பரப்புப் பூச்சு, நெய் வனம், புறப் பரப்புச் செம்மை எனப் பல சொற்றொடர்களினால், ஒரு பரப்புக்கு அரிமானப் பாதுகாப்பு அளிக்கும் செயல் முறை குறிப்பிடப் படுகிறது. பூச்சுகள் புறப பரப்புக்கு விரும்பத் தக்க பளபளப்பையும், நிறத்தையும், குறைகளற்ற தோற்றத்தையும் அளிப்பதுடன், உலோகப் பரப்புகளை அரிமானமுறாது, தடுக்கின்றன. நெகிழிப் (plastic) பரப்புகள் ஒளி படுவதால், நிலையிறக்கமாவதைத் தவிர்கின்றன. மரப் பலகைகளுக்கு நீர் புகாத படலங்களையும், கீறல் படாத பரப்புகளையும் அளிக்கின்றன. சில சிறப்பு ஒளிப் பண்புகளை வெளிப்படுத்தவும் பூச்சுகள் பயன் படுகின்றன. நீச்சல் குளங்களின் அடித் தளங்களில் ஒளியை உறிஞ்சி, நீரைச் சூடு படுத்துவதற்கும், (ராணுவ அமைப்புகளின்) ரேடார் கதிர்களை உறிஞ்சுவதற்கும், மின்னமைப்புகளுக்குக் காப்பீடு அளிப்பதற்கும் பூச்சுகள் பயன் படுவதுண்டு. மேலும் அடையாளக் குறியிடுதல், பாதுகாப்பு, சறுக்காத பரப்பு அளித்தல், வெப்ப நிலைக் கட்டுப்பாடு, ஒளிக் கட்டுப்பாடு, தூசுக் கட்டுப்பாடு ஆகியவற்றிற்கும் பூச்சுகள் உதவுகின்றன. பூச்சுகள். இவை புறப் பரப்பு–காற்று இடைவெளியைப் புறப் பரப்பு–பூச்சு இடையீடாக மாற்றுகின்றன. பூச்சுகள் உலர்தல் வாயிலாகவோ, பதப்படுத்தல் வாயிலாகவோ கடினமாகின்றன. உலர்தல் ஓர் இயற்பியல் இயக்கமாதலால், கரைப்பான் ஆவியாக வெளியேறுகிறது. பதப்படுத்தல் ஒரு வேதி இயக்கமாதலால், இங்கு ஆக்சிஜனேற்றமும் பல்லுறுப்பாக்கமும் நிகழ்ந்து, நீர்மப் பூச்சு திண்மமாகிறது. நீர்மப் பூச்சு என்பது ரெசின் அல்லது உலரும் எண்ணெய் மற்றும் கரைப்பானாலான நீர்மத்தில் நுண் சிதறல்களாக்கப் பட்ட நிறப்பொருள்கள். விரும்பத் தக்க சில சிறப்புப் பண்புகளை ஏற்றும் பொருட்டு, சில கூட்டுப் பொருள்கள் சேர்க்கப் படுகின்றன. நீரை அடிப்படையாகக் கொண்ட பூச்சுக்கள் மொத்தத்தில் 70%க்கும் மேலான பங்கு பெறுபவை. நீரை அடிப்படையாகக் கொண்ட, கட்டிடச் சிறப்புக் கலைப் பூச்சுகள் ரப்பர் பாலினாலானவை. நீரில் தொங்கல் நிலையிலுள்ள தொகுப்பு ரெசின்களே ரப்பர் பால் பூச்சு என வழங்கப் படுகின்றன. உலரும் பூச்சுப் படலத்திலிருந்து நீர்ஆவியாகி, துகள்கள் ஒருங்கிணைந்து, தொடர்ச்சியான படலமாக உருவாகி, நிறப் பொருளை இணைத்தும், புறப் பரப்புடன் ஒட்டியும் செயல் புரிகின்றன. நீர்மப் பூச்சின் இயைபு. வண்ணப் பூச்சுகளில் பொதுவாகக் கீழ்க் காணும் உட்கூறுகள் உள்ளன. அவை இணைப்பி அல்லது ஊடகம் (binder or vehicle), நிறப் பொருள் (pigment), உலர்தல் ஊக்கி (drier), கரைப்பான் அல்லது விளாவல் நீர்மம் (solvent or thinner) நிறப்பி (filler) அல்லது நீட்சிப் பொருள் (extender) என்பன. இணைப்பிகள், கரிமச் சேர்மங்கள் ஆகும். இவை சிறுமப் பல்லுறுப்பிகளாவோ, பெருமப் பல்லுறுப்பிகளாகவோ விளங்குகின்றன. இறுதிப் படலத்தில் இவை தொடர்ச்சியான தளத்தை உருவாக்குகின்றன. பூச்சில் தாக்கு வலிமை, நெகிழ்ச்சி, பளபளப்பு, வேதி எதிர்ப்பு, பதப்படும் இயல்பு ஆகியன இணைப்பியின் தன்மையைப் பொறுத்தனவாகும். இணைப்பிகளின் பொது வகைப்பாடு. இவை ரப்பர் பால், நீர் கலந்த படலப் பொருள், நீரற்ற சிதறல், கரைப்பான் கலந்தவை என வகைப் படுத்தப் படும். ரப்பர் பால் வகையில் உயர் மூலக் கூறு நிறை கொண்ட பல்லுறுப்பித் துகள்கள் நீரிய ஊடகத்தில் சிதறியுள்ளன. பல்லுறுப்பிச் சிதறல் நிலையிலுள்ளதால், கலவையின் பாகு தன்மை நீரின் பாகு தன்மையைப் பொறுத்தது. இதனால், மிக உயர் மூலக் கூறு நிறை கொண்ட பல்லுறுப்பி பயன் படுத்துவதற்கு வாய்ப்புள்ளது. நீர் ஆவியாவதால், படலம் உருவாகிறது. பல்லுறுப்பித் துகள்கள் அயனி விலக்கு விசையை மீறி ஒன்றிணைகின்றன. துகள்கள் ஒன்றையொன்று தொடுகையில், அவற்றின் புறப் பரப்பு விசைப் படலம் இறுகித் தொடர்ச்சியாவதற்கு உதவுகிறது. அக்ரிலிக் அமைப்புகளும், வினைல்–அக்ரிலிக் சக பல்லுறுப்பி அமைப்புகளும், ரப்பர் பால் (பல்லுறுப்பிப் பால்) வகையின் உட்பிரிவுகளாகும். பால்மப் பல்லுறுப்பாக்கல் முறையில் ரப்பர் பால் வகைப் பூச்சு நீர்மங்கள் தயாரிக்கப் படுகின்றன. நீர் கலந்த பூச்சுகளில் அக்ரிலிக், பாலி எஸ்டர், யூரிதேன், ஃபினாலிக், எப்பாக்சி ஆகியன குறிப்பிடத் தக்கவை. நீரற்ற நீர்மச் சிதறல்கள் (non–aqueous dispersions). 1970ல் தானுந்திகளுக்கு இவ்வகைப் பூச்சு பயன் பட்டது. தற்போது, இது துணை நிலை இணைப்பியாக மட்டுமே கொள்ளப் படுகிறது. மிகச் சிறிதளவே கலக்கப் படினும், பூச்சு உலரும் தன்மையைப் பெரிதும் உயர்த்துகிறது. வண்ணப் பூச்சு │ ┌────────────────┴────────────────┐ │ │ நிறமி குழை வனம் │ │ ┌───────┴───────┐ ┌──────────┼──────────┐ │ │ │ │ │ நிறப் பொருள் நிரப்பி படல நீர்மம் சேர்க்கைப் ஆக்கி (கரைப்பான்) பொருள் (நிரப்பி) கரைப்பான் சுமக்கும் பூச்சுகள். இவ்வகையில் முதன்மையானவை ஆல்கைடுகள், வேதி நோக்கில் பாலி எஸ்டர்களான இவை சோயா அவரை, ஆளி விதை, நீரகற்றப் பட்ட ஆமணக்கு எண்ணெய் போன்றவற்றிலிருந்து தயாரிக்கப் படுகின்றன. கட்டிடங்கள், தானுந்திகள், தொழிலகங்கள் எனப் பல்வேறு துறைகளிலும் பூச்சு உட்கூறுகளாக இவை பயன் படுகின்றன. தூனுந்திப் பூச்சுகளுக்கு அக்ரிலிக்குகளும், தொழிலகப் பராமரிப்பு, உலோகக் கலங்கள், மின் கம்பிச் சுருள் ஆகியவற்றுக்கு எப்பாக்சிகளும், காந்தப் புல அமைப்புகளுக்குப் பாலியூரித்தேன்களும், உலோக அறை கலன்களுக்குப் பாலி எஸ்டர்கள் மற்றும் திருத்தப் பட்ட மெலமின்களும் பயனாகின்றன. இணை இணைப்பியாகச் (co–binder) சைலேன் பயன் படுகிறது. வேதித் தடுப்பையும், ஈரத் தடுப்பையும் இதனால் உயர்த்த இயலும். சூடான, உருகிய நிலையிலும் கரைப்பானற்ற பூச்சுகள் பயன் படுகின்றன. குளிர்விக்கும் போது, உறைந்து, பூச்சுப் படலம் உருவாகிறது. வண்ணப் பூச்சு உலர்தல் இயக்கம். நைட்ரோ செல்லுலோஸ் மெழுகு பூச்சுகளும் வனப்பூட்டும் பால்மப் பூச்சுகளும் கரைப்பான் ஆவியாதலால் உலர்கின்றன. இவ்வகையில் இடம் பெறும் படல ஆக்கிகள் பெரும்பாலும், நேர் சங்கிலி அமைப்புக் கொண்ட பல்லுறுப்பிகள். குறுக்குப் பிணைப்பை உருவாக்க வல்ல பல்லுறுப்பிப் பூச்சுகளில் உலர்தல் ஒரு வேதி வினையாகும். இவ்வகைப் பல்லுறுப்பிகள் எக்கரைப்பானிலும் எளிதில் கரைவதில்லை. எனவே, புட்டிகளில் நீர்ம நிலையிலும், பரப்பின் மீது பூசப்பட்ட பின்பு குறுக்குப் பிணைப்புகள் மிகுந்த திண்ம நிலையிலும் காணப் படுகின்றன. பூச்சு காற்றுடன் வினையுறுதல், பூச்சின் உட்கூறுகளுக்கிடையே வினை நிகழ்த்தல் ஆகிய இரு நிலைகள் குறிப்பிடத் தக்கவை. காற்றில் ஆச்சிஜனும், நீராவியும் வினைத் திறன் மிக்க உட்கூறுகளாகும். உலரும் எண்ணெய் மற்றும் பிற நிறையுறாத சேர்மங்களின் இரட்டைப் பிணைப்புகளுடன் ஆக்சிஜன் வினையுறுகிறது. பாலி யூரித்தேனினுள்ள ஐசோ சயனேட்டுகள் காற்றிலுள்ள நீருடன் வினையுற்றுக் குறுக்குப் பல்லுறுப்பாக்கம் நிகழ்கிறது. இவ்விரு வினைகளுக்குமே காற்றுத் தேவைப்படுவதால், பூச்சின் வினையுறு பொருள்களின் மீது காற்றுப் படாதவாறு, காற்று நீக்கப்பட்ட புட்டிகளில் இவை அடைக்கப் படுகின்றன. இப்புட்டிகளில் காற்றுப் புக நேரிடின், நீர்மப் பூச்சின் மேற்பரப்பில் ஒரு மெல்லிய படலம் தோன்றுகிறது. இப்படலம் காற்றுப் புக விடும் படலமாக இருப்பின், வினை பூச்சின் முழுவதும் புகுந்து, முப்பிணைப்புக் கொண்ட பல்லுறுப்பாகி விடும். திருத்த முடியாத களி (irreversible gel) எனப் படும் இந்நிலையில் இப்பூச்சு பயனற்றதாகி விடும். மாறாக, பரப்பின் மீது பூசப் படும் வரை பூச்சு காற்றுப் படாமல் பாதுகாக்கப் பட்டிருப்பின், பூசப் பட்டவுடன் மென்மையான நீள் சங்கிலி அமைப்புக் கொண்ட பல்லுறுப்பி கடினமான முப்பரிமாண குறுக்குப் பிணைப்புக் கொண்ட பல்லுறுப்பியாக மாறி விடுகிறது. அறை வெப்ப நிலையில் இச்செயல் முறை மெல்ல நிகழ்கிறது. ஏனெனில், காற்றிலுள்ள ஆக்சிஜன் பூச்சுப் படலத்தினுள் ஊடுருவிய பின்பே, படலம் கெட்டிப் படுதல் முழுமையடைகிறது. பூச்சிலுள்ள வினையுறு மூலக் கூறுகள் மிகுந்திருப்பின், கெட்டிப் படுதல் விரைவு பெறும். குறுக்குப் பிணைப்புகள் மிகுந்த எண்ணிக்கையில் தோன்றினால், கெட்டிப் படுதல் எளிதாகும். எனவே, பல்முனை வினையுறு திறன் கொண்ட (multi functional) மூலக் கூறுகள் இடம் பெறுமாறு பார்த்துக் கொள்ளுதல் இவ்வகையில் மிகுந்த பயன் தரும். உலரும் எண்ணெய்களிலிருந்து தயாரிக்கப் படும் வெளிச் சுவர்களுக்கான பூச்சுகள் காற்றுடன் வினையுற்று உலர்வனவாகும். பூச்சுகளின் உட்கூறுகளுக்கிடையே நிகழும் வினையினால், உலரும் நிலையில் பரப்பின் மீது பூசப்படும் வரை பூச்சின் உட்கூறுகள் ஒன்றோடொன்று பிணையுறுதல் தவிர்க்கப் பட வேண்டும். இந்நிபந்தனையை உறுதிப் படுத்துவதற்கு இரு வழி முறைகள் உள்ளன. அவை வினையுறு பொருள்களைத் தனித் தனிக் கலங்களில் அடைத்து வைத்துப் பயன் படுத்தும் தருணத்தில் கலத்தல், உயர் வெப்ப நிலைகளிலோ, கதிர் வீச்சின் தாக்கத்தினாலோ மட்டுமே வினையுறக் கூடிய உட்கூறுகளை அமைத்தல் என்பன. முதலாம் முறையில், கலத்தல் சரியான விகிதத்தில் இருத்தல் கட்டாயத் தேவை. மேலும், கலவை எஞ்சியிருப்பின், பயனற்றதாகி விடக் கூடும். இரண்டாம் முறையில், பூச்சை ஒரு கரைப்பானில் நீர்த்த கரைசலாக்கி, பாதுகாத்தலும் ஏற்றதே. இக்கரைசலைப் பரப்பின் மீது பூசும் போது, கரைப்பான் ஆவியாவதால் செறிவேற்றம் நிகழ்ந்து, குறுக்குப் பிணைப்புகள் தோன்றி, பூச்சு கெட்டிப் படும். தொழிலக அடுப்புகளுக்கான மேற்பூச்சுகளும், மரப் பரப்புக்கான பாலிஎஸ்ட்டர் பூச்சுகளும் இவ்வகையில் உலர்வன. ஆளி விதை எண்ணெய் போன்ற நிறையுறாத கிளிசரால் எஸ்ட்டர்களின் உலர்தல் பின் வருமாறு அமைந்துள்ளது. இதில் உலரும் போது, கணிசமான அளவு ஆக்சிஜன் ஏற்கப் படுகிறது. தகுந்த உலர்தல் ஊக்கி கலக்கப் பட்ட ஆளி விதை எண்ணெய், அதன் எடையில் 12% வரை ஆக்சிஜனை உறிஞ்ச வல்லது. ஒன்று விட்ட இரட்டைப் பிணைப்புக்கான (Conjugated double bond) உள்ளடக்கிய கொழுப்பு அமிலங்களின் எஸ்ட்டர்களான எண்ணெய் இவ்வகையிலடங்காது. இரட்டைப் பிணைப்புகளைக் கொண்ட எண்ணெயை விட விரைவாக உலரும். காட்டாக, 25°C இல் உலர்தல் ஊக்கிகளல்லாத நிலையில், ஆளி விதை எண்ணெய் (ஒன்று விட்ட இரட்டைப் பிணைப்புகள் இல்லாதவை) உலர்வதற்கு 120 மணி நேரம் தேவைப் படுகிறது. மாறாக, ஒன்று விட்ட இரட்டைப் பிணைப்பு களைக் கொண்ட (tung) எண்ணெய் உலர்வதற்கு 48 முதல் 72 மணி நேரமே போதுமானது. ஒன்று விட்ட இரட்டைப் பிணைப்புகள் இடம் பெறாத எண்ணெயில், மூன்று இரட்டைப் பிணைப்புகளேனும் கொண்ட அமிலங்கள் இருத்தல் தேவை. அப்போதுதான், அவை அறை வெப்ப நிலையில் உலரும். இரண்டு இரட்டைப் பிணைப்புகளைக் கொண்ட அமிலங்கள், கனல் வெப்ப நிலைகளில் மட்டுமே உலர வல்லன. உலர்த்தி எனப் படும் உலோக சோப்புகளைக் கலந்தால், உலர்தல் விரைவாகும். இச்சூழ்நிலையில், ஆளி விதை எண்ணெய் 2¾ மணி நேரத்திலும், டங் 1¼ மணி நேரத்திலும் உலர்கின்றன. ஒன்று விட்ட இரட்டைப் பிணைப்புகளற்ற, எண்ணெயில் ஆக்சிஜன் உறிஞ்சப் படுகையில், ஹைட்ரோ பெராக்சைடு மிகுதியாக உருவாகிறது. இந்த ஹைட்ரோ பெராக்சைடு சிதைவுறுதலும், குறுக்குப் பிணைப்பு உருவாதலும், ஒரே சமயத்தில் நிகழ்கின்றன. ஒன்று விட்ட இரட்டைப் பிணைப்புக் கொண்ட எண்ணெயில் பூச்சு நாட்படும் போது, தோன்றும் வேதி மாற்றங்களும், புற ஊதாக் கதிர்களின் பாதிப்புக்குட்பட வல்லன. மேற்கூறிய ஆய்வு வழி முடிவுகளின் அடிப்படையில், பின் வரும் வழி முறைகள் ஒன்று விட்ட இரட்டைப் பிணைப்புகளைக் கொண்ட எண்ணெய்க்கும், ஏனைய எண்ணெய்க்கும் தனித் தனியே வருவிக்கப் பட்டுள்ளன. ஒன்று விட்ட இரட்டைப் பிணைப்புடை எண்ணெய். ஒன்று விட்ட இரட்டைப் பிணைப்புகளுடன் ஆக்சிஜன் நேரடியாகச் சேர்ந்து, இரண்டு முற்றுப் பெறாத இணை திறன்களைக் கொண்ட இயங்கு உறுப்புகளை (free radicals ) உண்டாக்குகிறது. இரட்டைப் பிணைப்புகளில் இட மாற்றம் நிகழ்ந்து, அதன் விளைவாக 1,4 மற்றும் 1,6 இருக்கைகளிலும் இயங்கு உறுப்பு மையங்கள் உருவாகின்றன. இம்மாற்றங்களில் பல்வேறு அணுக்களுக்கிடையே, எலெக்ட்ரான் பங்கீடு மட்டுமே மாறுபடுகின்றது. நிறைவுறாத இயங்கு உறுப்புகளில் இது வழக்கமானதொரு நிகழ்வாகும். இவ்வியங்கு உறுப்பு மையங்களுடன், ஆக்சிஜன் மூலக் கூறு இணைந்து, பெராக்சி இயங்கு உறுப்புகளை உண்டாக்குகிறது. பிற எண்ணெய் மூலக் கூறுகளிலுள்ள இரட்டைப் பிணைப்புகளை, இவ்வியங்கு உறுப்புகள் தாக்குவதால், குறுக்குப் பிணைப்புகள் தோன்றுகின்றன. வளர்ந்து வரும் ஈருறுப்பின் இரு முனைகளும் ஒன்றோடொன்று இணையும் போது, பல படியாக்கம் முற்றுப் பெறுகிறது. பாலி பெராக்சைடுகள் நிலைத் தன்மை மிக்கவையாயினும், ஒளியும், வெப்பமும் இடையறாது தாக்கும் போது, சிதைவுற்ற அல்காக்சி உறுப்புகளைத் தருகின்றன. இவ்வுறுப்புகளின் இணைப்பால், ஈதர்கள் உண்டாகின்றன. உலர்தல் ஊக்கி அல்லது உலர்த்தி. எண்ணெய் வகை ஊடகத்தில் கரைய வல்ல அமிலப் பகுதியைக் கொண்ட உலோக சோப்பு, உலர்த்தி எனப் படுகிறது. தொகுப்பு முறையில் தயாரிக்கப் படும் ஆக்டாயிக் அமிலம் பெரும்பாலும் இதற்குப் பயனாகிறது; அடக்க விலை காரணமாக, நாப்தீனிக் அமிலங்களும் பயன் படுத்தப் பட்டு வந்துள்ளன. உலர்த்தி, பூச்சுகளுக்குக் கூட்டுப் பொருளாகையால், ஒரு விழுக்காட்டுக்கும் குறைவாகவே சேர்க்கப் படுகின்றது. முதனிலை உலர்த்திகள் நல்ல வினையூக்கியாகும்; மாறுபட்ட இணை திறன்களைக் கொண்டஉலோகங்கள் இதில் உள்ளன. எ–டு: கோபால்ட், மாங்கனீஸ். இவ்வுலோகங்கள் ஆக்சிஜன் உறிஞ்சப் படுதலையும், 2 பெராக்சைடு இயங்கு உறுப்புகளாகச் சிதைவுறுதலையும் ஊக்குவிக்கின்றன. காரீயம் ஒரு துணை நிலை உலர்த்தியாகும். அது ஆக்சிஜன் ஏற்பதை மட்டும் ஊக்குவிக்கிறது. சிர்கோனியம், கால்சியம், சீரியம் ஆகியன மேலும் சில துணை நிலை உயர்த்திகளாகும். காரீயம் ஒரு திரள் வகை (cumulative) நச்சாகையால், வீட்டுக்கான பூச்சுகளில் காரீய அடக்கத்திற்கு அனுமதிக்கப் பட்ட உச்ச வரம்பு, ஐரோப்பாவில் 0.25% ஆகவும், அமெரிக்காவில் 0.06% ஆகவும் உள்ளது. இதனால், பல பூச்சுத் தயாரிப்பாளர்கள் காரீயமற்ற பூச்சைத் தயாரிக்க முனைந்ததுண்டு. படலத்தின் மேல் அடுக்குகளை விரைவாகவும், உள் மற்றும் அடி மட்ட அடுக்குகளை மெல்லவும் குளிர்விக்கவும், வினையூக்கியாகக் கோபால்ட் செயல் படுவதால், கீழ் அடுக்குகள் இறுகும் போது, முன்பே உருவாக்கப் பட்ட மேலடுக்கு வெடிப்புறுகிறது. எனவே, கோபால்ட்டுடன் சிறிதளவு சிர்கோனியம் அல்லது கால்சியம் சேர்க்கப் பட்டு, இக்குறைபாடு நீக்கப் படுகிறது. அடுப்புகளுக்கும், உலைகளுக்குமான பூச்சுகளில் கோபால்ட், மாங்கனீஸ், சீசியம், இரும்பு ஆகியன பயனாகின்றன. 1970இல் அலுமினியம் அல்காக்சைடு சார்பு பொருள்கள் புதிய வகை உலர்த்திகளாகப் புகுத்தப் பட்டன. என்னும் பொது வாய்ப்பாட்டைக் கொண்ட இச்சேர்மங்களின் பதிவீட்டுத் தொகுதிகளான X, Y, –OR ஆகியன ஆல்க்கைடுகளிலுள்ள ஹைட்ராக்சில், கார்பாக்சில் தொகுதிகளில், ஹைட்ரஜன் அணுக்களுடன் வினையுற்று Hx,Hy,ROH போன்ற ஆவியாகும் பொருள்களை வெளி விடுகின்றன. இதன் விளைவாக, பல அல்க்கைடு மூலக் கூறுகள் ஒன்றோடொன்று இணைகின்றன. இவ்வுலர்த்திகளைப் பயன் படுத்தி உருவாக்கப் படும் ஆக்சைடுகள் நீர் எதிர்ப்பு, பழுப்புறாமை, பளபளப்புக் குன்றாமை ஆகிய பண்புகளைப் பெற்றிருக்கின்றன. உலர்தல் இயக்கங்களுடன் இணைந்துள்ள பல்வேறு பண்புகள் அட்டவணை 1இல் தொகுக்கப் பட்டுள்ளன. நிறமி. வனப்புறு வண்ணம் அளிப்பதற்காகவும், முந்தைய பூச்சின் வண்ணத்தை மறைப்பதற்காகவும், பூச்சுப் படலத்தின் வலிவைக் கூடுதலாக்குவதற்காகவும், பூச்சுப் படலத்தின் ஒட்டும் திறனை உயர்த்துவதற்காகவும், பூச்சின் உறுதியையும், உழைப்பையும், பரிமாணமுறுதலைத் தடுப்பதற்காகவும், மெருகூட்டுவதற்காகவும் வண்ணப் பூச்சுகளில் நிறப் பொருள் சேர்க்கப் படுகிறது. ஒரு குறிப்பிட்ட நிறமியைத் தேர்ந்தெடுப்பதற்குப் பின் வரும் நிறமிப் பண்புகளை ஆய்ந்தறிதல் தேவை. அவை நிறமூட்டும் திறன் (tinting strength), ஒளியில் நிற நிலைப்பு (light fastness), கசியும் தன்மை (bleeding), மறைக்கும் திறன் (hiding power), ஒளி விலகல் எண் (refractive index), துகள் அளவு, துகள் வடிவம், அடர்த்தி, வேதி வினைத் திறன், வெப்பச் சிதைவு எதிர்ப்பு என்பன. ஒரு வெண்ணிறப் பொருளுடன் மாற்று நிறப் பொருளைக் கலந்து, வெளிறிய சன்னமான நிறத்தை உருவாக்கலாம். இதற்குத் தேவைப்படும் நிறமியின் அளவு, எவ்வளவுக்கு எவ்வளவு குறைவாக உள்ளதோ, அந்த அளவிற்கு அந்நிறமியின் நிறமூட்டும் திறன் கூடுதலாகும். ஒரு நிறமியின் நிறமூட்டும் திறனுக்கும், புறப் பரப்பை மறைக்கும் திறனுக்கும் தொடர்பு இல்லை. எனினும், பொதுவாக ஒளி புக விடும் திறன் கொண்ட நிறமிகளின் மறைக்கும் திறன் கூடுதலாகும். ஒரு குறிப்பிட்ட நிறப் பொருளின் நிறத்தை வெளிறிய சாயலுக்கு மாற்றுவதற்குத் தேவைப் படும் ஒரு வெண்ணிறமியின் (white pigment) அளவு அதன் நிறமூட்டும் திறனாகும். நிறம் குன்றாமை. சூரிய ஒளியின் புற ஊதாக் கதிர்கள் பூச்சின் மீது விழும் போது, நிறமி மூலக் கூறுகளில் வேதி மாற்றத்தைத் தோற்றுவிக்கின்றன வேதிக் கூட்டமைப்பு மாறுவதால், ஒளி உறிஞ்சும் பண்பும் மாறி விடுகிறது. இதன் இறுதி விளைவாக நிறச் சாயல் மாற்றம் நிகழ்கிறது. கசிவு. அனைத்து நிறமிகளும், அனைத்துக் கரைப்பான்களிலும் கரைவதில்லை. சிவப்புப் பூச்சின் மீது, வெள்ளைப் பூச்சினால் பெயர் எழுதும் போது, சிவப்பு நிறமிகளே இக்குறைக்கு உள்ளாவதால், இதனைக் குருதிக் கசிவு (bleeding) என்பர். பரப்பை மறைக்கும் திறன். பொதுவாக, பூச்சுப் படலங்களின் தடிமன் 25–100 மைக்ரோ மீட்டர் பரப்பில் இருக்கும். புறப் பரப்பை நன்கு மறைக்க வல்ல நிறமிகள் ஒளியை ஊடுருவாமல் தடுக்கும் தன்மை பெற்றிருத்தல் வேண்டும். ஒளியை உறிஞ்சுவதாலும், சிதறச் செய்வதாலும், இத்தன்மை பெறப் படுகிறது. ஒரு பூச்சின் மறைக்கும் திறன் எனப் படுவது 1 லி. பூச்சினால் முழுமையாக மூடப் பட்ட பரப்பின் அளவு ச.மீ. ஆகும். ஒரு நிறப் பொருளின் மறைக்கும் திறன் எனப் படுவது 1 கி.கி. நிறப் பொருளை உள்ளடக்கிய பூச்சினால் மூடப்படும் பரப்பளவு ஆகும். பூச்சின் மறைக்கும் திறனைப் படும் ஒளியின் அலை நீளம், அடர்வு நிறமியின் ஒளி விலகல் எண், நிறமித் துகளளவு, நிறமித் துகள் வடிவம் ஆகியவை பாதிக்கின்றன. ஒளி விலகல் எண். வெண்ணிற நிறமிகள் சிறு கட்டி வடிவில், ஒளி புக விட வல்லனவாகவும், துகள் வடிவில் வெண்ணிறத்தில் ஒளி புகா விடா இயல்புடையனவாகவும் உள்ளன. இவற்றின் ஒளி விலகல் எண் வரம்பு 2.27 என இருப்பதே இதற்குக் காரணமாகும். துத்தநாக ஆக்சைடு : 2.01; துத்தநாக சல்பைடு : 2.37. இவ்வரம்பு, பூச்சின் படல ஆக்கிகளின் ஒளி விலகல் வரம்பை விடக் (1.4–1.6) கூடுதலாகும். இதன் விளைவாகவே, TiO₂ பளிச்சென்ற வெண்மையுடனும், மறைக்கும் திறன் மிக்கனவாகவும் உள்ளன. நிரப்பும் வகை (extender) நிறமிகளின் ஒளி விலகல் எண்கள் படல ஆக்கிகளின் ஒளி விலகல் எண்களினின்றும் பெரிதும் மாறுபட்டனவாக உள்ளமையால், அவை மறைக்கும் திறனைப் பெற்றிருப்பதில்லை. கால்சியம் கார்போனேட்டும், கயோலினும் இவ்வகையில் குறிப்பிடத் தக்கவை. துகள் அளவு. புறப் பரப்பு இடைவெளிகளில் பெரும அளவு ஒளிச் சிதறல் நிகழ்வதற்குரிய நிறமித் துகள்அளவும், துகள்களுள் ஒளியின் அலை நீளமும் சற்றேறக் குறையச் சமமாக இருக்கும். துகளின் ஏற்ற குறுக்களவு, காற்றில் ஒளியின் அலை நீளத்தில் பாதியளவு இருக்கும்; அதாவது,0.2–0.4μm. இவ்வரம்புக்கு மேற்பட்ட நிலையில், குறிப்பிட்ட எடை நிறமியில் அமையக் கூடிய துகள் இடைவெளிகளின் எண்ணிக்கை குறைகிறது. நிறமியின் துகள் அளவு கறுப்புக் கார்பனில் 0.01 μm தொடங்கி நிரப்பி வகை நிறமி 50 μm வரை பரந்துள்ளது. எந்தவொரு நிறமிப் பொருளிலும், துகள்கள் யாவும் ஒரே அளவில் இருப்பதில்லை. ஒரு குறிப்பிட்ட எடை நிறமிப் பொருள்களை நுண் துகளாக மாற்றத் துகளில். புறப் பரப்பு அளவு (surface area) கூடுதலாகிறது. 1.கி. ரூட்டைல் வகை TiO₂ (துகள் குறுக்களவு 0.2–0.3 μm) இன் புறப் பரப்பு 12 மீ²; ஆனால், அதே 1 கி. நுண் துகள் சிலிக்கா (குறுக்களவு 0.015–0.2 μmஇன் புறப் பரப்பு 190 மீ² ஆகும். நிறமியின் புறப் பரப்பு அளவை அதன் எண்ணெய் உறிஞ்சும் திறனிலிருந்து அறிந்து கொள்ளலாம். 100 கி. நிறப் பொருளை ஒரு பசையாக மாற்றுவதற்குத் தேவைப் படும் பதப் படுத்தப் படாத ஆளி விதை எண்ணெயின் அளவே அந்நிறமியின் எண்ணெய் உறிஞ்சு திறனாகும். துகள் வடிவம். நிறமித் துகள்கள் உருண்டையாகவோ, கன சதுர வடிவிலோ, முண்டு முடிச்சாகவோ (Nodular), ஊசி அல்லது குச்சி வடிவிலோ (acicular), தட்டையாகவோ (lammellar) இருக்கக் கூடும். துகளின் வடிவம் துகள்களின் ஒருங்கிணைப்பை வரையறுக்கிறது. கற்காரைக்கு இரும்பு வலிவூட்டுவது போன்ற பூச்சுப் படலங்களுக்குக் குச்சி வடிவிலான நிறமிகள் வலுவூட்டுகின்றன. தட்டை வடிவிலான துகள், ஒன்றின் மீது ஒன்று படிந்து, நீர் உட்புகாதவாறு தடுக்கும். அலுமினியம், மைகா நிறமிகள் இவ்வகையானவை. அடர்த்தி. சம எடையில் ஒப்பிடப் படும் இரு பூச்சுகளில் அடர்த்தி குறைவாக உள்ள பூச்சு பெரிதும் விரும்பப் படும். இதன் காரணமாகவே, நிறப் பொருளின் பருமனைக் கூட்டுவதற்கு அடர்த்தி குறைவான, நிரப்பி வகைப் பொருள்கள் பயன் படுகின்றன. வினையுறும் தன்மை. வினையுறும் தன்மை கொண்ட சில நிறமிகளைக் குறிப்பிட்ட சில பூச்சுகளில் புகுத்த இயலாது. எடுத்துக் காட்டாக, துத்தநாக ஆக்சைடு அமில–கார ஈரியல்பு கொண்டது. எனவே, அமிலத் தொகுதிகள் மிகுந்த ரெசின்களுடன் வினையுறும் சோப்புகள் உருவாகி, குறுக்குப் பிணைப்புகள் தோன்றும். இதனால், சேமித்து வைக்கையில் பாகு தன்மை உயரும். மாறாக, சில நிறமிகள் அவற்றின் வினையுறு தன்மைக்காகவே விரும்பப் படுகின்றன. துத்தநாக, காரீய மற்றும் ஸ்ட்ரான்சியம் குரோமேட்டுகள் அவற்றின் அரிமான எதிர்ப்புத் திறனுக்காகவே சேர்க்கப் படுகின்றன. நிறமி வகை. நிறமிகள் இரு வேறு அடிப்படைகளில் இயற்கை அல்லது தொகுப்பு வகை, கரிம அல்லது கனிம வகை எனப் பிரிக்கப் படுகின்றன. இயற்கையில் கிடைக்கும் நிறமிகளுள், பெரும்பாலானவை கனிம வகையைச் சார்ந்தவையாகும். ஆக்கர் (ochre), சியன்னா (sienna) சிவப்பு, மஞ்சள் மற்றும் கறுப்பு இரும்பு ஆக்சைடு, பெரும்பாலான தொகுப்பு நிறமிகள் ஆகியன கரிம வகையின. இவை கனிம உள்ளீட்டின் மீது கரிமப் பொருள்கள் படிவிக்கப் பட்டுத் தயாரிக்கப் படுகின்றன. காட்டாக, அலுமினியம் ஹைட்ரோக்சைடு மீது அலிசரின் படிவிக்கப் பட்டுப் படலங்கள் (lakes) உருவாக்கப் படுகின்றன. TiO₂ஐப் போன்ற தூய வெண்ணிறப் பொருளோ, கார்பனைப் போன்ற கரிய நிறப் பொருளோ கரிம வகைகளில் கிடைக்காது. கரிம வகைகளை விடக் கனிம வகைகள் புற ஊதாக் கதிர்த் தாக்கத்திற்கு ஈடு கொடுக்கக் கூடியவை. கரிம நிறப் பொருள்கள் 300°Cக்குள்ளாகவே சிதைவுறுகின்றன. கரிம நிறமிகள் அரிமான எதிர்ப்பு இயல்புடையவை. எனினும், அழகுக்கும், குளிர்ச்சிக்கும் கரிம வகையே சிறந்தவை. சாலோசயனின், குவினக்ரிடோன், பெரிலின், பெரினோன், டயாக்சசீன் ஆகியன கரிம வகையில் குறிப்பிடத் தக்கவையாகும். நீர்ப்பி (thinner) அல்லது கரைப்பான். நிறமியையும், இணைப்பியையும் நன்கு கலப்பதற்குப் பின் வரும் நீர்ப்பிகளுள் ஒன்றைப் பயன் படுத்தலாம். அவை நீர், பாரபின், டெர்ப்பீன், அரோமாட்டிக் ஹைட்ரோ கார்பன், ஆல்கஹால், எஸ்ட்டர், கீட்டோன், ஈதர் நைட்ரோ பாரபின், குளோரோ பாரபின் என்பன. பால்ம வகைப் பூச்சுக்கள் யாவற்றிலும் தொடர் ஊடகமாக அமைவது நீராகும். நீரைத் தனியாகவோ, ஆல்கஹாலுடன் கலவையாகவோ பயன் படுத்தலாம். எவ்வகை ரெசினையும் நீரில் கரையச் செய்யலாம். பொதுவாக, ஒரு பல்லுறுப்பியில் கார்பாக்கில் தொகுதிகளைத் தக்க அளவில் புகுத்தி, அதன் அமில மதிப்பை 50 அல்லது அதற்கு மேற்படுமாறு செய்யலாம். பின்பு இத்தொகுதிகளை அம்மோனியா அல்லது ஏதேனும் ஓர் அமீனைக் கொண்டு நடு நிலையாக்கி, நீரில் கரைய வல்ல உப்பாக மாற்றலாம். சான்றாக, உலர் எண்ணெயை மலியிக் நீரிலியுடன் வினையுறுத்தி, அமிலத் தன்மையை ஏற்றலாம். கார்பாக்சில் தொகுதிகள் முழுமையாக நடு நிலையாக்கப் படவில்லை யெனில், ஒரு பால்மம் தோற்றுவிக்கப் படும். இவ்வுப்பின் பல்லுறுப்புப் பகுதி எதிர் மின்னேற்றம் கொண்டது; எனவே, ஒரு மின் கல அமைப்பில் நேர் மின் முனையை நோக்கி நகர்ந்து, அம்மின் முனையில் மின்னிறக்கம் அடைகிறது. இம்மின் முனை ஓர் உலோகப் பொருளாக இருப்பின், அதன் மீது பூச்சுப் படலம் தோன்றும். படியும் பூச்சின் நுண் துளைமை குறைவாக இருப்பின், பூச்சின் தடிமன் கூடுதலாகும் போதே, அதன் மின் தடையும் கூடுதலாகிறது. இதன் விளைவாக, மின்னாற் படிதல் விரைவு குன்றி, இறுதியில் நின்று விடுகிறது. இவ்வுத்தியில், பூச்சின் தடிமன் தானாகவே கட்டுப் படும் என்பதும், எவ்வடிவினாலான உலோகப் பொருளாயினும், சமச் சீர்மையான பூச்சைப் பெறச் செய்யலாம் என்பதும் கூடுதல் நன்மைகளாகும். அமிலக் கார்பாக்சில் தொகுதிகளுக்குப் பதிலாக, அமினோ தொகுதிகளைப் புகுத்திப் பின்பு, அவற்றை அசெட்டிக் அல்லது லாக்டிக் அமிலத்தால் நடுநிலையாக்கலாம். இவ்வமைப்புகளில் ரெசின், நேர் மின்னேற்றம் கொண்டிருக்கும் எதிர் மின் முனையில் படியும். உப்போ, அயனியோ உருவாக்காமல், நீரில் கரையும் தன்மையைப் பூச்சுக்கு ஏற்றுவதற்கு, நீரில் கரைய வல்ல குட்டையான சங்கிலியமைப்புக் கொண்ட பல படியை ரெசினில் புகுத்தலாம். இவ்வகையில் பாலி எத்திலீன் கிளைக்கால் நன்கு பயனாகிறது. கரைப்பான்களின் கரை திறன், பல்லுறுப்பிகளின் தன்மைகளைப் பொறுத்ததாகும். கரைப்பானின் பாகுத் தன்மை, கொதி நிலை, ஆவியாகும் விரைவு ஆகியனவும் முதன்மைக் காரணிகளாகும். பூச்சு (additive). ஓர் உண்மையான நீர்மத்தின் மீது செலுத்தப் படும் தகைவுக்கு நேர் விகித்தில் திரிபு வீதம் அமைந்திருக்கும். மாறாக, தேங்கி நிற்கையிலும், கலக்கப் படுகையிலும் மாறு பட்ட பாகு தன்மைகளைக் கொண்டிருக்கும் நிலையை, நியூட்டன் விதிக்கு ஒவ்வாத நீர்மம் (non–Newtonian liquid) என்பர். கூழ் போன்ற நிலையிலுள்ள பூச்சில் தூரிகையை நனைத்துக் கலக்கும் போது, நீர்த்த நிலையை அடைந்தால், அதற்குப் போலி நெகிழி (pseudo plastic) எனப் பெயர். இத்தன்மையைப் பூச்சுக்கு ஏற்றும் நோக்கத்துடன் சிலிக்கா, பென்டொனைட் எனும் அலுமினோ சிலிக்கேட், ஹைட்ரஜனேற்றம் செய்யப்பட்ட ஆமணக்கு எண்ணெய், பாலி அமைடு ஆகியன சேர்க்கப் படுகின்றன. டைட்டேனியம், சிர்கோனியம் கொடுக்கிணைப்புச் சேர்மங்கள் (chelates) இவ்வகையில் பெரும் பயன் தருகின்றன. பூச்சுப் படலம் தொய்வின்றிச் சம தளமாக இருப்பதற்குச் சோப்புப் போன்ற புறப் பரப்புச் செயலி (surfactant) சேர்க்கப் படுகின்றது. பூச்சின் பளபளப்பைச் கட்டுப் படுத்துவதற்கு நுண் தூள் வடிவிலான சிலிக்கா அல்லது பாரபின் மெழுகு சேர்க்கப் படுகிறது. பூச்சு உலர்தலைத் தொடங்குவதற்கும், ஊக்குவிப்பதற்கும் பல சேர்மங்கள் பரிந்துரைக்கப் பட்டுள்ளன. மெருகுப் பூச்சு (lacquer), அனைத்து வெப்ப நிலை களிலும் எளிதில் உலர வல்லதாக இருப்பதால், மெழுகு பூச்சு பெரிய அளவில் பயனாகிறது. நீண்ட சங்கிலி அமைப்புக் கொண்ட பல்லுறுப்பியொன்றின் கரைசலே, இவ்வகைப் பூச்சாகும். கரைப்பான் ஆவியாதலால், இப்பூச்சு உலர்கிறது. இவ்வகைப் பூச்சுகளில் நைட்ரோ செல்லுலோஸ், அக்ரிலிக் ஆகிய இரண்டு உட்பிரிவுகள் உள்ளன. செல்லுலோஸ் ஒரு பெரும் பல்லுறுப்பி (மூலக் கூறு எடை 3,00,000–5,00,000) மூலக் கூறு ஆகும். அமிலங்களால் எஸ்ட்டராக்கல் வினைக்குட்படுத்தியோ, ஆல்ஹைல்களைக் கொண்டு ஈதராக்கியோ, கரிமக் கரைப்பான்களில் இதைக் கரைய வல்லதாகச் செய்யலாம். சான்றாகச் செல்லுலோஸ் அசெட்டேட், எத்தில் செல்லுலோஸ் ஆகியன பயன் படுகின்றன. செல்லுலோஸ் நைட்ரோ ஏற்றம் செய்து, பெறப் படும் நைட்ரோ செல்லுலோஸ் மெருகு பூச்சில் பயன் படுத்தப் பட்ட முதல் படலமாகும். நைட்ரோ செல்லுலோசின் கரை திறன் அதன் ஹைட்ரஜன் அடக்கத்தை பொறுத்ததாகும். நைட்ரோ செல்லுலோஸ் எரியக் கூடியது எனும் கருத்து அதன் பயன் வரம்பைக் கட்டுப் படுத்துகிறது. அக்ரிலிக் பல்லுறுப்பிகளின் அடிப்படைச் சேர்மங்கள் அக்ரிலிக் அமிலம் அல்லது மெத்தக்ரிலிக் அமிலமாகும். பாலி மெத்தில் மெத்தக்ரிலேட், பாலி எத்தில் எத்தகிரிலேட், பாலி அக்கிரிலமைடு ஆகியன சிறப்பானவை. அக்ரிலிக் பல்லுறுப்பியாயினும், செல்லுலோஸ் எஸ்ட்டர் பல்லுறுப்பியாயினும், தனித்த நிலையில் நொறுங்கும் தன்மை படைத்தவை. எனவே, மெழுகு பூச்சுத் தொழிலில் படல ஆக்கிகளுக்கு அடுத்த படியாக முதன்மை பெறுவது, மென்மையூட்டி (softener) ஆகும். சிறப்பான மென்மையூட்டிகளாக டைபியூட்டைல் தாலேட்டும், பியூட்டைல் பென்சைல் தாலேட்டும் விளங்குகின்றன. மெருகுப் பூச்சு நீள் சங்கிலி வடிவம் கொண்ட பல்லுறுப்பியாகவும், நெகிழ்வூட்டியாகவும், கரைப்பானாகவும், சேர்ப்பியாகவும் பயனாகிறது. சிறப்பு வகை வண்ணப் பூச்சு. வண்ணப் பூச்சை அரிமானத் தடுப்புக்கும், அலங்காரத் தோற்றத்திற்கும், பிற பயன்பாடுகளுக்கும் ஈடு படுத்தும் போது, சில சிறப்பு வேதிப் பொருள்கள் சேர்க்கப் படுகின்றன. ஒளிரும் பூச்சு. இருளிலும் பளிச்செனத் தெரியும் பூச்சுகளைத் தயாரிப்பதற்குச் சாதாரணப் பூச்சு உட்கூறுகளுடன் கிளர் ஒளி தரும் பொருள்களைச் (flurescent materials) சேர்த்தல் வேண்டும். துத்தநாக சல்ஃபைடு, கால்சியம் பாஃஸ்பேட் ஆகியன கிளர் ஒளி தரும் பொருள்களில் சிறந்தவை. இவ்வகைப் பொருள்கள் கட்புலனாகாப் புற ஊதாக் கதிர்களை உறிஞ்சியவுடன், ஒளி உமிழப் பட்டால் உடன் ஒளிர் பொருள் என்றும், இரண்டுக்கும் இடையே காலத் தாழ்வு ஏற்படின், நின்றொளிர் பொருள் (Phosphor) என்றும் குறிப்பிடப் படும். இவ்வகைப் பூச்சு நெடுஞ் சாலைகளில் தொலைவு அறிவிப்புக் கற்களில் எழுதுவதற்கும், அறிவியல் தொழில் நுட்பக் கருவிகளில் முகப்பைத் தயாரிப்பதற்கும், கணிப்பான்களிலும், அலங்கார விளம்பரங்களிலும் பயனாகிறது. வெப்பம் தாங்க வல்ல பூச்சுகளில் சிலிக்கோன்களும், அலுமினியத் துகளும், வெப்ப எதிர்ப்புத் தன்மையை ஏற்றுகின்றன. இப்பூச்சு அடுப்புக்கும், உலைக்கும், சூளைக்கும், காளவாய்க்கும் பூசுவதற்குப் பயனாகிறது. சுடர்த் தடுப்புப் பூச்சுகளில் முதன்மை உட்கூறுகளாக விளங்குபவை சோடியம் அம்மோனியம் பாஸ்ஃபேட், போரேட் ஆகிய உப்புகளாகும். இவ்வாறு சேர்க்கப் படும் பொருள்கள் உருகிப் பரவி, எரிதலைத் தணிக்கின்றன; இவை வெப்பத்தினால் உயர் வெப்ப நிலை அமைப்புகளுக்கு ஏற்றவை. பாசித் தடுப்புப் பூச்சுகளில் பாசி மற்றும் கடல் வாழ் நுண்ணுயிரிகளுக்கு நச்சுகளாக விளங்கும் வேதிப் பொருள்கள் இடம் பெறுகின்றன. தாமிரம், பாதரசம் போன்ற உலோக நச்சுகள் இந்நோக்கத்துடன் சேர்க்கப் படுகின்றன. இப்பூச்சு படகுக்கும், கப்பலுக்கும், அடிப் பகுதிகளில் இடப் படுகிறது. நீர் விலக்கும் பூச்சுகளில், நீருடன் ஒட்டாத பாரபின் மெழுகு, சிலிகோன் ஆகியன இடம் பெறுகின்றன. நீர்த் தேக்கத் தொட்டி, ஆய்வக மேசை ஆகியவற்றுக்கு இப்பூச்சு முதன்மையானது. —மே. ரா. பாலசுப்பிரமணியன் துணை நூல். G.P.A. Turner, Intorduction to Paint Chemistry, Third Edition, Chapman Hall, London, 1988; Kirk-othmer, Encyclopedia and chemical Technology, Third Edition, Vol–16, John Wiley& Sons, Newyork, 1978.