சுவீடன் நாட்டு அரசர். இவர் வாசா அரச குடும்பத்தைச் சார்ந்தவர்; தந்தை பதினோராம் சார்லசு. இவர் பதவியேற்ற பொழுது சுவீடன் மிக நலிவுற்ற நிலையில் இருந்தது. மிக இளவயதிலேயே இவர் பதவியேற்று ஆட்சியை நடத்திச் செல்லும் தெளிவான சிந்தனையைப் பெற்றிருந்தார். அடால்பசு கசுடவசு (Adalphus Gustavus) கம்பீரமான தோற்றமும் ஆழ்ந்த புலமையும் போர்க் கலையில் வல்லமையும் படைத்தவர். இலட்சியத்தில் நாட்டமும் செயலாற்றும் திறனும் கொண்டவர். வட ஐரோப்பாவில் பிராட்டசுடண்டு (Protestant) மதக் கொள்கையைக் கடைப்பிடித்த சுவீடன் தலைமைப் பதவி பெற வேண்டும்; பால்டிக்குக் கரையோர நாடுகள் சுவீடனின் ஆதிக்கத்திற்குள் வரவேண்டும்; அதாவது, பால்டிக்குக் கடல் ஒரு சுவீடன் நாட்டு ஏரியாக மாறவேண்டும் என்ற குறிக்கோள்களைக் கொண்டிருந்தார். பின்லாந்தையும் எசுதோனியாவையும் இவர் படையெடுத்துக் கைப்பற்றினார். கி.பி. 1617-இல் இங்கிரியாகூம் கிடைத்தது. பின்னர், போலந்தோடு கடும்போரிட்டு இலிவோனியாவைப் பிடித்தார். செருமனியில் முப்பதாண்டுப் போர் நடந்து கொண்டிருந்த நேரம் அது. பிரான்சின் சமயகுருவாகவும் அமைச்சராகவும் இருந்த இரிச்சல்யூ இப்போரில் இசுபானிய, ஆசுத்திரிய அரசர்களின் அழிவையும் பிரான்சின் போர்பன் மரபின் ஏற்றத்தையும் விரும்பினார். சிறந்த அரசியல் தந்திரியான அவர், கசுடவசின் வெற்றிகளைக் கண்டு, நிதி, படை உதவி அளிப்பதன் மூலம் தம் விருப்பம் நிறைவேற வழி வகுத்தார். செருமானியச் சிற்றரசர்கள் சிலரும் கசுடவசின் தலையீட்டை விரும்பினார்கள். இவற்றின் விளைவாக முப்பதாண்டுப் போரின் மூன்றாவது காலகட்டத்தில் கசுடவசு போரில் தலையிட்டார். இக்கட்டத்தில் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகளாக மாக்டபர்க்குக் கோட்டையின் வீழ்ச்சி, கத்தோலிக்கத் தளபதியின் மறைவு, வாலன்சு டைன் திரும்பவும் தளபதியாதல் ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.அ.தி.