கி.பி. 1736-ஆம் ஆண்டில் நடைபெற்றது. மதுரை நாயக்க மன்னர் விசயரங்க சொக்கநாதனுக்குப் பின், அவர் மனைவி இராணி மீனாட்சி கி.பி. 1732-இல் அரியணையேறினாள். திருமலை நாயக்கரின் தம்பி குமாரமுத்துவின் வழிவந்த பங்காரு திருமலையின் மகனான விசயகுமாரனை இவர் மகன்மை எடுத்துக்கொண்டு ஆட்சி புரிந்தார். இவருடன் பிறந்தவரான வேங்கட பெருமாள் நாயக்கரும் ஆட்சி புரிவதில் இவளுக்கு உதவி புரிந்தார். பங்காரு திருமலை, தளவாய் வேங்கடாச்சாரியாவின் துணையுடன் மீனாட்சியை ஆட்சியிலிருந்து இறக்கச் சூழ்ச்சி செய்தார். இத்தருணத்தில் ஆர்க்காட்டு நவாப் தோசுத்து அலிகான், (Dost Alikhan) மதுரை நாட்டில் நடந்த கட்சிக் கலகத்தைப் பயன்படுத்தி அதனைக் கைப்பற்றிக் கப்பம் வாங்கத் திட்டமிட்டான்; எனவே அவன் தன் மகன் சப்தர் அலிகான், மருமகன் சந்தா சாகேப் ஆகியோர் தலைமையில் படையொன்றினை அனுப்பினான். படையும் திருச்சிக்கு வந்தது. பங்காரு திருமலை படைத்தலைவர் இருவருக்கும் கையூட்டு அளித்து, அவர்களை மீனாட்சிக்கெதிராகத் தூண்டினான். திருச்சியைக் கைப்பற்றுவது எளிதன்று எனக் கருதிய சப்தர் அலி- கான், மீனாட்சிக்கும் பங்காருவுக்கும் இடையில் உடன்படிக்கை செய்து வைப்பதாகப் பாவனை செய்து, அரசைப் பங்காருவிடமே ஒப்படைத்தான். இத்தீர்ப்பைச் செயல்படுத்தும்படி சந்தா சாகேப்பிடம் கூறிவிட்டு, அவன் ஆர்க்காடு சென்றான். நிலைமை மோசமாகி விட்டதைக் கண்ட மீனாட்சி, ஒரு கோடி உரூபா தருவதாக உறுதியளித்துச் சந்தா சாகேப்பிடம் உதவி கேட்டாள்; மேலும் பங்காருவிடம் செய்து கொண்ட ஒப்பந்தத்தைக் கைவிட வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டாள். அவனும் குர்–ஆனின் மீது சத்தியம் செய்து கொடுத்தான். அவளும் அவனைக் கள்ளமின்றிக் கோட்டைக்குள் அனுமதித்தாள். இதற்கிடையில் மீனாட்சி பங்காருவிடம் அமைதி உடன்பாடு செய்து கொண்டாள்; சந்தா சாகேப் மதுரை நாட்டைக் கைப்பற்றத் திட்டம் தீட்டினான். அவன் கி.பி. 1736–இல் புதுப்படையுடன் திருச்சிக்கு வந்தான். கோட்டைக்குள் புகுந்து மீனாட்சியிடம் நல்லவன் போல் பேசி நடித்து, ஆட்சியையும் படைப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டு, திருச்சிக் கோட்டையை வலுப்படுத்தினான். மீனாட்சியை வஞ்சகமாகச் சிறைப்படுத்தினான். அவளோ நஞ்சுண்டு தற்கொலை செய்து கொண்டாள். இராணியின் இறப்பைப் பற்றிக் கவலைப்படாது, மறுகணமே இராவணையன், கோவிந்தையன் என்ற படைத்தலைவர்களைத் தம் வயப்படுத்திய சந்தா சாகேப் அவர்களிடம் திண்டுக்கல்லைக் கைப்பற்றும்படி ஆணையிட்டான். அப்போது திண்டுக்கல் பங்காருவிடம் இருந்தது. சந்தா சாகேப்பின் 80000 குதிரை வீரர்களும் காலாட் படையினரும் பங்காருவை வென்று, திண்டுக்கல்லைக் கைப்பற்றி மதுரைக்கு முன்னேறினர். பங்காரு திருமலை தம்மாலியன்றவரை பெரும் படை திரட்டி, சில பாளையக்காரர்களது துணையுடன் சந்தாசாகேபின் படையுடன் அம்மையநாயக்கனூர் என்னுமிடத்தில் மோதினான். கடுமையான முறையில் பங்காருவின் படை முசுலிம் படையினை எதிர்த்த போதிலும் இறுதியில் தோல்வி கண்டது. பங்காரு திருமலை சிவகங்கைக்கு ஓடினான்; மதுரையும் சந்தா சாகேப் வசமானது. இப்போரின் விளைவாக மதுரைநாடு முழுவதும் சந்தா சாகேபின் கைக்குள் வந்தது. சந்தா சாகேப் வஞ்சகமாகவே மீனாட்சியை வெல்ல முடிந்தது; பங்காருவை ஒழிக்க முடிந்தது. மீனாட்சியுடன் மதுரை நாயக்கர் அரசும் வீழ்ந்தது; சூழ்ச்சி வென்றது. இதனை அடுத்துச் சந்தா சாகேப் தமது உடன் பிறந்தோர்களுள் ஒருவனை மதுரையிலும் மற்றொருவனைத் திண்டுக்கல்லிலும் ஆளுநர்களாக அமர்த்தினான்.ம. இரா.