சிக்கலான மண் வகைகள்
cikkalāṉa maṇ vakaikaḷ
சிக்கலான மண் வகைகள் நிலத்திலுள்ள மண்ணின் தன்மையால் சிக்கலான மண் வகைகள் (problem soils) பயிர்ச் சாகுபடிக்குப் பயன்படுவதில்லை.
சிக்கலான மண் வகைகள் நிலத்திலுள்ள மண்ணின் தன்மையால் சிக்கலான மண் வகைகள் (problem soils) பயிர்ச் சாகுபடிக்குப் பயன்படுவதில்லை. ஆனால், இத்தகைய மண் வகைகளைச் செம்மைப்படுவத்துவதன் மூலம், பயிர்ச் சாகுபடிக்கு ஏற்றவையாக்கலாம். இம்மண் இரு வகைப்படும்.
நன்கு அரிக்கப்பட்ட நிலம், அதிகமான குறுகலான சாய்வான நிலம், ஆழம் குறுகலான மண் என்பன இம்மண் வகைகளில் முதல் வகையாகும். மரம் நடுதல், மலைத்தோட்டப் பயிர்களைப் பயிரிடுதல், நிலத்தைக் கிளறுதல், வெட்டி மேம்படுத்துதல் மூலம் இத்தகைய நிலங்களைச் செம்மைப்படுத்தலாம். யூகலிப்டஸ், அகேசியா போன்ற மரங்களையும் நடலாம். இரண்டாம் வகை, கார—அமில, உவர் நிலங்கள் ஆகும். இந்நிலங்களில், உப்பின் அளவு மிகுந்திருப்பதால், பயிரின் வளர்ச்சி அறவே பாதிக்கப்படுகிறது.
அமில மண் வகைகள். இத்தகைய மண் வகைகளில் கார—அமில நிலை (pH) 5.5க்கும் குறைவாக இருக்கும். இந்தியாவில் இமய மலைப் பகுதி, கடற்கரை நிலங்கள், கங்கைச் சமவெளிப் பகுதி, இந்திய முந்நீரகத்தின் கிழக்குப் பகுதிகளில் இவை காணப்படும். மிகு மழை பொழியும் பகுதிகளில், மண்ணின் கார உப்புகள் மழை நீரில் கரைந்து விடுவதாலும், அடித்துச் செல்லப்படுவதாலும் அமிலத் தன்மை அதிகரிக்கின்றது. மண்ணில் கால்சியம், மக்னீசியம், பொட்டாசியம், சோடியம் தனிமங்கள், ஹைட்ரஜன் தனிமங்களின் எண்ணிக்கை இவற்றுடன் மண்ணின் அமில நிலையும் அதிகரிக்கலாம்.
மண்ணின் அமிலத்தன்மை அதிகரிப்பதால், பயிர்களுக்குத் தேவையான ஃபாஸ்ஃபரஸ் கால்சியம் போன்ற பயிர்ச் சத்துகள் குறைந்து விடுகின்றன. இத்தகைய அமில மண் வகைகளைச் சீர்படுத்துவதற்குச் சுண்ணாம்புச் சத்து அளிக்க வேண்டும். தமிழ்நாட்டில் கோயமுத்தூர், மதுரை, இராமநாதபுரம், சேலம், தென்னார்க்காடு, வடார்க்காடு மாவட்டங்களில் இத்ததைய மண் வகை பரவியுள்ளது. சுண்ணாம்புச் சத்தின் அளவு நிலத்தின் கார—அமில நிலையை அடிப்படையாகக் கொண்டு அறுதியிடப்படும். சுண்ணாம்புச் சத்தின் அளவு 5—25 டன் வரை வேறுபடுகிறது. அமிலத் தன்மையை ஓரளவுக்குத் தாங்கி நிற்கும் பயிர்களைப் பயிரிடுவதன் மூலம், இத்தகைய நிலங்களைப் பயனுள்ளவையாக்கலாம். நெல், தேயிலை, உருளைக் கிழங்கு போன்ற பயிர்கள் கார—அமிலத் தன்மையைத் தாங்கி வளர்கின்றன.
உவர், கார மண் வகைகள். இந்தியாவில் ஏறக்குறைய 7 மில்லியன் ஹெக்டேர் நிலப் பரப்பில் (தமிழ்நாட்டில் 4,000 ஹெக்டேர்) இம்மண் வகை காணப்படுகிறது. இம்மண் வகைகளில் வளரும் பயிர்கள் குறைந்த அளவு விளைச்சலையே தரும். பயிர் இழப்பும் ஏற்படலாம். சில பயிர் வகைகள் இத்தகைய மண் வனககளில் வளர்வதில்லை. தீவனப் பயிர்களின் தரம் பாதிக்கப்படுவதால், கால்நடைகளுக்குப் பயன்படுத்த முடியாது. இம்மண் வகைகளில் மண் அரிப்பு, வெள்ளம் போன்றவை மிகுதியாக இருப்பதால், பயிர்கள் பாதிக்கப்படுகின்றன.
உப்பு நீரைப் பயிர்களுக்குப் பாய்ச்சுவதால், இம்மண் வகைகள் உண்டாகின்றன. கடற்கரைப் பகுதிகளில் கடல் நீரின் பாய்வினால் உவர், காரமண் வகைகள் உண்டாகின்றன. அப்போது மண்ணில் சோடியம், பை கார்பனேட் அயனிகள் மிகுந்திருக்கும். வடிகால் வசதி அமைப்பதன் மூலமும், ஜிப்சம் இடுவதாலும் இம்மண்ணைச் செம்மைப்படுத்த முடியும். சில பயிர் வகைகள் காரத் தன்மையை ஓரளவிற்குத் தாங்கி வளரக் கூடியவை. இவ்வகை மண் கரடு முரடாக இருக்கும். இயற்கைத் தாவரங்களின் வளர்ச்சியை இங்கு காண இயலாது; நீர் எளிதாக வடியாது; மழைக் காலத்தில் சேறு கலந்த நீர் தேங்கி நிற்கும்.
சீர்படுத்தும் முறைகள். நிலத்தைச் சமப்படுத்தி மேம்படுத்தலாம். நல்ல நீரைப் பாசனம் செய்து பண்படுத்தலாம். ஜிப்சம், சல்ஃபர் பைரட்ஸ், சல்ஃபியூரிக் அமிலம் போன்ற சீர்படுத்திகளைப் பயன்படுத்திக் கேடுகளைப் போக்கலாம். சில உழவியல் முறைகளும் இதற்குப் பயன்படுகின்றன. வடிகால் வசதியைப் பெருக்கி, கேடு தரும் உப்புகளை வெளியேற்றலாம். கார அமிலத் தன்மை 8.5—9.0 வரை உள்ள நிலங்களுக்கு ஒரு டன் ஜிப்சத்துடன் எருக்களை இட்டும், தக்கைப் பூண்டு, அகத்தி போன்ற பசுந்தாள் உரப் பயிர்களை வளர்த்து மண்ணிலேயே மட்கச் செய்தும், ஓரளவிற்குக் களரைத் தாங்கி வளரக் கூடிய நெல் வகைகளைப் பயிரிட்டும் நிலத்தைச் சீர்படுத்தலாம். —ஆர். குழந்தைவேலு
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 185)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2ewb3qnm/
தமிழ்“சிக்கலான மண் வகைகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/2ewb3qnm/APA
Oliyon Research. (2026). சிக்கலான மண் வகைகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2ewb3qnm/MLA
"சிக்கலான மண் வகைகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/2ewb3qnm/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment