தென்மேற்கு ஆசுத்திரியாவிலுள்ள தைரோல் என்னும் மாநிலத்தின் தலைநகரம். இந்நகரம் இன் (Inn) என்னும் ஆற்றங்கரை நகரம். கோடைக்காலத்திற்கும் குளிர்காலத்திற்கும் உகந்த வாசத்தலம். இங்குப் பல தொழிற்சாலைகள், வாணிகத் தலங்கள் உள்ளன. பருத்தி ஆடைகள், உலோகப் பொருள்கள், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள், அச்சுப் பொருள்கள் போன்றவை இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. கிழக்கு ஆல்ப்சு மலைத் தொடரின் பகுதியாகப் பலரின் கருத்தைக் கவரும் வண்ணம் அமைந்துள்ள இன்சுபர்க்கு, ஆல்ப்சு மலைப்பகுதிகளின் சீரிய வாணிகத் தலமாகிச் சிறப்புப் பெற்றது. இது அரணால் சூழப்பெற்ற நகரமாக கி.பி. 1180–ஆம் ஆண்டில் அமைக்கப் பெற்றது. நகருக்கான உரிமைகளை கி.பி. 13–ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்நகரம் பெற்றது. கி.பி. 1809–ஆம் ஆண்டில் தைரோலியக் (Tyrol) குடியானவர்கள் பிரெஞ்சுப் படைகளையும், பவேரியப் படைகளையும் இன்சுபர்க்கு நகருக்கருகில் எதிர்த்து நின்று வீரமாகப் போர் புரிந்தனர். நகருக்குள் இருக்கும் நினைவுச் சின்னமொன்று இந்நிகழ்ச்சியை நினைவு கூர்கிறது. ஆப்கிரிச்சு (Hofkirche) என்னும் பிரான்சிசுத் திருச்சபை கி.பி. 1553–63–ஆம் ஆண்டுகளில் கட்டப்பட்டது. இங்குப் பேரரசர் முதலாம் மாக்சிமிலியன் என்பாருக்குப் பெரும் நினைவுச் சின்னமொன்று உள்ளது. முதலாம் மாக்சிமிலியன் பெரும்பாலும் இன்சுபர்க்கிலேயே வாழ்ந்தவர். பர்சுடென்பர்க்கு என்னும் கோட்டையும் வரலாற்றுச் சிறப்பு மிக்கதுதான். இந்நகரத்தில் பல அருங்காட்சியகங்களும் தாவர இயல் தோட்டமும் அமைக்கப்பட்டுள்ளன. இத்தோட்டத்தில் ஆல்ப்சு மலையைச் சார்ந்த செடிகொடிகள் மிகப்பெரிய அளவில் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. குளிர்கால ஒலிம்பிக்கு விளையாட்டுப் போட்டிகள் 1964–இலும் 1976–இலும் இன்சுபர்க்கில் நடைபெற்றன. இன்சுபர்க்கின் மக்கள் தொகை 1,16,100 ஆகும் (1981).