சிறுநீரக மண்டலத்தில் கற்கள் உருவாகும் போது, அதன் அறிகுறிகள் பல வகையாக இருக்கும். சிலருக்கு எவ்வித அறிகுறியும் தெரிவதில்லை. தற்செயலாக வயிற்றின் எக்ஸ் கதிர்ப் படம் எடுக்கும் போதோ, சிரை வழிச் சிறுநீரகப் படம் (intravenous pyelogram—I.V.P) எடுக்கும் போதோ, இந்நிலை தெரிய வரும். ஒரு முறையில் ஒரே கல்லையோ, பல கற்களையோ சிறுநீர் வழியாக நோயாளிகள் வெளியேற்றுகின்றனர். சிறுநீரகக் கூபசுத்திலோ, சிறுநீரகக் குழலின் மேற்பகுதியிலோ கல் அமைந்திருக்கும் போது, இடுப்பிலோ, வயிற்றிலோ தோன்றும் வலி தாங்க முடியாத அளவு இருப்பதுடன், குமட்டலும், வாந்தியும் தோன்றும். சிறுநீரகக் குழலின் நடுப் பகுதியிலோ, கீழ்ப் பகுதியிலோ கல் இருக்கும் போது, வலி தொடை இடைப் பந்தகம் நோக்கிச் சென்று, பெண்களின் பேருதடுகள் (labia) மற்றும் சிறுநீர்ப் புற வழி வரையும், ஆண்களில் விதை, ஆண் குறி வரையும் பரவுகிறது. சிறுநீர்ப் பையின் உள்ளே பொதிந்து கிடக்கும் சிறுநீரகக் குழலில் கல் இருந்தால், சிறுநீர் அடிக்கடி பிரிதலும், வலியும் உண்டாகின்றன. ஆகவே, சிறுநீர்ப் பை, சிறுநீர்ப் புற வழி ஆகியவற்றின் அழற்சியின் போது கற்கள் இருக்கலாம். மேற்கூறிய வலியின் போது, சிறுநீரில் குருதி காணப்படலாம். குருதி இருப்பதை உருப்பெருக்கியின் மூலமே பார்க்க முடியும். சில சமயங்களில், சிறுநீரில் குருதி வெளிப்படும் போது, வலியே இராது. சிறுநீரகக் கற்கள் இருக்கும் போது, நுண்ணுயிர்த் தாக்கம் ஏற்பட்டால், குளிர், காய்ச்சல், இடுப்பு வலி, கீழ் முதுகு வலி ஆகியவை தோன்றும். சிறுநீரக மண்டலத்தில் கற்கள் இருக்கலாம் என்ற ஐயம் ஏற்பட்டால் பின் வரும் முறைகளைக் கையாள வேண்டும். அவை நோய் வரலாறு, நோயாளியை முழுமையாக ஆய்வு செய்தல், சிறுநீரின் முழுமையான ஆய்வு, எக்ஸ் கதிர்ப் படங்கள், சிரை வழிச் சிறுநீரக வரைபடம் சிறுநீரில் நுண்ணுயிர் வளர்ச்சி முறை (culture), சிறுநீரில் கற்கள் வெளிப்பட்டால், அவற்றை ஆய்தல் என்பன. இந்த ஆய்வுகள் நடைபெறும் போது, நோயாளிக்கு வலி நீக்கி மருந்துகளும், குமட்டல் வாந்தி இருந்தால், சிரை வழி நீர்மமும் செலுத்த வேண்டும். கற்களின் விட்டம் 6 மி.மீ.க்குக் குறைவாக இருந்தால், தாமாகவே வெளி வந்து விடும். 6—10 மி.மீட்டருக்கு அதிக விட்டம் கொண்ட கற்களை அறுவை மருத்துவம் மூலமே அகற்ற வேண்டும். கால்சியம் ஆக்சலேட், பாஸ்ஃபேட், மக்னீசியம், அம்மோனியம் பாஸ்ஃபேட், சிஸ்ட்டீன், யூரிக் அமிலம் ஆகிய பல வகையான கற்கள், சிறுநீரக மண்டலத்தின் பல்வேறு பகுதிகளில் காணப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலானவை கால்சிய உப்புகளே. நாள் தோறும் குறைந்த அளவில் சிலருக்குச் சிறுநீர் வெளிப்படுவதாலும், வயிற்றுப் போக்கு நிலையாலும், குறைந்த அளவில் நீர் அருந்துவதாலும், சிறுநீர் செறிவடைந்து, கற்கள் உருவாக வாய்ப்புண்டு. சிறுநீரின் அமிலக் காரத் தன்மையும் கற்களை உருவாக்கும். பொதுவாக, சிறுநீர் இரவில் அமில நிலையிலும், நடுப்பகலில் கார நிலையிலும் இருக்கும். சிறுநீர் எப்போதும் அமில நிலையில் இருந்தால் யூரிக் அமிலக் கற்கள் தோன்றுவது எளிதாகும். சிறுநீர், கார நிலையில் இருந்தால் பாஸ்ஃபரக் கற்கள் தோன்ற வாய்ப்புண்டு. தைராய்டு சுரப்பி மிகையாகப் பணியாற்றும் போதும், சிறுநீரில் கால்சியம், ஆக்சலேட், சிஸ்ட்டீன் போன்ற உப்புகள் மிகுதியாக வெளிப்படும் போதும், சிறுநீரகத்தில் நுண்ணுயிரியின் பாதிப்பு ஏற்படும் போதும், கற்கள் உருவாகலாம். நீண்ட நாள் படுக்கையில் இருக்க வேண்டிய சூழ்நிலையில் சிறுநீரில் கால்சியம் மிகுதியாக வெளிப்படும். குருதியில் கால்சியத்தின் அளவு அதிகரிக்கிறது. இதனால், சிறுநீரக மண்டலத்தில் கற்கள் உண்டாகின்றன. இதைத் தவிர்க்க, நோயாளிகளை எழுந்து நடமாடச் செய்வதும், உணவில் கால்சியத்தைக் குறைப்பதும், நீர் மிகுதியாக அருந்தச் செய்வதும் நன்மை பயக்கும். கால்சியக் கற்கள் உருவாவதைக் தடுக்க 25—50 மி.கி. ஹைட்ரோதயாசைடு (இரண்டு வேளை) அருந்துவது பயனளிக்கும். யூரிக் அமிலக் கற்கள் உருவாவதைத் தடுக்க, நாளும் அல்லோப்பியூரினால் 200—300 மி.கி. மாத்திரையாகச் சாப்பிடுவது பயன் தருகிறது. ஆக்சலேட் கற்கள் உருவாவதைத் தடுக்க, உணவில் ஆக்சலேட்டைக் குறைத்தல், நீர் மிகையாக அருந்துதல், கால்சியம் கார்பனேட், குளுக்கனேட், லேக்டேட் மாத்திரைகளை உட்கொள்ளுதல், கோலிஸ்டரமைன் மாத்திரையை, நாளும் 4 கி. அலகில், மூன்று வேளை சாப்பிடுதல் ஆகிய முறைகளை மேற்கொள்ளலாம். டி. பெனிசிலமைன் மருந்தை 250—500 மி. கி. அலகில், நாளும் 4 முறை சாப்பிடுவது, சிஸ்ட்டீன் கற்கள் உருவாவதைத் தடை செய்கிறது. கற்கள், மணல் போன்று சிறுநீரக மண்டலத்தின் எந்தப் பகுதியிலும் காணப்படலாம். சில போது, மிகப் பெரிய வட்டமான கற்களாகவும் இருக்கும். மான் கொம்பு போன்று தோன்றினால், சிறுநீரகம் பெரிதாக வீங்கி அழற்சியடைகிறது. இந்நோயின் அறிகுறிகள், கற்கள் அமைப்பு, வடிவம், நிலை, உடனிருக்கும் நோய் ஆகியவற்றைப் பொறுத்துள்ளன. கற்கள் இருக்கும் போது, பொதுவாக வலி இல்லாமல் இருந்தாலும், இடுப்பிலோ, கீழ் முதுகிலோ விட்டு விட்டு மந்தமான வலி தோன்றும். சில போது, சிறுநீரில் சிவப்பு அணுக்கள், புரதம், சீழ்ச் செல்கள் ஆகியவை காணப்படும். சிறுநீரகக் குத்தல் வலி. ஒரு கல், சிறுநீரகக் குழலினுள் செல்லும் அளவிற்குச் சிறியதாக இருந்து, அதை அடைக்கும் அளவுக்குப் பெரிதாக இருந்தால், குத்தல் வலி தோன்றுகிறது. முதுகில், விலா எலும்புகளுக்குக் கீழே தோன்றும் திடீர் வலி, இடுப்பு வழியே தொடையிடைப் பந்தகம் நோக்கிச் சென்று ஆண்களில் விதைக்கும், பெண்களில் பேருதட்டுக்கும் செல்லும். ஒரு சில நிமிடங்களில் வலி மிகும். நோயாளி துடிதுடித்து அமைதியின்றி ஓடவும், நடக்கவும், படுக்கவும், ஒரு பக்கமாகச் சாயவும், வயிற்றை அமுக்கிப் பிசையவும் செய்வார். அப்போது வெளிறிய நிலை அடைந்து, வியர்வைச் சுரப்பு அதிகரித்து, இறுதியில் வாந்தி எடுப்பார், வலி தாங்காது கூப்பாடு போடுவார். சில போது, சிறுநீரில் குருதி வெளிப்படும், இரண்டு மணி நேரத்தில், வலி தானாகவே நின்று விடும். மீண்டும், தோன்றிப் பல மணி நேரம் அல்லது நாள் முழுதுமோ வலி நீடிக்கும். நோயை அறுதியிட, சிறுநீர் ஆய்வு, எக்ஸ் கதிர்ப் படங்கள், சிரை வழிச் சிறுநீரக வரைபடம் போன்றவை தேவைப்படுகின்றன. மருத்துவம். உடனடியாக ஓய்வு தேவை. வலி தோன்றும் இடத்தில், வெப்ப ஒற்றடம் கொடுக்க, பயனளிக்கும். பெத்தடின் (100 மி.கிராம்) அல்லது மார்ஃபின் (15—30 மி.கி.) வலி நீக்கியாகக் கொடுக்கலாம். குத்தல் எதிர் மருந்தாக (antispasmodic) அட்ரோபின் சல்ஃபேட் (0.8—1.2 மி.கி.) தசை ஊசியாகக் கொடுக்கப்பட்டு, இரண்டு மணி நேரம் சென்ற பின், மீண்டும் கொடுக்கப்படவேண்டும். சிறுநீரகக் கற்களைக் கரைக்கச் செய்யப்பட்ட ஆய்வுகள் பயனளிக்கவில்லை. சிறுநீரகத்துள்ளும் சிறு நீர்ப் பையுள்ளும் இருக்கும் கற்களை, அறுவை மூலம் அகற்ற வேண்டும். சிறுநீரகக் குழலில் உள்ள கற்கள் தாமாகவே, சிறுநீரில் வெளியேறி விடும். அத்தகைய கற்களை அகற்ற, அறுவை செய்ய முயன்றால், சிக்கல்கள் ஏற்படும். எனினும், அடிக்கடி தோன்றித் தாங்க முடியாத வலி ஏற்பட்டால், சிறுநீரகக் குழலினுள் கதீட்டரைச் (catheter) செலுத்த, அதனுடன் கல்லும் வெளி வந்து விடும். முழுமையாகச் சிறுநீர் அடைப்பு ஏற்படின், அவசர அறுவை தேவைப்படும். உள்ளே இருக்கும் கல் நீண்ட நாளாக வெளிப்படாமல் இருந்தாலோ, சிறுநீரகம் வீங்கிய நிலை அடைந்தாலோ, சிறுநீர்ப் பாதையில் நுண்ணுயிர்ப் பாதிப்பு ஏற்பட்டாலோ, அறுவையைக் கையாள வேண்டும். 1 செ.மீ. விட்டத்திற்கு மேற்பட்ட கல்லை அறுவை மூலமே அகற்ற வேண்டும். மிகவும் முக்கியமான தடுப்பு முறை, மிகுதியாக நீர் அருந்துவதேயாகும். இதன் மூலம் சிறுநீரகத் திசுவில் படிகங்கள் உருவாவதைத் தடுக்க முடியும். நாளும் 4 லி. நீர் அருந்தி, 3 லி. சிறுநீரை வெளியேற்ற வேண்டும். தட்ப வெப்ப நிலையாலோ, வியர்ப்பதாலோ, நீர் இழப்பு மிகுதியாக இருந்தால், மேலும் கூடுதலான நீர் அருந்த வேண்டும். —சாரதா கதிரேசன் நூலோதி. Jay H., Stein, Internal Medicine, First Edition, Little Brown and Co., Boston, 1983.