இவை பல நூற்றாண்டுகளுக்கு முன்பு சாலிசேசி (salicaceae) தாவரத்தின் பட்டையிலிருந்து பயன்படுத்தப்பட்டன. 1899 முதல் ஆஸ்ப்ரின் என்னும் பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டன. இன்று மலிவான எளிய வலி நீக்கும் மருந்துகளாக உள்ளன. இயங்கும் விதம். சாலிசைலேட்டுகள் மூளையின் ஒரு பகுதியான ஹைப்போதாலமசின் புற நரம்பு மண்டலத்தில் எதிர் வினை புரிந்து வலியைக் குறைக்கின்றன. ஆனால், பெருமளவில் தரும் போது, வளர் சிதை மாற்றத் தூண்டலும், வெப்ப உற்பத்தியும் கூடுவதால், சாலிசைலேட்டுகள் காய்ச்சலை ஏற்படுத்துகின்றன. மருந்தடை மாற்றம். சாலிசைலேட்டுகள் தலைவலி, காய்ச்சல் போன்றவற்றைத் தணிக்கின்றன. சில நீரிழிவு நோயாளிகளிடம் குருதிக் குளுக்கோஸ் அளவையும் குறைக்கின்றன. இவற்றை உணவுடனோ, உணவுக்குப் பின்னரோ சாப்பிட வேண்டும். இவை குடலில் விரைவில் உள்ளுறிஞ்சப்படுகின்றன. ஆஸ்ப்ரின், உடல் திசுக்களிலும், பிளாஸ்மாவிலும் விரைவாக ஹைட்ராக்கில் நீக்கமடைந்து, சாலிசிலிக் அமிலமாக மாறுகிறது. இதயத்தின் மீதான விளைவுகள். மருத்துவ அளவில் தரும் போது, இவை இதயத்தைத் தாக்குவனவல்ல. ஆயினும், முடக்கு வாதக் காய்ச்சலில் பெருமளவு தரும் போது, இதயச் செயலிழப்பு, நுரையீரல் வீக்கம் முதலியவற்றை ஏற்படுத்தக் கூடும். சிறுநீரக விளைவுகள். பெருமளவில் தரும் போது, இவை சிறுநீரைப் பெருக்கும். சிறுநீர்ப் பெருக்கம் கடுமையாக இருந்தால், நீரிழப்பு ஏற்பட்டுச் சிறுநீர்ப் பெருக்கம் குறைய, சிறுநீரகச் செயலிழப்புத் தோன்றக் கூடும். வேண்டா விளைவுகள். சாலிசைலேட்டுகள் குமட்டல், வாந்தி, தலைவலி, காய்ச்சல், காது இரைச்சல் முதலிய விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். இவை இரைப்பையை உறுத்தக் கூடும். பெருமளவில் தரும் போது, இரைப்பைச் சிறுகுடல் புண்ணை மிகுதியாக்கி, இரைப்பைக் குருதி ஒழுக்கையும், அரிப்பையும் ஏற்படுத்தக் கூடும். ஆஸ்த்துமா போன்ற ஒவ்வாமை விளைவுகளையும் ஏற்படுத்தும். பயன்கள். மெத்தில் சாலிசைலிக் அமிலத்தை, தலை வலி, மூட்டு வலி ஆகிய நோய்களில் உடலின் மேல் தேய்க்கலாம். அசெட்டைல் சாலிசைலிக் அமிலமும், உப்புகளும் காய்ச்சலுக்குக் கொடுக்கப் படுகின்றன. 300—1000 மி.கி. 4 மணிக்கொரு முறை உணவுக்குப் பின் சாப்பிட வேண்டும். முடக்கு வாதக் காய்ச்சலுக்கு நாள் ஒன்றுக்கு 5 கிராம் வரை கொடுக்கலாம். தலைவலி, மூட்டு வலி, வலியுடன் கூடிய மாத விலக்குப் போன்ற நிலைகளுக்கும் இவற்றை மாத்திரையாகக் கொடுக்கலாம். சாலிசைலிக் அமிலத் தட்டணுவின் எதிர் இயக்கப் பண்பின் காரணமாக ஏற்படும் இதயத் தசைச் சிதைவு நோய் (myocardial infarction), இதயத் தமனி நோய் (coronary artery disease) ஆகியவற்றுக்கு இவை பயன்படுகின்றன, —ச. ஆதித்தன்