித்தல் (corrosion) நடை பெறும் அல்லது நடை பெறாத சூழலுக்கு (environment) உட்படுத்துதல் போன்றவை. வெப்ப நிலை மாற்றத்தால் ஏற்படும் நொய்ம்மை. வெப்ப நிலை மாற்றத்தால் ஏற்படும் நொய்ம்மை, உலோகத்தின் படிகக் கூட்டமைப்பு அணிக் கோவை (crystal lattice) வழியாகவோ, நுண் படிமங்களைப் (crystallities) பிரிக்கும் எல்லைகளிலோ, பிளவு (fracture) ஏற்படுத்தும். குறைந்த வெப்ப நிலையால் ஏற்படும் நொய்ம்மை உலோகத்தில் உரு மாற்றம் (deformation) அல்லது பிளவை உண்டாக்கும். மிகு வெப்ப நிலையால் ஏற்படும் நொய்ம்மை உலோகங்களின் மூலக் கூற்றுக் கட்டமைப்புகளை மாற்றும். சூடாக்குவதால் ஏற்படும் நொய்ம்மை. எஃகுகள், பாள இரும்புகள் இவற்றைச் சூடாக்கும் போது, நொய்ம்மைக்கு உட்படுத்தப் படுகின்றன. எ-கா: எஃகு அல்லது அய உலோகக் கலவைகளை (ferrous alloys) கடுங்கரை காரத்திற்கு (caustic alkali) நீண்ட நேரம் உட்படுத்தும் போது, நொய்ம்மை உண்டாகிறது. இதனால், கொதி கலன்களில் பழுதுறல், வெடித்தல் இவை உண்டாகின்றன. தகுந்த முறையில் நீரைப் பயன் படுத்தி, இக்குறைபாடுகளை நீக்கலாம். சூழல் மாற்றத்தால் ஏற்படும் நொய்ம்மை. இவ்வகை நொய்ம்மையை நீர்ம உலோக நொய்ம்மை, தகைவு–அரித்தல் நொய்ம்மை, ஹைட்ரஜன் நொய்ம்மை என மூவகையாகப் பிரிக்கலாம். நீர்ம உலோக நொய்ம்மை. ஒரு திண்ம உலோகத்தின் ஆக்சைடற்ற பரப்பில், நீர்ம உலோகம் ஒன்றின் மெல்லிய படலத்தை வைக்கும் போது, படலத்தில் பிளவு ஏற்படுகிறது.எ-கா: பித்தளையில் பாதரசத்தை வைக்கும் போது ஏற்படும் பிளவு. தகைவு-அரித்தல் நொய்ம்மை. ஓர் உலோகத்தைத் தகைவிற்கு உட்படுத்திய உடனே, அரித்தல் இயல்புடைய அல்லது இயல்பற்ற சூழலுக்கு உட்படுத்தினால், உலோகத்தில் விரிசல், பிளவு இவை உண்டாகும். எ-டு: விண்வெளி பயன்பாடுகளில் இடம் பெறும் அமிலத்தைப் பயன் படுத்தித் தூய்மையாக்கும் போது, ஏற்படும் விரிசல். ஹைட்ரஜன் நொய்ம்மை. ஓர் உலோகத்திற்கு முலாம் பூசும் போது, அவ்வுலோகம் ஏற்கும் ஹைட்ரஜன் அணுவால் ஏற்படும் நொய்ம்மை ஹைட்ரஜன் நொய்ம்மை எனப் படுகிறது. இவ்வகை நொய்ம்மையை நீக்க உலோகத்தை மீண்டும் சூடாக்க வேண்டும். —இரா. இந்து