உயிலிணைப்பு என்பது உயிலின் முடிவுகளை விளக்குவதற்காகவோ மாற்றுவதற்காகவோ மேலும் சேர்ப்பதற்காகவோ குறைப்பதற்காகவோ உயிலுடன் இணைக்கப்படும் பின்னிணைப்பாகும். இது இந்திய வாரிசுரிமைச் சட்டம் பிரிவு 2 (ஆ) இல் வரையறுக்கப்பட்டுள்ளது. இது உயிலின் ஓர் உறுப்பாகக் கருதப்படும். உயிலுக்குரிய எல்லா விதிகளும் இதற்கும் பொருந்தும். ஆனால், இது முக்கிய ஆவணத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டு இருந்தால், இது ஒரு தனி உயிலாகவே கருதப்படும். உயிலிணைப்பு (Codicil) மூல உயிலின் பின்புறத்தில் மேலெழுத்தாகவோ (Endorsement) ஒரு தனி ஆவணமாகவோ இருக்கலாம். பின்னிணைப்பாகச் சேர்க்கப்பட்ட ஒர் உயிலிணைப்பு, மூல உயில் நீக்கப்பட்ட பிறகுங்கூடத் தனித்து இயங்கும். இது சூழ்நிலைகளிலிருந்து சேகரிக்கப்படும் உயிலெழுதுபவரின் எண்ணத்தைப் பொறுத்தது. உயிலிணைப்பின் முக்கிய கூறுகளாவன: அ) இது எழுத்து வடிவிலான ஆவணமாக அமைதல் வேண்டும்; வாய்மொழியாக அமையக் கூடாது. ஆ) அப்போதிருக்கும் முந்தைய உயிலினைக் குறித்து இது அமைதல் வேண்டும்; தனித்தியங்கும் தனி ஆவணமாக இருக்கக் கூடாது. இ) முந்தைய உயிலின் அல்லது உயில்களின் வாசகங்களை விளக்குவதற்காகவோ மாறுதல் செய்வதற்காகவோ வேறு ஏதாவது சேர்ப்பதற்காகவோ இது இருத்தல் வேண்டும். இக்காரணங்களுக்காக இது அவ்வுயிலின் ஓர் உறுப்பாகக் கருதப்படுகிறது. முந்தைய உயிலினை உறுதிப்படுத்தும் வெறும் ஆவணமாகக் கூட இது இருக்கலாம். உயிலின் பொருள் விளக்கக்திற்கு உயிலிணைப்பின் மொழியமைப்புக் கருத்திற் கொள்ளப்படுகிறது. ஓர் உயிலிணைப்பு முறையாகக் கையொப்பமிடப்பட்டு முறைப்படி நிறைவேற்றப்பட வேண்டும். உயிலொன்று சட்டத்தின் செயலாலோ தரப்பினரின் செயலாலோ மறுக்கப்படலாம். ஒருவர் எத்தனை உயில்களை வேண்டுமானாலும் எழுதிவைக்கலாம்; அதற்குத் தடை இல்லை. ஆனால், ஒருவரே இரு உயில்களை விட்டுவிட்டு இறக்க முடியாது. உயில் ஒன்று நீக்கமுறும்போது தானாக உயிலிணைப்பும் நீக்கமுறும் என்பதில்லை. உயிலொன்று நீக்கமுறும்போது உயிலிணைப்பும் நீக்கமுற வேண்டும் என்ற எண்ணம் வெளிப்பட்டாலன்றி உயிலிணைப்பு நீக்கமுறாது. உயிலினைப் போன்றே உயிலிணைப்பினையும் எரித்தல் அல்லது அழித்தல் போன்ற செயல்களால் நீக்கம் செய்யலாம். உயிலைப் புதுப்பிக்கும் விதிமுறைகள் உயிலிணைப்பிற்கும் பொருந்தும். நீக்கம் செய்யப்பட்ட உயில் அல்லது உயிலிணைப்பு மீண்டும் நிறைவேற்றப்படும் போது புதுப்பிக்கப்படும். ஆ.ச.