இங்கிலாந்தின் தலைநகரம். அந்நாட்டின் தொன்மையான நாடாளுமன்றம் இங்குக் கூடுகிறது. இன்று இது மாபெரும் தொழிற் சிறப்புப் பெற்ற நகரம். பன்னாட்டுச் செல்வத்தின் மையம்; மிகப் பெரிய துறைமுக நகரம்; உலகிலேயே மூன்றாம் பெருநகரம். இலண்டன் என்னும் பெயரைக் கேட்டவுடனே எல்லோர் மனக்கண்முன் வருவன இலண்டன் கோபுரம் (Tower of London), வெசுட்டுமினிசுட்டர் மடம் (West minister Abbey), பிக்காடில்லி வட்டம் (Piccadilly Circus), 10 தவுனிங்கு சாலை, பிரிட்டன் அருங்காட்சியகம், திரபால்கர் சதுக்கம் (Trafalgar Square), பாராளுமன்ற அவைகள் (Houses of Parliament) பெருமணிக்கூண்டு (Big Ben), பக்கிங்காம் அரண்மனை போன்றவையே. இவற்றுடன் இலண்டன் மாநகர்க் காவல்காரர் (London Bobby), இரட்டை தேம்சு நதிக்கரையில் அமைந்துள்ள இலண்டன் மாடிப் பேருந்து, இசுகாட்டுலாந்து யார்டு (Scotland Yard), எனப்படும் இலண்டன் காவல்துறை நிலையம் போன்றவையும் நினைவுக்கு வரும். இலண்டன் தேம்சு ஆற்றின் நீர்ப்போக்குடன் இணைந்தாற்போல் தென்கிழக்கு இங்கிலாந்தின் வேளாண்மைப் பண்ணைகளின் மையத்தில் அமைந்துள்ளது. இந்த ஆற்றுக் கழிமுகத்தின் தலைப்பில் வடகடலிலிருந்து 64 கி.மீ. தொலைவில் இம்மாநகர் அமைந்துள்ளது. இங்கிலாந்துச் சமவெளியில் விளையும் பொருள்கள் இவ்வாற்றின் வழியாகத்தான் வெளியே செல்கின்றன. ஐரோப்பாக் கண்டத்திலிருந்து இங்கிலாந்துக்குள் செல்லவும் இதுதான் முதன்மையான வாயிற்படியாகும். தொடக்க காலம் இங்கிலாந்தை உரோமானியர்கள் கி.பி. முதல் நூற்றாண்டில் கைப்பற்றிய போது இலடு குன்று (Lud Hill) என்னும் பெயர் கொண்ட சிற்றூர் ஒன்று தேம்சு ஆற்றின் கழிமுகத்திலிருந்து 96 கி.மீ. தொலைவில் முன்னரே நிலைத்திருந்தது. இச்சிற்றூருக்குக் கீழிருந்த கடற்கரை சதுப்பு நிலமாயிருந்தது. இலடு குன்றுப் பகுதியிலுள்ள தரை உறுதியாக இருந்தமையால் கப்பல்கள் தங்கவும் சரக்குகளைக் கப்பல்களிலிருந்து இறக்கவும் வசதி இருந்தது. இங்குள்ள ஆற்றங்கரைகள் மிகக் குறுகலாக இருந்தமையால் இங்குப் பாலம் அமைத்துக் கடப்பது எளிதாயிருந்தது. இலடு குன்றின் மேலேயே உரோமானியர்கள் கி.பி. 43–ஆம் ஆண்டில் இலண்டினியம் (Londinium) என்ற நகரைக் கட்டினார்கள். அதனைச் சுற்றித் தேம்சு ஆற்றங்கரை வரை வலிமையான சுவர்களை வளையம் போலக் கட்டினார்கள். இலண்டினியமே காலப்போக்கில் இலண்டன் என்றாயிற்று. ஏறத்தாழ கி.பி. 61–ஆம் ஆண்டளவில் வந்த தேசிடசு (Tacitus) என்னும் உரோமானிய வரலாற்றாசிரியர் அக்காலத்திலேயே இக்குடியேற்றம் வாணிகர்களின் பெருங்கூட்டத்தைக் கொண்டிருந்ததாக விவரித்துள்ளார். அவர்கள் இலண்டன் பாலம் (London Bridge) எனப்படும் முதல் பாலத்தையும் ஆற்றின் குறுக்காகக் கட்டி வடக்கிலும் தெற்கிலும் செல்லப் பாதையும் அமைத்தார்கள். ஏறத்தாழ நான்கு நூற்றாண்டுகள் பிரிட்டன் உரோமானியரின் மாநிலமாயிருந்தது. மதிற் சுவருக்குள் அமைந்திருந்த தொன்மையான இலண்டன் நகருக்கு வடபால் 2 கி.மீ. தொலைவில் தேம்சு ஆற்றங்கரையில் வெசுட்டுமினிசுடர் நகரம் (City of Westminster) தோன்றலாயிற்று. இங்கு இங்கிலாந்து மன்னர்கள் வாழ்ந்தார்கள்; பாராளுமன்றம் கூட்டப்பெற்றது; முடிசூட்டுத் திருச்சபையான வெசுட்டுமினிசுட்டர் மடமும் இங்கு அமைந்திருந்தது. ஆற்றின் நீர்ப்போக்கை ஒட்டியுள்ள இவ்விரு நகரங்களுக்கு இடையில் உள்ள பகுதியைத் தான் இசுட்ராண்டு (Strand) என்பர். ‘இசுட்ராண்டு’ என்பதற்குக் கரை என்பது பொருள். இங்கு அடுக்கடுக்காக அரண்மனைகளும் தோட்டங்களும் உருவாயின. தேம்சு ஆற்றுக்கு வடக்கே மேட்டுநிலத்தில் வீடுகள் எழுந்தன. பின்னர், தெற்கே இருந்த தாழ்நிலப் பகுதியிலும் வீடுகள் அமைந்தன. இதனைச் சௌத்வார்க்கு (Southwark) என்பர். இப்பகுதி இலண்டன் பாலத்திற்குத் தென் கோடியில் உள்ளது. இலண்டன் மாநகர் தொடக்க காலத்திலேயே கைவினைஞர், வணிகர் போன்றோர்தம் கழகங்களின் தாயகமாயிற்று. வெசுட்டுமினிசுடர் அரசர்கள் இந்நகருக்கு ஓரளவு உரிமையைக் கொடுத்திருந்தார்கள். அதனைப் பொன்னேபோற் காத்தது இந்நகரம். உரோமானியர் இலண்டனை விட்டகன்றதும், இதன் வரலாறு சில காலம் மங்கியிருந்தது. எனினும், இதன் சிறப்பு கி.பி. 604–ஆம் ஆண்டில், அதன் முதல் மதகுருவான மெல்லிடசு (Bishop Mellitus) என்பவரால் மீண்டும் பரவத் தொடங்கியது. மகா ஆல்பிரடு என்னும் மன்னரின் ஆட்சிக்காலத்தில் (கி.பி. 9–ஆம் நூற்றாண்டு) இலண்டனின் கோட்டை, கொத்தளங்கள் பாதுகாக்கப்பட்டன. வெற்றிவீரர் வில்லியமும் அவருடைய நார்மானியக் குடிமக்களும் பிரான்சிலிருந்து கி.பி. 1066–ஆம் ஆண்டில் வந்தபோது மீண்டும் இலண்டனில் பெரிய நிகழ்ச்சிகள் நடைபெறலாயின. ஒர்செசுட்டரின் (Worecestor) மதகுருவாக வந்த குண்டுல்பு (Gundulf) என்பவர் வில்லியத்தின் கருத்திற்கிணங்க கி.பி. 1078–இல் வெண்கோபுரம் (White Tower) ஒன்றைக் கட்டும்படி பணித்தார். இது இலண்டன் கோபுரத்திலுள்ள மிகத் தொன்மையான பகுதி. இது கோட்டையாகவும் அரண்மனையாகவும் சிறைக்கூடமாகவும், நீதிமன்றமாகவும் பயன்பட்டது. வெற்றிவீரர் வில்லியம் இலண்டனுக்குப் பட்டயம் (Charter) ஒன்றையும் வழங்கினார். இடைக்காலம் இங்கிலாந்தின் அரசரான முதலாம் இரிச்சர்டு (Richard I) சிலுவைப் போர்களில் பங்குபெற்று இங்கிலாந்து திரும்பியபோது புதிய முறையில் கோட்டை கொத்தளங்களை அமைக்கும் முறையை இலண்டனில் தொடங்கினார். சுற்றிச் சுற்றி வரும் சுவர்களையும், இடையிடையே கோபுரங்களையும் இணைத்தார் இவர் இரிச்சர்டு மன்னரால் தொடங்கப்பட்ட பணி மூன்றாம் என்றி (Henry III) மன்னர் காலத்தில் முழுமை பெற்றது. இலண்டன் கோபுரத்தில் ஒவ்வொரு மன்னரும் தத்தம் காலத்தில் எழுந்த கட்டடக் கலையைக் காட்டும் வகையில் புதுப்புது இணைப்புகளைக் கட்டினார்கள். முதலாம் சேம்சு (James I) மன்னரின் காலம் வரை இலண்டன் கோபுரத்தில்தான் மன்னர்கள் வாழ்ந்தார்கள். அன்றியும் அவர்தம் அக்கசாலை (Royal Mint), அரசு விலங்குக் காட்சியகம் (Royal Menagerie), பொது ஆவணக் காப்பகம், வானாராய்ச்சி நிலையம், படைக்கலச்சாலை போன்றவையும் இருந்தன. இலண்டன் கோபுரச் சிறைச் சாலையில் பலர் கழுவேற்றப்பட்டனர். அரசாங்கக் கைதிகள் இங்குச் சிறை வைக்கப்பட்டிருந்தனர். சிறைச்சாலையில் முதன் முதல் (கி.பி. 1101) அடைக்கப் பெற்றவர் தர்காம் (Durham) மதகுரு ஆவார். இறுதியாகச் சிறைவைக்கப்பட்டவர் நாசி் செருமானியத் தலைவர்களுள் ஒருவரான உருடால்பு எசு (Rudolph Hess) என்பவராவர். இவர் இரண்டாம் உலகப் போரின் போது இங்குச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இங்கு அரச மணி மகுடத்தை அலங்கரித்த விலை மதிப்பற்ற மணிகளும், ஆங்கிலப் படைக்கலன்களும் காட்சிப் பொருள்களாக வைக்கப்பட்டிருந்தன. முதலாம் என்றி கி.பி. 1135–இல் காலமானபோது, இலண்டன் நகர மக்களே அடுத்த ஆங்கில அரசரான இசுடீபன் (Stephen) என்பவரைத் தேர்ந்தெடுத்தார்கள். ஏறத்தாழ கி.பி. 1136–ஆம் ஆண்டில் ஏற்பட்ட பெரும் தீயினால் (Great Fire) மரவீடுகள் அழிந்து போயின. அழிந்தவற்றுள் புனித பால் திருச்சபையும் (St. Pauls Cathedral) அடங்கும். இலண்டன் மாநகர் மீண்டும் புதுப்பிக்கப்பட்டபோது, கல்வீடுகளும் ஓட்டுவீடுகளும் கட்டப்பட்டன. அன்றியும், சாலைகள், கழிவுநீர் போக்கும் சாக்கடைகள் போன்றவை புதிதாக அமைக்கப்பட்டன. இலண்டன் நகரில் தேனியக் குடியேற்றப் பகுதி (Danish Settlement) யொன்று பெருகி வளர்ந்திருந்தது அப்பகுதியினருள் பெரும்பாலோர் வணிகர்கள். ஆனால், கி.பி. 12–ஆம் நூற்றாண்டின் இறுதியில் செருமானியர் அவர்களை விஞ்சிவிட்டனர். காசுகனியர், பிளமியர், வட இத்தாலியர் போன்றோர் ஏனைய வணிகக் குழுக்களுள் சிறப்பானவர்கள். வட இத்தாலியர் இலண்டனில் வங்கிகளை உறுதியான அடிப்படையில் நிலைநாட்டினர். செல்வச் செழிப்பற்ற வாணிகக் கழகங்கள் பொருள் முட்டுப்பாட்டினால் தொல்லைக்காளாகி மன்னர்களிடம் பல சலுகைகளைப் பெற்றன. பின்னர், தன்னாட்சியையும் இவ்வாணிகக் கழகங்கள் இலண்டனில் நிலைநாட்டின. இலண்டனின் முதல் நகரத் தந்தையாகக் (Mayor) கருதப்பட்ட என்றி பிட்சு எயில்வின் (Henry Fitzailwin) என்பவர் ஏறத்தாழ கி.பி. 1192–ஆம் ஆண்டளவில் பதவியேற்றார். இலண்டனில் பொதுக்குழு (Common Council) ஒன்று கி.பி. 1332–ஆம் ஆண்டிலிருந்து செயற்பட்டதாகத் தெரிகிறது. நாட்டில் நிலவிய குழப்பமான சூழ்நிலை இலண்டனையும் பாதித்ததுண்டு. எனினும், இலண்டன் மக்கள் எப்போதும் வலுவான, கட்டுப்பாடான அரசையே ஆதரித்தனர். அரசியலமைப்பு வரலாற்றில் ஆர்வம் கொண்டவர்கள் இலண்டன் மாநகரைப் பற்றி நினைக்கும் போது அவர்கள் சிந்தனையில் பின்வரும் வரலாற்று நிகழ்ச்சி இடம்பெறும். இங்கிலாந்தின் பாராளுமன்றம் உலக நாடுகளுக்கு ஒரு வழிகாட்டியாக அமைந்தது. வரலாற்றிலேயே முதன்முறையாக, நகரத்தொகுதியின் பிரதிநிதிகள் மாவட்டப் பிரதிநிதிகளாகிய வீரத்திருத்தகைகளுடன் (Knights) அடுத்தடுத்து அமர்ந்து, பாராளுமன்றத்திற்கு ஒரு முழுமையைத் தந்து விளங்கிய புகழ்பெற்ற 1265–ஆம் ஆண்டு ஆங்கிலப் பாராளுமன்றம் இலண்டன் மாநகரில் கூடியது. இடைக்கால இலண்டனில் இசுடீபன் அரசர் தம் பெயரில் வெசுட்டு மினிசுட்டர் அரண்மனையில் புனித இசுடீபன் ஆலயத்தைக் கட்டினார். இங்கிருந்த வெசுட்டுமினிசுட்டர் மண்டபம் கி.பி. 1299–ஆம் ஆண்டில் ஏற்பட்ட தீயினால் அழிந்தது, இதனை இரண்டாம் இரிச்சர்டு மன்னர் கி.பி. 1400–ஆம் ஆண்டளவில் புதுப்பித்தார். இம்மண்டபத்தின் அழகான மரக் கூரைகள் இம்மன்னரால் வேயப்பட்டன. இதனுடன் அழகான தேவதைகளின் உருவச் சிலைகள் இணைக்கப்பட்டன. எலிசபெத்துக் காலம் வாணிக வளர்ச்சியாலும் மக்கள் தொகைப் பெருக்கத்தாலும் கி.பி. 16–ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் இலண்டன் பெருகி வளரலாயிற்று. மக்கள்தொகை கி.பி. 1530க்கும் 1600க்கும் இடைப்பட்ட காலத்தில் மும்மடங்காகப் பெருகியது. எட்டாம் என்றி (Hentry VIII) மன்னர் காலத்தில் சமயச் சீர்திருத்தத்தால் பதிக்கப்பட்ட மடாலய நிலங்களில் வீட்டுவசதியற்ற மக்களுக்குப் புகலிடம் அளிக்கப்பட்டது. மடாலயங்கள் கலைக்கப்பட்டமையால் வறியோர்க்கு உதவும் சமய அறக்கட்டளைகள் அற்றுப்போயின. அவற்றை ஈடுசெய்யும் நோக்குடன் கி.பி. 1547–இல் வறியோர்க்கு உதவும் மையங்கள் இலண்டனில் நிலைநாட்டப்பட்டன. மருத்துவ மனைகள், தானியக் கூடங்கள் போன்றவை அருந்தொண்டாற்றின. இக்காலத்தில் தனியார் அறக்கட்டளைகள் பல ஏற்படுத்தப்பட்- டன. அவை இன்றும் தொடர்ந்து பணியாற்றுகின்றன. மாசுக்கோவி வாணிகக்குழு (1555), துருக்கி வாணிகக்குழு (1581), கிழக்கிந்திய வாணிகக்குழு (1600) போன்றவை எலிசபெத்து அரசியாரின் காலத்தில் நிலைநாட்டப் பெற்றவை. முதலாம் எலிசபெத்து அரசியாரின் ஆட்சிக்காலத்தில் இங்கிலாந்திலேயே இலண்டன் உச்சநிலையை எய்திவிட்டது எனலாம். இசுடூவர்டு (Stuart) மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் இலண்டன் மாநகர் இரு பெரும் இடர்களுக்கு உள்ளாயிற்று. முதலாவது, கி.பி. 1665–இல் தோன்றிய பெருங்கொள்ளை நோய் (Plague) ஆகும். இரண்டாவது, கி.பி. 1666–இல் ஏற்பட்ட பெருந்தீ அது மாநகரையே அழித்துவிட்டதெனலாம். எனினும், விரைவாக இவ்விடர்களிலிருந்து இலண்டன் மீண்டது. சர் கிறிசுதோபர் இரென் (Sir Christopher Wren) என்ற திருச்சபை கட்டும் சிற்பியின் அயராத பணியினால் இந்நகரின் தொன்மையான பல திருச்சபைகள் மீண்டும் கட்டப்பட்டன. இலட்கேட்டுக் குன்றில் (Ludgate Hill) கட்டப்பட்டுள்ள புனிதப் பால் திருச்சபை இவரது திறமைக்கு எடுத்துக்காட்டாகும். இப்பெரும் திருச்சபையின் குவிமாடம் (Dome) இன்றும் இலண்டனின் உயர மிக்க இடமாகும். இலண்டன் மாநகரின் மக்கள்தொகை கி.பி. 18–ஆம் நூற்றாண்டில் ஐந்து இலட்சத்திலிருந்து பத்து இலட்சமாகப் பெருகி வளர்ந்தது. கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் இதுவே மக்கள்தொகையிலும் செல்வச் செழிப்பிலும் உலகிலேயே முதன்மையான நகரமாக விளங்கலாயிற்று. மேற்கு முனையில் (West End) அழகான வீடுகள் வெசுட்டுமினிசுட்டரைச் சுற்றிலும் கட்டப்பட்டன. பழைய நகரம் (Old City) பொருள் வளத்தால் உலக மையமாயிற்று. தேம்சு ஆற்றில் அனைத்து நாட்டுக் கப்பல்களும் அனைத்துப் பொருள்களையும் கொண்டு வந்தன இங்கிலாந்தில் ஓடும் இருப்புப்பாதைகள் எல்லாம் இலண்டனிலேயே முடிவுற்றன. இங்கிருந்து அனைத்துத் திசைகளுக்கும் பெருஞ்சாலைகள் அமைக்கப்பட்டன. அந்நகர் வாணிகத்தால் உலகில் முதன்மையான இடத்தைப் பெற்றதுடன், செய்பொருள்களின் மையமாகவும் சிறப்புற்றுள்ளது. அன்றியும், ஆடை அணிகள், உணவுப் பொருள்கள், தட்டுமுட்டுப் பொருள்கள், இயந்திரக்கருவிகள், இன்னும் பல்வேறு பொருள்களின் உற்பத்தி மையமாகவும் இது விளங்கியது. இரண்டாம் உலகப்போரின்போது குண்டு வீச்சால் இலண்டன் மிகுந்த சேதமுற்றது. செருமானியக் குண்டு வீச்சாளர் 1940 முதல் 1944 வரை இந்நகரை வீ–குண்டுகளால் (V–Bombs) கடுமையாகத் தாக்கினர். இத்தருணத்தில் இலண்டன் வாழ் மக்கள் தரைக்கடியில் வெட்டப்பட்டிருந்த சுரங்கங்களில் தூங்க வேண்டியவராயினர். பல்லாயிரவர் கொல்லப்பட்டனர். இலண்டன் பெருநகர்ப் பிரிவுகள் இன்றைய இலண்டன் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர்க் கடந்த 40 ஆண்டுகளில் இலண்டன் மாநகர் பல திருத்தங்களுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது. ‘இலண்டன்’ என்றவுடன் இலண்டன் நகர் (The City of London) அல்லது இலண்டன் பெருநகர் (Greater London) இவற்றுள் ஒன்றே நம் நினைவுக்கு வரும். இலண்டன் நகர் என்பது ‘ஒரு சதுர மைல்’ பரப்புடையது. இதன் மக்கள்தொகை 5893 (1981). இங்குப் பெரும் வங்கிகள் உள்ளன. 6.77 ஏக்கர் பரப்பைக் கொண்ட இப்பகுதியில் நாள்தோறும் பணிபுரிய ஐந்து இலட்சம் மக்கள் வந்து செல்கிறார்கள். இலண்டன் பெருநகர் என்பது நகரையும் அதனைச் சார்ந்துள்ள மாவட்டங்களையும் குறிக்கும். இது 32 பெருநகர்ப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதன் பரப்பளவு ஏறத்தாழ 1600 ச.கி.மீ. ஆகும். சாரிங்குக் கிராசு (Charing Cross) என்றும் பகுதியை மையமாகக் கொண்டு எல்லாத் திசைகளிலும் 19 முதல் 26 கி.மீ. வரை இலண்டன் பெருநகர் பரந்து விரிந்துள்ளது. இலண்டன் பெருநகர்க் குழு (The Greater London Council) என்னும் அமைப்பு பெரு நகருக்கான அனைத்துப் பணிகளையும் செய்கிறது. இலண்டனில் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் சாரிங்கு கிராசு (Charing Cross) இது இலண்டன் மாநகரின் மையம் எனக் கருதப்படுகிறது. இப்பகுதி இலண்டனை மேற்கு முனை, கிழக்கு முனை என்று இரண்டாகப் பிரிக்கின்றது. திரபால்கர் சதுக்கம் (Trafalgar Square) இது இலண்டனின் புகழ்மிக்க நினைவுச் சின்னமாகும். நெல்சன் பிரபு திரபால்கரில் பெற்ற மாபெரும் வெற்றியை இது நினைவுகூரும். இங்கிருந்து சிவப்பு நிற மாடிப் பேருந்துகளில் இலண்டனின் எப்பகுதிக்கும் பயணம் செய்யலாம். இங்குச் சுரங்க இருப்புப் பாதையின் மூன்று நிலையங்கள் அமைக்கப்பெற்றுள்ளன. இசுட்ராண்டு (Strand): சாரிங்குக் கிராசிலிருந்து வடகிழக்கில் உள்ளது இசுட்ராண்டு சாலை. இப்பகுதியில் எண்ணற்ற திரையரங்குகளும் உணவகங்களும் அலுவலகக் கட்டடங்களும் உள்ளன. பிளீட்டுச் சாலை (Fleet Strect): இசுட்ராண்டு சாலை முடிவுறும்போது வருவது பிளிட்டுச் சாலை. இங்கு இங்கிலாந்து நாட்டின் செய்தித் தாள்கள் பல அச்சாகின்றன. இலண்டனின் பெரும் நாளிதழ்களின் அலுவலகங்கள் இங்கு உள்ளன. புனிதப் பால் திருச்சபை (St. Paul’s Cathedral) பிளீட்டுச் சாலை இலட்கேட்டு வட்டாரத்தில் முடிவுறும்போது சாலையின் பெயர் இலட்கேட்டுக் குன்று (Ludgate Hill) என்று மாறுகிறது. இக்குறுகிய சாலை புனிதப் பால் திருச்சபைக்குச் செல்கிறது. இது ஓர் அழகான திருச்சபையாகும். இதன் குவிமாடத்தின் விட்டம் 34 மீ. இம்மாடத்தின் மீது வைக்கப்பட்டுள்ள சிலுவை மிகவும் உயரமானது. இங்கிலாந்து வங்கி (The Bank of England): சீப்சைடு (Cheapside) என்னும் சாலைக்கு அண்மையிலுள்ள சதுக்கத்தில் இங்கிலாந்து வங்கிக் கட்டடம் அமைந்துள்ளது. இது உலக வங்கிகள் தாயகம் என்றால் அது மிகையாகாது. இலண்டன் கோபுரம் (Thc Tower of London) இலண்டன் நகருக்குக் கிழக்கில் தேம்சு ஆற்றங்கரையில் உள்ளது இலண்டன் கோபுரம் என்னும் தொன்மையான கோட்டை. இது ஒரு வரலாற்று நினைவுச் சின்னம். பல நூற்றாண்டுகள் இது அரசாங்கச் சிறைக்கூடமாக இருந்தது. இக்காலத்தில் இது அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. இது 13 ஏக்கர் பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. வெள்ளை மன்றச் (White Hall) சாலை: வெள்ளை மன்றச் சாலை சாரிங்குக் கிராசுக்கு அருகில் உள்ளது. தேம்சு ஆறு வளைந்து செல்லும் இடத்திற்குத் தெற்கில் பாராளுமன்றக் கட்டடம் உள்ளது. இதன் வடமுனையில் பல அரசு அலுவலகங்கள் அமைந்துள்ளன. இதனையொட்டியே தவுனிங்குச் சாலை (Downing Street) உள்ளது. இங்குள்ள 10–ஆம் எண்ணுள்ள வீடு தலைமை அமைச்சர்களின் இருப்பிடம் ஆகும். தென் முனையில் இருப்பதைப் பாராளுமன்றத் தெரு என்பர். வெள்ளைமன்றத்தின் நடுவில் சென்டாபு (Cenotaph) என்னும் சதுக்கத்தில் இரு உலகப் போரிலும் நாட்டுக்காக உயிர் துறந்தவர்கள் புதைக்கப்பட்டுள்ள நினைவுச் சின்னம் இதற்கு அருகில் இசுகாட்லாந்து வார்டு (Scotland Yard) என்னும் புகழ்பெற்ற காவற்படையின் தலைமையகம் உள்ளது. பாராளுமன்றத் தெரு வெள்ளை மன்றத்தின் தென் முனையிலுள்ள பாராளுமன்றச் சாலையில் பாராளுமன்றச் சதுக்கமும் வெசுட்டுமினிசுட்டர் மடமும் உள்ளன. இப்பகுதி போக்குவரத்து நெரிசல் மிகுந்தது. வெசுட்டு மினிசுட்டர் மடமும் பாராளுமன்ற இரு அவைகளும் பாராளுமன்றச் சதுக்கத்தின் எதிரிலுள்ளன. பெரும் மணிக்கூண்டு (Big Ben) பாராளுமன்றக் கட்டடத்தின் வட முனையில் 107 மீ. உயரமுள்ள மணிக்கூண்டு உள்ளது. இங்குப் பெருமணி எனப்படும் கடிகாரம் அமைக்கப்பட்டுள்ளது. இம்மணியின் எடை 13½ கண்டிகள் (Tons). மணியின் உயரம் ஏறத்தாழ 2½ மீ. அதன் வாயின் விட்டம் 3 மீ. இங்குள்ள மணி நேரம் தவறாமைக்குப் புகழ் பெற்றது. இம்மணிக்கூண்டு 4 முகங்களைக் கொண்டது. மணிகாட்டும் கடிகாரத்தின் முகப்பு ஏறத்தாழ 8 மீ. விட்டமுடையது. வெசுட்டுமினிசுட்டர் மடாலயம் கோதிக்குக் (Gothic) கலைப் பாணியில் கட்டப்பெற்ற திருச்சபையாகும். மேற்கு முனைக் கட்டடங்களில் இது வரலாற்றுச் சிறப்புமிக்கது, இங்கிலாந்து அரசர்களும் அரசியரும் இங்கு முடிசூட்டப்பெற்றனர். சிலர் இங்குப் புதைக்கப்பட்டுள்ளனர். இங்கு முதல் உலகப் போரில் உயிர் நீத்த வீரர்களின் நினைவாக எழுப்பப்பட்ட பெயர் தெரியாப் போர்வீரனின் (Unknown Warrior) நினைவுச் சின்னம் உள்ளது. வெசுட்டுமினிசுட்டர் மடாலயத்திலிருந்து விக்டோரியா சாலை மேற்கு நோக்கி வெசுட்டுமினிசுட்டர் திருச்சபைக்குச் செல்லும். இத்திருச்சபை இங்கிலாந்திலுள்ள மிகச் சிறப்பான உரோமன் கத்தோலிக்கத் திருச்சபையாகும். பக்கிங்காம் அரண்மனை சாரிங்குக் கிராசிலிருந்து மால் சாலை (The Mall) வழியாகத் தென் மேற்கில் பக்கிங்காம் அரண்மனையுள்ளது. இங்கு இன்றைய அரச மரபினர் வாழ்கின்றனர். இவ்வரண்மனைக்கு முன்னால் விக்டோரியா அரசியார் நினைவுக் கூடம் உள்ளது. இது பளிங்குக் கற்களாலானது. மால் தெருவின் தென்பக்கத்தில் புனிதச் சேம்சு பூங்கா (St. Jame's Park) உள்ளது. இங்கு மிகப் பரந்த ஏரி ஒன்றும் உள்ளது. பக்கிங்காம் அரண்மனையில் முன்பு பக்கிங்காம் பிரபு வாழ்ந்தார். அதனை மூன்றாம் சார்சு (George III) மன்னர் விலைக்கு வாங்கித் திருத்திக் கட்டினார். விக்டோரியா பேரரசியார் வாழ்ந்த இடம் இதுவே. இன்றும் அரசியார் ஊரில் இருக்கும் நாள்களில் காலை 10.30 மணிக்குக் காவல்காரர்கள் மாறுகிறார்கள். மாறும் சமயம் பாண்டு வாத்தியம் இசைக்கிறது. இவ்வரண்மனை 40 ஏக்கர் பரப்பில் கட்டப்பட்டுள்ளது. இதன் பக்கம் பச்சைப் பூங்கா (Green Park) அமைந்துள்ளது. இவ்வளாகத்தில் உள்ள அய்டு பூங்கா (Hyda Park) புகழ்மிக்கது. இதுவே இலண்டன் மாநகரின் மிகமிக நெரிசலான மையம். அய்டு பூங்கா முற்காலத்தில் அரசர்களின் கேளிக்கை இடமாகவும் வேட்டையாடும் காடாகவும் இருந்தது. இப்போது இது பொதுமக்களுக்குத் திறந்து விடப்பட்டுள்ளது. இப்பூங்காவிற்கு அருகில் கென்சிங்டன் தோட்டம் (Kensington Garden) அமைந்துள்ளது. இது 600 ஏக்கர் பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. அய்டு பூங்காவிற்குக் கிழக்கில் மேபேர்ப் (Mayfair) பகுதி உள்ளது. இங்கு ஆங்கில நிலக்கிழார்கள் பெருமளவில் வாழ்கிறார்கள். பிக்காடிலி வளாகம் (Piccadilly Circus) மேபேருக்குத் தெற்கே 2 கி.மீ. தொலைவில் உள்ளது பிக்காடிலி வளாகம். இது இலண்டன் வாழ் மக்களின் பொழுதுபோக்கு இடம். இன்பமாகப் பொழுது போக்க விரும்பும் மக்கள் இங்குக் கூடுகிறார்கள். அருங்காட்சியகங்கள் (Muscums) புளும்சுபரி (Bloomsbury)யிலுள்ள பிரிட்டன் அருங்காட்சியகம் மிகத் தொன்மையான தேசிய அருங்காட்சியகங்களுள் ஒன்று. இங்குள்ள காட்சிப் பொருள்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்துவன. பல்வேறு வகைப் பொருள்களைக் கொண்டுள்ள இக்காட்சியகம் கருத்துக்கு விருந்தாகும். தேசிய கலைக்கூடம் (National Gallery) இது திரபால்கர் சதுக்கத்தில் உள்ள சிற்பக் கூடமாகும். இதன் அருகில் தேசிய உருவப்படக்கலைக் கூடம் (National Portraits Gallery) உள்ளது. கென்சிங்டனில் விக்டோரியா–ஆல்பர்ட்டு அருங்காட்சியகம் அமைந்துள்ளது. பிரிட்டன் அருங்காட்சியகத்திற்கு அருகில் இலண்டன் பல்கலைக்கழகத்தின் தலைமையிடம் உள்ளது. இப்பல்கலைக்கழகம் 60 கல்லூரிகள் சிறப்புப் பள்ளிகள், பல்வேறு துறைகள் போன்றவற்றைப் பெருநகர் முழுவதிலும் கொண்டுள்ளது. இலண்டன் துறைமுகம் உலகிலுள்ள பெருந்துறைமுகங்களுள் ஒன்று; வாணிகச் சிறப்புமிக்கது. உலகின் அனைத்து நாடுகளின் கப்பல்களும் இங்கு வந்து செல்கின்றன. இலண்டனுடன் இணைத்துப் பேசப்படுவது தேம்சு ஆறு. இதன் மீது இலண்டன் பெருநகரில் மட்டும் 15 பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. ‘இலண்டனில் சலிப்பேற்பட்டுவிட்டதாக எவரேனும் கூறினால். அவர் வாழ்விலும் சலித்துவிட்டார் என்பது பொருள்’ (When a man is tired of London, he is tired of life) என்பது சாமுவேல் சான்சன் (Samuel Johnson) என்பாரின் கருத்தாகும். இந்நகரின் இன்றைய மக்கள் தொகை 67,54,500 (1983). சை.வே.சி.